Monetize Your Website or Blog

Saturday, 20 February 2016

54 பந்துகளில் சதம்: கடைசி டெஸ்டில் மெக்கல்லம் உலக சாதனை!

வெலிங்டனில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான  இரண்டாவது டெஸ்ட் போட்டியில்,  நியூஸிலாந்து கேப்டன் மெக்கல்லம் 54 பந்துகளில் சதம் அடித்து உலக சாதனை படைத்தார்.
நியூஸிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில்  தொடங்கியது.

வெலிங்டனில் நடந்த முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 52 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலிய அணி. அதனால் இந்தப் போட்டியில் டிரா செய்தாலே தொடரை வெல்வதோடு, தரவரிசையிலும் முதலிடத்தைப் பிடித்துவிட முடியும்.
இந்நிலையில் இன்றைய போட்டியில்,  டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, நியூசிலாந்தை பேட்டிங் செய்ய அழைத்தது. இந்தப் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் தங்களின் கேப்டன் மெக்கல்லத்தை வெற்றியோடு வழியனுப்புவதற்கும், தொடரை சமனில் முடிப்பதற்கும் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. நியூஸிலாந்து அணி.
முதல் 74 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து அணி தவித்த நிலையில்,  தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் மெக்கல்லம். சிக்ஸரும் பவுண்டரிகளுமாக அடித்து ஆஸ்திரேலியாவின் பவுலிங்கைப் பதம் பார்த்தார். 34 பந்துகளில் அரை சதம் எடுத்த மெக்கல்லம், அதன்பிறகு இன்னும் வேகமாக ஆடி, 54 பந்துகளில் சதம் அடித்து உலக சாதனை படைத்தார். இது அவருடைய 12-வது டெஸ்ட் சதமாகும்.

இதற்கு முன்பு, 1986-ல், இங்கிலாந்துக்கு எதிராக மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் விவியன் ரிச்சர்ட்ஸும், 2014-ல், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணியின் மிஸ்பா உல் ஹக்-கும் 56 பந்துகளில் சதம் எடுத்ததே வேகமான டெஸ்ட் சதங்களாக இருந்தன. அதைத் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் முறியடித்துள்ளார் மெக்கல்லம்.

5-வது விக்கெட்டுக்கு மெக்கல்லமும் ஆண்டர்சனும் 18.2 ஓவர்களில் 179 ரன்கள் எடுத்தார்கள். பிறகு மெக்கல்லம் 145 ரன்களிலும்,  ஆண்டர்சன் 72 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். இறுதியில் தனது முதல் இன்னிங்ஸில், 65.4 ஓவர்களில் 370 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது நியூசிலாந்து அணி. முதல்நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்துள்ளது. 27 ரன்களுடன் பர்ன்ஸும் 18 ரன்களுடன் கவாஜா-வும் களத்தில் உள்ளார்கள்.


No comments:

Post a Comment