Monetize Your Website or Blog

Monday, 29 February 2016

மாவோயிஸ்ட்களின் ஸ்வீட் மாஸ்டர் அவதாரம்... சென்னை 'பகீர்'!

சென்னையை அடுத்த ஶ்ரீ பெரும்புதூர், தேரடி, திருவள்ளூர் சாலை... பிப்ரவரி 18-ம் தேதி இரவு. அந்த ஸ்வீட் கடையை மூடுகிற நேரம். அங்கு வந்து கொஞ்சம் தமிழும், நிறைய இந்தியுமாக "ஏதாவது ஒரு வேலை கொடுங்களேன்" என்று கேட்ட சுபேந்திர யாதவ்தான் கடந்த  22-ம் தேதி க்யூ பிரிவு போலீசாரிடம் சிக்கிய மாவோ என்கிறது போலீஸ் தரப்பு. இந்த இடைப்பட்ட ஐந்து நாளில் அதே ஹோட்டலின் ஸ்வீட் மாஸ்டராகவும் ஆகியிருந்தார் சுபேந்திரயாதவ்.
ஹரீஷ் பவன் என்ற பெயரில் இயங்கிவரும் அந்த ஓட்டலின் முதலாளி சேகர், சுபேந்திர யாதவுக்கு இரக்கம் காட்டியதின் விளைவு, க்யூ பிரிவு போலீசாரால் கடுமையாக எச்சரிக்கப்பட்டிருக்கிறார். (ஏதோ, சேகர் தப்பித்தார் என்றுதான் சொல்ல வேண்டும்).   

'சுபேந்திர யாதவ் வாய் திறந்தால்தான் இன்னும் எத்தனை ஸ்வீட் மாஸ்டர்கள் இப்படி சென்னைக்குள் நுழைந்துள்ளனர் என்பது தெரியவரும்' என்கின்றனர் போலீஸ் தரப்பில்.

"சென்னையைப் பொறுத்தவரை தரமாக ஸ்வீட் போடுகிற மாஸ்டர் கிடைப்பதே அரிதாக இருக்கிறது, அப்படியே கிடைத்தாலும், அவர்களுக்கான சம்பளம் சற்று அதிகம்தான். ஆனால், வட இந்தியாவில் இருந்து இங்கு பிழைப்புத் தேடி வருகிறவர்களுக்கு தங்க இடமும், உணவும் கொடுத்து சம்பளமாக 100 ரூபாய் கொடுத்தாலே போதும். இந்த நிலை இருப்பதால்தான் இப்படி எந்த விசாரிப்பும் இல்லாமல் வட இந்தியர்கள் சென்னையில் செட்டில் ஆகி விடுகின்றனர்" என்றும் குரல்கள் வரத்தான் செய்கிறது.

சென்னையில் புதிதாய் வீடு வாடகைக்குப் பிடித்து தங்கியிருப்போரும், வீட்டின் உரிமையாளரும் தங்கள் விபரத்தை உள்ளூர் காவல் நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற ஒரு நிலையை 2014-ன் இறுதியில் போலீசார் கொண்டு வந்தனர். அதை எதிர்த்து ஆரம்ப நிலையிலேயே சிலர் கோர்ட்டுக்கும் சென்றனர். அப்படி அந்த திட்டத்தில்  நிறைய சிக்கல் ஏற்பட்டது.
வேலை நிமித்தமாக தங்கியிருந்த வட இந்திய நபர்களுக்கு அவர்களை வேலைக்கு அழைத்து வந்திருந்த முதலாளிகள் 'கியாரண்டி' கொடுத்தனர். திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் வசித்தவர்களால் அப்படி எந்த கியாரண்டியையும் கொடுக்க முடியாமல் போனதும் இந்த திட்டம் தோற்றதற்கு ஒரு காரணம்.

அதேபோன்று நேரடியாக வந்து குடியிருப்புகளில் விசாரித்து விட்டுப் போனவர்கள், அந்த விசாரணையின் மூலம் சில 'பெரிய' மனிதர்களின் குடும்ப விவகாரத்தை கையில் வைத்துக் கொண்டு விளையாட தொடங்கியதும் இந்த திட்டம் தோற்றதின் முக்கியக் காரணம்.

"யார் சென்னைக்குள் இருந்தாலும் (வேறு மாநிலத்தவர்) அவர்கள் குடும்பம், பூர்வீகம், சான்று போன்றவைகளை வாங்கி கையில் வைத்துக் கொண்ட பின்னரே அவர்களை வேலையில் வைப்பதோ, அவர்களுக்கு வீடு வாடகை கொடுப்பதோ இருக்க வேண்டும்" என்பது இந்த திட்டத்தின் முக்கிய அம்சம்.  

வட இந்தியர்கள்,  'எட்டுமணி நேரம்தான் வேலை பார்ப்போம்' என்று சொல்வது இல்லை. குறைந்த கூலிக்கே நேரங்காலம் பார்க்காமல் வேலை பார்க்கிறார்கள் என்ற காரணத்தை மனதில் வைத்துக் கொண்டு பல வணிக நிறுவனங்கள், தங்கள் பொறுப்பில் இருக்கும் நபர்கள் குறித்த விபரங்களை போலீசுக்கு கொடுக்காமலே அமைதி காத்தனர்.
மெட்ரோ ரயில் திட்ட கட்டுமான பணியிலும் வட இந்தியர்களின் பங்களிப்பே  அதிகம். நடக்கிற கொலை, கொள்ளை சம்பவங்கள் பெரும்பாலானவற்றில் வேற்று மாநிலத்தவர்களின் கைவரிசை உள்ளதாக புகார்கள் எழுகின்றன. 'எங்களுக்கு  இந்த கொள்ளை சம்பவத்தில்  தொடர்பே இல்லை' என்ற ஒரு வாக்குமூலமும்... சென்னையில் வட நாட்டவர்களின் வரவு அதிகமாகிக் கொண்டே போன கால கட்டத்தில்தான் "பீரோ-புல்லிங்" கொள்ளையர்கள் அதிகமாகினர் என்ற எதிர்மறை கருத்துகளும் தமிழகத்தில் வலம் வந்தன. 

கடின உழைப்பாளிகளாக நான்கு சப்பாத்தி, கொஞ்சம் வெங்காயம், சில பச்சை மிளகாய்களை உண்டு விட்டே மணிக்கணக்கில் சளைக்காமல் வெயிலில் நின்று வேலை பார்த்த அவர்களின் கடின உழைப்பின் அடையாளங்களில் ஒன்றாகத்தான் சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் காட்சி தருகிறது. 

'எங்கோ, ஓரிருவர் அப்படியான வில்லங்க வழக்குகளை சந்தித்தவர்களாய் இருக்கலாம், எல்லோரும் அப்படியானவர்கள் அல்ல' என்ற ஆதரவுக் குரல்களும் தமிழர்கள் மத்தியில் கேட்க ஆரம்பித்தது. இப்படிப்பட்ட பஞ்சாயத்துகள் நடக்கின்ற வேளையில்தான் ஶ்ரீ பெரும்புதூரில் மாவோயிஸ்ட் சுபேந்திர யாதவ் சிக்கியுள்ளார். இவர்,  பீகார், ஹரியானா, சண்டிகர், ஒடிசா மாநிலங்களில் தன்னுடைய தொடர்புகளை வைத்திருந்தவர் என்பது மட்டுமே இப்போதைக்கு போலீசாருக்கு கிடைத்திருக்கும் உறுதியான தகவல். இதைத்தவிர விசாரிப்பில் முன்னேற்றம் வந்தால்தான் வேறேதும் தகவல் வெளியாகும்.
 
யாதவின் செல்போன் லைனில் வந்த சில அழைப்புகள் வடசென்னை கொடுங்கையூரிலும் தொட்டிருக்கிறது என்பதை போலீசார் சற்று சீரியசாகவே பார்க்க ஆரம்பித்துள்ளனர்.

இந்த விவகாரங்கள் ஒரு பக்கமிருக்க, மகாமகம் திருவிழாவின் முதல் நாள் அங்குள்ள போலீஸ் கன்ட்ரோல் ஏரியாவுக்கு அடுத்தடுத்து வந்த மிரட்டல் போன் கால்கள் குறித்த விசாரணையையும், விபரத்தையும் மிகவும் சைலண்ட் மோடில் வைத்துள்ளது போலீஸ்.

வில்லங்கம் இல்லாத "தகவல் சேர்ப்பு" மீண்டும் ஒரு ரவுண்ட் வராதவரை சுபேந்தர் யாதவ்கள் போன்றோர் மிட்டாய் கடைகளில் மாஸ்டராவதை தடுக்க முடியாது.


No comments:

Post a Comment