Monetize Your Website or Blog

Wednesday, 17 February 2016

ரூ.500 கோடிக்கு மேல் கடன் வாங்கி கட்டாதவர்கள் விவரத்தை கேட்கிறது உச்ச நீதிமன்றம்!

ரூ.500 கோடிக்கு மேல் கடன் வாங்கி கட்டாதவர்கள் விவரத்தை 6 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கிக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கடந்த 2005-ம் ஆண்டு பொதுமக்கள் நலனுக்காக வாதாடுவோர் மையம் என்ற தொண்டு நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மாநில அரசுகளுக்கு சொந்தமான வீட்டுவசதி மற்றும் ஊரக மேம்பாட்டு கழகம் (ஹட்கோ) சில கம்பெனிகளுக்கு வழங்கியுள்ள கடன்கள் குறித்து புகார் தெரிவித்து இருந்தது.

இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், யு.யு.லலித், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், 2015-ம் ஆண்டில் சுமார் ரூ.40 ஆயிரம் கோடி, கம்பெனிகளுக்கு வழங்கப்பட்ட கடன்கள் வாரா கடன்களாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற வாரா கடன்கள் பொதுத்துறை வங்கிகளுக்கும் பரவியிருக்கிறது.

அப்படி கடனை கட்டாதவர்களிடம் கடனை வசூலிக்க வங்கிகள் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று அவர் கூறியதும் நீதிபதிகள் வியப்படைந்து, அதிகளவில் கடன்கள் வாங்கி இன்னும் கட்டாமல் கம்பெனிகளை நடத்திக் கொண்டிருப்பவர்களின் பட்டியல் உங்களிடம் இருக்கிறதா? என்று நீதிபதிகள் கேட்டனர்.

அதன் பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ''மாநில அரசுகளுக்கு சொந்தமான வங்கிகளும், நிதி நிறுவனங்களும் எப்படி உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் பெரிய அளவில் கடன்களை வழங்கின. அவர்களிடம் இருந்து கடனை திரும்ப வசூலிக்க கூடுதலான திட்டங்கள் எதுவும் அவைகளிடம் உள்ளதா? என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம்.

கம்பெனி கடன் மறுகட்டமைப்பு திட்டத்தின்கீழ் கடன் மறுகட்டமைக்கப்பட்ட கம்பெனிகளின் பட்டியல் எங்களுக்கு தேவை. ரூ.500 கோடிக்கு மேல் கடன் வாங்கி திரும்ப கட்டாத கம்பெனிகளின் பட்டியலை ரிசர்வ் வங்கி 6 வாரங்களுக்குள் வழங்க வேண்டும். அதனை மூடி முத்திரையிடப்பட்ட கவரில் வைத்து இந்த நீதிமன்றத்தில் வழங்க வேண்டும்" என்று தெரிவித்து உள்ளனர்.



No comments:

Post a Comment