Monetize Your Website or Blog

Thursday, 21 April 2016

விடுதலைச் சிறுத்தைகள் சின்னத்தில் போட்டியிட்டாலும் நான் பொது வேட்பாளர்தான்!'' - ஆர்.கே.நகர் வசந்தி தேவி

2016 சட்டமன்றத் தேர்தலுக்கான எல்லா கட்சிகளின் வேட்பாளர் பட்டியலும் பரபரப்பைதான் ஏற்படுத்தின. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டபோது அது ஆச்சர்யத்தைதான் தந்தது. காரணம் அந்த கட்சியின் ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளர்!

அந்த தொகுதியில் பிரதான கட்சியின் பிரதான வேட்பாளரான முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுத்தியிருக்கும் அந்த வேட்பாளர், அரசியல் வரலாற்றை மேடையில் நீட்டி முழுக்கி, இடை இடையே சோடா குடித்துவிட்டு நோட்டீஸில் உள்ள பெயர்களை மூச்சு விட பட்டியலிடும் வழக்கமான அரசியல்வாதியல்ல.  அரசியலுக்கு கிஞ்சிற்றும் அறிமுகமில்லாத ஒரு கல்வியாளர்...அவர் டாக்டர் வி.வசந்திதேவி! 

சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி, பெண்களுக்கென்றே  ஒதுக்கப்பட்ட தொகுதியோ என சந்தேகம் எழும் அளவுக்கு அத்தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ முதல்வர் ஜெயலலிதாவே மீண்டும் அங்கே போட்டியிட, திமுக சார்பில் சிம்லா முத்துச்சோழன் என்ற பெண் வேட்பாளரே களம் இறக்கி விடப்பட்டிருக்கிறார். 


இந்நிலையில் மூன்றாவது அணியாக பெரிய கட்சிகளுக்கு ஈடுகொடுத்துக்கொண்டிருக்கும் ம.ந.கூட்டணியில் இருந்து நிறுத்தப்பட்டிருக்கிறார் வி.வசந்திதேவி.

கல்வியாளர், குழந்தைகளின்  நல்வாழ்வுக்காக தொடர்ந்து பல்வேறு தளங்களில் குரலெழுப்பி வருகிறவர், தீவிர இடதுசாரி சிந்தனையாளர் என பன்முகம் கொண்ட டாக்டர். வி. வசந்திதேவி, மனோன்மணியம் சுந்தரனார், கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக் கழகங்களில் துணைவேந்தராகவும் பொறுப்பு வகித்தவர்.

''ஜாதியிலிருந்துதான் இந்தியாவில் அனைவருக்கும் அடையாளம் வழங்கப்படுகிறது. ஜாதி என்கிற அடையாளம் இருக்கிற வரைக்கும் யாருக்கும் விடுதலை கிடையாது. அம்பேத்கர் எவ்வளவு போராடியும் ஜாதியை விரட்ட முடிய வில்லை. அதனால்தான் அவர் புத்தரை தனது தலைவராக ஏற்றுக் கொண்டு, புத்த மதத்தைத் தழுவினார் '' -கடந்த ஆண்டு ஏப்ரல் 14 -ம் தேதி சென்னை தி.நகர், நவபாரத் மெட்ரிக் பள்ளியில் நடந்த டாக்டர் அம்பேத்கரின் 125-வது பிறந்த நாள் விழாவில் இப்படிப் பேசினார் வசந்திதேவி.
விழா நடந்து சரியாக ஓராண்டு, ஒரு வாரம் ஆனநிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்  சென்னை ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார் வசந்திதேவி. 

சமச்சீர் கல்விமுறையைக் கொண்டு வரும் போராட்டக் களத்தில் இடைவிடாமல் செயலாற்றிய பெருமைக்கு சொந்தக்காரர் வசந்திதேவி. சுதந்திரப் போராட்ட வீரர், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரோடு கைகோர்த்து செயலாற்றிய சக்கரைச் செட்டியாரின் பேத்தி என்பதும் வசந்திதேவியின் இன்னொரு பக்கம்.

இந்நிலையில் '' ம.ந.கூ. அணியில் யாருமே எதிர்பார்க்காத வேட்பாளர் நீங்கள். எப்படி இந்த வாய்ப்பு கிடைத்தது?  தோழர்கள் யாரும் உங்களை போட்டியிடும்படி கேட்கவில்லையா?''  என தோழர் வசந்தி தேவியிடம் கேட்டோம்.
''முதலில் ஒரு விஷயத்தை நான் தெளிவுபடுத்திவிடுகிறேன்,  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சின்னத்தில்தான் நான் போட்டியிடுகிறேன். ஆனாலும் அக்கட்சியின் வேட்பாளர் இல்லை; பொது வேட்பாளர்!


அவர்கள்தான் என்னை தேர்தலில் போட்டியிடும்படி கேட்டார்கள், ஒப்புக்கொண்டேன். தோழர்கள் யாரும் என்னை போட்டியிடும்படிக் கேட்கவில்லை. அவர்கள் கேட்டார்கள். அவர்களுடன்தான் இவர்களும் இருக்கிறார்கள், பிறகென்ன... எல்லாம் ஒன்றுதானே ?

கூட்டணி என்று வந்து விட்டபின் நான் பொது வேட்பாளர். ஒரு நல்ல விஷயத்துக்காக கரங்கள் ஒன்று சேரும்போது சில மாறுபட்ட கருத்துகள் வெளியிலிருந்து வருவதைத் தடுக்க முடியாது. நான் என்னை விசிகே வேட்பாளராக கருதவில்லை. மீண்டும் வெற்றித் திருநாளில் சந்திப்போம் !"

ஆர்.கே.நகரை நோக்கி தன் பயணத்தை தொடங்கி விட்டார் தோழர் !

No comments:

Post a Comment