Monetize Your Website or Blog

Thursday, 28 April 2016

அ.தி.மு.க. ஆட்சிக்கு இன்னும் 3 வாரம் தான்! -டெட்லைன் வைக்கும் கருணாநிதி

இன்னும் எத்தனை நாளைக்கு தான் ஜெயலலிதா ஆள்வார், 3 வாரம் காலம் தான் அவர்கள் ஆள்வதற்கு கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று திருச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கருணாநிதி பேசினார்.

தி.மு.க. பிரசார பொதுக்கூட்டம் திருச்சியில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த 15 வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசும்போது, ''திருச்சியில் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதை நான் காண்கிறேன். திருச்சியும், சென்னையும் பெரும் வெள்ளத்தை கண்டு பழகிவிட்டது. இன்றைக்கு திருச்சியில் ஏற்பட்டுள்ள மக்கள் வெள்ளம் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியால் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளம். இந்த வெள்ளத்தில் நீந்தி கரை சேர வந்திருக்கும் உங்களை வணங்கி வாழ்த்துகிறேன்.

இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்பதற்கேற்ப நீங்கள் பெருவாரியாக இங்கே குழுமி இருப்பதை பார்க்கும்போது, உங்களைவிட்டு செல்ல மனமில்லை. மாலையில் இருந்து காத்திருந்து, காத்திருந்து உங்களுடைய அன்பை வெளிப்படுத்தும் வகையில் கூடியிருக்கிறீர்கள். இதை நான் வாக்கு கேட்டு வந்திருப்பதால் அல்ல, இதற்கு பிறகு தான் என்னை நீங்கள் ஆதரிக்க வேண்டும் என்பதும் அல்ல, எங்களை ஆதரிக்க வேண்டும் என்று எப்போதோ தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்துவிட்டீர்கள்.

அந்த முடிவை செயல்படுத்தி காட்டுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. திருச்சியில் நம்பிக்கையுடன் தான் பேசுகிறேன். திருச்சி என்னை ஏமாற்றாது. திருச்சி யாரையும் ஏமாற்றாது. இந்த திருச்சியில் ஏற்படுத்தியிருக்கும் இந்த நம்பிக்கை தென் பகுதி முழுமைக்கும் தான். தி.மு.க.வும், காங்கிரசும் இந்த தேர்தலிலே கூட்டணி சேர்ந்து இருப்பது நம்முடைய மக்களுக்கு நல்வாழ்வு தருவதற்காக தான். நாம் நிச்சயமாக வெற்றி பெற போகிறோம் என்பதை தயவு செய்து உங்களிடம் நினைவுபடுத்த விரும்புகிறேன்.


இப்போது நம்முடைய கடமையை மறந்து விட்டால், எதிர்காலம் இருள்மயம் ஆகிவிடும். 6-வது முறையாக முதலமைச்சராக வர நீங்கள் வாழ்த்துகிறீர்கள். இன்றைக்கு இருக்கின்ற முதலமைச்சர், மக்களை பார்ப்பதே பாவம் என்று கருதுகின்ற முதலமைச்சர். இன்றைக்கு இருக்கும் முதலமைச்சர் தான் கொண்ட கொள்கை, தான் பிடித்த முயலுக்கு 3 கால் என்று சாதிக்க கூடிய முதலமைச்சர். அப்படிப்பட்டவர் இன்றைக்கு நாட்டை ஆண்டுகொண்டிருக்கிறார்.

இன்னும் எத்தனை நாளைக்கு ஆள்வார், 3 வாரம் காலம் தான் அவர்கள் ஆள்வதற்கு கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு பிறகு வரும் ஆட்சி தி.மு.க ஆட்சியாக இருக்கும். மக்களுக்கு நல்வாழ்வு கிடைக்க தி.மு.க. கூட்டணி தொடர்ந்துள்ள யுத்தத்தில் நிச்சயம் வெற்றி கிடைக்கும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அந்த நம்பிக்கை வீண் போகாமல் இருக்க நீங்கள் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்" என்றார்.


No comments:

Post a Comment