முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சுழி எம்.எல்.ஏ.வுமான தங்கம் தென்னரசு இந்த தேர்தலில் மீண்டும் 5வது முறையாக திருச்சுழி தொகுதியில் போட்டியிடுகிறார். தனது சொந்த ஊரான மல்லாங்கிணற்றில் தனது வீட்டில் இருந்து வேட்பு மனு தாக்கல் செய்ய புறப்பட்ட அவருக்கு அவரது தாயார் ராஜாமணியம்மாள் விபூதி பூசி ஆசி வழங்கினார். அவரது மனைவி மணிமேகலை மற்றும் உறவினர்கள் தங்கம் தென்னரசுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அப்போது, அண்ணாச்சி (கேகேஎஸ்எஸ்ஆர்) அவரது மனைவியை டம்மி வேட்பாளரா போட்டு இருக்கிறார். ஆனா, உன்ன நான் டம்பி வேட்பாளரா போட மாட்டேன். ஏனா, வெயில் அதிகமா அடிக்கிறதனால என்று சொல்ல, மனைவி குபீரென சிரித்ததோடு, கணவருக்கு நன்றி கூறினார்.

இதைத் தொடர்ந்து, மறைந்த முன்னாள் அமைச்சரும், தனது தந்தையுமான தங்கப்பாண்டியனின் சமாதிக்கு சென்று மலர் வளையம் வைத்து வணங்கி அஞ்சலி செலுத்தினார். பின்னர் தனது ஆதரவாளர்களுடன் புறப்பட்டு சென்ற தங்கம் தென்னரசு திருச்சுழி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அலுவலரான தியாகராஜனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகத்தில் திமுகவுக்கு ஆதரவான அலை வீசுகிறது. எனவே மீண்டும் 6வது முறையாக திமுக ஆட்சி அமைப்பதும் தலைவர் கருணாநிதி மீண்டும் முதல்வர் ஆவதும் உறுதி" என்றார். பிறகு தனது முதல்கட்ட பிரசாரத்தை திருச்சுழியில் தொடங்கி வைத்தார்.

No comments:
Post a Comment