Monetize Your Website or Blog

Monday, 22 February 2016

நம்பர் 1 ஏஞ்சலினா ஜோலி

'இவளெல்லாம் ஒரு மனுஷியா?’ என்ற ஒரு துருவ உணர்வுக்கும், 'இவதான்யா மனுஷி!’ என்ற எதிர்த் துருவ உணர்வுக்கும் இடையே வார்த்தைகளால் பாலம் அமைத்து வாசித்துக்கொண்டே சென்றால், ஹாலிவுட் சூப்பர் ஸ்டாரினி ஏஞ்சலினா ஜோலியைத் தெளிவாக உணர்ந்துகொள்ளலாம். தறிக்கெட்டுத் திரிந்த கவர்ச்சிப் புயல், ஒருகட்டத்தில் மனிதநேயத்தில் மையம்கொண்டு தீராத பேரன்பையும் பெருங்கருணையையும் பொழியத் தொடங்கிய ஆச்சர்ய வாழ்க்கை இது!
ஆஸ்கர் விருது வென்ற அமெரிக்க நடிகரான ஜோன் வோய்டுக்கும், அமெரிக்க நடிகையும் தயாரிப்பாளருமான மார்ச்செலைனுக்கும் 1975-ம் ஆண்டு  ஜூன் 4-ம் தேதி லாஸ் ஏஞ்சலஸில் பிறந்த ஏஞ்சல், 'ஏஞ்சலினா ஜோலி’. 'Dad’ என தன் மழலை மொழியில் ஏஞ்சலினா உச்சரிக்க ஆரம்பித்த காலத்திலேயே, தந்தை விவாகரத்து வாங்கிக்கொண்டு குடும்பத்தைவிட்டுப் பிரிந்துவிட்டார். தாய் மார்ச்செலைன், தன் மகளையும் மூத்தவன் ஜேம்ஸையும் தனியாக இருந்து வளர்க்க ஆரம்பித்தார். பின்னர் அவரது வாழ்வில் பில் என்கிற காதலரும் நுழைந்தார்.
சிறுவயதிலேயே 'இவ வேற மாதிரி’ என்றுதான் திரிந்தாள் ஏஞ்சலினா. பாம்புகள் வளர்த்தாள். 'விளாதிமிர்’ எனப் பெயரிடப்பட்ட ஓணான் அவளது செல்லம். பள்ளியில் தேவதைபோல உடை அணிந்து பிற சிறுமிகள் நடனமாட ஆசைப்பட்டால், ரத்தக்காட்டேரிபோல் உடையணிந்து ஆட விரும்பினாள் ஏஞ்சலினா. ‘Kissy Girls’ என்ற 'கேங்’குக்கு பள்ளியில் ஏஞ்சலினாதான் தலைவி. யாராவது ஒரு சிறுவனை மடக்கி, அமுக்கி, முத்தமழை பொழிந்தே அவனைக் கதறி அழச் செய்வதில் அத்தனை ஆனந்தம்.
மார்ச்செலைன், தன் குழந்தைகளை அடிக்கடி சினிமாவுக்கு அழைத்துச் செல்வார். பரம்பரையில் பலரும் சினிமாக்காரர்கள். ஆக, ஏஞ்சலினா, ஜேம்ஸ் இருவரது மனதிலும் சிறுவயதிலேயே 'நடிப்பு’ ஆசை வேர்விட்டது. தவிர ‘Lookin' to Get Out’  என்ற படத்தில் ஏழு வயதில் 'குழந்தை நட்சத்திரமாக’ ஏஞ்சலினா அறிமுகம் கண்டாள். ஒருகட்டத்தில் மார்ச்செலைன் குழந்தைகளுடனும் தன் காதலர் பில்லுடனும் நியூயார்க்குக்குக் குடிபெயர்ந்தார். நடிப்புத் தாகத்துடன் இருந்த 11 வயது ஏஞ்சலினா, ஒரு தியேட்டர் குரூப்பில் நடிப்பு கற்க இணைந்தாள். பல்வேறு நாடகங்களில் மேடை ஏறினாள். ஆனால், டீன் ஏஜில் பள்ளி வாழ்க்கை கசந்தது. மிகவும் ஒல்லியான உடல் அமைப்புடன் பெரிய கண்ணாடி அணிந்துகொண்டு திரிந்த அவளை, சகமாணவர்கள் கேலி வார்த்தைகளால் துளைத்தனர். பள்ளி மாறினாள். 'நீ மாடல் ஆக முயற்சி செய்’ என்றாள் மார்ச்செலைன். ஏஞ்சலினாவும் முயன்றாள். குள்ளமாகவும் வெளிறிய முகத்துடனும் இருந்த அவளை, மாடலிங் உலகம் முதுகில் எட்டி உதைத்துத் தள்ளியது.
தடுமாறும் வயது, தறிகெட்டுச் சிந்திக்கும் மனது, ஏஞ்சலினா தன்னுள் சாத்தானின் கொம்புகளைக் கூர்தீட்டத் தொடங்கினாள். படிப்பை வெறுத்தாள். ஊர் சுற்றுவது, 'மோஷிங்’ என்ற முரட்டுத்தனமான கெட்ட ஆட்டங்களில் பங்கேற்பது, அப்புறம் போதை, 14 வயதில் முதல் பாய் ஃப்ரெண்ட். அதுவும் தாயின் அனுமதியுடன் தன் வீட்டில், தன் அறையிலேயே அவனையும் தங்கவைத்துக்கொண்டாள். ஒருவரை ஒருவர் விதவிதமாகத் துன்புறுத்தி பேரின்பம் காண்பது அவர்களுக்குப் பிடித்திருந்தது. குறிப்பாக கத்தியால் உடலைக் கீறிக்கொள்வது. வலியே ஆனந்தம்; வலியே விடுதலை; வலியே வாழும் கலை.
ஒருநாள் கூரான கத்தியை அவனிடம் கொடுத்த ஏஞ்சலினா, தன் தாடைப் பகுதியில் வெட்டச் சொன்னாள். அவன் நடுங்கினான்; தடுமாறினான். ஏஞ்சலினாவே கத்தியைப் பிடுங்கி தன்னைத்தானே... ம்ஹூம், அவளுக்கும் நடுக்கமாகத்தான் இருந்தது. இருந்தாலும், தற்கொலை எண்ணம் அடிக்கடி ஆக்கிரமித்தது. இன்னொரு பக்கம், ஈமச்சடங்குகள் செய்யும் வேலைக்காகப் படிக்கலாமா, பிணத்தைப் பதனிடப் பயிற்சி எடுக்கலாமா என்றெல்லாம் களத்தில் இறங்கினாள். எதிலும் மனம் நிலையாக இல்லை. அந்த பாய் ஃப்ரெண்ட் பயந்து, பதறி, விலகி ஓடினான்.
திரைப்படக் கல்லூரியில் படித்த அண்ணன் ஜேம்ஸின் நண்பர்கள் எடுத்த குறும்படங்களில், இசை வீடியோக்களில் நடிக்க ஏஞ்சலினாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்படியே சினிமா வாய்ப்புகளும் தேட ஆரம்பித்தாள். ஆனால், அவளது முதிர்ச்சியற்ற அணுகுமுறைகளால், வாய்ப்பு நழுவச் செய்தது. 'இன்சோம்னியா’ என்ற தூக்கம் இல்லா கோளாறும் சேர்ந்துகொண்டது. அதனால் சிறிய ரகப் போதை மருந்துகள் முதல் ராஜபோதை தரும் வஸ்துகள் வரை அனைத்தையும் அனுபவித்துக் கிறங்கினாள். எதற்காக வாழ வேண்டும் என்ற எண்ணம் ஆக்கிரமித்துக் கழுத்தை நெரித்த பொழுதுகளில், தற்கொலை செய்ய துணிவு இல்லை. தன்னைக் கொல்ல தானே ஆள் ஏற்பாடு செய்யும் அளவுக்கு மனப்பிறழ்வு. ஒருமுறை மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு 72 மணி நேரம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் கிடந்து மீண்டுவந்தாள் ஏஞ்சலினா. 'நான் யார் என்ற தேடலில் எழுந்த வெறி அது. அனைத்தில் இருந்தும் விடுதலை பெற, என்னை அழுத்திய சுவர்களை எல்லாம் ஓங்கிக் குரலெழுப்பி உடைக்கும் அளவுக்கான வலிமை தேவைப்பட்டது. அதை நான் போதையில் தேடினேன்’ என தன் 'மயக்க காதை’ குறித்து ஏஞ்சலினா பின்னாட்களில் மனம் திறந்தார்.
1993-ம் ஆண்டு. ‘Cyborg--2’ என்ற படத்தில் நல்ல கதாபாத்திரம் கிடைத்தது. முதல் படத்திலேயே முற்றும் துறந்த கலைச்சேவை. படம் வெற்றி பெறவில்லை. அடுத்த வாய்ப்பும் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் புலப்படவில்லை. ஒருவழியாக 1995-ம் ஆண்டில் 'Hackers’ என்ற படத்தில் ஹீரோயின் வாய்ப்பு அமைந்தது.
ஏஞ்சலினாவின் முதல் ஹாலிவுட் படம். வசூலில் தோல்வி. ஆனால், ஏஞ்சலினாவுக்கு மனதுக்கு இனிய இரண்டாவது காதலன் கிடைத்த வகையில் வெற்றி. உடன் நடித்த பிரிட்டிஷ் நடிகரான ஜானி லீ மில்லருடன் காதல் பிரவாகம். அடுத்த ஆண்டே திருமணம். ஏஞ்சலினா, அந்த வைபவத்தில் வெள்ளை டீ ஷர்ட்டில் காதலனின் பெயரை தன் ரத்தத்தால் எழுதி அணிந்து வந்தார். மோதிரங்களும் முத்தங்களும் இடம்மாறின.
சினிமாவில் சொல்லிக்கொள்ளுமளவு வாய்ப்பு அமையாவிட்டாலும், மூன்று டெலிஃபிலிம் வாய்ப்புகள் ஏஞ்சலினாவுக்கு 'நல்ல நடிகை’ என்ற அந்தஸ்தைக் கொடுத்தன. இரண்டாவது  டெலிஃபிலிம் படத்துக்கென சிறந்த துணை நடிகைக்கான 'கோல்டன் குளோப் விருது’ ஏஞ்சலினாவுக்குக் கிடைத்தது. மூன்றாவது டெலிஃபிலிம் ‘Gia’.  அமெரிக்க சூப்பர் மாடலாகக் கொடிகட்டிப் பறந்த ஜியா மேரியின் வாழ்க்கைக் கதை. ஓரினச் சேர்க்கையாளர், போதை அடிமை, எய்ட்ஸால் இறந்துபோன முதல் பிரபல மாடல். ஜியாவாகவே திரையில் வாழ்ந்தார் ஏஞ்சலினா. ஷூட்டிங் நாட்களில் கணவரைப் பல வாரங்கள் பிரிந்து, அவருடன் போன் பேசுவதைக்கூட தவிர்த்தார். 'ஏன்?’ எனக் கேட்டால் 'நான் ஓரினச்சேர்க்கையாளர்’ எனச் சிரித்தார். ஜியாவின் பலனாக 1999-ம் ஆண்டின் சிறந்த நடிகைக்கான 'கோல்டன் குளோப் விருது’ம், ‘Screen Actors Guild’  விருதும் கிடைத்தன. உப பலனாக கணவர் ஜானி, ஏஞ்சலினாவைப் பிரிய முடிவெடுத்திருந்தார்.
காரணம்? தன் சகநடிகை ஜென்னியைக் காதலிக்கத் தொடங்கியிருந்தார் ஏஞ்சலினா. 'எனக்கு மட்டும் திருமணம் ஆகவில்லை எனில் ஜென்னியைத்தான் திருமணம் செய்துகொள்வேன்’ என அதிரடி பேட்டியும் கொடுத்தார். கோல்டன் குளோப் விருது வாங்கிய மகிழ்ச்சியில் நீச்சல் குளத்தில் அப்படியே குதித்து, அணிந்திருந்த காஸ்ட்லியான உடையை நாசமாக்கினார் ஏஞ்சலினா. 'இந்தக் கன்னாபின்னா கேரக்டரோடு இனி என்னால் வாழ முடியாது’ என விலகிப்போனார் ஜானி.
நியூயார்க் பல்கலைக்கழகத்தில் திரைக்கதை - இயக்கத்துக்கான படிப்புக்காக இரவு வகுப்புகளுக்குச் செல்ல ஆரம்பித்தார். பட வாய்ப்புகளும் குவிந்தன. 1999-ம் ஆண்டில் ஏஞ்சலினா நடித்து வெளியான படங்கள் மூன்று. முதல் படம் ‘Pushing Tin’, பில்லி பாப் என்ற (ஏஞ்சலினாவைவிட 20 வயது மூத்த) நடிகரது காதலைச் சம்பாதித்துக் கொடுத்தது. இரண்டாவது படம் ‘The Bone Collector’,  ஏஞ்சலினா போலீஸ் ஆபீஸராக நடிக்க, பாக்ஸ் ஆபீஸில் கௌரவமாகச் சம்பாதித்துக் கொடுத்தது. மூன்றாவது படம் 'Girl Interuppted’ - 'தி அவார்டு ஃபார் பெஸ்ட் சப்போர்ட்டிங் ஆக்ட்ரஸ் கோஸ் டு... ஏஞ்சலினா ஜோலி’ என ஆஸ்கர் அவர் கைக்கு வந்தது. விருதை அறிவித்த நொடியில் உடன் இருந்த சகோதரர் ஜேம்ஸுக்கு முத்தம் கொடுத்துவிட்டு, நெகிழ்வுடன் விருதைப் பெற்றுக்கொண்டு, நா தழுதழுக்கப் பலருக்கு நன்றி சொல்லிவிட்டு, 'ஐ லவ் யூ ஜேமி...’ என நடிப்பைக் கற்றுக்கொடுப்பதில் தனக்கு உறுதுணையாக இருந்த சகோதரனை வார்த்தைகளால் உச்சிமுகர்ந்தார் ஏஞ்சலினா. ஜேம்ஸும் கண்கலங்கினார். அதற்கு எல்லாம் பொட்டு வைத்து, பூ முடித்து, செக்ஸ் சிம்பலாக வியாபித்து இருந்த
ஏஞ்சலினாவை மீடியா சீண்டின. 'ஜேம்ஸும் நீங்களும் லவ்..?’ ஆவேசமானார் ஏஞ்சலினா. 'என் படுக்கை அறையில் எத்தனை பேரைத்தான் நுழைப்பீர்கள்?’
அதே படத்துக்காக கோல்டன் குளோப் விருதும் ஏஞ்சலினாவுக்குக் கிடைத்தது. 'தொடர்ந்து மூன்று ஆண்டுகள் கோல்டன் குளோப் வாங்கிய முதல் நடிகை’ என்ற பெருமை அமைந்தது. 2000-ம் ஆண்டில் வெளிவந்த ‘Gone in 60 Seconds’ அதிரிபுதிரி ஹிட்டாகி, ஏஞ்சலினாவின் முதல் பிளாக் பஸ்டராக அமைந்தது. அவரது சினிமா வாழ்வை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திய முக்கியமான படம் ‘Tomb Raider’. பிரபலமான வீடியோ கேம் படமானது. ஆக்‌ஷன் கதாபாத்திரமான லாரா கிராஃப்ட்,
ஏஞ்சலினாவின் ஒழுங்கீனங்களுக்குச் சவால் விட்டது. அதற்காக உயர்குடி மக்கள் பேசும் ஆங்கில உச்சரிப்பில் இருந்து, கிக் பாக்ஸிங், யோகா, ஸ்ட்ரீட் ஃபைட்டிங், பாலே நடனம், கார் ரேஸ், நாய்களைக் கையாளுதல்... என பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டார். குதித்தல், பறத்தல், தாவுதல், ஏவுதல் என இரண்டு கைகளிலும் துப்பாக்கியை வைத்துக்கொண்டு ஏஞ்சலினா அதிரடி காட்ட, படம் பக்கா ஹிட். அதற்குப் பின் சில தோல்விப் படங்களில் நடித்தாலும், 2002-ம் ஆண்டில் ஹாலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் ஹீரோயினாக ஏஞ்சலினா ஜோலி கெத்து காட்டினார்.
இன்னொரு பக்கம் பில்லி பாப்புடனான இல்லற வாழ்க்கை கசந்தது. 2002-ல் இருவரும் பிரிந்தார்கள். 'இருவருக்கும் பொதுவாக ஒரு விஷயம்கூட இல்லை எனத் தோன்றியது. சுமுகமாகப் பிரிந்துவிட்டோம்’ என்றார் ஏஞ்சலினா.
ஓர் இரவில் ஐக்கிய நாடுகள் சபை குறித்த புத்தகம் ஒன்றைப் படித்துக்கொண்டிருந்த ஏஞ்சலினா, 'அகதிகள் முகாம்’ குறித்த அத்தியாயத்தைப் படிக்கும்போது நிலைகுலைந்துபோனார். உலகம் எங்கும் 20 மில்லியன் அகதிகள் இருக்கிறார்கள். அதில் பாதிக்கும் மேற்பட்டோர் 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள். இப்படி அகதிகளின் அவலங்கள் குறித்து படிக்கப் படிக்க ஏதோ ஒரு தவிப்பு உண்டானது. 2001-ம் ஆண்டில் 'டாம்ப் ரைடர்’ படத்துக்காக கம்போடியாவுக்குச் சென்றிருந்த ஏஞ்சலினா, அங்கே அகதி முகாம்களுக்கும் சென்றார். மூப்பு, நோய், இறப்பு ஆகியவற்றை முதன்முதலில் கண்ட சித்தார்த்தன், மனம் மாறி அனைத்தையும் துறந்து ஞானம் தேடி காட்டுக்குச் சென்ற நிகழ்வுபோல, அந்த அகதி முகாமின் காணச் சகிக்காத காட்சிகள் ஏஞ்சலினாவின் இதயத்தை நொறுக்கின.
வாஷிங்டனில் அமைந்துள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையத்தை (UNHCR)  ஏஞ்சலினா தொடர்புகொண்டார். கம்போடிய அகதிகளின் நிலைமையை எடுத்துச் சொன்னார். தான் பிற தேசத்தில் உள்ள அகதிகள் முகாமைப் பார்வையிட விரும்புவதாகத் தெரிவித்தார். 'இந்தப் பொம்பளைக்குப் பைத்தியமா?’ என்றே முதலில் அவர்கள் நினைத்தனர். ஏஞ்சலினாவின் குடும்பத்தினருக்கும் அதில் ஒப்புதல் இல்லை. 'அங்கு எல்லாம் போகவே கூடாது, ஆபத்து’. ஆனால், ஏஞ்சலினா உறுதியாக இருந்தார். 'நான் அகதிகள் குறித்து, அவர்களது அவலங்கள் குறித்து, இந்தப் பிரச்னையின் அரசியல் குறித்து முற்றிலும் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.’
மேற்கு ஆப்பிரிக்காவின் சியாரா லியோன், கிழக்கு ஆப்பிரிக்காவின் தான்சேனியா, பாகிஸ்தானில் ஆஃப்கனியர்கள் அகதி முகாம்கள் என வெவ்வெறு இடங்களுக்குத் தன் சொந்தச் செலவில் சென்றார் ஏஞ்சலினா. அங்கே முகாம்களில் எந்த வசதியையும் எதிர்பார்க்காமல், அங்கு உள்ள ஊழியர்களுடனேயே தங்கி, அவர்களோடு வேலையையும் பகிர்ந்துசெய்தார். ஒரு வாய் உணவுக்காக ஏங்கும் குழந்தைகள், பசிக்கு அழும் குழந்தைக்கு பால்கூடக் கொடுக்க வலுவற்ற தாய், உறவுகளை இழந்து அநாதையாகத் திரியும் மனிதர்கள், நோயினால் மரணத்தின் விளிம்பில் தவிக்கும் உயிர்கள்... துடிதுடித்துப்போனார் ஏஞ்சலினா. 'வாழ்க்கை இவர்களுக்கு வெறும் துன்பங்களை மட்டுமே வழங்கினாலும், ஏதோ ஒரு நம்பிக்கையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்களே... இவர்களே நிஜ ஹீரோக்கள். நான் எல்லாம் ஒன்றுமே இல்லை. இனி, நாடு இல்லாத அகதிகளுக்காக நாடு நாடாகச் சென்று குரல் கொடுப்பதே என் வேலை’ - ஏஞ்சலினா தன் வாழ்வின் லட்சியத்தை நிர்ணயித்த தருணம் அது. தன் பிரபல அந்தஸ்தை முழுக்க முழுக்க அகதிகளின் நலனுக்காகப் பயன்படுத்த முடிவெடுத்தார்.
முதல் கட்டமாக, ஆஃப்கன் அகதிகளுக்காக ஒரு மில்லியன் டாலரை தன் சொந்தப் பணத்தில் இருந்து கொடுத்தார். 2001-ம் ஆண்டு, ஆகஸ்டில் (UNHCR) , தனது நல்லெண்ணத் தூதுவராக ஏஞ்சலினாவை நியமித்தது. அங்கோலா, காங்கோ, தாய்லாந்து, கென்யா, நமீபியா, இலங்கை எனப் பல்வேறு நாடுகளின் அகதி முகாம்களுக்குச் சென்றார் ஏஞ்சலினா. ரெட் கிராஸ் அமைத்திருந்த ஓர் அகதிகள் முகாம். புருண்டியில் இருந்து தப்பி வந்த ஒன்பது வயதுச் சிறுமி. காயங்களுடன் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருந்தாள். 'அவளோட அப்பா, அம்மா, கூடப் பிறந்தவங்களை எல்லாம் அவ கண்ணு முன்னாடியே கொன்னுட்டாங்க’ என்றனர். ஏஞ்சலினா, அந்தச் சிறுமியின் அருகில் சென்று அமர்ந்தார். அவள், தான் காப்பாற்றி கொண்டுவந்த சில மாதக் குழந்தையான தன் தம்பியை மடியில் வைத்து பழம் ஊட்டிக்கொண்டிருந்தாள். ஏஞ்சலினாவின் கண்கள் கலங்கின. 'இரண்டு பேருமே பிழைப்பாங்களானு தெரியலை’ என்றார்கள். சில மாதங்கள் கழித்து அந்த முகாமில் இருந்து ஏஞ்சலினாவுக்குக் கடிதம் ஒன்று வந்தது. 'அந்தச் சிறுமியும் அவள் தம்பியும் நலமாக இருக்கிறார்கள்.’ ஏதோ ஓர் இனம்புரியாத உணர்வில் வெடித்து அழுதார் ஏஞ்சலினா.
ஆஃப்கனில் ஓர் அகதிகள் முகாம் மூடப்பட இருந்தது. எனில், அந்த மக்களின் கதி? அவர்கள் மீண்டும் ஆபத்தில் சிக்கிக்கொள்வார்களே! ஏஞ்சலினா மற்றவர்களுடன் இணைந்து போராடி, முகாமை மூடவிடாமல் தடுத்தார். அதற்காக நிதி உதவி செய்தும், நிதி திரட்டிக் கொடுத்தும் அங்கே வீடுகள், பள்ளி, மருத்துமனை கட்ட ஏற்பாடுகள் செய்தார்கள். இப்படி பல அகதிகள் முகாம்களில் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல வசதிகளைச் செய்து கொடுக்கப் பெரும் பங்காற்றினார். 2005-ம் ஆண்டில் ஏஞ்சலினா உள்ளிட்ட பலரது முயற்சியால் ‘National Center for Refugee and Immigrant Children’ என்ற அமைப்பு வாஷிங்டனில் உருவாக்கப்பட்டது. 'சட்டபூர்வமான பிரதிநிதித்துவம் இன்றி, புகலிடம் கோரும் ஆதரவற்றக் குழந்தைகளுக் கான சட்ட உதவியை இந்த அமைப்பு செய்யும்’ என அறிவித்த ஏஞ்சலினா, அதற்காக ஐந்து லட்சம் டாலர் நன்கொடை அளித்தார். அகதிகளின் நலனுக்காக சர்வதேச சபைகளில் குரல் எழுப்புவது, அகதிகள் முகாம்களின் அவலநிலையை ஆவணப் படங்களாக உருவாக்கி அதன் மூலம் உலகின் கவனம் ஈர்ப்பது, அகதிகளுக்கு உதவும் மசோதாக்களை நிறைவேற்றச் சொல்லி குரல்கொடுப்பது என ஏஞ்சலினாவின் செயல்பாடுகள் வீரியம் பெற்றன.
இன்னொரு பக்கம் ஏஞ்சலினாவின் திரை வாழ்க்கையும் அடுத்த கட்டத்தை நோக்கி வளர்ந்தது. ‘Mr & Mrs. Smith’...  2005-ம் ஆண்டில் வெளியான படம். சுவாரஸ்யம் இல்லாமல் அடிதடி வாழ்க்கை நடத்தும் ஒரு தம்பதி, தாங்கள் இருவருமே 'வாடகைக் கொலையாளிகள்’ என்ற உண்மையை உணரும்போது என்ன நடக்கிறது என்பதே கதை. அதில் முதன்முறையாக நடிகர் பிராட் பிட்டுடன் ஜோடி சேர்ந்தார் ஏஞ்சலினா. திரையில் பற்றிக்கொண்ட 'கெமிஸ்ட்ரி’ படத்தின் வெற்றிக்கு உதவியது. அது திரைக்கு வெளியிலும் விரிய, பிராட் பிட்டின் குடும்பத்தில் புயல். அவரது மனைவியும், பிரபல நடிகையுமான ஜெனிஃபர் அனிஸ்டன், பிராட் பிட்டிடம் விவாகரத்து வாங்கும் அளவுக்கு விவகாரம் பற்றி எரிந்தது. ஆனால், பிராட் பிட்டும் ஏஞ்சலினாவும் 'காதலை’ ஒப்புக்கொள்ள மறுத்தனர். பப்பாரஸிக்கள் துரத்தும் ஹாட் ஜோடியாக மாறினர்.
2001-ம் ஆண்டில் கம்போடியாவில் அநாதையாகக் கிடந்த அந்த ஆண் குழந்தையைப் பார்த்ததுமே ஏஞ்சலினாவின் மனம் என்னவோ செய்தது. அந்தக் குழந்தையை (மாடோக்ஸ் சிவான்) முறைப்படி தத்தெடுத்தார். 'மாடோக்ஸைத் தத்தெடுத்த பிறகுதான் எனக்கு வாழ்வின் மீதே பிடிப்பு ஏற்பட்டது’ என்பது ஏஞ்சலினாவின் இதயபூர்வமான வார்த்தைகள். 2005-ம் ஆண்டில் எத்தியோப்பியப் பெண் குழந்தையான சகரா மர்லேவை, பிராட் பிட்டுடன் இணைந்தே தத்தெடுத்தார் ஏஞ்சலினா.
2006-ம் ஆண்டில் பிராட் பிட்டுடனான காதலை, தனது கர்ப்பம் மூலமாக உறுதிசெய்தார் ஏஞ்சலினா. 'இயேசுவுக்குப் பிறகு அதிக எதிர்பார்ப்புடன் பிறக்கப்போகும் குழந்தை’ என மீடியா கொண்டாடும் அளவுக்குச் செய்திகள். ஆகவே, இருவரும் நமீபியாவுக்குச் சென்றனர். அங்கே, பெண் குழந்தையை (ஷிலோ நோவெல்) பெற்றெடுத்தார் ஏஞ்சலினா. 2007-ம் ஆண்டில் ஜோலி பாக்ஸ் என்கிற ஆதரவற்ற மூன்று வயது வியட்நாம் சிறுவனை இருவரும் தத்தெடுத்தனர். (இப்படித் தத்தெடுப்பதற்கான சட்டச் சிக்கல்களைச் சமாளிக்கவும் பெரிதும் போராடினர்.) 2008-ம் ஆண்டு நடந்த கேன்ஸ் விழாவில் தானும் பிராட் பிட்டும் இரட்டைக் குழந்தைகளை எதிர்நோக்கி இருப்பதாக ஏஞ்சலினா அறிவித்தார். ஆண் ஒன்று (நாக்ஸ்), பெண் ஒன்று (விவியன்) பெற்றெடுத்தார் ஏஞ்சலினா. அப்படியே தங்களுக்குப் பிறந்த அந்த மூன்று குழந்தைகளின் முதல் புகைப்படங்களை 'பீப்புள்’, 'ஹலோ’ போன்ற பத்திரிகைகளுக்கு விற்றதன் மூலமாகக் கிடைத்த பல மில்லியன் டாலரை 'ஜோலிபிட்’ அறக்கட்டளைக்கு அளித்தனர்.
உலகின் அதிகம் சம்பாதிக்கும் ஜோடியாக, சக்திவாய்ந்த தம்பதியராக பல ஆண்டுகளாக வலம்வந்த பிராட்-ஏஞ்சலினா ஜோடி, தங்கள் திருமணத்தை மட்டும் தள்ளிப்போட்டுக்கொண்டே சென்றனர். 'இருவரும் பிரியப் போகிறார்கள்’ என்ற செய்தியும் தினுசு தினுசாக வந்தபடிதான் இருந்தது. ஒருவழியாக இருவரும் 2012-ம் ஆண்டில் நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். பின்னர் நிதானமாக 2014-ம் ஆண்டு ஆகஸ்டில் திருமணமும் செய்துகொண்டனர். இந்த நிமிடம் வரை மீடியாவுக்குச் கிசுகிசுக்களைச் செழிப்பாக வழங்கும் உலகின் ஆதர்ச தம்பதிகளாக வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.
தற்சமயம் UNHCR - ன் சிறப்புத் தூதராகப் பணியாற்றிவரும் ஏஞ்சலினா, சமீபத்தில் ஈராக்-சிரியா எல்லையில் வாழும் யாஸிதி இனப் பெண்களைச் சந்தித்துள்ளார். இதன் மூலம் ஐ.எஸ் தீவிரவாதிகளால் அந்தப் பெண்கள் அடைந்த துன்பங்கள் எல்லாம் வெளியில் வந்துள்ளனhttps://www.youtube.com/watch?v=P9rAz9KL_Fg). 
உலகின் ஆகச்சிறந்த அழகிகள் பட்டியலில் கடந்த 15 வருடங்களுக்கும் மேல் நீடித்திருக்கும் ஏஞ்சலினா, ஏகப்பட்ட சினிமா விருதுகள் வென்றுள்ளார். 'உலகின் சிறந்த குடிமகள்’, 'உலகின் சிறந்த மனிதாபிமானி’ என சமூக சேவைக்காகப் பெற்ற விருதுகளும் அதிகம். வெறும் கவர்ச்சி நடிகையாக அறிமுகமான ஏஞ்சலினாவை, இன்று உலகம் உணர்ந்திருப்பது 'சிறந்த மனுஷி’யாகத்தான்.
'14 வருடங்கள் அகதிகளுக்கான இந்தச் செயல்பாடுகள் மூலம் என்ன தீர்வு கண்டிருக்கிறீர்கள்?’ என்ற கேள்விக்கான ஏஞ்சலினாவின் பதில்...
'போர்கள் தொடரும் வரை அகதிகளின் பிரச்னைகள் தீரவே தீராது. ஒவ்வோர் அகதியின் ஆசையும் மீண்டும் தங்கள் சொந்த மண்ணில் வசிப்பது என்பது மட்டுமே. அதற்கு அரசியல்ரீதியான தீர்வுகள்தான் முன்னெடுக்கப்பட வேண்டும். இன்று அகதி முகாம்களில் சீரழியும் குழந்தைகள், நாளை தீவிரவாதப் பாதையில் செல்லலாம். அதற்காகத்தான் அவர்களுக்கான முதன்மைத் தேவையான கல்வியறிவு வழங்குவதற்காகப் பள்ளிகளை அமைக்கிறோம். 'நமக்காக யாராவது ஒருவர் வந்து கைகொடுக்க மாட்டார்களா?’ என்றுதான் நம் சக மனிதர்கள் இங்கே தவித்துக்கொண்டிருக்கிறார்கள். உலகில் அகதிகளின் துன்பங்கள் குறித்து யாரும் ஒருபோதும் தலைப்புச் செய்தி வாசிக்கப்போவது இல்லை. குறைந்தபட்சம் இந்த அவலங்களை ஒரு செய்தியாக வெளிக்கொண்டு வரவே நாங்கள் போராடுகிறோம். ஏனெனில், நம் எல்லோருக்கும் உலகில் சந்தோஷமாக, அமைதியாக வாழ உரிமை இருக்கிறது அல்லவா!’
கேன்சர் உஷார்!
2007-ம் ஆண்டு ஏஞ்சலினாவின் தாய் மார்ச்செலைன், கருப்பைப் புற்றுநோயால் இறந்துபோனார். தவிர, ஏஞ்சலினாவின் உறவுக்காரப் பெண்கள் சிலரும் புற்றுநோயால் இறந்திருக்கிறார்கள். 2013-ம் ஆண்டில் தன் மரபணுக்களைப் பரிசோதித்ததன் மூலம், தனக்கு மார்பகப் புற்றுநோய் வர 87 சதவிகித வாய்ப்பு இருக்கிறது என உணர்ந்த ஏஞ்சலினா, மாஸ்டெக்டோமி அறுவைசிகிச்சை முறையில் தன் இரு மார்பகங்களையும் நீக்கிக்கொண்டு, செயற்கை மார்பகங்களைப் பொருத்திக்கொண்டார். 'நான் என் மார்பகங்களை நீக்கிக்கொள்ள எளிதில் சம்மதிக்கவில்லை. ஆனால், உயிர் அதைவிட மதிப்பு மிகுந்தது. உலகம் முழுவதும் உள்ள பெண்கள் இந்த விஷயத்தில் விழிப்புஉணர்வு அடைய வேண்டும் என்பதற்காகவே, நான் இதை வெளிப்படையாக அறிவிக்கிறேன்’ என்றார் ஏஞ்சலினா.
அவரது துணிச்சலான அறிவிப்பு பெரும் அதிர்வுகளை உண்டு பண்ணியது. 'ஒரு நடிகைக்கு மூலதனமே அவளது அழகான வடிவமைப்பான உடல்தான். அதையே துறக்க முன்வந்த ஏஞ்சலினா பெரிய தியாகிதான்’ என ஊடகங்கள் கொண்டாடின. தவிர, மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புஉணர்வும் உண்டானது நிஜமே. இதை 'ஏஞ்சலினா எஃபெக்ட்’ என்றும் பெயரிட்டு அழைத்தனர். (கூடவே சர்ச்சை ஒன்றும் சேர்ந்துகொண்டது. ஏஞ்சலினா எஃபெக்டினால், தங்களுக்கும் மார்பகப் புற்றுநோய் வருமா, வராதா எனத் தெரிந்துகொள்ள பல அமெரிக்கப் பெண்கள் காஸ்ட்லியான அந்தப் பரிசோதனையைச் செய்துகொண்டனர். அந்தப் பரிசோதனைக்கான காப்புரிமை வைத்திருக்கும் Myriad Genetics - ன் பங்கு அந்தச் சமயத்தில் மூன்று சதவிகிதம் உயர்ந்தது. இது ஏஞ்சலினா 'சைடு எஃபெக்ட்’ என்றார்கள்.)
2015-ம் ஆண்டில் தனக்கு கருப்பைப் புற்றுநோய் வர வாய்ப்பிருப்பதை அறிந்த ஏஞ்சலினா, கருப்பை மற்றும் கருமுட்டைக் குழாய்களையும் அகற்றிவிட்டார். ஆக, பெண்மைக்கு உரிய உன்னத அடையாளங்களை இழந்தாலும், ஏஞ்சலினா இப்போதும் உலகின் அழகான பெண்ணாகத் தான் பார்க்கப்படுகிறார்!

டாட்டூ மொழி!
ஏஞ்சலினா, டாட்டூ பிரியை. அந்தந்தக் கால மனநிலைக்கு ஏற்ப அவரது உடலில் புது டாட்டூக்கள் இடம்பெற்றுக்கொண்டே இருக்கும். பல வாசகங்களை அழிக்கவும் செய்திருக்கிறார்.
கணவர் பிராட் பிட்டுடன் இணைந்து நகைகளை டிசைன்செய்து, அந்த ஜுவல்லரி கலெக்‌ஷன் விற்பனை மூலமாகத் திரண்ட நிதியை பல்வேறு நல்ல விஷயங்களுக்குப் பயன்படுத்திவருகிறார்.

கடவுள் நம்பிக்கை அதிகம் கிடையாது. 'எனக்கு என ஒரு கடவுள் இருக்கவேண்டிய அவசியம் இல்லை’ என்பது ஏஞ்சலினா பன்ச்.
'உலகின் மிகமிக அழகான பெண்ணுடன் உறங்கும் வாழ்க்கை எனக்கு வாய்த்திருக்கிறது’ என்பது பிராட் பிட்டின் காதல் மொழி!

டைரக்டர் ஏஞ்சலினா
‘A Mighty Heart’, ‘Wanted’, ‘The Tourist’, ‘Maleficent’   போன்ற படங்கள் ஏஞ்சலினாவுக்குப் பெரும் அளவு பெயரும் புகழும் சம்பாதித்துக் கொடுத்த பிற படங்கள். தவிர 'ஷார்க் டேல்’, 'குங்ஃபு பாண்டா’ படங்களுக்குக் குரலும் கொடுத்துள்ளார். ‘A Place in Time’ (2007)  என்ற ஆவணப்படம் மூலமாக ஏஞ்சலினா இயக்குநராக அறிமுகமானார். ‘In the Land of Blood and Honey’ (போஸ்னியப் போர் குறித்த படம்), 'Unbroken’  (இரண்டாம் உலகப்போர் காலகட்டப் படம்),‘By The Sea’ (கணவன்-மனைவி உறவுச் சிக்கல்கள் குறித்த படம். பிராட் பிட் - ஏஞ்சலினா நடித்தது. 2015-ம் ஆண்டு நவம்பர் 13-ல் வெளியாகிறது) போன்றவை ஏஞ்சலினா இயக்கியிருக்கும் பிற படங்கள். 'நான் நல்ல நடிகை அல்ல. இயக்குநராக இருப்பதே எனக்குப் பிடித்திருக்கிறது’ என்பது ஏஞ்சலினாவின் சமீபத்திய மொழி!


No comments:

Post a Comment