Monetize Your Website or Blog

Thursday, 18 February 2016

பகல்ல வாத்தியார்... ராத்திரியானா சாமியார்...! அடடே பீர் சாமியார்

உங்களுக்கு தெரிந்த ஆசிரியர், பள்ளி முடிந்து வந்து என்னவெல்லாம் செய்வார்..?  டியூசன் எடுப்பார், மறுநாள் நடத்த வேண்டிய பாடங்கள் குறித்து குறிப்பு எடுப்பார். இப்படி பள்ளி சார்ந்த, படிப்பு சார்ந்த ஏதாவது ஒரு வேலைகளாக இருக்கும். ஆனால், தருமபுரியில் ஒரு அரசுப்பள்ளி ஆசிரியர்  பள்ளி முடிந்ததும் சாமியாராக மாறிவிடுகிறார். அதுவும் சாதாரண சாமியார் இல்லை. பேர்... “பீர் சாமியார்”.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடுக்கு அருகில் இருக்கிறது அனுமந்தபுரம். இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் வேலை பார்க்கும் பட்டதாரி ஆசிரியரான ரமேஷ் என்பவர்தான் அந்த பீர் சாமியார். ரமேஷ்ஜி, பீர் சாமியார், கருப்பசாமி வாத்தியார் என  அடைமொழி கொண்ட அவரிடம் குறிகேட்க தருமபுரியில் ஏக கிராக்கி. பெங்களூரில் இருந்தெல்லாம் படையெடுக்கிறார்கள் பக்தகோடிகள் (!?).
இது தொடர்பாக புகார் எழுந்து,  பணியிடை மாற்றம் செய்த பின்னரும் குறி சொல்வதிலேயே “குறி” யாக இருக்கிறார் என்று கேள்விப்பட்டு ஒரு மதிய வேளையில் அனுமந்தபுரத்துக்கு புறப்பட்டோம்.
ஊருக்குள் சென்று பீர் சாமியார்... என்று விசாரித்தால்,   'ஓ...  நம்ம கருப்பசாமி வாத்தியாரா...(!?) இப்படியே போங்க..!' என்று ஒரு மாந்தோப்புக்கு வழி அனுப்பி வைத்தார்கள். அங்கு இருக்கும் கருப்பசாமி கோயிலின் முன்பு,  நீண்ட  தலைமுடி, அடர்ந்த தாடியோடு ஆஜானுபாகுவான தோற்றத்தில் அமர்ந்திருந்தார் ஒருவர். அவரை நெருங்கி,  நாங்க  கருப்பசாமி வாத்தியாரைப் பார்க்கணும் என்றதும், சற்றே விரைக்கிறது அவர் உடல்,   'நான்தான், சொல்லுங்க என்ன வேணும்..?' என்றார் அவர்.

"சாமி... நாங்க விகடன்ல இருந்து வர்றோம். உங்க  சக்திய பக்தி ஊரே பேசுது அதான் பாத்துட்டு போகலாம்னு சாமி "என்றதும், கையிலிருக்கும் செல்ஃபோனை பார்த்து,  'என்ன ரெக்கார்ட் பண்றீங்களா.. .? ஆஃப் பண்ணுங்க' என்று  அலெர்ட்டாக பேச்சை ஆரம்பித்தார் ஆசிரியர் இல்லை இல்லை சாமிஜி.
"பத்திரிகையிலயெல்லாம் போடவேண்டாம். தேன் வாசம் தானா வீசும்ங்கிற மாதிரி, என் சக்தி மக்களுக்கு தானா பரவும். பரவிக்கிட்டு இருக்கு. மக்கள் என்னை தேடி வந்துகிட்டு இருக்காங்க. நான் கல்வித்துறையில இருக்கிறதால பல பிரச்னைகள் வருது. இதை கேள்விப்பட்டு  என்னை வேற ஊருக்கு மாத்துனாங்க. மேல வரைக்கும் பேசி இப்பதான் பிரச்னையை சரிபண்ணிகிட்டு வந்துருக்கேன். ஒரு டீச்சருக்கு பர்சனாலிட்டி தேவைனு சொல்றாங்க. எது பர்சனாலிட்டி? நல்லா ஷேவ் பண்ணிட்டு,  முடிவெட்டிட்டு போற புறத்தோற்றம்தான் பர்சனாலிட்டியா..?  அகத்தோற்றம்தான் முக்கியம்.  அப்புறம் நான் குடிக்கிறேன்னு சொல்றாங்க.  ஆமா, நான்  இப்பகூட குடிச்சிட்டுத்தான் உட்காந்துருக்கேன். எனக்காக குடிக்கல. கருப்பசாமி கேக்குது அதனால குடிக்கிறேன்.(பாருங்களேன்..!) 
 
எனக்கு காசு பணம் முக்கியம் கிடையாது. அரசாங்க சம்பளம் வாங்குறேன். என்பாட்டுக்கு எனக்கு வாழத்தெரியாதா..? கடவுள் நம்பிக்கையே இல்லாம இருந்த எனக்குள்ள திடீர்னு ஒருநாள் கருப்பசாமி வந்துடுச்சி. இப்ப என் ஆத்மா முக்திபெறணுங்கிற  ஒரே நோக்கம்தான் எனக்கு. என்னை நாடி வர்ற மக்களோட குறைய தீர்த்துவைக்கிறேன். இங்க வர்ற எல்லாருமே பொருளாசையிலதான் வர்றாங்க, யாருமே அருளாசையில வரல. எனக்கு அருள்தான் முக்கியம். ஆத்மாதான் முக்கியம். பல டி.வி.கள்ல இருந்து வந்து கேட்டாங்க. நான் முடியாதுனு சொல்லிட்டேன். இதால எனக்கு கல்வித்துறையில எந்த பாதிப்பும் வந்துடக்கூடாது. ஆசிரியர் என்று போடாம வெறுமனே இதுமாதிரி... இந்த இடத்துல கருப்பசாமி இருக்கு...  பக்தர்கள் வர்றாங்கனு.. போடுறதா இருந்தா பாக்கலாம். 8-ம்தேதி அமாவாசை வருது, நூற்றுக்கணக்கான பேர் வருவாங்க, அப்ப வாங்க" என்றவர் சட்டென்று,
" இதுமாதிரி விகடன்ல இருந்து வந்து பேட்டி கேக்குறாங்க கொடுக்கலாமானு  கருப்பசாமிகிட்ட குறி கேப்பேன்.  நான் எதையும் கருப்பசாமிகிட்ட கேட்காம செய்ய மாட்டேன். என்னை பத்தி ஏதாவது தப்பா எழுதணும்னு நினைச்சி  நீ இங்க வந்திருந்தா, நான் குறி கேக்க வேணாம், இன்னைக்கு நைட்டே கருப்பசாமி உன் கனவுல வந்துரும் பாத்துக்க. போயிட்டு ஃபோன் பண்ணு.  நான் கருப்பசாமிகிட்ட கேட்டுட்டு சொல்றேன்..." என்று பயம்காட்டி  அனுப்பிவைத்தார்.
அன்று இரவு கருப்பசாமியை வரவை எதிர்பார்த்து கண்மூடிய நம்மை காத்து கூட சீண்டவில்லை. கடந்த 7-ம் தேதி பீர் சாமி அடிகளுக்கு ஃபோன் செய்தோம். 'அதெல்லாம் ஒண்ணும் வேணாம்' என்று  சட்டென இணைப்பை துண்டித்துவிட்டார். அதனாலென்ன..? சொல்லாமல் கொள்ளாமல் 8-ம் தேதி இரவு அனுமந்தபுரத்தில் ஆஜரானோம். 

இரவுநேரம்.. கும்மிருட்டு..  மாந்தோப்புக்குள் கருப்பசாமி கோயில் வெளிச்சம்.. சாரை சாரையாக  தோப்புக்குள் புகுந்த பைக்குகள்.. பீர் பாட்டிலோடும், கோழியோடும் வரிசைகட்டிய பக்தர்கள் (?!) என நம் கண்ணுக்குள் ஊடுருவிய காட்சிகள் யாவும் நம்மை கலங்கடித்துவிட்டது. 

பம்பை, உடுக்கை சத்தம் முழங்க சங்கிலி கருப்ப சாமியாகவே (?!) உருமாறி வந்தார் ரமேஷ் (கருப்பசாமி வாத்தியார்). சிறிதுநேரம் பூஜை பராக்கிரமங்களை முடித்து சாமி சிலையை பார்த்தபடி வந்து அமர்ந்தார். 
எல்லோரும் உங்க குலதெய்வத்தை கும்புட்டுகிட்டு,  மூணு கனி (எலுமிச்சை),  101 ரூபாய் காசை கொண்டுவந்து வையுங்க. கோயில் வேலையெல்லாம் ஸ்டார்ட் பண்ண போறோம். அதுக்கும் காணிக்கை வையுங்க என்று சொல்ல,  எல்லோரும் எழுந்து போய் அவர் காலடியில் காணிக்கையை வைத்துவிட்டு இருக்கைக்கு திரும்பினார்கள்.  “குறி ” ஆரம்பமானது.. எல்லாம் நீர்ல மூழ்க போகுது. வெள்ளச்சேதாரம் ஏற்படபோகுது. ஆட்சியில குழப்பங்கள் வரப்போகுது, விமான விபத்து, ரயில் விபத்து, போக்குவரத்து விபத்துகளெல்லாம் நடக்கப்போகுது" என  தனது தீர்க்கத்தரிசனத்தின் மூலம் மொத்த தமிழகத்துக்கும் அவர் கணித்துச் சொல்ல (?!) மக்கள் வாய் பிளந்தபடி உட்கார்ந்திருந்தார்கள்.

அடுத்ததாக ஒரு கருப்பு சட்டைக்காரரை அழைத்தார். "டேய் ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி நீ என்கிட்ட வந்து என்ன கேட்ட..?." 

கருப்பசாமி நான் படிக்கல சென்ட்ரிங் வேலை பாக்குறேன்.  லோக்கல்ல டிகிரி படிச்ச பொண்ணை லவ் பண்றேன். அதை எப்படியாவது கரெக்ட் பண்ணிவுடுனு கேட்டியல்ல. செஞ்சேனா..? 

அதற்கு  கருப்புச்சட்டை  ம்ம்..  செஞ்சீங்க சாமி என்கிறார்.  

அப்புறம் கல்யாணம் ஆகி ரெண்டுபேரும் ஒண்ணா வந்தீங்க உன் பொண்ணாட்டி ஆண் குழந்தை வேணும்ன்னா நீ.. பெண் குழந்தை வேணும்ன்னே.. ஒரே கருவுல ரெண்டையும் குடுத்தேன்ல..? 

அதற்கும் கருப்புச்சட்டைக்கார் ம்ம்.. சாமி என்கிறார். 

நீ என்ன செய்றேன்னு சொல்லிருந்த மூணு ஃபுல், மூணு சிப்பம் அரிசி, மூணு மூட்டை சிமெண்ட் வாங்கித்தர்றேன்னு சொன்னியே செஞ்சியா..?  சரி கம்பிக்கட்டிகிட்டு இருக்கானேனு ஆர்டர் புடிச்சிக் கொடுத்தேன். நீ.. கருப்பசாமிக்கு செய்ய வேண்டியத செஞ்சியா..? இல்ல,
 
பூசாரி உனக்கு ஃபோன் போட்டான். ம்ம் வர்றேன் சாமி.. வர்றேன் சாமினு இழுத்த நான் சொன்னேன்(கருப்ப சாமியே பேசுதுங்க புரியுதுல்ல..?) ஏண்டா அவனுக்கு ஃபோன் பண்ணுற நான் பாத்துக்குறேன்னு சொல்லிட்டு வெள்ளைக்குதிரையில வந்தேன். உன்கிட்ட வேலை பாத்த ஆட்களையெல்லாம் விரட்டிவிட்டேன். ஒருமாசமா உடம்புக்கு முடியாம படுத்துக்கிடந்த.  அப்புறமா இதுமாதிரி ரெண்டு பாட்டில வாங்கி புடிச்சிகிட்டு (பீர் பாட்டிலை தூக்கி காண்பிக்கிறார்) என்ன மன்னிச்சிருங்க சாமினு என்கிட்ட வந்த. அடுத்த அம்மாவாசை வரைக்கும் பார்ப்பேன். அதுகுள்ள செய்ய வேண்டியதை செஞ்சிறணும். உன் பொண்டாட்டிக்கு கவர்மெண்ட் வேலை கிடைக்கப்போகுது. அதுவும் கருப்பசாமி மனசு வச்சாதான் நடக்கும். என்றவரிடம் சாமி ஒரு ஆர்டர் இருக்கு முடிச்சிக்குடுங்க சாமி என்றபடி கோழியை எடுத்து நீட்டுகிறார். சற்று நேரத்தில் கோழியின் கழுத்து கடித்து உறிஞ்சப்பட்டது. சுருட்டை எடுத்து வாயில் வைத்துக்கொண்டு கருப்புச்சட்டைக்காரரை பற்ற வைக்க சொன்னார்.  கருப்புச்சட்டைக்காரரும் எப்படியாவது ஆர்டரை முடிச்சிக்குடுத்துருங்க சாமி என்றபடி சுருட்டை பற்ற வைக்கிறார்.  அடுத்தடுத்து ஒவ்வொரு ஊராக கூப்பிட்டு குறி சொல்லுவதை பார்க்க பார்க்க நமக்கு தலைசுற்றியது. 

இதுகுறித்து தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரியிடம் பேசினோம், "அவர் மீது ஏற்கனவே புகார் வந்திச்சு. கூப்பிட்டு விசாரிச்சதுக்கு இல்ல குறி சொல்றது எங்க குலத்தொழில் விழாக் காலங்கள்லதான் செய்றேன்னார். மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கிகிட்டு புதுபாலசமுத்திரம் என்கிற ஊருக்கு கொஞ்சநாள் பணியிடை மாற்றம் செய்தேன். இனிமேல் இப்படி செய்ய மாட்டேன்னார். தொடர்ந்து மக்களை ஏமாற்றுவது நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது. தக்க நடவடிக்கை எடுக்கிறேன்" என்றார்.

நமக்கு மக்களும் முக்கியம், மாணவர்களும் முக்கியம்!


No comments:

Post a Comment