Monetize Your Website or Blog

Saturday, 20 February 2016

தமிழக அரசின் கடன்... ‘‘மாநில அரசு பொறுப்பல்ல!’’

பேராசியர் மு.நாகநாதன் முன்னாள் துணைத் தலைவர், மாநிலத் திட்டக் குழு.

ரு மாநிலத்தின் பொதுக்கடன் (Public debt) எவ்வாறு உருவாகிறது? நடுவண், மாநில அரசுகள் தனித்தனியே வரி விதிக்கும் அதிகாரங்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ளன. இந்திய அரசமைப்புச் சட்ட அவையில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிதி அதிகாரங்கள் மிக மிகக் குறைவாக உள்ளன என்று பலர் வாதிட்டனர். குறிப்பாக, டி.டி. கிருஷ்ணமாச்சாரி, கே.சந்தானம், ஏ.ராமசாமி முதலியார் ஆகியோர் 1935-ஆம் ஆண்டு சட்டத்தில் உள்ள நிதிப் பிரிவுகள்தான் புது அரசமைப்புச் சட்டத்திலும் உள்ளன.
இத்தகைய  சூழலில் மாநில அரசுகள் மக்களுக்குப் பணியாற்றும் துறைகள் அதிகம் உள்ளன. இந்த அமைப்பு முறை செயல்பட்டால், மாநிலங்கள் நடுவண் அரசிடம் பிச்சை எடுக்கும் நிலை ஏற்படும் (The State will be the beggers at the doorsteps of the Centre) என்று குறிப்பிட்டனர். இந்த எதிர்ப்புக்குப் பின்னரே, நடுவண் அரசின் வரிகளில் இருந்து மாநிலங்களுக்குத் தொகையைப் பிரித்துக் கொடுக்கும் நிதிக் குழுவை (Planning Commission) உருவாக்கும் அதிகாரம் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 280-வது பிரிவில் வகை செய்யப்பட்டது.
இதற்குப் பின்பும் மாநில அரசுகள் ஏன் கடனை அதிகரித்து வந்தன என்ற கேள்வி எழும். 1950-லிருந்து தொடர்ந்து மாநிலங்களுக்கு நடுவண் அரசின் வருவாயிலிருந்து கிடைக்க வேண்டிய நிதிப் பங்கை நிதிக் குழுவே பரிந்துரை செய்திருந்தால், இன்றைக்கு நாம் காண்கிற நிதிப் பற்றாக்குறை பிரச்னை, கடன் பிரச்னை பெருமளவில் தொடர்ந்திருக்காது. 1950-க்குப் பிறகு நாடாளுமன்றச் சட்டத்தால் திட்டக்குழு உருவாக்கப்பட்டது. அரசமைப்புச் சட்டம் உருவாகியபோது, திட்டக்குழு பற்றிய விவாதமே அரசமைப்புச் சட்ட அவையில் இடம்பெறவில்லை. சமூக, பொருளாதார திட்டமிடுதல் நடுவண் அரசு, மாநிலங்களுக்குப் பொதுவான முறையில் பொதுப் பட்டியலில்தான் இடம்பெற்றது. ஆனால், நடுவண் அரசின் திட்டக்குழு எவ்வித நிதி அல்லது பொருளாதார வரையறைகளின்றி, மாநில அரசுகளுக்கு நிதியுதவியைத் தொடங்கியது.
நிதியுதவி என்றால் பொதுவாக நடுவண் அரசு, மாநில அரசுகளுக்கு அதிக தொகையை அளித்தது போல் எண்ணத் தோன்றுகிறது. ஆனால், திட்டக் குழு மாநில அரசுகளுக்கு வழங்கிய திட்ட மானியம் சில ஆண்டுகளில் 20 விழுக்காடாகவும், 80 விழுக்காடு கடனாகவும் இருந்தது. 1967-ல் பல மாநிலங்களில் காங்கிரஸ் அல்லாத அமைச்சரவைகள் உருவாயின. தமிழகத்தில் அண்ணா தலைமையில் திமுக ஆட்சி அமைத்தது. முதல் நிதிநிலை அறிக்கையிலேயே அண்ணா, மாநில அரசுகள் நடுவண் அரசிடமிருந்து கடன்களைப் பெற்று, அதிக வட்டியைச் செலுத்துகின்றன. நிதிக்குழு வழியாக வரும் தொகை மாநில அரசுகளின் பணிகளுக்கு ஏற்ப அதிகரிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். எனவே, மத்திய, மாநில அரசுகளின் உறவுகளைச் சீரமைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
அன்றைக்கு நடுவண் அரசின் திட்டக் குழுவின் துணைத் தலைவராக இருந்த காட்கில், திட்டக் குழு அளிக்கும் நிதிப் பகிர்வுக்கு ஒரு வரையறையை வழங்கினார். மக்கள் தொகை 60 விழுக்காடு, தலா வருமானம் 10 விழுக்காடு, வரி திரட்டும் முயற்சி 10 விழுக்காடு, நடைமுறையில் உள்ள நீர்ப் பாசன மின் திட்டங்கள் 10 விழுக்காடு, சிறப்புத் திட்டங்களுக்கு 10 விழுக்காடு என்ற வரையறைகள் 1969-லிருந்துதான் முறைப்படுத்தப்பட்டன. 30 விழுக்காடு மானியத்தைப் பெறுவதற்குதான் இந்த முறை என்பது குறிப்பிடத்தக்கது. 70 விழுக்காடு கடனுக்கு மாநில அரசுகள் வட்டியைச் செலுத்தும் நிலை ஏற்பட்டது. 
2002-க்குப் பிறகு நடுவண் அரசு, சந்தையில் கடனுக்குக் கொடுக்கப்படும் வட்டி குறைந்து காணப்பட்டதால், மாநில அரசுகள் நேரடியாகக் கடனைக் குறைந்த வட்டியில் பெற்று தங்களுடைய நிதித் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டது. இத்தகைய பின்னணிகளையும், முரண்பாடுகளையும் மாநில அரசுகளின் நிதிச் சுமையையும் அறிந்திருந்த காமராஜர் 1975-ம் ஆண்டு, நடுவண் அரசில் அதிகாரக் குவிப்பு இருப்பது நிதி நெருக்கடிக்குத் தள்ளப்படும் என்று குறிப்பிட்டார். மேலும், தான் காங்கிரஸ் கட்சியின்  தலைவராக இருந்தபோது தனக்கும், அப்போது நிதி அமைச்சராக இருந்த மொரார்ஜி தேசாய்க்கும் தெரியாமலேயே நிதியத்தின் (IMF) அழுத்தம் காரணமாக, இந்தியாவின் ரூபாய் மதிப்பை 36.5 விழுக்காடு அளவுக்கு 1966-ல் குறைக்கப்பட்டது இதற்கு ஒரு சான்றாகும் என்று குறிப்பிட்டார்.
அன்றைக்கு குறைந்த ரூபாயின் மதிப்பு இன்றைக்கு ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 66 என்று அளிக்கும் நிலையில் உள்ளோம். இந்தியாவின் உலகமயமாதல் கொள்கையால் 1975-ம் ஆண்டு ஒப்பிடும்போது, ஏற்றுமதி பெருகியிருந்தாலும், இந்தியாவின் பணமதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பணவீக்கத்தை அதிகரிப்பதற்கும் இது ஒரு காரணியாக அமைந்துவிடுகிறது. நாம் வட்டியையும், கடனையும் செலுத்தும்போது, இந்த ரூபாய் மதிப்பில்தான் கொடுக்க வேண்டும். இந்திரா காந்தி காலத்தில்தான் வெளிநாடுகளிலிருந்து பெறும் வணிகக் கடன் (Commercial borrowing) அதிகரிக்கத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
1967-லிருந்து நடுவண் அரசு தனது துறைகளின் வழியாக மாநில அரசுகளுக்கு நிதியுதவியை அளிக்கத் தொடங்கியது (Centrally sponsored scheme). மாநில அரசுகளின் அதிகார எல்லையில் உள்ள பெரும்பான்மையான வளர்ச்சித் துறைகளில் இந்தத் திட்டங்கள் இரு வழிகளில் குறுக்கிடத் தொடங்கின. நிதி சேதாரம் ஏற்படுவதற்கும் வழிவகுத்தன. இந்தியாவில் கல்வி, பொதுச் சுகாதாரம் போன்ற துறைகளில் எல்லா மாநிலங்களும் ஒரு சீரான அளவில் வளர்ச்சி அடையவில்லை.
சான்றாக, கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப் போன்ற மாநிலங்கள் கல்வி, பொதுச் சுகாதாரத் துறைகளில் மாநில அரசின் திட்டங்களால் பெரும் முன்னேற்றத்தை அடைந்தன. மாநிலங்களிடையே காணப்படும் ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க முற்பட்ட நிதிக் குழுக்களின் பரிந்துரைகள், நடுவண் அரசின் திட்டக்குழு வழியாக அளிக்கப்படும் நிதியாலும், அரசின் நேரடித் துறைகளால் அளிக்கப்படும் நிதியாலும் மாநிலங்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வுகள் மேலும் மேலும் பெருகின. மாநில அரசுகள் கடனளவு பல லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்தாலும், நடுவண் அரசும், ரிசர்வ் வங்கியும் அடிக்கடி கண்காணிப்பதனாலும், கட்டுப்பாடுகளை விதிப்பதாலும் தங்கள் நிதி எல்லையை மீறிக் கடனைப் பெறாத சூழல் உள்ளது. 
இது போன்ற நிதி முரண்பாடுகளுக்கும், சிக்கல்களுக்கும் ஒரு தீர்வை காண வேண்டும் என்ற நோக்கோடுதான் 1983-ம் ஆண்டு முதன் முதலாகத் தென்னக முதலமைச்சர்கள் மாநாட்டை பெங்களூருவில் அன்றைய கர்நாடக முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டே கூட்டினார். அப்போது எட்டாவது நிதிக் குழு நடுவண் அரசால் அமைக்கப்பட்டு அறிவிப்பு வெளியானது. தென்னக மாநில முதல்வர்கள் எம்ஜிஆர், என்டிஆர், பாண்டிச்சேரி ராமசந்திரன் ஒன்று கூடி ஒரு பொதுவான அணுகுமுறையை எட்டுவதற்கு முயற்சி செய்தனர். கேரள மாநிலத்தில் முதல்வர் காங்கிரசுக் கட்சியைச் சார்ந்தவராக இருந்ததனால் இதில் கலந்துகொள்ளவில்லை.
மாநிலங்களுக்கு அதிக நிதி ஆதாரங்களை அளிக்க வேண்டும். மத்திய, மாநில உறவுகளைச் சீராய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அப்போது ஊடகங்கள் “ராமர்கள் ஒன்று கூடி பத்ரகாளியிடம் நீதி கேட்கிறார்கள்” என்று நகைச்சுவைச் சித்திரங்களை வெளியிட்டன. தென்னக முதல்வர்கள் மாநாட்டில் ஞாயிறு மாலை நடுவண் - மாநில உறவுகளைச் சீராய்வு செய்ய வல்லுநர் குழு அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளிவந்தது. இதனை அறிந்த இந்திரா காந்தி, நள்ளிரவில் அரசமைப்பின் பொதுப்பட்டியல் அதிகாரத்தின்படி, நீதிபதி சர்க்காரியா தலைமையில், நடுவண் - மாநில உறவுகைள ஆராயக் குழுவை அமைத்தார். பொதுப் பட்டியல் சார்ந்த ஒரு விதியில் அறிவிப்பை நடுவண் அரசு வெளியிட்டால், மாநில அரசுகள் அதே பொருளில் வேறு எந்த அறிவிப்பையும் அரசமைப்புச் சட்டப்படி வெளியிட முடியாது. ஊடகங்கள் வெளியிட்டபடியே ‘ராமர்களை காளி அடக்கி’விட்டார். இருப்பினும், நீதிபதி சர்க்காரியா ஆணையம் மிகச் சிறந்த முறையில் நடுவண் - மாநில அரசுகளின் உறவுகளை ஆய்ந்து பல பயனுள்ள பரிந்துரைகளை 1983-ல் வழங்கியது.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, நீதிபதி வெங்கட செல்லைய்யா தலைமையில் அமைக்கப்பட்ட அரசமைப்புச் சட்ட மறு ஆய்வு ஆணையம் (2000), மாநில அரசுகளுக்கு அதிக அதிகாரங்களை அளித்து நடுவண் அரசில் அதிகாரக் குவிப்பைத் தடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது. பின்னர் மன்மோகன் சிங் தலைமையில் அமைந்த காங்கிரசுக் கூட்டணி அரசு 2007-ல் நீதிபதி பூஞ்சி தலைமையில் ஒரு ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணையம் 2010-ல் தனது பரிந்துரைகளை அளித்தது. இருப்பினும், பொருளாதார நிதியியல் சீரமைப்புக்காக, வளர்ந்து வருகிற கடன் சுமைகளையும், கடன் தொல்லைகளையும் குறைப்பதற்கான பல குழுக்களின் பரிந்துரைகளை நடுவண் அரசு கண்டுகொள்ளவே இல்லை.
மாறாக, திட்டக் குழுவை (Planning Commission) பிரதமர் மோடி 2014-ல் கலைத்தார். 20 விழுக்காடு அளவுக்கு மாநிலங்களுக்குக் கிடைத்துவந்த மானியமும் கேள்விக்குறியானது. மேலும், நடுவண் அரசின் துறைகளின் வழியாக மாநில அரசுகளுக்கு அளிக்கப்பட்டு வரும் நிதியுதவியும் குறைக்கப்பட்டு வருகிறது. அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ்த் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் பெற்ற நிதியும் குறைக்கப்பட்டுள்ளது. கல்வி மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு நெருக்கடி நிலை காலத்தில் மாற்றப்பட்டது.
ஆனால், நடுவண் அரசு உயர்கல்வியில் வெளிநாட்டு நிதி முதலீடுகளைப் பெறுவோம் என்று அறிவிப்பது கல்வி வளர்ச்சியில் முன்னிலையில் உள்ள மாநிலங்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக, கல்வி பயிலும் ஆதி திராவிட மாணவர்களுக்கு அளிக்கவேண்டிய ஏறக்குறைய 1,500 கோடி ரூபாயை உடனடியாக அளிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் கடிதம் அனுப்பியுள்ளார். மாநில அரசு நடுவண் அரசின் போக்கால் சந்திக்கும் நிதி இடர்களுக்கு இது ஒரு சான்றாகும்.
இந்தச் சூழ்நிலையில் மாநில அரசுகள் கடனைச் சந்தையில் பெற முடியாத ஒரு நிலையும் உள்ளது. காரணம், 12-வது நிதிக் குழு தனது பரிந்துரையில் மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் (Gross State Domestic Product) 3 விழுக்காட்டுக்குள் கடன் பெறவேண்டும். மீறினால் நிதிக் குழுவின் பரிந்துரையின்படி, நடுவண் அரசின் நிதிப் பகிர்வை பெற முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. எனவேதான், மாநில அரசுகளில் கடன் அளவீடு 3 விழுக்காட்டுக்குள் உள்ளது. ஆனால், நடுவண் அரசு நிதியியல் பொறுப்புரிமை – வரவுசெலவு மேலாண்மைச் சட்டத்தை (Fiscal Responsibility Budget Management Act) 2003-ல் முதன்முதலில் கொண்டு வந்தது.
2004-ல் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம், தனது முதல் நிதிநிலை அறிக்கையிலேயே இந்தச் சட்டத்திலிருந்து விதிவிலக்குக் கோரினார். நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 5 முதல் 6 விழுக்காடுக்கு நிதிப் பற்றாக்குறை (Fiscal Deficit) தொடர்ந்து இருந்து வருகிறது. பின்பு, நடுவண் அரசு 2007, 2012 ஆண்டுகளில் இந்தச் சட்டத்தில் பல திருத்தங்களைக் கொண்டுவந்து நீதியாகவும், நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நிதியில் மேலாண்மை செய்யப்பட வேண்டும் என அறிவித்தது.
ஆனால், 2014-15ல் 5.98 விழுக்காடு நிதிப் பற்றாக்குறை உள்ளது. இன்றைக்கு நடுவண் அரசுக்கு 32,11,850 கோடி அளவுக்குக்கு வெளிநாட்டுக் கடன் மட்டும் உள்ளது. இதில் 40 விழுக்காடுக்கு மேல் வணிகக் கடன் ஆகும். இந்தக் கடனால்தான் இந்தியா மற்ற நாடுகளுக்குச் செலுத்த வேண்டிய வட்டி தொகையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. நடுவண் அரசு ஏழைகள் தொடர்பாக சமூக நலத் திட்டங்களுக்கான நிதியைத் தொடர்ந்து குறைத்துவரும் நிலையில், 2014-15 ஆண்டில் ரூ.5,90,00 கோடி வரிச் சலுகைகளை பெருமுதலாளி நிறுவனங்களுக்கு வாரி வழங்கியுள்ளது. 2005-06 முதல் 2014-15 வரையிலான பத்து ஆண்டுகளில் இந்த வரிச் சலுகையின் தொகை அளவானது ரூ.42,57,000 கோடியைக்  கடந்துள்ளது. 
மேற்கூறிய நடுவண் அரசின் புள்ளிவிவரங்களே அதிகரித்துவரும் வெளிநாட்டுக் கடனுக்கும், நிதிப் பற்றாக்குறைக்கும் நடுவண் அரசே பொறுப்பு என்பதையும், மாநில அரசுகள் பொறுப்பல்ல என்பதையும் நன்கு உணர்த்தும்.


No comments:

Post a Comment