
நாம் வாழும் வாழ்க்கை இன்று முற்றிலும் மாறிவிட்டது. எது நல்லது, எது சுத்தமானது என்ற எந்த உண்மையும் தெரியாமல் நமக்கு நல்லது என்று சொல்லப்படுபவை மட்டுமே நமக்கு சுத்தமானவையாகக் கண்களுக்கு தெரிகின்றன.
அதுதான் நகரமயமாதலும் உலகமயமாதலும் கண்ட வெற்றி. இதனால் பன்னாட்டு பெரு நிறுவனங்கள் லாபம் அடைந்தன. நகரங்களும், அதனால் லாபமடைந்த நிறுவனங்களும் நமக்குப் பல வசதி வாய்ப்புகளைக் கொடுத்திருக்கலாம். ஆனால் நாம் நம்முடைய அழகான கிராமங்களை, ரம்யமான அழகை, சுகமான மற்றும் சுகாதாரமான வாழ்க்கையை இழந்துவிட்டோம். நகரத்தின் பரபரப்புகளில் தொலைந்து போய்விட்டோம்.
1800களில் 2% மக்கள் மட்டுமே நகரங்களில் இருந்தனர். இது 1960ல் 34% என்றானது. 2014ல் 54% பேர் நகரவாசிகள். இந்த கணக்கின்படி 2050ல் 65 முதல் 85% வரையிலான மக்கள் நகரவாசிகளாக இருப்பார்கள்.
வெப்பமயமாதலின் விளைவுகள்:
நகரங்களில் நாளுக்குநாள் நெருக்கடி அதிகமாவதால் கட்டடங்கள் அதிகரிக்கின்றன. கார்பன் வெளியீடு அதிகமாகிறது. இதனால் வெப்பமாதல் அதிகரிக்கிறது. கிராமங்களைக் காட்டிலும் நகரங்கள் 15-30% அதிகமாக சூடாகின்றன. இதனால் கோடைக் காலங்களில் மின்சார தேவை 2% கூடுதலாக தேவைப்படுகிறது. வீடுகளில் வெப்பத்தைத் தணிக்கவே வழக்கமானதை விட 5-10% கூடுதலாக மின்சாரம் தேவைப்படுகிறது.

நகரத்தினால் விளைந்த சுற்றுச்சூழல் கொலைகள்:
நகரத்தினால் ஏற்பட்ட சூற்றுச்சூழல் சீர்கேடுகளால் நடக்கும் கொலைகள் ஏராளம். ஆண்டுக்கு 24 லட்சம் பேர் காற்று மாசுபாட்டினால் மட்டுமே இறக்கிறார்கள். இதற்கு காரணம் நகரத்தைச் சுற்றிய பகுதிகளில் 35% பசுமைத் தாவரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. காற்றையும் நிலத்தையும் சுத்தம் செய்யும் தாவரங்கள் இல்லாமல் எப்படி நம்மால் இதிலிருந்து தப்ப முடியும். டிபி என்று சொல்லப்படும் காச நோய் நகரத்தில் உள்ள 60% பேருக்கு உள்ளது.
வாழ்தலின் சமநிலையைப் பாதுகாக்கும் உயிரினங்களும் கொல்லப்படுகின்றன. நகரமயமாதலின் விளைவுகளால் மட்டுமே 139 நீர்நிலவாழ் உயிரினங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன. 41 பாலூட்டி உயிரினங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன. 25 பறவைகள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன.
மனிதன் எப்படியெல்லாம் கொல்லப்படுகிறான்?
மனிதனைக் காற்றும் நீருமே அதிகமாகக் கொல்கின்றன. காற்றையும், நீரையும் மாசுபடுத்தியதன் விளைவு அவனையே வந்து சேர்கிறது. இருதயக் கோளாறு, சுவாசப் பிரச்னைகள், காச நோய், மலேரியா, டயேரியா, போன்ற பல நோய்கள் காற்று மற்றும் நீர் மாசுபாட்டினால்தான் உருவாகிறது.

தீர்வுதான் என்ன?
நம்முடைய மகிழ்ச்சியான தருணங்களை மீண்டும் மீண்டும் நினைத்து சந்தோஷப்பட, நாம் உயிருடன், அதைவிட முக்கியமாக ஆரோக்கியமாக வாழ்ந்தாக வேண்டும். மனிதர்கள் உயிருடன் வாழத் தகுதியான ஒரே இடமாக இந்தப் பிரபஞ்சத்தில் இந்த பூமி மட்டும்தான் இருக்கிறது.
அப்படிப்பட்ட ஒரு பொக்கிஷத்தை ஒவ்வொரு நாளும், மரங்களை வெட்டுவது, நீர்நிலைகளை நாசப்படுத்துவது, காற்றை மாசுபடுத்துவது என கொஞ்சம் கொஞ்சமாகக் கொலை செய்துகொண்டிருக்கிறோம். நகரத்தின் பரபரப்பான வாழ்க்கை, நமக்கு சுற்றுச்சூழல் பற்றி சிந்திக்க நேரம் கொடுப்பதில்லை. ஆனால் சில விஷயங்களை நம்மால் செய்ய முடியும்.
1. பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்ப்பது
2. வீட்டு மாடிகளில் தோட்டம் அமைப்பது
3. குறைந்த தூரங்களுக்கு சைக்கிளில் செல்வது
4. தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது
5. குப்பைத் தொட்டியைப் பயன்படுத்துவது
6. எச்சில் உமிழ்வதைக் குறைத்தல்
7. பேப்பர்களுக்கு பதிலாக இ-டிக்கட்டுகளைப் பயன்படுத்துவோம்
8. அசைவ உணவுகளைக் குறைத்து, சைவ உணவுகளை உண்வோம்
9. பழையப் பொருட்களை மீண்டும் உபயோகிக்கும் வகையில் மாற்றுவோம்
10. தேவைக்கு மீறி ஏதையும் பயன்படுத்த வேண்டாம்.

No comments:
Post a Comment