Monetize Your Website or Blog

Thursday, 4 February 2016

கிராமம் முழுவதும் எரிவாயு படர்ந்திருந்தது: கெயில் நிறுவனமும் அந்த ஆந்திர சம்பவமும்!

மிழகத்தில் எரி வாயு குழாய் பதிக்க, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து விட்டது. தமிழகத்தில் விவசாய நிலங்கள் வழியாக இந்த குழாய்கள் பதிக்கப்படவுள்ளன. இந்த எரிவாயு குழாய்கள்  மூலம் அழுத்தம் நிறைந்த வாயுவை கொண்டு செல்வது பாதுகாப்பானதா? என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடையாது.
ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள  நகரம் என்ற கிராமத்தில்,  கெயில் நிறுவனம் பதித்த எரிவாயு குழாய் வெடித்து,  19 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவமும் நடந்திருக்கிறது.

இந்த குழாய்கள்,  15 ஆண்டுகளுக்கு முன் நிலத்தில் 4 அடி ஆழத்தில் புதைக்கப்பட்டிருந்தன. பராமரிப்புக்கு எந்த உத்தரவாதமும் இல்லாத நிலையில், சில நாட்களாக எரிவாயு கசிந்து வந்துள்ளது. இது குறித்து அந்த பகுதி மக்கள் கெயில் நிறுவனத்துக்கு புகார் அளித்தும் கண்டு கொள்ளப்படவில்லை. 

இந்த நிலையில்தான் கடந்த 2014 ஜுன் 27-ம் தேதி இந்தியாவே அதிர்ந்த அந்த சம்பவம் நடந்தது. நள்ளிரவு எரிவாயு கசிந்து,  ஊர் முழுவதும் பரவியிருக்கிறது. அந்த பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் அதிகாலை 4.30 மணியளவில் அடுப்பு மூட்டபபட்டிருக்கிறது. அடுத்த வினாடி அந்த டீக்கடை வெடித்து நாசமானது. இதில் டீக்கடைக்காரரின் குடும்பத்தில் 5 பேர்,  அந்த இடத்திலேயே கருகி மாண்டனர்.
சத்தம் கேட்டு வெளியே வந்தவர்கள்,   என்ன நடக்கிறது என்றே தெரியாமல் உடலில் தீ பற்றி,  தெருவில் ஓடி கதறி துடித்து இறந்தனர். அப்படி இறந்தவர்களில் 3 பெண்கள், 3 குழந்தைகள் சாம்பலாகினர்.  எரி வாயு குழாய் வெடித்து சிதறியதில் 30 மீட்டர் உயரத்திற்கு தீ கொழுந்து விட்டு எரிந்தது. சுற்றுவட்டாரத்தில் இருந்த ஏராளமான தென்னைமரங்கள் கூட கருகிப் போயின. கால்நடைகள் தீயில் பஸ்பமாகின. மரங்களில் துயிலில் இருந்த  பறவைகள் எரிந்து விழுந்தன. 


இந்த சம்பவத்தால் கொதித்து எழுந்த மக்கள்,  பல முறை  புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத கெயில் நிறுவன அலுவலகத்தை அடித்து நொறுக்கினர். ஆனால் சம்பவத்திற்கு இவர்கள்தான் காரணம் என்று  இரு அதிகாரிகளை இடை நீக்கம் செய்ததோடு கெயில் தனது பணியை முடித்து விட்டது. மத்திய பெட்ரோலியத்துறையும் இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட குழு விசாரணைக்கு உத்தரவிட்டது.  

தற்போது இதே போன்று தமிழகத்தில் கிட்டத்தட்ட 150 கிராமங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்கப்படவுள்ளது. இது போன்ற அசம்பாவிதம் நடைபெறாது என்பதற்கு யார்  உத்தரவாதம் தருவார்கள்? 


No comments:

Post a Comment