Monetize Your Website or Blog

Friday, 11 March 2016

'எவ்வளவோ சொல்லியும் கேட்கலை': காவல்துறை தாக்குதலுக்குள்ளான விவசாயி கண்ணீர்!

ங்கி கடன் தவணையை கட்ட தாமதமானதால் அப்பாவி விவசாயி ஒருவரை காவல்துறையினர் அடித்து உதைத்து, அவருடைய டிராக்டரை எடுத்து சென்ற சம்பவம் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.

தஞ்சை மாவட்டம், பாப்பாநாடு அருகே உள்ள சோழகன் குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாலன், மகேந்திரா கோட்டாக் நிறுவனத்தில் கடனில் டிராக்டர் வாங்கியுள்ளார். இதற்கான பெரும்பகுதி தொகையை வட்டியுடன் செலுத்தியுள்ளார். நிலுவை தொகையை செலுத்தவில்லை என்பதற்காக டிராக்டர் கடன் நிறுவன ஊழியர்களும், காவல்துறையினரும் சேர்ந்து விவசாயி பாலனிடமிருந்து டிராக்டரை வலுக்கட்டாயமாக பறிமுதல் செய்துள்ளனர். டிராக்டரை பாலன் தர மறுத்ததால் காவல்துறையினரும், கடன் நிறுவன ஊழியர்களும் அவரை கடுமையாக தாக்கியுள்ளார்கள்.

இச்சம்பவத்தை அங்குள்ள பொதுமக்கள் செல்ஃபோனில் வீடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் பரப்பினார்கள். இது பரபரப்பாக தமிழ்நாடு முழுவதும் பரவிக்கொண்டிருக்கிறது. விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் உருவாக்கியது.

இந்நிலையில் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட விவசாயி பாலனனின் உடைகளை களையச் சொல்லி, அவரை உள்ளாடையுடன் வைத்து அடித்துள்ளனர் போலீசார். இதனிடையே இந்த தாக்குதல் வீடியோ வாட்ஸ் அப்பில் பரவி சர்ச்சையானதை தொடர்ந்து, போலீஸ் டிஎஸ்பி செங்கமலம் கண்ணன் அங்கு விரைந்து வந்துள்ளார். அப்போது பாலனை உள்ளாடையுடன் அமரவைத்திருப்பதை பார்த்து கோபமடைந்த அவர், அங்குள்ள காவலர்களை கண்டித்து, அவரது ஆடையை கொடுக்கச் சொல்லி, பின்னர் அவரை விடுவித்துள்ளார். 
இந்த சம்பவம் குறித்து நம்மிடம் கண்ணீர் மல்க பேசிய விவசாயி பாலன்,  ‘‘இனி எந்த ஒரு விவசாயிக்கும் இந்த நிலை வரக்கூடாது. எனக்கு நேர்ந்த அவமானம் இனி யாருக்கும்  ஏற்படக்கூடாது. டிராக்டர் கடன் நிறுவன ஊழியர்களும், காவல்துறையினரும் ரவுடிகள் மாதிரி ரொம்ப மோசமா நடந்துக்கிட்டாங்க. என்னோட கைகளை கட்டி, கடுமையா தாக்கினாங்க. பாப்பாநாடு போலீஸ் ஸ்டேஷன்ல வச்சும் என்னை கடுமையா தாக்கினாங்க. உடம்பு முழுக்க உள்காயம். நான் வாங்கின டிராக்டருக்கான கடன் தொகை 3,80,434 ரூபாய். இதுவரைக்கும் வட்டியோடு சேர்த்து 4,11,108 ரூபாய் செலுத்தியிருக்கேன். இன்னும் 1,35,740 ரூபாய்தான் பாக்கி இருக்கு. கடந்த குறுவையில தண்ணீர் இல்லாததால் நெல் சாகுபடி செய்யமுடியலை. இதனால் கடந்த 6 மாதமா பணம் செலுத்த முடியலை.

இந்த சம்பாவுல நெல் அறுவடையை முடிச்சி, பணத்தை கொடுத்துடுறேனு கம்பெனிக்காரங்கக்கிட்ட சொல்லியிருந்தேன். ஆனாலும், அத்துமீறி நடந்துக்கிட்டாங்க. என்னோட வயல்ல நெல் அறுவடை செஞ்சிக்கிட்டு இருந்தப்பதான், இந்த தாக்குதல் நடந்துச்சு. காவல்துறையினர் 15 பேரும், மகேந்திரா டிராக்டர் கம்பெனிக்காரங்க 20 பேரும் என்னோட வயலுக்கு வந்து என்னை தரக்குறைவா பேசினாங்க. டிராக்டரை எடுத்தாங்க. இது என்னோட டிராக்டர். 4 லட்சம் ரூபாய்க்கு மேல பணம் கொடுத்திருக்கேன். மீதி தொகையையும் சீக்கிரத்துல கொடுத்துடுறேன்னு எவ்வளவோ சொல்லி பார்த்தேன். ஆனாலும் அவங்க கேட்கலை. எனக்கு நேர்ந்த அவமானத்துக்கு நியாயம் கேட்டு, நீதிமன்றத்துல மானநஷ்ட வழக்கு தொடரப்போறேன்’’ என்றார்.
இச்சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய தமிழக விவசாயிகள் சங்கத்தின் தஞ்சை மாவட்ட தலைவர் கக்கரை சுகுமாறன்,  ‘‘இது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணான செயல். விவசாயம் தொடர்பான எந்த ஒரு பொருளையும் பறிமுதல் செய்யக்கூடாதுனு ஏற்கனவே ஒரு தீர்ப்புல சொல்லப்பட்டுருக்கு. அதுவும் காவல்துறையினரே அத்துமீறி நடந்துருக்காங்க. இதை நான் வன்மையா கண்டிக்கிறேன். மகேந்திரா கோட்டாக் மாதிரியான டிராக்டர் கடன் நிறுவனங்கள், அப்பாவி விவசாயிகளை தேடி வந்து கடன் கொடுத்து, வட்டிங்கற பேர்ல விவசாயிகளோட உழைப்பை கொள்ளையடிக்குறாங்க. இதுமாதிரியான நிறுவனங்களை உடனடியா தமிழ்நாட்டுல இருந்து வெளியேற்றணும்.

விவசாயி பாலனோட டிராக்டரை உடனடியா அவர்கிட்ட ஒப்படைக்கணும். அத்துமீறி நடந்துக்கிட்ட காவல்துறையினர் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கணும். தாக்குதல் நடத்திய கடன் நிறுவன ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செஞ்சு, அவங்களை கைது செய்யணும்’’ என்றார். விவசாய சங்கங்கள் இப்பிரச்னையை கையில் எடுத்து போராட்டங்கள் நடத்த ஆயத்தமாகி வருகின்றன.

காவல்துறையினரின் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனனிடம் கேட்டபோது, ‘‘உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில்தான் இந்த பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. காவல்துறையினர் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நீதிமன்றம் சொன்னதால்தான் காவல்துறையினர் இதில் ஈடுபட்டார்கள். இதில் எந்தவித அத்துமீறல்களும் நடைபெறவில்லை’’ என்றார்.


கோடிக்கணக்கில் கடன் வாங்கி ஏமாற்றும் தொழில் அதிபர்களிடம் காவல் துறையினர் இதுபோல் நடந்து கொள்வார்களா? அதுபோன்ற மோசடி பேர்வழிகளுக்கு தனி மரியாதை கொடுப்பார்கள். எந்த விதத்திலும் கௌரவ குறைவு ஏற்படாத வகையில் அவர்களிடம் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் நடந்துகொள்வார்கள். கடன் தொகையில் பெரும்பகுதியை செலுத்திய பாலன் போன்ற அப்பாவி விவசாயிகளிடம்தான் காவல்துறையினர் தன்னுடைய கடமையையும் வீரத்தையும் காட்டுவார்கள்.




No comments:

Post a Comment