Monetize Your Website or Blog

Wednesday, 27 April 2016

காவல்துறையில் ஒரு இயற்கை காவலன்!

ழிந்து வரும் இயற்கையை காப்பாற்ற பல அமைப்புகள் முயன்று வருகின்றன. தனிமனிதர் ஒவ்வொருவரும் அதில் பங்கேற்பதுதான் அதன் முதல் வெற்றி. அந்தவகையில் காவல்துறையை சேர்ந்த இன்ஸ்பெக்டர் ஒருவர் இயற்கையை நேசிப்பதோடு அதனை வளர்த்தும் வருகிறார். அவர் சாம்சன். 

கன்னியாகுமரி மாவட்டம்,  களியக்கா விளையில்  போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஜெயலலிதா பேனரை தைரியமாக அகற்றியவர். 

இவர்,  தான் பணிபுரியும் இடங்களில் மரக்கன்றுகளை நட்டு இயற்கையை பாதுகாத்தும் வருகிறார். இது தவிர்த்து பறவைகளை யாராவது அடைத்து விற்பனைக்கு வைத்தால்,  அதனை பறிமுதல் செய்து வனத்றையிடம் ஒப்படைத்து விடுகிறார். பொது சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டப் பட்டிருந்தால் அதனை அழித்து அதில் அழகான படங்களை வரைய நடவடிக்கை எடுக்கிறார்.


”சின்னவயதில் இருந்தே இயற்கையை நேசிக்கும் பழக்கம் இருந்தது. அடுத்தவங்க என்ன செய்றாங்க என்பதை விட நாம் இந்த உலகுக்கு என்ன செய்தோம் என பார்க்கணும். அதற்கு முடிந்தவரை இயற்கையை அழிக்காமல் இருப்பதே நல்லது. எனவேதான்  மரங்களை நடத்தொடங்கினேன். சப்-இன்ஸ்பெக்டராக குமரி மாவட்டம் புதுக்கடையில் எனது பணியைத் தொடங்கினேன். இயற்கையை பாதுகாக்கணும், நாம் வாழும் இடத்தை சுத்தமாக வைத்திருக்கணும் என்கிற எண்ணத்தில் இருக்கும் இளைஞர்கள் அதிகமாக தமிழ்நாட்டுல இருக்கிறாங்க. அத்தகையவர்களோடு இணைந்து கிட்டதட்ட 10 ஆயிரம் மரக்கன்றுகளுக்கு மேல் நட்டுருக்கோம். 

அதற்கு முக்கியமாக வனத்துறை அதிகாரிகள் ஒத்துழைப்பு இருந்தது. அவர்கள் மூலமாக மரக் கன்றுகள் கிடைத்தது கூடுதல் உற்சாகமாக இருந்தது. முதலில் என் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் வலசக்காரன் விளையில்தான் மரக் கன்று நடத் தொடங்கினேன். அது இப்போது பெரிய மரமாக வளர்ந்து நிழல் தந்து கொண்டிருக்கிறது. சாயர்புரம், கடைய நல்லூர் என வரிசையாக நான் செல்லும் இடமெல்லாம் மரக்கன்றுகளை நடுவேன். அந்த பகுதியில் இயற்கை நேசிக்கும் இளைஞர்களோடு  இணைந்து மரக்கன்று களை நடுகிறேன்.

காவல்துறை வேலை ரொம்ப டென்ஷனாக இருக்கும். அதனால் எனது அறையில் கலர்மீன் தொட்டி, சின்ன சின்ன அழகு செடிகள் என வைத்துக்கிறேன். அதை பார்க்கும் போது ரொம்ப ரிலாக்ஸாக இருக்கும். இயற்கை என்றால் வெறும் மரம்,செடி, கொடிகள் மட்டுமல்ல  பறவைகளும் விலங்குகளும் இயற்கையை சார்ந்ததுதான். அதனால் அவைகளையும் நான் நேசிக்கிறேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் இயற்கை சூழ்ந்த வனப்பகுதியில் வானளவு உயர்ந்த மரங்கள், நெளிந்த நீர் ஓடும் ஆறுகள், பறவைகளின் சத்தங்கள், விலங்களின் அன்பு போன்றவை புது உலகில் இருக்கும் அனுபவத்தை தருகிறது.
சுற்றுச் சூழல் பாதுகாக்கப்பட்டால்தான் நாளைய சந்ததிகளும் பாதுகாக்கப்படுவார்கள். இயற்கையை நேசித்தாலே போதும் நம் சுற்று சூழல் அழகாக மாறிவிடும்”

மெல்லிய புன்னகையை உதிர்க்கிறார் சாம்சன்.


No comments:

Post a Comment