தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், திடீர் வேகத்தில் செயல்பட துவங்கியிருக்கிறது தமிழக அரசு.
தேர்தல் தேதி அறிவித்து விட்டால் எந்த திட்டங்களையும் துவக்கி வைக்க முடியாது என்பதாலும், நலத்திட்ட உதவிகள் வழங்க முடியாது என்பதாலும் செயல்பாட்டில் உள்ள திட்டங்களை அவசர கதியில் துவக்கி வைக்கிறது தமிழக அரசு.

அதன்படி தமிழகத்தில் இன்று ஒரே நாளில் ஏறத்தாழ 2,400 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களை, தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார். ஆனால், இதில் பல பணிகள் இன்னும் முழுமை பெறாத நிலையில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் ஒன்று கோவை ஒருங்கிணைந்த புதிய மருத்துவமனை கட்டடம்.

ரூ.54.39 கோடி மதிப்பீட்டிலான 4 அடுக்குமாடி மருத்துவமனை கட்டடத்தில் இன்னும் பணிகள் முழுமை பெறவில்லை. மருத்துவமனையில் டைல்ஸ் அமைக்காமலும், மின் இணைப்பு கொடுக்காமலும், லிப்ட்கள் பொருத்தப்படாமலும் அரைகுறை வேலைபாடுகளுடன் கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஆனால், பணிகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ளதாக கூறி, வெளிப்புறத்தில் மட்டும் பெயிண்ட் செய்து கட்டடப்பணிகள் முடிவடைந்துள்ளதாக காட்டப்பட்டுள்ளது.

பிரண வாயு குழாய் என அடிப்படை வேலைகள்கூட நடக்காத நிலையில், மருத்துவமனை கட்டடம் தேர்தலுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை கட்டட பணிகள் கடந்த இரு ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. முறையாக பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் எப்போதோ இந்த பணி முடிந்திருக்கும். ஆனால், அப்போது வேகப்படுத்தாமல் இப்போது தேர்தலுக்காக பணிகள் முழுமை பெறாமல் திறந்து வைக்கப்படுவதாக பலரும் புகார் தெரிவித்தனர்.

அதேபோல் இந்த புதிய கட்டடத்தில் இருதயம், சிறுநீரக அறுவை சிகிச்சைகள் செய்ய வசதியாக ரூ.55 கோடியில் புதிய இயந்திரங்கள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கட்டுமான பணிகளே இன்னும் முடிவடையாத நிலையில், இந்த இயந்திரங்களும் இன்னும் பொருத்தப்படவில்லை. இன்று திறந்து வைக்கப்பட்ட சிறுநீரக கற்களை அறுவை சிகிச்சையின்றி நீக்கும் இயந்திர அறையும் பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியாத நிலையில்தான் உள்ளது. ஒரு அறையில் இந்த அறை திறந்து வைக்கப்படுவதாக ப்ளக்ஸ் பேனரை மட்டுமே பார்க்க முடிந்தது. இயந்திரத்தை பார்க்க முடியவில்லை.

இன்னும் பயன்படுத்த முடியாத நிலையில், வெளித்தோற்றத்தில் மட்டும் அலங்கரித்து வைக்கப்பட்ட கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டடத்தை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். கோவை மேயர், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் அரசு மருத்துவமனை கட்டடத்தில் இருந்தனர். கட்டட திறப்பு விழாவை கொண்டாடும் வகையில், மருத்துவமனை வளாகத்தில் அ.தி.மு.க.வினர் மிக நீண்ட சரவெடியை வெடிக்க முற்பட்டனர். மருத்துவமனை வளாகம் என்பதால் பட்டாசு வெடிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்ட போதும், அதையும் மீறி பட்டாசு வெடித்து தற்போது பயன்பாட்டுக்கு கொண்டு வர இயலாத கட்டட திறப்பை அ.தி.மு.க.வினர் கொண்டாடினர்.
எல்லாம் தேர்தல் படுத்தும் பாடு!
எல்லாம் தேர்தல் படுத்தும் பாடு!

No comments:
Post a Comment