Monetize Your Website or Blog

Saturday, 9 April 2016

கொடநாட்டில் அப்படி என்னதான் இருக்கு...? - ஒரு 'அரசியல்' டிராவல்!

டந்த ஐந்தாண்டு ஆட்சியில் முதலமைச்சர் ஜெயலலிதா சென்னையில் இருந்து ஆட்சி செய்த போதிலும், அவ்வப்போது கொடநாட்டிற்கு  விசிட் அடிக்க தவறமாட்டார்.  ஏனெனில் கொடநாடு மீது அப்படியொரு ஈர்ப்பு. அப்படி என்னதான் இருக்கு..? கொடநாட்டில் என கண்டறிய களமிறங்கியது டிராவல் விகடன் டீம்.

கொடநாடு... அல்ல கோடநாடு! அதுதான் சரியான உச்சரிப்பு என்கிறார்கள் உள்ளூர் வாசிகள்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து கிழக்கே சுமார் 20 கி.மீ. பயணித்தால் அந்த சொர்க்கபூமியை அடையலாம். அங்குதான், முதல்வர் ஜெயலலிதாவின் சொகுசு பங்களா அமைந்துள்ளது என்பது உலகமே அறிந்த செய்தி என்பதால், அதைப்பற்றி எதையும் இங்கு சொல்லப்போவது இல்லை. 

கொடநாடு ‘வியூ பாயின்ட்’ எனப்படும் சிறப்புமிக்க காட்சிமுனை அங்கு உள்ளது. இதுதான் நீலகிரி, ஈரோடு மாவட்டத்தைப் பிரிக்கிறது. காட்சிமுனையில் இருந்து பார்த்தால், இயற்கை அழகை திகட்டத் திகட்டப் பருகலாம். நம் காலடியில் மேகக்கூட்டங்கள் கடந்து செல்கின்றன. சுற்றிலும் மலைகள் சூழ்ந்திருக்க, தூரத்தில் பவானி சாகர் அணை தெரிகிறது. நடுவே பள்ளத்தாக்கு... அங்கு ஓர் அழகிய கிராமம் தென்படுகிறது. அந்தப் பழங்குடி கிராமத்தின் பெயர் தெங்குமராடா. அந்த கிராமத்தைச் சுற்றி மோயார் நதி ஓடுகிறது. அது ஏதோ இந்திய வரைபடம் போல தோற்றம் தருகிறது. கொடநாட்டில் ரங்கசாமி கோவில் பிரசித்திபெற்றது. இருளர், பகடா, கரும்பர் ஆகியோருக்கு புனிதமான மலை என்று இதைச் சொல்கிறார்கள். 
100 மீட்டர் உயரத்தில் அந்தக் கோயில் இருப்பதால் பலரும் அங்கு செல்வதில்லை. மிகவும் சிரமப்பட்டுத்தான் ஏறவேண்டும். ரங்கசாமி சிகரமும் அங்கு உள்ளது. 2500 ஏக்கரில் தேயிலைத்தோட்டங்கள் உள்ளன. அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள்,  அங்கிருக்கும் குக்கிராமங்களில் வசிக்கிறார்கள். மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரிக்கு நிறைய பஸ்கள் செல்கின்றன. கோத்தகிரியில் இருந்து கொடநாடு செல்லலாம். ‘அம்மா பங்களா’ இருப்பதால் அந்தப் பகுதிக்குள் செல்வதற்கு ஏகக்கெடுபிடி.
தெங்குமராடாவுக்கு எப்படிப் போகலாம்?
தினமும் மேட்டுப்பாளையத்தில் இருந்து தெங்குமராடாவுக்கு பஸ் போக்குவரத்து உள்ளது. பவானி சாகர் வழியாக அந்த பஸ் பயணிக்கிறது. பவானி சாகரில் ஏராளமான மக்கள் ஏறுகிறார்கள். பவானிசாகரில் இருந்து, மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களில் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கரடுமுரடான பாதை என்பதுதான் அதற்குக்காரணம். ஜீப் போன்ற ‘ஃபோர் வீல் டிரைவ்’ எனப்படும் நான்கு சக்கரங்களும் இயங்கக்கூடிய வாகனங்களில் செல்லலாம். பவானி சாகரில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் வனத்துறை செக்போஸ்ட் உள்ளது. 

அவர்களின் கடுமையான சோதனைக்குப் பிறகே அந்த இடத்தைத் தாண்ட முடியும். வழியெங்கும் தேயிலை எஸ்டேட்கள், காய்கறித் தோட்டங்கள் என கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப் பசேல் என இருக்கிறது. யானைகள், புலிகள், சிறுத்தைகள், காட்டெருமைகள், காட்டுப்பன்றிகள் என காட்டு விலங்குகளின் நடமாட்டத்தையும் காணமுடிகிறது. அந்தப்பகுதியில் புலிகளின் எண்ணிக்கை பெருகிவிட்டதாம். எனவே அதை, புலிகள் சரணாலயமாக மாற்றியிருக்கிறார்கள். அதனால், வெளியாட்கள் செல்வதற்கு அனுமதி இல்லை.
பவானி சாகரில் இருந்து செல்லும் பஸ், இருட்டும் வேளையில் தெங்குமராடா அருகே  ஆத்துமேடு என்கிற இடத்தில் நிற்கிறது. அங்கு இறங்கி மோயார் ஆற்றை பரிசலில் கடந்து,  தெங்குமராடாவுக்குச் செல்ல வேண்டும். ஆற்றைக் கடப்பதற்கு டெம்போவும் இருக்கிறது. ஆத்துமேட்டுப்பகுதியில் பஞ்சாயத்து அலுவலகம் உள்ளது. பஸ் கண்டக்டரும், டிரைவரும் இரவு அங்கு தங்குகிறார்கள். மறுநாள் காலையில் அங்கிருந்து பவானிசாகரை நோக்கி பஸ் புறப்படுகிறது.

தெங்குமராடாவில் படுகர், தோடர் உள்ளிட்ட மக்கள் வசிக்கிறார்கள். பக்கத்தில் அல்லிமோயார், கள்ளம்பாளையம் ஆகிய இரு சிற்றூர்கள் உள்ளன. இந்த மக்களின் முக்கியத் தொழில் விவசாயம். கடலை, அரிசி, மஞ்சள், வாழை, வெங்காயம், செம்பருத்தி ஆகியவற்றை பயிர் செய்கிறார்கள். அந்தப் பகுதியில் காட்டுக்குள் அள்ளிக்கோட்டை இருப்பதாகச் சொல்கிறார்கள்.
மருத்துவம் போன்ற எல்லா தேவைகளுக்கும் பவானிசாகர் போன்ற வெளி இடங்களுக்குத்தான் மக்கள் வரவேண்டும். இந்தப் பகுதிக்குப் போவதற்கே பல சாகசங்களைச் செய்ய வேண்டும் என்பதால், தெங்குமராடாவைச் சேர்ந்த ஆண்களுக்கு யாரும் பெண் கொடுப்பதில்லையாம். 40 வயதைத் தொட்ட பலரும் திருமணம் ஆகாமல் இருப்பதாகச் சொல்கிறார்கள். பலர் பவானிசாகர் போன்ற இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகிறார்கள். 

பல சிரமங்களும், சவால்களும் இருந்தபோதிலும், அது தமிழ்நாடுதான் என்பதற்கு அடையாளமாக அங்கு ‘அந்த’ விஷயத்துக்கு மட்டும் பிரச்னையே இல்லையாம். ஆம்... அந்த ஊரிலேயே டாஸ்மாக் கடை இருக்கிறது.

No comments:

Post a Comment