Monetize Your Website or Blog

Friday, 8 April 2016

வாழ வைக்கும் பால் மாடு.. வழிகாட்டிய நபார்டு…

தங்கம் செய்யாததை சங்கம் செய்யும் என்று கிராமங்களில் சொல்வார்கள். இந்தப் பழமொழியை உண்மையாக்கி இருக்கிறது, கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், பெரும்பதி கிராமத்தில் செயல்பட்டுவரும் ‘பசுமை உழவர் மன்றம்’. நபார்டு வங்கியின் கீழ் செயல்பட்டுவரும் இந்த மன்றம், தேசிய அளவில் சிறந்த உழவர் மன்றமாக மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறது.

மன்றத்தின் தலைவர் திருவேங்கடத்தை வாழ்த்துக்களோடு சந்தித்த போது, மகிழ்ச்சியின் உச்சியில் நிற்பவராக நம்மிடம் பேசினார். “இந்த ஊரில் 500 குடும்பங்கள் இருக்கு. முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பித்தான் ஜீவனம். கொஞ்சம் பேர், கறவை மாடுகளையும் வைச்சிருக்காங்க. ஆனாலும், பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை.
 இளவட்டங்கள் வேலை தேடி டவுன் பக்கம் போயிட்டாங்க. கிடைக்கும் பருவமழையை வைத்து, நிலக்கடலை, தக்காளி, சோளம், கம்பு என்று நடுவோம்.




ஒரு தடவை, நபார்டுகாரங்க எங்க ஊரில் வந்து மீட்டிங் போட்டாங்க. அதில் பால் உற்பத்தி மூலமாக விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று சொன்னாங்க. எங்க ஊர் விவசாயிகள் கொஞ்சம் பேரை ஒரு குழுவா குஜராத்திற்கும் கூட்டிட்டுப் போய் அங்கே, இருக்கும் ஆனந்த் பால் பண்ணையை சுற்றிக் காட்டி… பால் தொழிலில் ஜெயிக்கும் வழிமுறைகளை சொல்லிக் கொடுத்தாங்க. அதன்பிறகு தான் ஒவ்வொருத்தராக போய் பார்த்து பேசி, கறவை மாடுகளை வாங்குவதற்கு ஏற்பாடு செய்தோம்.

அந்த சமயத்தில் பால் விலை ரொம்ப குறைவாக இருந்ததால் நிறைய பேர் விரக்தியாகத்தான் பேசினாங்க. கறவை மாடு வாங்குவதற்கு நிறைய பேரிடம் பணமும் இல்லை. அதன் பிறகுதான் ‘நபார்டு’ பேங்க் அதிகாரிகள் உழவர் மன்றம் ஆரம்பிக்க சொன்னாங்க. அதன்படி 25 பேர் சேர்ந்து, ‘பசுமை உழவர் மன்றம் என்று ஆரம்பித்தோம். நபார்டு மூலமாக.. 25 பேருக்கும், ஆளுக்கு 2 கறவை மாடுகள் என்ற கணக்கில் தலைக்கு 50 ஆயிரம் ரூபாய் என்று பேங்கில் கடன் வாங்கிக் கொடுத்தாங்க. அதன் மூலமாக வந்த 50 கறவை மாடுகள்தான் இன்றைக்கு எங்க ஊரின் போக்கையே மாற்றிப் போட்டிருக்கிறது. 

பக்கத்தில் இருக்கும் முத்துகவுண்டன்புதூர் விவசாயிகளைச் சேர்ந்து மன்றம் ஆரம்பித்து, அவங்களுக்கும் கறவை மாடுகளை வாங்கினோம். இப்போது, எங்க இரண்டு கிராமத்தில் மட்டும் 150 கறவை மாடுகள் இருக்கு, இதன் மூலமாக 75 விவசாயிகள் வருமானம் பார்த்துக்கிட்டுருங்காங்க. தினமும் 1,500 லிட்டர் அளவுக்கு பாலை உற்பத்தி செய்கிறோம்.
ஆரம்பத்தில் தமிழ்நாட்டில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் லிட்டருக்கு 17 ரூபாய் கொடுத்து எங்க பாலை கொள்முதல் செய்து கொண்டிருந்தாங்க. ஆனால், எங்க ஊரிலிருந்து கூப்பிடு தூரத்தில் இருக்கும் கேரளா பால்பண்ணை நிறுவனம், லிட்டருக்கு 23 ரூபாய் வரை விலை கொடுத்து எங்க ஊருக்கே வந்து பாலை எடுத்துக்கிறாங்க. அதனால், கேரளா கம்பெனிக்குத்தான் பால் ஊற்றுகிறோம். தினமும் சராசரியாக 30 லிட்டர் பால் உற்பத்தி செய்யும் விவசாயிக்கு, கேரள கம்பெனிக்கு பால் ஊற்றும் போது, 180 ரூபாய் கூடுதலாக கிடைக்கிறது.

முறையான பயிற்சி கிடைத்தப்பிறகு, எல்லாரும் ரொம்ப அக்கறைய கால்நடைகளை வளர்க்கிறாங்க. இந்த வெற்றிதான், எங்க பசுமை உழவர் மன்றத்திற்கு தேசிய விருதை வாங்கிக் கொடுத்திருக்கு. நபார்டு பேங்க் செய்து கொடுத்த கடன் உதவியும், கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் கால்நடைப் பல்கலைக் கழக ஆராய்ச்சி மையம் கொடுத்த தொழில்நுட்ப உதவியினாலும் தான்
  இதெல்லாம் சாத்தியமானது என்றார்.

இக்கிராமத்தைச் சேர்ந்த ரங்கதுரை, வறட்சியில் வாடும் விவசாயிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம் தான் கறவைமாடுகள். வெளி வேலைக்கும்
  போக முடியாமல், விவசாயமும் பார்க்க முடியாமல், என்னை மாதிரி நடுத்தர விவசாயிகள் படும் கஷ்டம் ரொம்பக் கொடுமைங்க. நபார்டு வங்கி புண்ணியத்தில் இப்ப என்னிடம் இரண்டு கறவை மாடுகள் இருக்கு. தினமும் 25 லிட்டர் பால் கிடைக்கிறது. பேங்கில் வாங்கிய கடனுக்கு தவணையை ஒழுங்காக கட்டிக்கொண்டிருக்கிறேன். இப்ப எனக்கு மனக்கஷ்டமும் இல்லை, பணக் கஷ்டமும் இல்லை என்றார் நன்றியுடன்.


முறையான வளாப்பு.. நிறைவான லாபம்..
பெரும்பதி கிராமம், பால் உற்பத்தியில் சிறந்து விளங்குவதற்கு முக்கிய காரணம் முறையான பராமரிப்பு, தீவன மேலாண்மை மற்றும் நோய்தடுப்பு யுகத்திகள்தான். ஊருக்கே வந்து ஆலோசனையும், மருத்துவ உதவியும் செய்து வருகிறது. கோயம்புத்தூரில் இயங்கி வரும் தமிழ்நாடு கால்நடை அறிவியில் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மையம்.

அதன் தலைவர் டாக்டர் சிவக்குமாரிடம் பேசியபோது, கறவை மாடுகளைப் பொருத்தவரை தீவன மேலாண்மையும் ரொம்ப முக்கியம். கோ – 4 , கம்பு, நேப்பியர் சாகுபடி செய்து கொள்ள
  வேண்டும். பெரும்பகுதியைப் பொருத்தமட்டில்  தென்னையில் ஊடுபயிராகவும், தனிப்பியராகவும் அனைவரும் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்கிறார்கள். சொட்டுநீர்  மற்றும் ரெயின்கன் பாசனக்கருவிகளைப் பொருத்தியிருக்கிறார்கள். தொழுவுரம், கோழி எரு, ஆட்டுப்புழுக்கை போன்ற இயற்கை உரங்களையே பெரும்பாலும் பயன்படுத்தி வருவதால் பசுந்தீவன உற்பத்தியுடன் தென்னையின் காய்ப்புத்திறனும் நன்றாக இருக்கிறது. தவிர, புல் வெட்டும் கருவி, தீவனம் நறுக்கும் இயந்திரம் ஆகியவற்றையும் மானிய விலையில் பெற்று பயன்படுத்தி வருகிறார்கள். மாதம் இருமுறை கால்நடை வல்லுநர்கள் குழு இந்த ஊருக்கு வந்து கால்நடை முகாம் நடத்தி வருவதால், மாடுகள் நிறைவாக பால் கொடுக்கின்றன என்றார்.


தொடர்புக்கு
 
திருவேங்கடம், செல்போன் : 94861 34531



No comments:

Post a Comment