Monetize Your Website or Blog

Monday, 7 March 2016

என்ன அவசரம் கலாபவன் மணிக்கு?

ஜனவரி 1, 1971ல் பிறந்தவர். மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்தார். மிமிக்ரியில் 'வாய்' தேர்ந்தவர். பரவலாக அங்கங்கே மேடைகளில் பேசி, சின்ன வெளிச்சம் விழுகிறது இவர் மேல்.
கலாபவன் என்ற ஒரு குழுவில், மிமிக்ரி மட்டுமல்லாது பாடல்களும் பாடுவார். நாட்டுப்புறப் பாடல்கள் என்போமே, அப்படியான 'நாடன் பாட்டுகள்' கேரளாவில் பிரபலமாக நிச்சயம் இவருக்கு ஒரு பங்குண்டு. இவர் பாடிய நாடன் பாட்டு கேசட்கள், விற்பனையில் தூள் கிளப்பின. மைடியர் குட்டிச்சாத்தானில் மிகச் சின்னதோர் வேடத்தில் வந்த இவருக்கு, 1995ல் வந்த அட்சரம் என்கிற மலையாளப்படத்தின் ஆட்டோ டிரைவர் வேடம்தான் கொஞ்சம் பேர் சொல்லும்படி அமைந்தது. அதன்பிறகும் கொஞ்சம் கொஞ்சமாய் சின்னச் சின்ன வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

1999ல் வசந்தியும் லக்‌ஷ்மியும் பின்னே ஞானும் என்கிற படத்தில் குருடன் வேடம். (தமிழில் 'காசி'யாய் ரீ மேக் ஆனது) மலையாள ரசிகர் மனதில் சிம்மாசனமிட்டு அமர்கிறார் கலாபவன் மணி. 'இந்த ஆளையா சின்ன சின்ன வேஷத்துல நடிக்க வெச்சு வேஸ்ட் பண்ணீட்டிருந்தாங்க?' என்றனர் பரவலாக. அதற்கு முந்தைய வருடமான 1998ல் மம்முட்டியுடன் மறுமலர்ச்சி படத்தில் காமெடியனாகவே வந்து, சடாரென்று தன் குணச்சித்திர நடிப்பில் வெரைட்டி காட்டி தமிழ் ரசிகர்களுக்கும் கொஞ்சம் அறிமுகம் ஆகியிருந்தார்.
2002ல் தமிழில் இவர் வில்லனாக நடித்த ஜெமினி, பலத்த கைதட்டல்களை இவருக்குப் பெற்றுத் தந்தது. வில்லன் வந்தாலே கோவப்படுகிற ரசிகர்கள், ஜெமினியில், இவர் காட்சி வரவேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு காமெடி கலந்த வில்லனாக பட்டையைக் கிளப்பினார். எலி, பாம்பு என்று உடல்மொழி + மிமிக்ரியாக இவர் நடித்த நடிப்புக்கு அவ்வளவு வரவேற்பு இருந்தது. பாபநாசம் வரை, 20க்கும் மேற்பட்ட படங்கள். மலையாளத்தில் செஞ்சுரியை நெருங்கிக் கொண்டிருந்தார்.
1999ல் வசந்தியும் லக்‌ஷ்மியும் பின்னே நானும் படத்திற்கு இவருக்குதான் கேரள அரசின் சிறந்த நடிகர் விருது என்று எல்லோருமே எதிர்பார்த்திருக்க, மோகன்லாலுக்குப் போகிறது விருது. கேட்ட மாத்திரத்தில் இவர் மயங்கி விழுந்ததெல்லாம் நடந்தது. ஆனால் அந்த ஆண்டு இவருக்கு ஸ்பெஷல் ஜூரி அவார்டு கொடுக்கப்படுகிறது.

ஆனாலும்  விருதுகளைக் குவிக்கத் தவறவில்லை இவர். ஜெமினி படத்திற்காக ஃப்லிம் ஃபேர் சிறந்த வில்லன் விருது பெற்றார். இதுபோல நிறைய...

பாடகராகப் பல படங்கள். இசையமைப்பாளர், கதாசிரியர் என்று பன்முகத் திறமை. வெறும் 45 வயதுதான் ஆகிறது. நேற்று, 6 மார்ச் 2016 இரவு 7.15க்கு கொச்சின் அமிர்தா மருத்துவமனையில் இவரது உயிர் பிரிந்தது. ரசிகர்கள் மட்டுமல்லாது, சக நடிகர்களுக்குமே மிகப் பெரிய அதிர்ச்சி. இவரைப் பொறுத்தவரை, தனக்கிருக்கும் திறமையில் சொற்ப சதவிகிதமே வெளிப்பட்டிருக்கிறது என்பதே அனைவரின் வருத்தமும். அப்படி என்ன அவசரம், மணி?


No comments:

Post a Comment