Monetize Your Website or Blog

Tuesday, 1 March 2016

14 நாடுகளில் கார்த்தி சிதம்பரம் முதலீடு?- அதிமுக அமளியால் விஸ்வரூபம் எடுக்கும் ஏர்செல்- மேக்சிஸ் விவகாரம்!

14 நாடுகளில் முறைகேடாக சொத்துக் குவித்துள்ளதாக கூறி,  ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முடக்கினர்.
 
ஏர்செல்- மேக்சிஸ் ஒப்பந்தத்திற்கு,  முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளது என்றும், இந்த ஒப்பந்தத்திற்குப்ப பிறகே  14 நாடுகளிலும் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளதாகவும், சிங்கப்பூரில் உள்ள துணை நிறுவனத்தின் மூலமே பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன என்றும், இது தொடர்பாக 14 நாடுகளின் அரசுகளை அமலாக்கத்துறையும், வருமான வரித்துறையும்  அணுக இருப்பதாகவும் 'பயனீர்'  என்ற ஆங்கில பத்திரிகை  செய்தி வெளியிட்டுள்ளது. 

இந்த செய்தியை அடிப்படையாகக் கொண்டு, ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் நாடாளுமன்ற இரு அவைத்தலைவர்களிடமும் அதிமுக எம்.பி.க்கள் நோட்டீஸ் அளித்திருந்தனர்.

இந்த நிலையில், நாடாளுமன்ற இரு அவைகளும் இன்று காலை கூடியதும், இப்பிரச்னையை எழுப்பிய அதிமுக எம்.பி.க்கள், முறைகேடாக சொத்துக் குவித்துள்ள ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அமளியில் ஈடுபட்டதால், இரு அவைகளும் முடங்கின. 
 
அப்போது பேசிய மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே.குரியன், சம்பந்தப்பட்ட இரண்டு பேரும் எம்பிக்கள் அல்ல. அதிமுக உறுப்பினர்கள் தங்களது கோரிக்கையை மத்திய அரசிடம்தான் தெரிவிக்க வேண்டும். தாம் மத்திய அரசு அல்ல என்று கூறினார். இதைத் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கை நண்பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

இதே பிரச்னையை மக்களவையில் அதிமுக உறுப்பினர்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். அப்போது பேசிய அமைச்சர் வெங்கையா நாயுடு, ப.சிதம்பரம் விவகாரம் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது என்றும், அதிமுக உறுப்பினர் அமளியை கைவிட்டால் விவாதிக்கலாம் என்றும் தெரிவித்தார். இதன் பின்னரும் அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கை நண்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவை மீண்டும் கூடியதும் அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவை நடவடிக்கை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 

கார்த்தி சிதம்பரம் விளக்கம்

இதனிடையே, சொத்துக்குவிப்பு தொடர்பாக நாளிதழில் வந்த புகார் குறித்து விளக்கம் அளித்துள்ள கார்த்தி சிதம்பரம், சட்ட விதிகளுக்கு உட்பட்டே நான் தொழில் நடத்தி வருகிறேன். புகார் உண்மையில்லை என பலமுறை விளக்கம் தரப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.


No comments:

Post a Comment