Monetize Your Website or Blog

Saturday, 5 March 2016

மகாத்மா பயன்படுத்திய பொருட்கள் இந்த மனிதரிடம் இருப்பது தேசத்துக்கு அவமானம் இல்லையா?

க்கள் பணம் 7 ஆயிரம் கோடியை விழுங்கிய விஜய் மல்லையாவுக்கு பல ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்து உள்ளன. விஜய் மல்லையாவையும் பணத்தையும் பிரிக்க முடியாது. அவர் நடத்தும் நாடகங்களையும் புரிந்து கொள்ள முடியாது. தற்போது எஸ்.பி.ஐ. வங்கி , அவருக்குள்ள சொத்துக்கள் குறித்து  வெளிப்படையாக அறிவிக்கவும்,  அவரது பாஸ்போர்ட்டை முடக்கவும் கோரிக்கை விடுத்துள்ளது.  எஸ்.பி.ஐ உள்ளிட்ட பெரிய வங்கிகளிடம் மட்டும் சுமார் 3.5 லட்சம் கோடி வாராக்கடன் இருக்கிறது. இதில் விஜய் மல்லையா மட்டும் ரூ. 7 ஆயிரம் கோடி செலுத்த வேண்டும்.
விஜய் மல்லையா என்ற  இந்த மனிதரிடம் உள்ள சொத்து எவ்வளவு? கணக்கிட முடியாது. உலகம் முழுக்க விஜய் மல்லையாவின் சொத்துக்கள் குவிந்து கிடக்கின்றன. கடந்த 2006-ம் ஆண்டு,  விஜய் மல்லையாவின் மொத்த சொத்து மதிப்பு போர்ப்ஸ் பட்டியலின் படி 1.3 பில்லியன் டாலர்களாக இருந்தது.  ஆனால் 2008ம் ஆண்டு 390 மில்லியன் டாலர்களாக  குறைந்தது. இந்த ஆண்டில் அவர் போர்ப்ஸ் பட்டியலில் இடம் பெறவில்லை. 



கடைசியாக அவர் போர்ப்ஸ் பட்டியலில் இடம் பிடித்தது கடந்த 2011ம் ஆண்டு. அப்போது விஜய் மல்லையாவின் சொத்து மதிப்பு 1.11 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. அடுத்த ஆண்டு விஜய் மல்லையாவின்  சொத்து மதிப்பு 800 மில்லியன் அமெரிக்க டாலர்களாக குறைய, போர்ப்ஸ் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார். இதே ஆண்டில்தான் விஜய் மல்லையாவின்  கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் வரலாறு காணாத நஷ்டத்தை சந்தித்தது.

தற்போது விஜய் மல்லையா தலைவராக உள்ள யுனைடெட் புரூவரிஸ் நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு மட்டும்  ரூ.1,750 கோடி ஆகும். இதில் 8.8 சதவீத பங்குகள் விஜய் மல்லையா வசம் உள்ளன. அதுபோல் யுனைடெட் புரூவரீஸ் ஹோல்டிங் நிறுவனத்தின் 7.91 சதவீத பங்குகள் விஜய் மல்லையாவிடம் உள்ளன. இவற்றின் மதிப்பு  ரூ.11 கோடி ஆகும். யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை பிரிட்டனை சேர்ந்த டியாஜியோ நிறுவனம் வாங்கியிருப்பதால், யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தில் இருந்து விலக வேண்டிய கட்டாயம் விஜய் மல்லையாவுக்கு ஏற்பட்டது. விலகுவதைத் தவிர வேறு வழியில்லாத நிலையில், தற்போது அவரது மகன் மட்டுமே இரு ஆண்டுகளுக்கு அந்த நிறுவனத்தில் இயக்குநராகத் தொடர முடியும்.
ஆனால் விஜய் மல்லையாவுக்கு உலகம் முழுக்க கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்கள் குவிந்து கிடக்கின்றன. 750 கோடி மதிப்புள்ள மாண்டி கார்லோ தீவு, லட்சத்தீவில் தின்னக்காரா கடற்கரை, ஜோகனஸ் பர்க்கில் 12 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள பண்ணைகள், இமயமலை பகுதியில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சுற்றுலா மையங்கள், பெங்களூருவில் அமைந்துள்ள யு.பி.சிட்டி, ஸ்காட்லாந்தில் கால்நடைப் பண்ணைகள், லண்டன் மற்றும் மாண்டிகார்லோவில் பங்களாக்கள்,  நியூயார்க் மன்ஹட்டன் பகுதியில் சொத்துக்கள், டெல்லி, மும்பை, பெங்களூருவில் பங்களாக்கள், கர்நாடகத்தில் 400 ஏக்கர் பரப்பளவில் குதிரைப் பண்ணை போன்ற சொத்துக்கள் விஜய் மல்லையாவுக்கு குவிந்து கிடக்கிறது.
விஜய் மல்லையா தனது யுனைடெட் புரூவரிஸ் நிறுவனத்தை நம்பினாரோ இல்லையோ ரியல் எஸ்டேட் தொழிலை முழுமையாக நம்பினார். இதனால்தான் உலகம் முழுக்க சொத்துக்களை வாங்கி அவர் குவித்தார். தற்போது டியாஜியோ நிறுவனம் யுனெடட்  ஸ்பிரிட் நிறுவனத்தை வாங்கியிருப்பதால், இந்த இரு விளையாட்டு அணிகளுடன் 5 ஆண்டுகளுக்கு விஜய் மல்லையா உரிமை கொண்டாட முடியாது. ஏனென்றால் ராயல்சேலஞ்சர்ஸ் அணி,  யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அதுபோல் சஹாரா ஃபோர்ஸ் பார்முலா ஒன் நிறுவனத்தின் மீதான உரிமையையும் விஜய் மல்லையா இழக்கிறார்.

அது மட்டுமல்ல, விளையாட்டுத் துறை மீது விஜய் மல்லையாவுக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. ஐ.பி.எல். அணியான பெங்கரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி பார்முலா ஒன் அணியான சஹாரா ஃபோர்ஸ் இந்திய அணிகள் விஜய் மல்லையாவுக்குதான் சொந்தமாக இருந்தன.  தற்போது யுனைடெட் புரூவரிஸ் குழுமத்தின் முக்கிய நிறுவனமான யுனைடெட்  ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை பிரிட்டனை சேர்ந்த டியாஜியோ நிறுவனம் வாங்கியிருக்கிறது.
தொடர்ந்து ரூ.515 கோடி கொடுத்து டியாஜியோ நிறுவனம் விஜய் மல்லையாவை யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து  கழற்றி விட்டு விட்டது. தற்போது விஜய் மல்லையாவின் கடன்களுக்கும் டியாஜியோ நிறுவனமே பொறுப்பேற்றிருக்கிறது என்பதும் இதில் அடங்கியிருக்கிறது. 

எப்போதும் நாட்டின் மீது அக்கறை கொண்டிருப்பவராக காட்டிக் கொள்பவர் விஜய் மல்லையா. திப்பு சுல்தான் பயன்படுத்திய வாள் ஏலம் விடப்பட்டபோது, லண்டன் போன்ஹர்ம்ஸ் நிறுவனத்திடம் இருந்து  நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட 30 மடங்கு அதிகம் கொடுத்து,  அதாவது 1.75 பில்லியன் பவுண்டு தொகை கொடுத்து விஜய் மல்லையா அதனை  வாங்கினார்.
 


தேசத் தந்தை மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருட்களையும் 1.8 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (சுமார் 9.8 கோடிக்கு )விஜய் மல்லையா ஏலம் எடுத்தார். தேசத்தின் அடையாளங்களாக கருதப்படும் இது போன்ற மதிப்பு மிகு பொருட்கள், 7 ஆயிரம் கோடியை சுருட்டிக் கொண்டு ஓடத் தயாராக இருக்கும் விஜய் மல்லையாவிடம் இருப்பது எந்தவிதத்தில் நியாயம் என்பதும் புரியவில்லை. 

கடந்த 2012-ம் ஆண்டு பில்லியனராக இருந்து மில்லியனராக விஜய் மல்லையா மாறிய காலக்கட்டத்தில் போர்ப்ஸ் பட்டியலில் இருந்து நீக்க்கப்பட்டார். அப்போது விஜய் மல்லையா, '' பில்லியனர் என்று அழைக்கப்படும் இந்த பட்டியலில் இருந்து நான் நீக்கப்பட்டதற்கு கடவுளுக்கு நன்றி.  இனிமேல் என் மீது  பொறாமையிருக்காது... என் மீது தேவையில்லாத தனி நபர் தாக்குதல்களும் இனி இருக்காது'' என்று அப்போது ஒரு பேட்டியில் கூறினார். 

ஆனால் நாட்டின் பொதுத்துறை வங்கிகளிடம் ஆயிரம் கோடிகளில் கடன் வாங்கி விட்டு கட்டாமல் ஓட நினைக்கும் விஜய் மல்லையாவை பார்த்து இந்த சமூகம்  என்ன சொல்லும்...?


No comments:

Post a Comment