Monetize Your Website or Blog

Saturday, 23 April 2016

மாற்றுப்பணியா மக்களை ஏமாற்றும் பணியா....மருத்துவத்துறைக்கு தேவை அவசர சிகிச்சை!

மிழக மருத்துவக்கல்லுாரியில் பணயாற்றி இணைபேராசிரியர்களாக பதவி உயர்வு பெற்ற பலர் தங்கள் பணிகளில் சேராமல் டெபுடேஷன் என்ற பெயரில் மீண்டும் பழைய இடத்திலேயே பணிபுரிவதால் தமிழகம் முழுவதும் மருத்துவக்கல்லுாரி மாணவர்களும் நோயாளிகளும் பரிதவிப்புக்குள்ளாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் பல மருத்துவர்கள் பேராசிரியராக பதவி உயர்வு பெற்று தமிழகம் முழுவதும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட புதிய பணியிடங்களில் பணிக்கு சேர்ந்துள்ளார்கள்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட ஒரு வார காலத்தில் முன்பின் தேதிகளில் இந்த பதவி உயர்வு  தரப்பட்டது. ஆனால் அவ்வாறு பதவி உயர்வு பெற்ற அரசு மருத்துவர்கள் தங்களது புதிய பணியிடத்தில் பணிபுரியவில்லை. வழக்கமாக முன்பு தாங்கள் பணியாற்றிய இடங்களிலேயே தொடர்ந்து பணிபுரிகிறார்கள். 


மாற்றுப்பணி என்ற பெயரில் அவ்வாறு இவர்கள் முந்தைய இடத்திலேயே பணியை தொடர்வது மருத்துவக்கல்லுாரி மாணவர்களுக்கும் அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும் பரிதவிப்புக்குள் ளாக்கியிருக்கிறது. 

அரசுத்துறையில் எதிர்பாராத சூழலுக்காக ஒரு ஊழியர் மற்றொரு துறைக்கு அல்லது அது துறையின் அவசியம் கருதி வேறிடத்திற்கு பணியாற்ற அனுமதி வழங்கப்படுவதுதான் மாற்றுப்பணி என்பார்கள். ஆனால் சட்டவிதிமுறைகள் தரும் இந்த வாய்ப்பை தங்கள் பணபலத்தால் தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்டுள்ளனர் இந்த மருத்துவர்கள் என்று புகார் கிளம்பியுள்ளது. சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகளும், பேராசிரியர்கள் இல்லாமல் வகுப்புகள் தேங்கியிருப்பதால் மருத்துவ கல்லூரி மாணவர்களும் பாதிக்கப்பட்டிருப்பதை கவனத்துக்கு கொண்டுவந்தார் சமூக ஆர்வலர் ஒருவர்.
இது குறித்து மருத்துவ வட்டாரங்களில் பேசினோம் “பட்டமேற்படிப்பு படித்து நான்கு ஆண்டுகள்  மருத்துவப்பணிகளில் அனுபவமிக்க அரசு மருத்துவர்களுக்கு இணை பேராசிரியராக  அரசு பதவி உயர்வு  அளித்தது. இதற்காக நடந்த கவுன்சிலிங்கில் காலியிடம் உள்ள மருத்துவக் கல்லூரிகளை விரும்பி எடுத்துச் செல்கிறார்கள். ஆனால் அப்படிச் சென்றவர்கள் உத்தரவின்படி பணி செய்யாமல் மீண்டும் தாங்கள் பணியாற்றிய முந்தைய இடத்திலேயே பணியாற்றி வருகிறார்கள். 

இதற்காக அவர்கள் மாற்றுப் பணி ( deputation) என்ற பெயரில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அலுவலகம் மூலம் ஐந்து முதல் பத்து லட்சம்  ரூபாய் வரை லஞ்சம் கொடுத்து விட்டு ஜாலியாக இருக்கிறார்கள். 

மாற்றுப்பணிக்காக வந்த இடத்தில் ஏற்கனவே போதுமான அளவு பேராசிரியர்கள் இருப்பதால் இவர்களுக்கு வேலை இல்லை. மாற்றுப்பணி என்று கையெழுத்து மட்டும் போட்டு விட்டு தங்கள் தனியே நடத்தும் கிளினிக்கே கதி என்றிருக்கின்றனர். உதாரணத்திற்கு டாக்டர் செல்வராணி மதுரம் என்பவர் இதய நோய் நிபுணர். மதுரையிலிருந்து பதவி உயர்வில் தூத்துக்குடிக்கு சென்ற இவர் இப்பொழுது மாற்றுப்பணி என்ற பெயரில் மீண்டும் மதுரையிலேயே பணியாற்றுகிறார். நெஞ்சு வலியுடன் போராடும் ஒரு ஏழை நோயாளி தூத்துக்குடியில அதற்கான மருத்துவர் போஸ்டிங்கில் இருந்தும் ஆள் இல்லை என்றால் என்ன பண்ணுவார்?

மதுரையில் பணியாற்றிய மன நல மருத்துவரான டாக்டர் ஜான் சேவியர் சுகவேல் நெல்லைக்கு  பதவி உயர்வில் சென்றார். மாற்றுப் பணியில் மீண்டும் மதுரைக்கே வந்துவிட்டார். மனநலம் பார்க்க வேண்டிய மருத்துவர் மதுரையில் மாற்றுப் பணி என்று கையெழுத்து மட்டுமே போட்டு விட்டு மதுரையில் பல தனியார் மருத்துவமனைக்கு செல்கிறார் என்கிற குற்றச்சாட்டு உள்ளது. 

அடுத்து டாக்டர் அருள் சுந்தரேஷ் குமார். காது ,மூக்கு ,தொண்டை பேராசிரியரான இவர்  மதுரையிலிருந்து தேனி மருத்துவ கல்லூரிக்கு பதவி உயர்வில் சென்றார். தேனிக்கு போகாமல் மாற்றுப்பணி மூலம் மதுரையில் தனியாக தொழில் செய்து வருகிறார் என்கின்றனர் அவரின் சக மருத்துவர்களே. 

மாணவர்களின் எதிர்காலம் நோயாளிகளின் சிகிச்சைக்காதான் தமிழக அரசு இவர்களுக்கு பதவி உயர்வு வழங்கி பல்வேறு இடங்களில் போஸ்டிங் போட்டது. ஆனால் அங்குள்ள பொது மக்களுக்கும், மருத்துவ மாணவர்களுக்கும் இவர்களின் சர்வீஸ் கிடைக்காமல் கஷ்டப்படுகிறார்கள். அரசின் விதிவிலக்குகளை தங்களது பணபலத்தால் விதிகளாக்கிக்கொண்டுள்ள இவர்களின் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?
காது மூக்கு தொண்டை மருத்துவம் படிக்கும் மாணவர்கள் வகுப்பு எடுக்க பேராசிரியர்கள்  இல்லாமல் தேனியில் அல்லாடுகிறார்களே. ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அதிக சம்பளத்துடன் பேராசிரியர் பதவிக்கு போகும் டாக்டர்கள் அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் 'கவனித்து' இப்படி பொது மக்களையும் மருத்துவ மாணவர்களையும் ஏமாற்றிக்கொண்டு லட்சக்கணக்கில் தனியார் கிளினிக்கில் சம்பாதிக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் கணக்கெடுத்தால் ஏகப்பட்ட மருத்துவர்கள் இந்த முறையில்தான் வேலை செய்கிறார்கள் என்கிற தகவலும் வந்துள்ளது.

' அரசு மக்களுக்கு நல்ல வைத்திய வசதியை கொடுக்க வேண்டும் என்றால் இப்படி மாற்றுப் பணிகள் என்ற நடைமுறையை ரத்து செய்யப்பட வேண்டும்.மக்கள் நலன்,மருத்துவ மாணவர்கள் நலன் கருதி எங்கு பணியில் போட்டார்களோ அங்கு சென்று வேலை பார்க்க வேண்டும் ' என்று அரசு சர்வீஸ் மருத்துவர்கள் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் சங்கம் தீர்மானம் போட்டு அதை மருத்துவ செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு அனுப்பி இருக்கிறார்கள்.ஆனாலும் இன்னமும் நடவடிக்கை இல்லை“ என்றனர் அவர்கள்.


இதுகுறித்து மருத்துக்கல்வி இயக்குனர் டாக்டர் விமலாவிடம் கேட்டோம். நாம் சொன்ன புகார்களை  கவனமாக குறித்துக்கொண்டவர், இதுபற்றி என்னவென்று விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன் என்று உறுதியளித்தார். 

இன்னும் ஓரிரு நாட்களில் தமிழகம் முழுவதும் மாற்றுப்பணியில் உள்ள மருத்துவர்களின் பட்டியல் வெளியிடப்படும் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

'படித்தவன் சூதுவாது செய்தால்........'என்று அப்போதே எச்சரித்துவிட்டார் பாரதி!

No comments:

Post a Comment