2016-17ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் தங்க நகை விற்பனைக்கு 1 சதவிகிதம் கலால் வரியை விதித்துள்ளது மத்திய அரசு. அதை அடுத்து தங்க நகைக் கடை உரிமையாளர்கள் மார்ச் 3ம் தேதி முதல் கடையடைப்பு செய்து வருகிறார்கள். இது குறித்து மெட்ராஸ் ஜுவல்லர்ஸ் அண்ட் டைமண்ட் அசோசியேஷனின் தலைவர் ஜெயந்திலால் ஜே சலானியிடம் கேட்டோம்.
"நகைக் கடை வியாபாரிகள் கடையடைப்பு மார்ச் 7ம் தேதி வரை தொடரும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம் கலால் வரி உயர்வுக்கு மட்டும் இல்லை. ஏனெனில் அந்த வரியை நகை வாங்கும் பொது மக்களிடம் இருந்து வாங்கி கலால் துறைக்கு செலுத்தி விடுவோம். ஆனால் பிரச்னையே அதில் உள்ள விதிமுறைகள்தான். அதாவது உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படும் அனைத்து நகைகளுக்கும் கலால் வரி செலுத்த வேண்டும். ஆனால் நகைக் கடைகளில் மூன்று வகையான நகைகள் விற்பனை செய்யப்படுகிறது.

உற்பத்தி செய்யப்படும் நகைகள், மொத்தமாக கொள்முதல் செய்யப்படும் நகைகள், பழைய நகைகள்( சில கடைகளில் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது) ஆகியவை ஆகும். இந்த நிலையில் கலால் துறை அதிகாரிகள் கடைக்கு சோதனை செய்ய வரும் போது உற்பத்தி செய்த நகைகளை கணக்கு காண்பிக்க வேண்டும். இப்போது உள்ள சூழ்நிலையில் அது முடியாத காரியம். மேலும் அதில் ஏதாவது பிரச்னை என அதிகாரிகள் தெரிவித்தால் 5 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை இருக்கும். மேலும் கலால் துறை கேட்கும் ஆவணங்களை எல்லாம் நகைக்கடைகள் பராமரிப்பு செய்வது மிகவும் கடினமான விஷயம். இதில் பல சிக்கல்கள் உள்ளன. இதனால் நகைக்கடைகளுக்கு கூடுதல் செலவு ஏற்படும்.
நகைக் கடை தொழிலையே நசுக்க வேண்டுமென மத்திய அரசு இது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சில தங்களின் கறுப்பு பணத்தில் தங்கத்தை வாங்குகிறார்கள் என அரசு நினைக்கிறது. அதனால் நகைத் தொழிலை ஒழித்து விட்டால் கறுப்புப் பணத்தின் அளவை குறைத்து விட முடியும் என நினைக்கிறது.
இப்போது விதித்துள்ள கலால் வரியினால் தங்கம் வாங்குவது குறைக்கப்படும் என அரசு கூறுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாகவே தங்கம் இறக்குமதி செய்வது குறைவாகத்தான் உள்ளது. அதேபோல நடப்பு கணக்கு பற்றாக்குறை அளவு குறைவாகத்தான் உள்ளது. எங்களுடைய போராட்டத்துக்கு அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்றார்.

No comments:
Post a Comment