Monetize Your Website or Blog

Thursday, 25 February 2016

அற்புத உலகம் விளாங்கொம்பை..!

ங்கள் அலாரம் வாழ்க்கையை அனைத்துவிட்டு சற்று செவி சாயுங்கள்... அற்புத உலகிற்கு அழைத்துச் செல்கிறேன்.

விளாங்கொம்பை. மழைச் சாரலில்,  மலைச்சரிவில் இருக்கும் ஒரு கிராமம். ஓசையற்ற ஓர் உலகம். ஏதாவது சத்தம் வந்தாலும் அது சங்கீதம். மூளையால் வாழும் நகர வாழ்க்கையிலிருந்து இதயத்தால் வாழும்
இயற்கை வாழ்வியலை நோக்கிய பயணம். ஈரோட்டிலிருந்து கோபி, கோபியிலிருந்து வினோபா நகர். அந்த வினோபா நகரிலிருந்து எட்டிப்பார்த்தால் பசுமை போர்த்திய இரண்டு மலைகள். சரியாக அந்த மலைக்கு பின்னால் ஒரு மச்சமாக இருந்தது விளாங்கொம்பை.
அங்கு செல்ல மலை மீது ஏற வேண்டும். மலைக்கு மடி வலிக்கவில்லை, மலையை மிதித்துச் சென்ற நமக்கு கால்கள் வலித்தது. வழியெங்கும் எச்சங்கள். அவற்றின் சொந்தக்காரர்கள் யானையும் சிறுத்தை புலியும் என்று அறிமுகம் செய்தனர் உடன் வந்திருந்த வனத்துறை அதிகாரிகள். அந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் அதிகாரிகளின் அனுமதியில்லாமல் செல்ல இயலாது. ஆங்காங்கே மரங்களில் மாட்டப்பட்டிருக்கும் கேமிராக்கள்  மிருக நடமாட்டங்களை கண்காணிக்க மட்டுமல்ல. அத்துமீறி நுழையும் மனித மிருகங்களை கண்காணிக்கவும்தான்.


அரசியல்வாதியும் ஆங்ரி பேர்ட்ஸும்: 

அவ்வளவு நேரம் அழகாய் தண்ணீர் பருகிக்கொண்டிருந்த மான், நாம் வருவதைக்கண்டதும் தேர்தலில் ஜெயித்த அரசியல்வாதிகளைப்போல சட்டென்று ஓடி மறைந்துவிட்டது. வழியெங்கும் நம்மை இசையுடன் வரவேற்றது,  அதுவரை நாம் கண்டிராத பறவையினங்கள். பாவம், இந்த பறவைகளின் இன்னிசைகளை எல்லாம் கேட்க கொடுத்து வைக்கவில்லை, நகரத்தில் ‘ஆங்கரி பேர்ட்ஸ்’ விளையாடும் குழந்தைகளுக்கு. இறுதியில் அந்த கிராமத்தை அடைந்தோம். எவ்வளவு காலம் வாழ்ந்தாலும் பெற முடியாத பல அனுபவங்களையும் பாடங்களையும் பயிற்றுவித்தது அந்த கிராமம். விரல்விட்டு எண்ணும் அளவே வீடுகள் இருந்தன. தோராயமாக 40 குடும்பங்களும் ,150 மக்களும். அவர்கள், இயற்கை வளங்களை சுரண்டாமல் இயற்கையின் மிச்சத்தையே பயன்படுத்தினர். அந்த ஒரு அறை வீடுகளில் நிரம்பி இருந்த சந்தோஷமும் செல்வமும், எவ்வளவு பெரிய மாடமாளிகைகளிலும் கிடைக்காது.

சிறகுகள் நடப்பதற்கல்ல பறப்பதற்கு:

அக்கிராம மக்களின் இயற்கை அறிவிற்கும் , இயற்கையின் மீதுள்ள அன்பிற்கும் ஒரு சின்ன சான்று. அம்மக்கள் தங்கள் வீட்டின் முற்றங்களின் பந்தல் கால்களுக்கு பச்சை மரங்களையே நடுகின்றனர்.அது பந்தல் காலாகவும் நிற்கின்றது ,மரமாகவும் வளர்கிறது. வீடு கட்டும்போது வாஸ்துவிற்காக மரத்தை வெட்டும் நாம் நாகரிகவாதிகள். வாழ்வதற்காக கூட மரங்களை வெட்டாத அம்மனிதர்கள் காட்டுவாசிகள். அவர்கள் தேவைக்காக மட்டுமே விளைவிக்கின்றனர். அங்கு வியாபாரம் என்பதே கிடையாது. வாழ்வதற்காக மட்டுமே உண்கின்றனர். உண்பதற்காக மட்டுமே விளைவிக்கின்றனர். அந்த உணவின் ருசியே ஆளைக் கொன்றுவிடும். கேப்பை களியும் கருவாட்டுக்குழம்பும், வயிறு என்னும் பள்ளாத்தாக்கிலிருந்து இதயத்திற்கு ஏறி வந்த நிறைவைத் தந்தது.


ஆண்மகள்களும் பெண்மகண்களும்:

பாலின சமத்துவம். இதன் பொருள் கூட நம்மில் சிலருக்குத் தெரியாது. ஆதிக்க மனோபாவம் கொண்ட நம் ஆண்கள், விளாங்கொம்பை வாசிகளை பார்த்து கேட்டு தெரிந்துகொள்ள நிறைய இருக்கிறது. பெண்களை இவர்கள் எவ்வளவு தூரம் மதிக்கின்றனர் என்பதற்கு சான்று, அவர்களின் திருமண நடைமுறை. அங்கே பெண்ணை மணந்து கொள்ள ஆண் வரதட்சனை கொடுக்கவேண்டும். ஒரு பெண் காட்டிற்குள் வேட்டையாடச் சென்றாலோ,  பழம் பறிக்கச் சென்றாலோ எந்த ஆண் குரலும் அவர்களை தடுக்கவில்லை. அப்போது நினைவில் பட்டது, காட்சிப்பொருளாகவும் கவர்ச்சிப்பொருளாகவும் பாவிக்கப்படும் நம் நகர சகோதரிகளின் நிலைமை. பழம் பறிக்கக் காட்டுக்குச் சென்ற ஒரு சிறுமி திரும்பி வந்தபோது ஒரு சிரிப்பை உதிர்த்தாள். அது நகர நாகரீகத்தை எள்ளி நகையாடியது.

களவாடும் கல்வி  :

வாழ்வதற்கு கற்றுக்கொடுப்பதே கல்வி. வாழ்க்கை சூழலை புரிந்துகொண்டு நடப்பதே பாடம். இவ்விரண்டையும் நாகரிக நகர மனிதர்களை விட மிக அதிகமாகவே அம்மக்கள் அறிந்துவைத்துள்ளனர். அங்குள்ள மக்கள்,  தங்களையும் தங்கள் எதிர்காலத்தையும் எதிர்கொள்ளும் திறன் பெற்றவர்களாகவே இருந்தனர். தன்னிறைவு அடைந்த அந்த தூய மனிதர்களுக்கு கல்வியும்
விழிப்புணர்வும் வழங்கப்போவதாக வந்துள்ள அரசு பிரதிநிதிகளால் அவர்களது வாழ்வாதாரம் சூறையாடப்படாமல் இருந்தால் சரிதான்.


தயவு செய்து விளாங்கொம்பயை விட்டுவிடுங்கள்:

வளர்ச்சி என்னும் பெயரில் அந்த சொர்க்க பூமியின் மீதான அரசின் பார்வையே இப்போதுதான்   திரும்பியிருக்கிறது. ஆனால் அதற்கு முன் மோப்பம் பிடித்து வந்திருந்தனர் மதபோதகர்கள். இதுநாள் வரை தங்கள் தேவைகளை தன்னிறைவுடன் பூர்த்தி செய்து கொண்டிருந்த அம்மக்களுக்கு இலவசமாக காய்கறிகள் கொடுத்து கையேந்த வைக்கின்றனர். இது ஒருபுறமிருக்க, வனத்துறையினர் அந்த மக்களை நடத்தும் விதம் மனதை மிகவும் புண்படுத்தியது. இன்னும் மனதை நெருடும் பல கொள்ளைகள் அங்கே அரங்கேறுகிறது.  

விடைபெறும் நேரத்தில், அந்த கிராமத்திலிருந்து சற்று தூரத்தில் ஒரு கிரேன் தென்பட்டது. விசாரித்ததில் அந்த கிராமத்திற்கு செல்போன் டவர் வரப்போகிறது என்றனர் வனத்துறையினர். 


No comments:

Post a Comment