Monetize Your Website or Blog

Tuesday, 19 April 2016

'சென்னையில் ஏன் வெள்ளம்?' தி.மு.க. தேர்தல் அறிக்கையைப் பார்க்கச் சொல்கிறார் ஜெயலலிதா!

சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்திற்கான காரணங்களை தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையே எடுத்துச் சொல்லியுள்ளது என்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசினார்.கூறினார்.

காஞ்சிபுரத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்தில் முதல்வரும், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா பேசும்போது, ''கடந்த 2006 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றிவிட்டதாக கருணாநிதியும், தி.மு.க.வினரும் பொய் சொல்லி வருகின்றனர். அதில் நிறைவேற்றப்படாமல் உள்ள பல திட்டங்களில் ஒரு சிலவற்றை மட்டும் இங்கே தெரிவிக்க விரும்புகிறேன்.

நான் கேட்கிறேன், 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்களைப் பயன்படுத்தி நிலமற்ற ஒவ்வொரு ஏழை விவசாயக் குடும்பத்திற்கும் குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலம் வீதம் வழங்குவோம் என தி.மு.க. வாக்குறுதி அளித்ததா இல்லையா? ஆட்சிக்கு வந்த பின் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக ‘கையகல’ நிலம் வழங்குவோம் என்று தெரிவித்து அதையும் செய்யவில்லையே?
புன்செய் நிலங்களையும், தரிசு நிலங்களையும் முறையான விளைச்சல் நிலங்களாக மாற்றிட நுண்ணிய நீர் பிரி முகடு மேலாண்மை போன்ற புதிய தொழில்நுட்பங்கள் கையாள்வதற்கு வழிவகை காண்போம் என்ற வாக்குறுதி 2006-ல் திமுக-வால் கொடுக்கப்பட்டதே? அது நிறைவேற்றப்பட்டதா? அப்படியெனில், ஏன் அதே வாக்குறுதி தற்போதும் கொடுக்கப்பட்டுள்ளது?

ஆற்றுப் படுகையில் 200 மீட்டர் தூரத்திற்கு மேல் தான் பம்பு செட்டுகளுக்கு மின் இணைப்பு தற்போது வழங்கப்பட்டு வருகிறது. அது 100 மீட்டர் தூரம் என குறைக்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதா? வேளாண்மைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் தேசிய உயிரியல் தொழில்நுட்ப நிறுவனம் தமிழகத்தில் நிறுவப்படும் என்று 2006 தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதா? அப்படியெனில், அதே வாக்குறுதிகள் ஏன் தற்போதும் 2016 தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளது?

மேலும், கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவு பெருமழை பெய்த காரணத்தால் பல மாவட்டங்கள் பாதிப்புக்கு உள்ளாயின. காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாயின.
1.12.2015 அன்று மட்டும் செம்பரம்பாக்கத்தில் 47 செ.மீட்டர் மழையும், பொன்னேரியில் 31 செ.மீட்டரும், பூந்தமல்லியில் 33 செ.மீட்டரும், செங்குன்றத்தில் 32 செ.மீட்டரும், தாம்பரத்தில் 49 செ.மீட்டரும், திருக்கழுக்குன்றத்தில் 44 செ.மீட்டரும், செங்கல்பட்டில் 39 செ.மீட்டரும், ஸ்ரீபெரும்புதூரில் 37 செ.மீட்டரும், செய்யூரில் 37 செ.மீட்டரும், மகாபலிபுரத்தில் 33 செ.மீட்டர் என, பெருமழை கொட்டி தீர்த்தது.

இதன் காரணமாக காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து பாதிப்புகள் ஏற்பட்டன. அமைச்சர்கள் மற்றும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் குழுவை அனுப்பி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் உடனடியாக எடுக்கப்பட்டன. எனது தலைமையிலான அரசு எடுத்த தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாகத் தான் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன.

ராணுவத்தினர், பேரிடர் பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட 80,000-க்கும் அதிகமானோர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்த மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். எனது அரசு எடுத்த  நடவடிக்கைகளை மத்திய அரசின் குழு பாராட்டி உள்ளது. வெள்ள பாதிப்புகளை நேரில் கண்டறிந்து மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்த மத்திய குழு தனது அறிக்கையில், மாநில அரசு இப்பெரும் பாதிப்பை சிறப்பாக கையாண்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.


மாநில அரசும், மக்கள் நல்வாழ்வுத் துறையும் மிகச் சிறந்த பணிபுரியததால் தொற்று நோய் எதுவும் ஏற்படவில்லை என நற்சான்றிதழ் வழங்கியுள்ளது மத்தியக் குழு. மத்திய அரசின் குழுவே இவ்வாறு பாராட்டு தெரிவித்திருக்கும்போது பொய் பிரசாரம் செய்து வாக்குகளை பெற்றுவிடலாம் என்று தி.மு.க.வினர் பகல் கனவு காண்கின்றனர்.

தி.மு.க. திண்ணைப் பிரசாரம் என்ற பெயரில் வெளியிட்ட துண்டுப் பிரசுரத்தில், செம்பரம்பாக்கம் ஏரியை திடீரென திறந்து, அதனால் 347 பேர் மாண்டனர் என்ற ஒரு வடிகட்டிய பொய்யை தெரிவித்துள்ளனர். செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திடீரென்று தண்ணீர் திறந்து விடப்படவில்லை என்பது பற்றியும், அடையாற்றுக்கு எங்கிருந்தெல்லாம் வெள்ள நீர் வருகிறது என்பது பற்றியும், முன்னெச்சரிக்கைகள் எவ்வாறு வெளியிடப்பட்டன என்பது பற்றியும், விரிவாகவும், விளக்கமாகவும் பல முறை தெரிவிக்கப்பட்டும், தி.மு.க.-வினர் தொடர்யது பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்.

தமிழ்நாடு அரசு சரியான நடவடிக்கைகள் எடுக்காததால் தான் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது என்பது திமுக-வினரின் பொய் பிரசாரம் என்பதை அவர்களின் தேர்தல் அறிக்கையே எடுத்துக் கூறுகிறது. தி.மு.க.-வின் தேர்தல் அறிக்கையில், “சென்னையில் புயல் வெள்ளம் காலங்களில் ஏற்படும் வெள்ளப் பெருக்கை கட்டுப்படுத்தவும், மழை நீர் கால்வாய்கள் போன்ற அமைப்புகளை உருவாக்கி சென்னையை வெள்ளத்திலிருயது காப்பாற்றும் வகையிலும், வெள்ளத் தடுப்பு மேலாண்மைக் குழு ஒன்று அமைக்கப்படும்” என்று ஏன் தெரிவிக்க வேண்டும்?

அதே போல், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் உள்ள 96 ஏரிகளில் 50 ஏரிகளின் உபரி நீர் அடையாறு வழியாக கடலுக்குச் செல்கிறது என்றும், அடையாற்றில் உபரி நீர் கடலுக்குச் செல்லும் போது ஏற்படுகின்ற வெள்ளச் சேதம் சென்னையின் மையப் பகுதியையும், தென் சென்னைப் பகுதியையும் மிகவும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது என்றும், மழை காலத்தில் ஆற்றில் கரை புரண்டு பெருக்கெடுத்து வரும் வெள்ள நீர் கடலுக்குள் செல்ல இயலாமல் நகருக்குள் புகுந்து பெரும் சேதம் விளைவிக்கிறது என்றெல்லாம் வெள்ளத்திற்கான காரணங்களை தி.மு.க.-வின் தேர்தல் அறிக்கையே எடுத்துச் சொல்லியுள்ளது.

மேலும், பல தலைவர்கள் மதுவிலக்கு குறித்து பேசுகின்றனர். ஆனால் கருணாநிதிக்கோ, தி.மு.க.வுக்கோ மதுவிலக்கு குறித்து பேச அருகதையில்லை. தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் தி.மு.க., தனது தேர்தல் அறிக்கையில் பூரண மதுவிலக்கு என்பதை ஏன் அறிவிக்கவில்லை. பூரண என்ற வார்த்தை தேர்தல் அறிக்கையில் அவர்கள் போடவில்லை.


மது விலக்குக்காக சட்டம் கொண்டு வருவோம். டாஸ்மாக் கடையை மூடுவோம் என்று கூறியுள்ளனர். கருணாநிதி மீண்டும் தனியார் மூலம் மது விற்பனையை கொண்டு வர சூழ்ச்சி செய்கிறார். ஒரு தலைமுறைக்கு மதுவை அறிமுகப்படுத்திய பெருமை அவரையே சாரும். சட்டமன்றத்தில் மது ஒழிப்பு தொடர்பாக பேசும்போது கூட கருணாநிதி மதுவை ஒழிக்க வேண்டும் என்பதைவிட கால ஓட்டத்துக்கு தகுந்தாற்போல் அதிகம் பாதிப்பில்லாத மதுவை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment