Monetize Your Website or Blog

Tuesday, 23 February 2016

கூட்டணிக்கு இவரு தயாராம்... கூப்பிடப் போவது யாரு?

திமுகவுடன் யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்றுக் கொள்வோம் என்று கருணாநிதி அறிவித்துள்ள நிலையில், யார் அழைத்தாலும் கூட்டணி குறித்து பேசுவோம் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார் ஓப்பனாக தெரிவித்துள்ளார்.

நாகர்கோவிலில் நேற்று நடைபெற்ற அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் பேசிய கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார், "அ.தி.மு.க. கூட்டணியில் இருந்துகொண்டு இதுவரை கூட்டணி தர்மத்தை கடைப்பிடித்தேன். சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என 9 முறை அந்த இயக்கத்துக்காக நான் பிரசாரம் செய்து இருக்கிறேன். அதற்கு இந்த சரத்குமார் பயன்பட்டான். சாப்பாட்டில் போடக்கூடிய கறிவேப்பிலை மாதிரி பயன்படுத்தினர். அதை புரிவதற்கு எனக்கு காலதாமதம் ஆகிவிட்டது.
 
என்னை ஆளுங்கட்சிக்கு ஜால்ரா என்று சிலர் சொன்னார்கள். ஜால்ரா ஒரு பக்கவாத்திய கருவி. அதன் சுதி மாறினால் தாளம் மாறிவிடும். ஆகவே கடந்த 5 ஆண்டுகளாக நான் சுதி மாறாதவனாக இருந்திருக்கிறேன். தற்போது என் தொண்டர்கள் என்னை வெளியே வரச் சொல்கிறார்கள். கண்டிப்பாக ஆளுங்கட்சியுடன் கூட்டணியில் இருக்க மாட்டேன். எனக்கென்று ஒரு மரியாதை இருக்கிறது" என்று அதிரடியாக பேசினார்.

இந்த நிலையில், யார் அழைத்தாலும் கூட்டணி குறித்து பேசுவோம் என்றும், திமுகவுடன் இதுவரை பேச்சுவார்த்தை நடக்கவில்லை என்றும் சரத்குமார் இன்று தெரிவித்தார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், "அதிமுக கூட்டணியில் நாங்கள் இருந்ததால் வளர்ச்சி அடையவில்லை. கூட்டணி தர்மத்தை காக்கவே அதிமுகவுடன் தொடர்ந்து இருந்து வந்தோம். அதிமுக செயல்பாடு மக்கள் மன்றத்தில் தீர்மானிக்கப்படும்.

சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடவே தொண்டர்கள் விரும்புகிறார்கள். கூட்டணி தொடர்பாக எந்த கட்சியிடமிருந்தும் எனக்கு அழைப்பு வரவில்லை. திமுகவுடன் இதுவரை பேச்சுவார்த்தை நடக்கவில்லை. யார் அழைத்தாலும் கூட்டணி குறித்து பேசுவோம்" என்று கூறினார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு திமுகவில் சேர்ந்த சரத்குமார், பின்னர் அங்கிருந்து வெளியேறினார். அப்போது, கருணாநிதிக்கு பகிரங்கமாக கடிதம் ஒன்றை சரத்குமார் எழுதினார். அந்த கடிதத்தில், "தங்களால் ஈர்க்கப்பட்டு தங்களது இயக்கத்திலும் 1998 -ம் ஆண்டு அடிப்படை உறுப்பினராக இணைந்தேன். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இயக்கத்திற்கு நான் ஊறு விளைவித்ததில்லை என்பதனை இவ்வுலகமே அறியும். இது ஒருபுறம் இருக்க எத்தனையோ சந்தர்ப்பங்களில் தங்களைச் சார்ந்த சிலரே என்னை அவமானத்திற்கு உள்ளாக்கியிருக்கிறார்கள். 

சுய மரியாதை உணர்வுகளோ, கருத்துச் சுதந்திரமோ இல்லாதவன் மனிதனே அல்ல என்பது என் கருத்து. தங்களது இயக்கத்திலோ, தற்போது அவற்றுக்கு வரவேற்பு இல்லை, வாய்மையும் பேசாத, வாயும் பேசாத அடிமைகளே தேவைப்படுகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நான் இயக்கத்தில் இருந்து விடுவித்துக் கொள்வதுதான் எனக்கு ஒரே வழி. இதுகாலம் வரை தங்களிடம் கற்ற அரசியல் பாடம், என்னை வளர்த்த ரசிகர்களும், தாய்மார்களும், நண்பர்களும், கலை உலகத் தோழர்களும், என்னைச் சார்ந்த சமுதாயமும், தமிழக மக்களும் இனி எனது அரசியல் வாழ்க்கைக்கு துணை நிற்பர். தமிழக மக்கள் என்னை அவர்கள் மடியில் விழுந்த பிள்ளையைப் போல கருதி, நான்பட்ட காயங்களுக்கு மருந்திட்டு விட்ட பணிகளைத் தொடர எனக்கு வழிகாட்டுவார்கள் என்ற நம்பிக்கை நிச்சயம் எனக்கு உண்டு. எனவே என்னை தங்களது இயக்கத்தில் இருந்து விடுவித்துக்கொள்கிறேன்" என்று கூறியிருந்தார்.

இப்படி திமுகவால் தாம் அவமதிக்கப்பட்டதாக கூறியிருந்த சரத்குமார், தற்போது திமுகவுடன் கூட்டணி தொடர்பாக இதுவரை பேச்சுவார்த்தை நடக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

ஏற்கனவே கருணாநிதி, திமுக கூட்டணிக்கு யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம் என்று பச்சைக்கொடி காட்டியிருந்தார். இதனால், சரத்குமாரின் ச.ம.க.வை,  திமுக கூட்டணிக்கு அழைக்குமா அல்லது சரத்குமார் தனித்து போட்டியிடுவாரா அல்லது மக்கள் நலக்கூட்டணியில் சேருவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


No comments:

Post a Comment