ஜாட் சமூகத்தினர் நடத்தி வரும் போராட்டங்களினால் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம், இந்த போராட்டங்களால் 34,000 கோடி ரூபாய் வர்த்தக இழப்பு ஏற்பட்டு உள்ளது.

ஹரியானா மாநிலத்தில், ஜாட் சமூகத்தினர் தங்களை பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்த்து இட ஒதுக்கீடு வழங்க கோரி கடந்த 10 நாட்களாக ரயில் மறியல், சாலை மறியல் என்று பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின்போது நேற்றும் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது.

லேன்ட்சோலி கிராமத்தில், தேசிய நெடுஞ்சாலையை வழிமறித்து போராடியவர்களை அகற்ற ராணுவத்தினர் முற்பட்டனர். அப்போது, ராணுவத்தினர் மீது சிலர் திடீரென கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. உடனே ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இந்த போராட்டங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

இதனால், ஹரியானாவில் மட்டுமல்லாது டெல்லி உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த போராட்டங்களால், வட இந்தியாவில் 34,000 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளதாக தொழில்வர்த்தக சபை தெரிவித்துள்ளது.

ஜாட் இனத்தவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால், ஹரியானா மாநிலத்தில் நிலைமை மோசடைந்து வருகிறது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், மற்றும் ராணுவ தலைமை தளபதியை அழைத்து ஹரியானாவில் கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவருவது குறித்து ஆலோசனை நடத்தினார்.

No comments:
Post a Comment