Monetize Your Website or Blog

Thursday, 18 February 2016

கட்டடம் கட்டினால் பதவி பறிபோகும்... அரியலுார் அதிமுகவின் அதிர்ச்சி சென்டிமெண்ட்

ஜெயலலிதாதான் சென்டிமென்ட் பார்த்து செயல்படுகிறார் என்றால், அவரது ரத்தத்தின் ரத்தங்களும் அநியாயத்துக்கு சென்டிமென்ட்டில் மூழ்கி திளைக்கிறார்கள் இப்போது. 

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அதிமுக அலுவலக கட்டடத்தை கட்ட நினைத்தால் மாவட்டச் செயலாளர் பதவி பறிபோய்விடும் என்பது அங்குள்ள கட்சியினர் நம்பிக்கை. இதுவரைக்கும் இரண்டு மாவட்டச் செயலாளர்கள் பதவி அப்படி பறிபோயுள்ளதாக அதிர்ச்சி தருகின்றனர் அதிமுகவினர். இதனால் யாரும் விஷப்பரீட்சையில் இறங்காமல் ஒதுங்கிவிட,  அமைச்சர் வைத்திலிங்கம் முயற்சியால் மட்டுமே அலுவலகம் கட்டபட்டது.
ஆனால் கட்டப்பட்ட அலுவலகத்தில் அலுவலக வேலையை தொடங்கினால்,  பதவி பறிபோய்விடும் என்ற சென்டிமென்ட் கலக்கத்தில்,  அலுவலகம் பக்கமே தலைவைத்து படுப்பதில்லை எங்கள் மாவட்டச் செயலாளர் என்று புலம்ப ஆரம்பித்துள்ளனர் அரியலுார் மாவட்ட அதிமுகவினர்.

இதில் என்ன சென்டிமென்ட் என்று சில அதிமுக நிர்வாகிகளிடம் பேசினோம்.
“ஜெயலலிதா முதல்வராக பதவியேற்ற பிறகு,  ஐந்து மாவட்டச் செயலாளர்களை கண்ட ஒரே மாவட்டம் அரியலூர் மட்டும்தான். தமிழகத்தில் அதிமுக கட்சி அலுவலகம் இல்லாத 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் அதிமுக அலுவலகம் கட்டப்படும் என்று முதல்வர் அறிவித்தார். அவர் அறிவித்த ஒரு சில  நாட்களிலேயே அப்போதைய மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ வான துரை.மணிவேல் கட்சி அலுவலகம் கட்டுவதற்காக கணபதி நகரில் இடம் வாங்கினார்.

அலுவலகம் பிரம்மித்தக்கவகையில் இருக்கவேண்டும் என்று  அந்தந்த மாவட்டச் செயலாளர்களுக்கு தலைமை கழகத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. முதற்கட்டமாக அரியலூரில்தான் கட்சி கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் பூமி பூஜை நடந்தது. அப்போது அரியலூர் தொகுதி எம்எல்ஏவாகவும், மாவட்டச் செயலாளராகவும் இருந்த துரை.மணிவேல்தான் கட்டடத்தை கட்ட மும்முரமாக செயல்பட்டார். பின்னர் கட்டட பணிகள் முடிவடையும் வரை ஒரு வாடகை வீட்டை பேசி,  கழக அலுவலமாக துரை.மணிவேல் பயன்படுத்தி வந்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக மாவட்டச் செயலாளர் பதவியை ஜெயலலிதா பறித்தார். 
புதிய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்ட கவிதா ராஜேந்திரன்,  கட்சி அலுவலகத்தை கட்டி அம்மாவிடம் நல்ல பெயர் வாங்கவேண்டும் என்ற எண்ணத்தில்,  கணக்கு வழக்கு பார்க்காமல் செலவு செய்து கட்டடத்தை கட்டத் தொடங்கினார். பாதி வேலை நடந்துகொண்டிருக்கும்போதே அவரது பதவியையும் பறித்தார் ஜெ. 

இதையடுத்து அப்பதவிக்கு தலைமை கழகத்தில் இருந்து யாரும் அறிவிக்கப்படாமல் காலியாகவே இருந்தது. பின்னர் பாராளுமன்றத்தேர்தல் காரணமாக அமைச்சர் வைத்திலிங்கம், அருண்மொழித்தேவன் எம்.பி. ஆகியோர் மாவட்டச் செயலாளர் பதவிகளை கூடுதலாக பொறுப்பு வகித்து கவனித்து வந்தார்கள். அடுத்தாக தாமரை ராஜேந்திரனுக்கு மாவட்டச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. அலுவலக வேலை பார்த்தால் பதவி பறிபோய்விடும் என்று அதிமுகவினர்களிடம் பேச்சு நிலவுவதால் இவரும் அச்சத்தில் அலுவலகம் பக்கமே சரிவர சென்றதே கிடையாது. 

அதுமட்டுமில்லாமல் கட்டி முடிக்கப்பட்ட அலுவலகத்தை குறைந்தபட்சம் பெயிண்ட் அடித்து வைத்திருந்தால்,  மற்ற மாவட்ட அலுவலகங்களைபோல் காணொளிக்காட்சி முலம் திறந்து வைத்திருப்பார் முதல்வர். ஆனால் இவர்கள் சென்டிமென்ட்டை மனதில் வைத்துகொண்டு கட்சி அலுவலக வேலைகளை கிடப்பில் போட்டுள்ளார்கள்” என்று புலம்பித் தள்ளினர் அதிமுகவினர்.

இது ஒரு புறமிருக்க, "எத்தனை காலம்தான் வாடகை கட்டடத்திலேயே கட்சி அலுவலகம் இயங்குவது. ஆளும் கட்சியாக இருந்தும் நம்ம கட்டடத்தையே திறக்காமல் கிடப்பில் போட்டால் எப்படி?  சென்டிமென்ட்டை ஓரமா தூக்கிவச்சிட்டு அலுவலகத்தை சீக்கிரம் திறங்கப்பா" என்று உணர்ச்சிவயப்படுகின்றனர் அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்கள்.
மாவட்டச் செயலாளர் தாமரை ராஜேந்திரனிடம் பேசினோம். “சென்டிமென்ட்  என்று சொல்வதெல்லாம் பொய். நான் முழுமையாக வேலை செய்துகொண்டிருக்கிறேன். பெயிண்ட் மட்டும்தான் அடிக்க வேண்டும். அது ஒரு நாள் வேலை. அம்மாவிடம் தேதி கேட்டுள்ளோம். அவர்கள் தேதி விரைவில் அறிவிப்பார். அறிவித்தவுடன் அடுத்தநாளே அலுவலகம் திறக்கப்படும், இது உறுதி" என்றார்.

பகுத்தறிவை புகட்டிய திராவிட கட்சிகளின் வழிவந்த இன்றைய 'திராவிட கட்சிகளின்' நிலை கவலைக்குரியதாக உள்ளது.


No comments:

Post a Comment