திமுக- தேமுதிக முடிவுக்கு வந்த ஒப்பந்தம்!
சினிமாவிலும் சரி... அரசியலிலும் சரி... சஸ்பென்ஸ் வைத்தே பழக்கப்பட்டவர் விஜயகாந்த். எப்படி இருந்தாலும் க்ளைமாக்ஸ் வேண்டும் இல்லையா? இதோ க்ளைமாக்ஸுக்கு வந்து விட்டது தேமுதிகவின் கூட்டணி பேச்சுவார்த்தை. 59 சீட்டுகளுடன் திமுகவுக்கு விஜயகாந்த் ஓகே சொல்லியிருப்பது உறுதியாகி இருக்கிறது. க்ளைமாக்ஸுக்கு முன்பு என்ன நடந்தது? இதோ அந்த மேக்கிங் ஆஃப் த கூட்டணி....
கனவில் பிரேமலதா!
கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு விஜயகாந்த் உடல்நிலை கடுமையாக பாதிகப்பட்டது. சிங்கப்பூருக்கு சிகிச்சைக்காக போனார். அதில் இருந்தே கட்சி முழுமையாக பிரேமலதாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. பிரேமலதா எடுக்கும் முடிவே தேமுதிகவில் இறுதியானதாக இருந்தது. தேமுதிக மாவட்டச் செயலாளர்கள், தொண்டர்கள் என்று கிட்டதட்ட ஒட்டுமொத்த கட்சியும் திமுகவுடன் கூட்டணி என்பதையே விரும்பியது. இதற்கு சுதீஷூம் விதிவிலக்கு அல்ல. ஆனால், ஏனோ பிரேமலதா மட்டும் திமுக கூட்டணி வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்தார். சில வாரங்களுக்கு முன்பு மாவட்டச் செயலாளர்கள் சிலர் விஜயகாந்த் வீட்டுக்குப் போயிருக்கிறார்கள். அப்போது அவர்களிடம் பிரேமலதா கூட்டணி பற்றி பேசியிருக்கிறார். அவர்கள் எல்லோருமே திமுக கூட்டணிக்கு போனால் சரியாக இருக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள். அதற்கு அவர், ‘நீங்க எல்லோரும் எம்.எல்.ஏ ஆவது பற்றி மட்டுமே யோசிக்கிறீங்க.. அப்போ கேப்டன் என்ன ஆவாருன்னு யோசிச்சீங்களா? திமுக கூட்டணிக்கு போனால் கேப்டன் எப்படி முதல்வர் ஆக முடியும்? என்று கேட்டிருக்கிறார். எல்லோரும் அமைதியாக இருந்தார்களாம். பிரேமலதாவின் மனநிலை திமுக வேண்டாம் என்பதுதான் என்பதை மாவட்ட செயலாளர்கள் புரிந்து கொண்டார்கள்.
அதனால் பேசினால் தேவை இல்லாமல் சிக்கல் வரும் என்பதால்தான் யாரும் கூட்டணி பற்றி வாயே திறக்கவில்லை. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கூட ஒருவரும் மூச்சு விடவில்லை. பிஜேபியில் இருந்து பேச்சுவார்த்தைக்காக வந்திருந்த தமிழக தேர்தல் பொறுப்பாளர் ஜவ்டேகர் விஜயகாந்த் வீட்டுக்குப் போனார். ஜவ்டேகரிடம் விஜயகாந்த் சற்று கோபம் காட்டினாலும், பார்த்துக்கலாம் போங்க என்றே சொல்லி அனுப்பியிருக்கிறார் பிரேமலதா. அப்போதும் அவர் பிஜேபி நம்பிக்கையை கைவிடவில்லை.அமித்ஷா வந்தால் எல்லாம் சுபமாகிவிடும் என்று நினைத்தார் பிரேமலதா. அமித்ஷாவும் பேச்சுவார்த்தைக்கு வரத் தயாராகவே இருந்தார்.
அதனால் பேசினால் தேவை இல்லாமல் சிக்கல் வரும் என்பதால்தான் யாரும் கூட்டணி பற்றி வாயே திறக்கவில்லை. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கூட ஒருவரும் மூச்சு விடவில்லை. பிஜேபியில் இருந்து பேச்சுவார்த்தைக்காக வந்திருந்த தமிழக தேர்தல் பொறுப்பாளர் ஜவ்டேகர் விஜயகாந்த் வீட்டுக்குப் போனார். ஜவ்டேகரிடம் விஜயகாந்த் சற்று கோபம் காட்டினாலும், பார்த்துக்கலாம் போங்க என்றே சொல்லி அனுப்பியிருக்கிறார் பிரேமலதா. அப்போதும் அவர் பிஜேபி நம்பிக்கையை கைவிடவில்லை.அமித்ஷா வந்தால் எல்லாம் சுபமாகிவிடும் என்று நினைத்தார் பிரேமலதா. அமித்ஷாவும் பேச்சுவார்த்தைக்கு வரத் தயாராகவே இருந்தார்.
பிரேமலதா இந்த தேர்தலை பெரிதாக நினைக்கவில்லை. 2021-தான் அவரது கனவு. விஜயகாந்துக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதால் 2021 தேர்தலில்தான் முதல்வர் வேட்பாளராக களமிறக்கலாம் என கனவு கண்டார். அதற்கு இப்போதே ஸ்ட்ராங்கான அடித்தளம் அமைக்கத் திட்டமிட்டார். அதற்கு அவர் எடுத்த முதல் அஸ்திரம்தான் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வேண்டாம் என்பது. இப்படி இருந்த பிரேமலதா மாறியது எப்படி? மாற்றியது யார்?
வருத்தப்பட்ட சுதீஷ்!
திமுக கூட்டணியை பெரிதும் விரும்பியவர்களில் முக்கியமானவர் பிரேமலதாவின் தம்பி சுதீஷ். சுமார் 2 மாதங்களுக்கு முன்பு இருந்தே பேச்சுவார்த்தையை ஆரம்பித்தவர் சுதீஷ்தான். திமுகவில் இருந்து ஸ்டாலின் மருமகன் சபரீசன், கரூர் கே.சி.பழனிசாமியின் மகன் சிவராமன் ஆகிய இருவரும்தான் பேச்சுவார்தைக்குப் போனார்கள். தேமுதிகவில் இருந்து சுதீஷ் மட்டுமே போயிருந்தார். மும்பையில் விஜயகாந்துக்கு மிக நெருக்கமான நண்பர் நரசிம்மன். அவர்தான் இரு தரப்புக்கும் நடுவில் இருந்து பேச்சுவார்த்தையை தொடங்கினார். திமுக 42 சீட்டில் நின்றது. விஜயகாந்த் ஒப்புக்கொள்ளவில்லை. அடுத்து திமுக முன்னாள் அமைச்சர் ஒருவரின் சம்பந்தி வழியாக நடந்தது பேச்சுவார்த்தை. எது நடந்தும் உடன்பாடு மட்டும் ஏற்படவில்லை.
சில நாட்களுக்கு முன்பு நடந்த தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முடிந்து விஜயகாந்த் கிளம்பிய பிறகு, அங்கிருந்த மாவட்டச் செயலாளர்களிடம் சுதீஷ், ’நீங்க எப்படி திமுக தான் வேணும்னு நினைக்கிறீங்களோ.. அதேதான் நானும் நினைக்கிறேன். சில மாதங்களுக்கு முன்பு ஒரு தொழிலதிபர் வந்தாரு. அவரிடம் 110 சீட், துணை முதல்வர், 10 அமைச்சர்கள், உள்ளாட்சியில் பிரதிநிதித்துவம் என்று கேப்டன் சொல்லி அனுப்பினார். அவரும் பேசிட்டு சொல்றதாக சொல்லிட்டுப் போனாரு. இதுவரைக்கும் எந்த பதிலும் வரலை. என்ன பண்ணச் சொல்றீங்க?’ என்று கேட்டிருக்கிறார்.
‘மாமாவை கூட எப்படியாவது பேசி சரி பண்ணிடலாம். அக்காதான் ஒத்துக்க மாட்டேங்குறாங்க!’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லிப் புலம்பியிருக்கிறார் சுதீஷ். சுதீஷின் வருத்தங்கள் சந்தோஷமாக மாறியது எப்படி?
பிறந்தநாள் பரிசு!
கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி என எல்லோரும் ஒருமித்த கருத்தில் இருந்தது விஜயகாந்த் வேண்டும் என்பதில்தான். விஜயகாந்த் திமுக கூட்டணிக்கு வருவார் என்று சில மாதங்களாகவே சொல்லி வந்தார் ஸ்டாலின். திமுக கூட்டணியில் காங்கிரஸ் சேர்ந்த பிறகு இளங்கோவன் தொடங்கி குஷ்பு வரை எல்லோரும் விஜயகாந்த் வருவார் என்றார்கள். ஆனால், விஜயகாந்த் தரப்பில் இருந்த எந்த பாசிட்டிவ் ஆன பதிலும் வராததால் ஸ்டாலின் அப்செட்டாகவே இருந்தார். கடந்த திங்கள் கிழமை இரவு கருணாநிதியை சந்தித்து பிறந்தநாளுக்கு ஆசிர்வாதம் வாங்கினார் ஸ்டாலின். அதன் பிறகு ஸ்டாலினை கலாநிதி மாறன் சந்தித்தார். அவரும் பிறந்தநாள் வாழ்த்து சொல்லிவிட்டு, ‘விஜயகாந்த்கிட்ட நான் பேசுறேன். நீங்க சந்தோஷமா போய் பிறந்தநாளை கொண்டாடுங்க..’ என்று சொல்லி அனுப்பியிருக்கிறார். அன்று இரவே கலாநிதி மாறன் விஜயகாந்த் சந்திப்பு நடந்திருக்கிறது. ஸ்டாலின் மருமகன் சபரீசன் மட்டும் கலாநிதி மாறனுடன் போயிருக்கிறார். ‘சீட்டை நீங்க உறுதி பண்ணிக்கோங்க. மற்ற எல்லாத்துக்கும் நான் பொறுப்பு..’ என்று கலாநிதி மாறன் சொல்லியிருக்கிறார். அதற்கு விஜயகாந்த் ஏதோ சொல்ல.. ‘அதிமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரணும் என்பதுதான் உங்களோட எண்ணம். நாம எல்லோரும் பிரிஞ்சு நின்னா அது அவங்களுக்கு சாதகமா போய்டும். அதனால நீங்க திமுகவுக்கு வருவதுதான் சரியா இருக்கும்...’ என்று பேசியிருக்கிறார் கலாநிதி மாறன். ஒரு மணி நேரத்துக்கு மேல் நீடித்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்திருக்கிறது.
மறுநாள் கருணாநிதியை, கலாநிதி மாறனும், சபரீசனும் சந்தித்தார்கள். ‘59 சீட்டுக்கு தேமுதிக ஒத்துக்கிட்டாங்க. நான் பேசிட்டேன்!’ என்று கலாநிதி மாறன் சொல்லியிருக்கிறார். அதற்கு கருணாநிதி, ‘59 சீட்டாய்யா? அவ்வளவு எதுக்குய்யா?” என்று இழுத்தாராம். ‘நாங்க பேசிட்டோம். சரியாத்தான் இருக்கும்!’ என்று கலாநிதி சொல்லவும், ‘சரி..’ என சொல்லியிருக்கிறார் கருணாநிதி.
மனம் திறந்த விஜயகாந்த்!
கலாநிதி மாறனிடம் பேசிய பிறகுதான் பிரேமலதாவை சமாதானப்படுத்தி இருக்கிறார் விஜயகாந்த். ‘தொண்டர்கள் எல்லோரும் திமுகதான் வேணும்னு நினைக்கிறாங்க. மாவட்டச் செயலாளர்களும் அதையேதான் சொல்றாங்க. நமக்கு கட்சிதானே முக்கியம். திமுகவும் நாம கேட்ட சீட்டுக்கு கிட்டத்தட்ட ஒத்து வந்துட்டாங்க. உள்ளாட்சித் தேர்தல்ல கூட்டணி வைக்கவும், 30 சதவீதம் நமக்கு சீட் கொடுக்கிறதுக்கும் சம்மதிச்சுட்டாங்க. கட்சியில இருக்கிற அடிமட்டத் தொண்டனுக்கு உள்ளாட்சி தேர்தலில்தானே நல்லது செய்ய முடியும். அடுத்த தேர்தல்தான் நமக்கு முக்கியம். அதுக்கு சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும். அடுத்த அஞ்சு வருஷம் ஸ்ட்ராங்கா இருக்கணும் இல்லையா... அதுக்கு திமுக கூட்டணிதான் சரின்னு எனக்கு தோணுது’ என்று சொல்லியிருக்கிறார் விஜயகாந்த். நீண்ட யோசனைக்குப் பிறகு பிரேமலதாவும் தலையாட்டியிருக்கிறார்.
ஆக, சாலிக்கிராமத்தில் இருந்து கோபாலபுரத்துக்கு ரூட் க்ளியர். செவ்வாய், புதன் கிழமைகள் அஷ்டமி, நவமி என்பதால் நல்ல நாளுக்கு காத்திருக்கிறார் விஜயகாந்த். நாளும் நேரமும் பார்த்து அறிவிப்பு வரும்.

No comments:
Post a Comment