Monetize Your Website or Blog

Thursday, 4 February 2016

இந்தியத் தூதர் காருக்கே 'கை நீட்டிய' 'அடேங்கப்பா' போலீஸ்

அயல் நாட்டுக்கான இந்தியத் தூதுவரின் கார் ஓட்டுநரிடமே ‘நோ பார்க்கிங்’ என்று சொல்லி போலீஸ்காரர் லஞ்சம் வாங்கிய கேலிக்கூத்து புதுவையில் அரங்கேறியிருக்கிறது.

சுற்றுலாத் தலமான புதுச்சேரிக்கு வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். மேலும் இந்தியா வரும் அனைத்து வெளிநாட்டினரும் புதுச்சேரிக்கு வராமல் செல்வதில்லை. இதனால் வெளி மாநிலங்கள் பதிவெண்களைக் கொண்ட வாகனங்கள் இங்கு வருவது தவிர்க்க முடியாதது. ஆனால் இப்படி வரும் வெளி மாநில வாகனங்கள் புதுச்சேரிக்குள் நுழைந்துவிட்டால் லஞ்சம் வாங்கும் போலீஸ்காரர்களுக்கு தீபாவளிதான். அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தாலும் கூட எதாவது சொல்லிப் பணம் பறித்து விடுக்கின்றனர். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் லஞ்சம் வாங்குவதே சட்டரீதியாகத்தான் என்ற அளவில் இவர்களது பேச்சுக்கள் இருக்கும்.

பிரான்ஸ் நாட்டுக்கான இந்தியத் தூதர் மோகன்குமார்.
இதற்கு முன்னர் பஹ்ரைன் நாட்டுக்கான தூதுவராக பதவி வகித்த இவர் ஒரு தமிழரும் கூட. இவர் நேற்றைய முன் தினம் மரியாதை நிமித்தமாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்திக்க வந்திருந்தார். இதற்காக முதல்நாள் இரவே வந்து கடற்கரை சாலையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தங்கியிருந்தார். தமிழக பதிவு எண்ணைக் கொண்ட அவரது காரை வெளியே நிறுத்தி வைத்திருந்தார் அவரது ஓட்டுநர். அப்போது இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு போலீஸ்காரர் தமிழகப் பதிவெண் கொண்ட காரைப் பார்த்ததும் குஷியாகி அந்த ஓட்டுநரிடம் லைசென்ஸ், ஆர்.சி புக் உள்ளிட்ட ஆவணங்களைக் கேட்டிருக்கிறார். 


ஒட்டுநர் அனைத்து ஆவணங்களையும் காட்டியிருக்கிறார். அனைத்தும் சரியாக இருக்கவே என்ன செய்வதென்று யோசித்திருக்கிறார் அந்த ’கடமை தவறாத’ போலீஸ். இறுதியாக இந்த இடம் ’நோ பார்க்கிங்’ இங்கே கார் நிறுத்தக் கூடாது. ஃபைன் போட்டால் அதிகமாக ஆகும் அதனால் 500 ரூபாய் கொடுத்துவிடு என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்த ஓட்டுநர் எவ்வளவோ விளக்கி சொல்லியும் விடாப்பிடியாக அந்த பணத்தை அவரிடம் இருந்து வசூலித்துக் கொண்டு கிளம்பிவிட்டாராம்.

மறுநாள் காலையில் இரவு நடந்த அனைத்தையும் இந்தியத் தூதரிடம் சொல்லியிருக்கிறார் அவரது ஓட்டுநர். உடனே அவர் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் இதுகுறித்து புகார் தெரிவித்திருக்கிறார். உடனே பதறியடித்து வந்த அவர்கள், தூதர் மோகன் குமாரிடம் சம்மந்தப்பட்டவர் மீது உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதற்காக தங்கள் வருத்தம் தெரிவித்திருக்கின்றனர். வந்திருப்பவர் யார் என்று தெளிவாகக் கூறியிருக்கிறார் தூதரின் கார் ஓட்டுநர். இருந்தும் அதைக்கூட புரிந்து கொள்ளாமல் தனது ‘கடமையை’ நிறைவேற்றியிருக்கிறார் அந்த போலீஸ்காரர்.


இந்திய அரசின் உயர் பதவி வகிக்கும் ஒருவருக்கே இந்த கதி என்றால் சாமானிய மக்களின் கதியை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 

அதுசரி... வாங்கனும்னு முடிவு பண்ணதுக்கு அப்புறம் எனக்கு தூதராக இருந்தா என்ன துாதுவளை கீரை விக்கிறவனா இருந்தா என்ன... ? (அந்தப் போலீஸ்காரரின் மைண்ட் வாய்ஸ்...)



No comments:

Post a Comment