Monetize Your Website or Blog

Thursday, 30 June 2016

உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஓர் டாக்டரின் உணவு மெனு!

ம் உடல்நிலை ஆரோக்கியத்திற்காக மருத்துவரை அணுகும்போது, நீங்கள் அந்த வகையான உணவுகளை தவிர்த்தல் நல்லது, இந்த உணவுகளை சாப்பிடுவது சிறந்தது, இதுபோன்ற வழிமுறைகளை கடைப்பிடிப்பது ஆரோக்கியத்தைத் தரும் என டாக்டர்கள் ஆலோசனைகளைக் கூறுவார்கள். ஆனால், டாக்டர்கள் எத்தகைய உணவு முறைகளையும், பழக்க வழக்கங்களையும் கடைபிடிக்கிறார்கள் என பிரபல இதயநோய் நிபுணரான டாக்டர் சிவகடாட்சத்தை சந்தித்தோம்.

''ஒரு மருத்துவராக இருப்பதால, மத்தவங்க உடல்நிலை குறித்த எண்ணம்தான் எனக்கு அதிகமா இருக்கும். இருந்தாலும் குடும்பத்துக்கான நேரத்தை சரியா ஒதுக்குவதிலும் நான் சரியாகவே செயல்படுறேன். தினமும் காலையில வாக்கிங், ஆரோக்கியமான உணவுகள், போதுமான தூக்கம்னு என்னோட உடல்நிலை மேல என் மனைவி சாந்தகுமாரிதான் அதிகமான கவனம் செலுத்துறாங்க'' என புன்னகைக்கிறார், டாக்டர் சிவகடாட்சம். ‘‘நோயாளிகளோட உடல்நிலை அவருக்கு எவ்வளவு முக்கியமோ, அதேபோல அவரோட உடல்நிலையும், மன அமைதியும் எனக்கு முக்கியம் என கணவரின் உடல்நிலையின் முக்கியத்தை விளக்குகிறார், சாந்தகுமாரி சிவகடாட்சம்.



''ஹாஸ்பிட்டல்ல இருக்குற வேலைகளைப் பொறுத்து ஒவ்வொரு நாள் இரவும், அவர் வீட்டுக்கு வரும் நேரம் மாறுபடும். சராசரியாக 6 - 7 மணி நேரம் தூங்குவார். விடுமுறை நாளான சன்டே மட்டும் 8 மணிநேரம் தூங்குவார். தினமும் காலை எழுந்து பல் துலக்கியதும் டிக்காஸன் காபி குடிச்சுட்டு, அரை மணி நேரம் பேப்பர் படிப்பாரு. தொடர்ந்து 30 - 40 நிமிடம் வெளியில வாக்கிங் போயிட்டு வருவாரு. 

வாக்கிங் முடிச்சுட்டு வீட்டுக்கு வந்த உடனே குளிச்சுட்டு, காலை உணவு சாப்பிட்டுட்டு உடனே ஆஸ்பிட்டல் கிளம்பிடுவாரு. ஆஸ்பிட்டல்ல பசி எடுத்தால் மட்டும் ஒரு டீ, ரெண்டு பிஸ்கட் சாப்பிடுவாரு. சில நாட்கள்ல சூப் கொடுத்து அனுப்புவேன். மதியம் 2.30 - 3 மணிக்குள்ள வீட்டுக்கு வந்து சாப்பிடுவாரு. 

மதிய உணவு முடிச்சுட்டு, அரை மணியிலிருந்து ஒரு மணிநேரம் வரை தூங்குவாரு. பின்னர் காபி அல்லது டீக்கூட இரண்டு பிஸ்கட் அல்லது கொஞ்சம் மிக்சர் கலவையை சாப்பிட்டுட்டு ஆஸ்பிட்டல் கிளம்பிவிடுவார். ஆஸ்பிட்டலில் பசி வந்தா மட்டும் ஒரு டீ அல்லது காபி குடிப்பார். இரவு 9 - 10 மணிக்கு வீட்டிற்கு வருவார்.
இரவு நேரத்துல குடும்பத்தோடு சாப்பிட்டு முடித்து, எல்லாரும் பேசிட்டு இருப்போம். பேத்திக்கூட கொஞ்ச நேரம் சிரிச்சுப்பேசி விளையாடிட்டு, தூங்கப் போயிடுவாரு.

நாங்க டாக்டர் ஃபேமிலிங்கிறதால ரொம்ப டயட்டை கடைபிடிக்கிறது, உணவுகள்ல ஆயில் சேர்க்காம, இனிப்பு, ஸ்நேக்ஸ் சாப்பிடாம இருக்குறதுங்கிற மாதிரியெல்லாம் செய்ய மாட்டோம். நாங்களும் எல்லா உணவு வகைகளையும் சாப்பிடுவோம். ஆனா, அந்த உணவுகளால உடலுக்கு எந்த பிரச்னையும் வராத அளவுக்கு, போதிய சத்துகள் இருக்கிறதான்னும் பார்த்துதான் சாப்பிடுவோம்'' எனக்கூறும் சாந்தகுமாரி, டாக்டர் சிவகடாட்சத்தின் ஒருநாள் மெனுவை பட்டியலிடுகிறார்.

''காலை:
வேகவைத்த முளைக்கட்டிய தானியக் கலவை - ஒரு கப் 
2 டோஸ்டட் பிரட்டுக்கு நடுவில் வெள்ளைக் கரு முட்டை ஆம்லெட் வைத்தது
ஃப்ரூட்ஸ் கலவை - ஒரு கப் 

மதியம்:
வெள்ளை சாதம் 
பருப்பு சாம்பார்
இண்டு வகை பொறியல் 
எலுமிச்சை ரசம் 
தயிர் 
எதாவது ஒரு சேலட் பச்சடி

இரவு:
வெள்ளை முள்ளங்கி சப்பாத்தி - 3
வெஜிடபுள் குருமா
ஆப்பிள் - அரை

வாரத்தில் ஒரு நாள் மதியம் மட்டும் மீன் ரெண்டு துண்டு, மற்றொரு நாள் சிக்கன் ரெண்டு துண்டு அல்லது ஒரு லெக் பீஸ் சாப்பிடுவார். மாதத்தில் இரண்டு நாள் மதியத்தில் மட்டும் மட்டன் தலா ரெண்டு துண்டுகள் சாப்பிடுவார். வாரத்தில் ஒருநாள் ஈவுனிங் டீ நேரத்தில் மட்டும் எதாவது ஒரு காய்கறி சூப் அல்லது ஒரு வடை அல்லது ஒரு முறுக்கு போன்ற ஆயில் ஸ்நேக்ஸ் சாப்பிடுவார். எப்போதாவது பாதி இனிப்பு ஸ்வீட் சாப்பிடுவார். மாதத்தில் ஒருநாள் ஒருவேளை மட்டும்  3 பூரியும், மாதத்தில் ஒருவேளை மட்டும் ஜங்க் புட் சாப்பிடுவார். பொட்டேட்டோ ஃபிரை, பிட்டல், முறுக்கு, குடைமிளகாய் கூட்டு, வெந்தயக்குழம்பு, பிரான்ஸ் தொக்கு, வேர்க்கடலை பருப்பி ஆகிய உணவு வகைகளும் அவருக்கு ரொம்ப பிடிக்கும்.



அவரோட பிசி ஷெட்யூலுக்கு நடுவில் கிச்சன் பக்கமே வரமாட்டார். இந்த உலகத்துல மாரடைப்பால உயிரிழக்குறவங்க எண்ணிக்கை அதிகமாயிட்டே போகுது. என் கணவர் இருதய நோய் நிபுணர் என்பதால அவர்கிட்ட வர்ற நோயாளிங்கக்கிட்ட உங்களுடைய பிள்ளை, பேரக் குழந்தைங்களுக்கு நேரம் ஒதுக்கி சந்தோஷமா சிரிச்சுப் பேசி, விளையாடி மகிழுங்க. உங்களுக்கு எல்லா டென்ஷனும், பிரச்னையும் குறைஞ்சிடும்னு சொல்லுவாரு. அதேமாதிரி, அவருக்கு கிடைக்கிற ஓய்வு நேரங்கள்ல எங்களுடைய பேத்திக்கூட விளையாடி பொழுதைக் கழிப்பாரு. 

வாரத்தில் ஒரு நாள் சினிமாவுக்குப் போயிட்டு, அப்படியே ஹோட்டல்ல சாப்பிட்டு வருவோம். வருஷத்துல சிலநாட்கள் சுற்றுலா போயிட்டுவருவதால், தொடர்ந்து அவரால் ஆக்டிவாக மருத்துவ சேவையை செய்ய முடிகிறது'' என புன்னகையுடன் தெரிவிக்கிறார், சாந்தகுமாரி.




பாங்காங்கில்' ஹாலிடே' கொண்டாட்டம் : தாதா தடாலடி சாஸ்திரி 'கப்சிப்'

ந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் கும்ப்ளே  நியமிக்கப்பட்ட நிலையில், தெண்டுல்கர், சவுரவ் கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனை கமிட்டியே கும்ப்ளேவுக்கு ஆதரவாகச்  செயல்பட்டு பயிற்சியாளர் பதவியில் அவரை அமர வைத்ததாகச்  செய்திகள் கசிந்தன. 


குறிப்பாக தனக்குத் நேர்காணல் நடந்த போது  கங்குலி அங்கு இல்லை  என்று ரவி சாஸ்திரி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தார். தன்னிடம் ஸ்கைப்பில் வந்து கூட கங்குலி  எந்தக் கேள்வியும் கேட்கவில்லை என்றும் ரவி  சாஸ்திரி தொடர்ந்து குறை  கூறி வந்தார். 

இந்த நிலையில் ரவிசாஸ்திரியின் குற்றச்சாட்டுகளுக்கு கங்குலி பதில் அளித்துள்ளார்.

''இது என் மீது தொடுக்கப்பட்டத் தனிப்பட்ட  தாக்குதல். இந்திய அணியின் பயிற்சியாளராகும் வாய்ப்பு கிடைக்காதற்கு கங்குலியே காரணம் என்று ரவி சாஸ்திரி நினைத்தால் அவர் முட்டாள்கள் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். இந்திய கிரிக்கெட் அணியைப் பொறுத்தவரை, பயிற்சியாளர் என்பது மிக முக்கியமான பொறுப்பு. 
அதற்கான நேர்காணலில் கூட ரவிசாஸ்திரியால் நேரில் பங்கேற்க முடியவில்லை. பாங்காங்கில் இருந்து கொண்டு வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்றார். நேர்காணலின் போது அவர் நேரில் ஆஜராகியிருக்க வேண்டும். ஆனால் கும்ப்ளே நேரடியாக நேர்காணலுக்கு வந்திருந்தார்.  சுமார் 2 மணி நேரம் தனது பயிற்சி திட்டங்கள் குறித்து பேனலிடம் விளக்கி கூறினார். 

ரவிசாஸ்திரியின் கருத்து எனக்கு அதிர்ச்சியையும்  மன வேதனையையும்  தந்துள்ளது. அவரது கருத்துகள் துரதிர்ஷ்டவசமானவை. இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் பல ஆண்டு காலம் தொடர்பில் உள்ள ஒருவருக்கு  இது போன்ற கமிட்டியின் செயல்பாடுகள் தெரியாதா?  அதில் உள்ள கடினமான விஷயங்கள் குறித்தெல்லாம் தெரியாதா? அப்படிபட்டவர் இப்படியெல்லாம் கருத்து தெரிவித்திருக்கக் கூடாது.  கொஞ்சம் முதிர்ச்சியுடன் நடந்து கொண்டிருக்க வேண்டும்.



பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் செயற்குழு கூட்டம் , நேர்காணல் நடந்த அன்றைய தினம்  மாலை 5 மணிக்கு கொல்கத்தாவில் நடந்தது. அந்த கூட்டத்திற்கு தலைவர் என்ற முறையில் நான் கட்டாயம் பங்கேற்க வேண்டியது அவசியம். அதற்காக கடந்த  10 நாட்களுக்கு முன்பே இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு இமெயில் மூலம் தகவல் அனுப்பி  அனுமதியும் பெற்றிருந்தேன்.

முதலில் ரவிசாஸ்திரியிடம் மாலை 4.15 மணிக்கு நேர்காணல் நடத்தவே திட்டம் இருந்தது.  ஆனால் ஒவ்வொருவரும் கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதால், மாலை 5 மணி வரைத் தள்ளி போய் விட்டது. தொடர்ந்து மற்றவர்களிடம்  ‘பெங்கால் கிரிக்கெட் சங்க கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு மாலை 6 மணிக்கு மீண்டும் இணைந்து கொள்கிறேன்’ என கூறி விட்டு புறப்பட்டேன். நடந்த உண்மை இதுதான்'' என தெரிவித்துள்ளார்.




மழைக்கால கூட்டத்தொடர் : மத்திய அரசின் டார்கெட் 25 மசோதாக்கள்

மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ம் தேதி துவங்கவுள்ளது. இதில் முதற்கட்டமாக ஜி.எஸ்.டி மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இது தொடர்பான அமைச்சர்கள் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சுஷ்மா சுவராஜ், வெங்கையா நாயுடு, பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வெங்கையா நாயுடு ''ஜூலை 18ம் தேதி துவங்கி 20 நாட்கள் நடைபெறும் மழைக்காலக் கூட்டத் தொடரில் ஜி.எஸ்.டி. மசோதா உள்ளிட்ட 25 மசோதாக்களை நிறைவேற்ற விரும்புவதாகவும், அதற்கான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. இதில் ஒருமனதான நிலை எட்டப்படவில்லை என்றாலும் அதை இந்த கூட்டத் தொடரில் நிச்சயம் நிறைவேற்றுவோம். அதற்கான போதிய ஆதரவு எங்களிடம் உள்ளது என்று தெரிவித்தார்.

ஓட்டெடுப்பு என்பது இறுதியான விஷயமாக இருக்கும். கூடிய வரைக்கும் அதனை தவிர்க்கவே மத்திய அரசு விரும்புகிறது என்று கூறியுள்ளார். ஜி.எஸ்.டி. மசோதா தவிர, மருத்துவ மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு குறித்த அவசர சட்டம் ஆகியவையும் மத்திய அரசு நிறைவேற்ற நினைக்கும் 25 மசோதாக்களில் அடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஏற்கெனவே பாராளுமன்றத்தில் 11 மசோதாக்களும், டெல்லி மேல்-சபையில் 45 மசோதாக்களும் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளன. இந்த மழைக்கால கூட்டத்தொடரில் நிலுவையில் உள்ளவற்றில் 25 மசோதாக்களையாவது நிறைவேற்றிவிட வேண்டும் என அமைச்சகங்களுக்கு இலக்கு நிர்ணயித்துள்ளது மத்திய அரசு.

உலகப் பொருளாதாரம் ஏற்ற இறக்கத்துடன் இறுக்கும் போது ஜி.எஸ்.டி மசோதாவை நிறைவேற்றுவது அவசியம். அதற்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழிப்பு அளிக்க வேண்டும். இது குறித்து அனைத்து கட்சிகளிடம் விவாதிக்க தயாராக  உள்ளதாகவும் வெங்களையா நாயுடு தெரிவித்தார்.




விலையில்லா வைஃபை! - ஹிலாரியின் தேர்தல் அறிவிப்பு

மெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் ஹிலாரி லூசியாணா உள்ளிட்ட மாகாணங்களில்  குறிப்பிடத்தக்க வெற்றிகளைப்  பெற்றுள்ளார். இந்நிலையில் அவர் அமெரிக்க மக்களை கவரும் விதமாக இந்திய அரசியல்வாதிகளைப்  போலவே இலவசம் எனும் விஷயத்தை கையில் எடுத்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் ''இரண்டே வார்த்தைகள்'' என பதிவிட்டு இலவச வைபை என்று கூறியுள்ளார், 

விமான நிலையங்கள், பொது இடங்கள், ரயில்வே நிலையங்களில் இலவச வைபை வசதியை மக்கள் பெற முடியும் என கூறியுள்ளார். ஹிலாரி க்ளின்டன். அதுமட்டுமின்றி 2020ம் ஆண்டுக்குள் அமெரிக்காவின் அனைத்து வீடுகளுக்கு பிராட்பேண்ட் இன்டெர்நெட் வசதி சென்றடையும் என்றும் கூறியுள்ளார்.




ஹிலாரி க்ளின்டன் இளைஞர்களை கவரும் விதமான அறிவிப்புகளையும், மிகுந்த தொழில்நுட்பம் தொடர்பான அறிவிப்புகளை மக்கள் மத்தியில் வலியுறுத்தி வருகிறார். அமெரிக்காவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்கவும், அதன் மேம்பாட்டுக்காகவும் புதுமையான விஷயங்களை வடிவமைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். 

அரசின் சேவைகளை மக்கள் பயன்படுத்துவதில் டிஜிட்டலின் முக்கியத்துவத்தையும் அது எந்த அளவுக்கு மக்களுக்கு எளிமையாக உதவும் வகையில் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.





நிர்வாணம் அவமானமா..?

1985-ம் ஆண்டு வெளிவந்த 'எமரால்ட் ஃபாரஸ்ட்' திரைப்படத்தில் ஒரு காட்சி. நாயகியான பழங்குடி பெண்ணையும், அவளின் தோழிகளையும் நகர்ப்புற மனிதர்கள் சிலர் கடத்தி விபசாரத்தில் ஈடுபடுத்த முயல்வார்கள். அதுவரை ஆடை என்ற ஒன்றை அணிந்திராத அப்பெண்களுக்கு, குட்டைப் பாவாடையை யும் , மேற்கத்திய பாணி மேல் கச்சைகளையும் கட்டாயப்படுத்தி அணிவிப்பாரகள்.  

அவர்கள் கடத்தப்பட்ட அன்றிரவே, நாயகனும் அவனது பழங்குடி நண்பர்களும் அவர்களை மீட்டு மீண்டும் கானகத்திற்கு அழைத்து வருவார்கள்.கானகத்திற்குள் நுழைந்ததும் அப்பெண்கள் செய்யும் முதல் வேலை, தங்களின் ஆடைகளை கிழித்தெறிவது. அதாவது பெண்களை சதைப் பிண்டமாக பார்க்காமல் அவர்களை சக மனிதர்களாக மட்டுமே பார்க்கும் எந்த இனத்திற்கும் ஆடை என்ற ஒன்று தேவையாக இருப்பதில்லை, நிர்வாணம், அங்கு இழிவாகப் பார்க்கப்படுவதில்லை. நிர்வாணத்தை பார்த்து எவரின் ஆண்மையும் திமிறி எழுவது இல்லை என்பதை விவரிக்கும் காட்சி அது. 

இது ஏதோ புனைவு அல்ல. பிரேசிலில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ஜான் போர்மேன் இயக்கிய படம் அது.  



மேற்கத்திய பழங்குடிகள் மட்டும் அல்ல; இந்தியாவிலும்கூட நாகரிகத்தின் நா தீண்டாமல்  வாழும் பழங்குடி மக்கள்  இன்றும் அப்படித்தான் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களைப்  பொறுத்தவரை நிர்வாணம் அவமானம் அல்ல.

ஆனால், பழங்குடிகளான அம்மக்களை நாம் நாகரிகமற்றவர்கள், உயர்த்தப்பட வேண்டியவர்கள் என்றும், அதேநேரம்  ஒரு பெண்ணை இழிவுபடுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் அவளது படத்தை மார்ஃபிங் செய்து வெளியிடும் சமூகத்தில் வாழும் நாம், நம்மை நாகரிகமானவர்கள் என்று பிதற்றித் திரிகிறோம். 

அவமானத்திற்கு உரியதா நிர்வாணம் ...?
ஆடைகளே தேவையில்லை, எல்லாம் நிர்வாணமாக அலையலாம் என்று ஆலோசனை வழங்க இந்த கட்டுரையை எழுதவில்லை. ஆடைகளுக்கென்று ஒரு தொன்மம்  இருக்கிறது, அதன் பின் சமூக, பொருளாதாரக் காரணிகள் இருக்கிறது. இயற்கையின் ஒரு அங்கமாக இப்போது நாம் வாழவில்லை. வளர்ச்சி என்னும் பெயரில் இயற்கையைவிட்டு வெகு தொலைவு தள்ளிவந்துவிட்டோம். இக்காலத்தில் நம் நிர்வாணத்தை மறைக்க ஆடைகள் நிச்சயம் தேவைதான். ஆனால், அதே நேரம் நிர்வாணம் ஒன்றும் இழிவானதல்ல என்ற புரிதலும் நமக்கு வேண்டும். 

அதுவும், தொழில்நுட்பம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வளர்ந்துள்ள இக்காலத்தில் பல விபரீதங்களை தவிர்க்க, தடுக்க... ‘நிர்வாணம் இயற்கையானது, இழிவானதல்ல’ என்ற புரிதலை அனைவருக்கும் ஏற்படுத்த வேண்டும். அதுவும் குறிப்பாக ஆண்களுக்கு.
என்ன சொல்ல வருகிறீர்கள்...வினுப்ரியாவை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டது தவறல்ல... அதை செய்தவன் தண்டனைக்குரியவன் அல்ல என்று விஷத்தைக் கக்குகிறீர்களா அல்லது விஷயத்தை திசை திருப்புகிறீர்களா...? என்பது உங்கள் கேள்வியாக இருந்தால், பதில், 'இல்லை' என்பதே, நிச்சயம் இல்லை என்பதுதான். 

வினுப்பிரியாவின் படத்தை தவறாகச் சித்தரித்து வெளியிட்டவன் மீதும், இந்த விவகாரத்தை அலட்சியமாகக் கையாண்ட காவல்துறை மீதும் கண்டிப்பாக நடவடிக்கை  வேண்டும். அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால், அதே நேரம் தொழில்நுட்பம் அனைத்தையும் இலகுவாக்கி, 'போட்டோ ஷாப்' என்னும் ஒரு மென்பொருள் தெரிந்திருந்தால் யார் வேண்டுமானாலும், யாரையும் மோசமாகச் சித்தரித்துவிடலாம் என்கிற போது ஆடைகள், நிர்வாணம் குறித்து நாம் புரிதல் கொள்வதும், அதுகுறித்த புரிதலை நம் குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டியதும், இன்றியமையாதது ஆகிறது. 
 
இது ச்ச்ச்சீ விஷயம் அல்ல!

முன்பெல்லாம் பொதுக் கழிப்பறைகளில்  பெண்களை தவறாக சித்திரித்து படங்கள் வரையப்பட்டிருக்கும். வர்ணனைகள் இல்லாமல் பேசவேண்டுமென்றால், இப்போது சமூக ஊடகங்கள்தான் நவீன கழிப்பறைகள்! 

இங்கு  யார் வேண்டுமானாலும், யார் மீது வேண்டுமானாலும் சேற்றை வாரி இறைக்க முடியும். தனது மனக்கழிவுகளை பொதுவெளியில் கக்க முடியும். வக்கிரம் நிறைந்த எந்த ஆண் மனம் சுவற்றில் சாக் பீஸால் பெண்களை கழிவறைகளில் கிறுக்கியதோ, அந்த மனம்தான் இப்போது மவுஸைப் பிடித்து கிறுக்குகிறது. 
அதே வன்மம்தான், ஆனால் இப்போது அது வேறு பரிணாமத்தை எட்டி உள்ளது. ஆனால், இந்த பரிணாமம் முன்பை விட அபாயகரமானதாகவும் இருக்கிறது.  

இந்த சூழலில் நாம் நம் குழந்தைகளுடன் இதுகுறித்து வெளிப்படையாக உரையாடுவது அத்தியாவசியம் ஆகிறது. இது ச்ச்ச்சீ விஷயம் அல்ல.
அதேநேரம் இன்னொரு விஷயத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். வினுப்பிரியா தன் படம் தவறாக சித்திரிக்கப்பட்டதால் மட்டும் தற்கொலை செய்திருக்கமாட்டாள். இனி நம்மை இந்த சமூகம்  எப்படி பார்க்குமோ என்ற மனஅழுத்தமும், அவள் அந்த முடிவை எடுக்கக் காரணமாக இருந்திருக்கும். அதனால் நம் சமூகத்தின் அற, ஒழுக்க மதிப்பீடுகளை பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். 

யாரோ ஒரு கயவன் பெண்கள் படத்தை தவறாக சித்திரிப்பதால், பெண்களுக்கு எந்த அவமானமும் இல்லை. நிச்சயம் உண்மையான அவமானத்திற்குரியவர்கள், அச்செயலை செய்தவர்கள்தான் என்பதை நாம் உணர்ந்து, நம் பிள்ளைகளுக்கும் உணர்த்த வேண்டும்.

முன்பெல்லாம் பள்ளியில் நீதிபோதனை வகுப்புகள் இருக்கும். பணம் மட்டுமே பிரதானம் என போதிக்கப்படும் இச்சுழலில், அது போன்ற வகுப்புகள் இப்போது எந்த பள்ளிகளிலும் நடப்பதாக தெரியவில்லை. நேரடியாக சொல்ல வேண்டுமென்றால், அதன் விளைவுகள்தான் வினுப்பிரியாக்களின் மரணங்களுக்கு காரணங்கள். குறைந்தபட்சம் நாமாவது நம் பிள்ளைகளுக்கு அறம் சார்ந்த கதைகளை கற்பிப்போம். ஒழுக்கம் பெண்களுக்கு மட்டுமானது அல்ல, இருபாலருக்கும் பொதுவானது என்று சொல்லித்தருவோம்.

தொழில்நுட்பத்தை நம் குழந்தைகள் நம்மை விட வேகமாக கற்றுக் கொள்வார்கள். ஆனால், அதை எதற்காகப் பயன்படுத்தவேண்டும் என்று நாம்தான் கற்பிக்கவேண்டும். ஏனெனில், வினுப்பிரியாவும், அவள் படத்தை தவறாகச் சித்தரித்தவனும் வேறு கிரகத்திலிருந்து வந்தவர்கள் அல்ல. அவர்கள் நம் சமூகத்தில் வாழ்பவர்கள். நம்முடன் தினமும் உரையாடிக் கொண்டு இருப்பவர்கள்!




போலீசால் நிறைவேறாமல் போன சுவாதியின் கடைசி ஆசை!

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சுவாதியின் கடைசி ஆசை தான் இறந்த பின்னர் உடல்உறுப்புகளை தானம் செய்ய வேண்டுமென்பது. ஆனால் அது நிறைவேறவில்லையென அவரது தந்தை வேதனை தெரிவித்துள்ளார்.


இன்போசிஸ் ஊழியரான சுவாதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சில நாட்களுக்கு முன்பு மர்ம நபரால் கொலை செய்யப்பட்டார். கொலையாளியை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தமிழகம் மட்டுமல்லாமல்  இந்தியாவையே இந்த சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

இந்நிலையில் சுவாதியின் தந்தை சந்தனகோபாலகிருஷ்ணன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,'' எனது மகள் அடுத்தவருக்கு உதவி செய்யும் குணம் படைத்தவள். மனிதாபிமானமிக்கவள். எனது மகள் என்பதற்காக இதனை நான் சொல்லவில்லை. சாலையில் ஏழைக் குழந்தைகளை அல்லது பிச்சை எடுப்பவர்களை பார்த்தால் கூட வெறும் வயிற்றில் சென்று படுத்துக் கொள்வாள். அனாதரவாக இருப்பவர்களுக்கு உதவி செய்ய  வேண்டுமென்ற எண்ணம் எப்போதும் அவளுக்கு உண்டு.

எனது இரு மகள்களின் கடைசி ஆசையும் தங்களது உடல் உறுப்புகளை தானம்  செய்ய வேண்டுமென்பதுதான்.  சுவாதியின் ஆசையும் அதுதான்.  ஆனால் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் 2 மணி நேரத்திற்கு மேலாக உடல் அப்படியே கிடந்தது. பின்னர் போஸ்ட்மார்ட்டம் முடித்து மாலையில்தான் எங்களிடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. அவளது கடைசி ஆசையை கூட நிறைவேற்ற முடியாத பாவி ஆகி விட்டேன். எனது இன்னொரு மகள் சொல்கிறாள் சூளைமேட்டில் இருந்து எங்காவது சென்று தற்கொலை செய்து கொள்வோம் என்கிறாள்.


எனது மகள் என்ன தவறு செய்தாள்? தினமும் காயத்ரி மந்திரம் சொல்வாள். கடவுளுக்கு பயந்த பெண். அடுத்தவர்கள் வேதனையைக் காண சகிக்காதவள்.  ஆனால் சோசியல் மீடியாக்கள் அவளது இறப்புக்கு பின்னால் பல கதைகளை சொல்கின்றன. எங்கள் வேதனையை ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். எங்களை நிம்மதியாக துக்கம் அனுஷ்டிக்க விடுங்கள். என் மகள் எதையும் என்னிடம் மறைத்ததில்லை. யார்  குறித்தும் புகார் தெரிவித்ததில்லை. 

இப்போது அவள் உயிருடன் இல்லை. அது எங்களுக்கு தெரியும்  தினமும் வேலை முடிந்து இரவு 7.30 மணிக்கு வீட்டுக்கு வருவாள். இரவு 7.30 மணியானால் அவளது காலிங் பெல் அடிக்கும். இப்போதும்  இரவு 7.30 மணியானால் தானாகவே சென்று கதவை திறந்து பார்க்கிறோம்... அவள் வருகிறாளா என்று..!






'சுவாதிக்காக இதை மட்டும் செய்யுங்கள் ப்ளீஸ்..!'- வேண்டுகோள் வைக்கும் சகோதரி

சுவாதியைப் பற்றி யூகத்தின் படி பலரும் பலவிதமாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை வெளியிடுவது உண்மையிலேயே எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. எனவே அவள் பெயரில் சமூக வலைத்தளங்களில் யாரும் எந்தவித கருத்துக்களையும் வெளியிட வேண்டாம் என்று சுவாதியின் சகோதரி நித்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். 



சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சுவாதியின் சகோதரி நித்யா இணையதளம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், "எனது தங்கை சுவாதி பற்றி யூகத்தின் அடிப்படையில் பல்வேறு செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படுகிறது.அவளின் மூத்த சகோதரி என்ற முறையில் சுவாதி பற்றி சில உண்மைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

அவள் மிகவும் குழந்தைத்தனமான குணம் கொண்டவள். மென்மையாகப் பேசும் சுபாவம் கொண்டவள். கடவுளுக்கு பயந்து நடந்தவள். சுந்தரகாண்டம், பஞ்சாங்கம்  படிக்காமல் மற்றும் அட்சதை தூவிக் கொள்ளாமல் அவள் ஒரு நாள் கூட வீட்டை விட்டு வெளியில், காலடி எடுத்து வைத்ததில்லை. தினமும் ரயிலில் வேலைக்கு செல்லும் போது விஷ்ணு சகஸ்ரநாமம் உச்சரித்தபடியேதான் செல்வாள். அவள் வேலைக்குச்  செல்லும் வழியில் சிங்கபெருமாள் கோயில் இருப்பதால் தவறாமல் நரசிம்மர் ஆலயத்துக்குச்  செல்வதை வழக்கத்தில் வைத்திருந்தாள். அது போல திருமளிகையில் உள்ள ஆச்சாரியர் முதலியாண்டான் சுவாமிகள் ஆலயத்துக்கும் அவள் செல்வதுண்டு. மாலை வேலை முடிந்து வீட்டுக்கு வரும் போது சூளைமேட்டில் உள்ள சீனிவாச பெருமாள் கோயிலுக்குச்  செல்லாமல் அவள் வருவதே கிடையாது. அந்த அளவுக்கு அவள் தெய்வ பக்தி நிறைந்தவள்.

ஸ்ரீரங்கத்தில் பிறந்து, சென்னையில் வளர்ந்த நாங்கள், எங்களின் பாரம்பரிய வழிபாடுகளில் மிகுந்த நம்பிக்கை உடையவர்கள். அடிக்கடி யாத்திரை சென்று நிறைய கோயில்களில் வழிபாடு செய்துள்ளோம். கடைசியாக நான் என் தங்கையுடன் மசினக்குடியில் உள்ள ஆலயத்திற்கு சென்று இருந்தோம். அங்குள்ள இயற்கை அழகை கண்டு என் தங்கை சுவாதி மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள். அவள் இயற்கையை மிகவும் விரும்புவாள். ஓரிரு தடவை மலையேற்றத்துக்கும் அவள் சென்று வந்துள்ளாள். சுவாதிக்கு என் குடும்பத் தில் உள்ள ஒவ்வொருவர் மீதும் அதிக பாசமுண்டு.



அவளுக்கு நண்பர்கள் வட்டாரம் என்று தனியே கிடையாது. சில நட்புகளே உண்டு. தேவையில்லாமல் அவள் எந்தப் பொழுது போக்குகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள மாட்டாள். இத்தகைய பண்புடன் வளர்ந்த அவள் பற்றி, யூகத்தின் படி பலரும் பலவிதமாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை வெளியிடுவது உண்மையிலேயே எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. எனவே அவள் பெயரில் சமூக வலைத்தளங்களில் யாரும் எந்தவித கருத்துக்களையும் வெளியிட வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம். அப்படி வெளியிடப்படும் யூகத்தின் அடிப்படையிலான கருத்துக்கள் இந்த வழக்கில் குழப்பத்தை ஏற்படுத்திவிட வாய்ப்பு உள்ளது. 

சமூக வலைத்தளங்களில் சுவாதி பற்றி கருத்துக்களை வெளியிடுவதற்கு பதில் அவள் ஆன்மா இறைவன் காலடியில் இளைப்பாற ஒவ்வொருவரும் பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். எங்கள் அனைவரின் வேண்டுகோளுமே, இத்தகைய சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்கப்பட வேண்டும் என்பதுதான். துரதிர்ஷ்டவசமாக கொலை செய்யப்பட்ட எனது தங்கையின் குணத்தையும், இமேஜையும் பாதிக்கும் வகையில், நாம் யாரும் தேவையில்லாமல் செயல்பட வேண்டாம். அதுபோல 'ஸ்பிரிட் ஆப் சென்னை' மறைய நாம் அனுமதிக்க கூடாது. என்ன காரணத்தினாலோ சுவாதியை யாரும் காப்பாற்ற முன்வரவில்லை. அவற்றை இனி மறந்து விடுவோம்.

இனியாவது இத்தகைய கொடூரம் நடக்கும் போது அதை தடுத்து நிறுத்த நாம் அனைவரும் முன்வர வேண்டும் என்று ஒவ்வொருவரும் சபதம் எடுத்துக் கொள்வோம். மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கும், அதிகாரிகளுக்கும் மட்டுமல்ல, பொதுமக்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளது என்பதை நான் நினைவுபடுத்த விரும்புகிறேன். நாம் ஒன்றிணைந்து செயல்பட்டால் நிறைய சாதிக்கலாம். சுவாதியின் கொலை சம்பவம் இந்த விஷயத்தில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது" என்று கூறியுள்ளார்.

சுவாதியின் கடைசி ஆசை தான் இறந்த பின்னர் உடல்உறுப்புகளை தானம் செய்ய வேண்டுமென்பது. ஆனால் அது நிறைவேறவில்லையென அவரது தந்தை வேதனை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





சுவாதி சடலத்தைப் பார்த்த முதியவர் மரணம்..! ரெயில்வே போலீஸ் மீது குற்றச்சாட்டு

சுவாதி கொலை செய்யப்பட்ட இடத்தில் ஒரு முதியவர் நெஞ்சு வலியால் மரணம் அடைந்துள்ளார். இதற்கு ரெயில்வே போலீசார் முதலுதவி செய்யாததுதான் காரணம் என அவரது மகன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த சுவாதி என்ற இளம்பெண் கடந்த 24ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலைய நடைமேடையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரது உடல் மூடப்படாமல், பல மணி நேரமாக அங்கேயே போடப்பட்டிருந்தது. அப்போது அந்த வழியாகச் சென்ற பயணிகள் பயத்துடனேயே சுவாதியின் உடலைப் பார்த்துச் சென்றனர்.



அப்போது, சூளைமேட்டைச் சேர்ந்த ஆதிகேசவன் (70) என்பவர் அங்கு வந்திருக்கிறார். வால்டாக்ஸ் சாலையில் உள்ள ஸ்டீல் பட்டறை ஒன்றில் வேலை செய்து வந்த ஆதிகேசவன், தினமும் காலை 8.30 மணியளவில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் வந்து, அங்கிருந்து சென்னை சென்ட்ரலுக்கு செல்வார். 

இந்நிலையில், சுவாதி கொலையான அன்று ரயில் நிலையம் வந்த ஆதிகேசவனுக்கு, சுவாதியின் உடலை பார்த்ததும் அதிர்ச்சியில் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கிறது. அவர் வலியால் துடித்தவாறு அருகில் இருந்து சுவரில் சாய்ந்திருக்கிறார்.

அப்போது, அங்கு இருந்த போலீசாரோ, ரயில்வே போலீசாரோ ஆதிகேசவனுக்கு எந்த முதலுதவியும் செய்யவில்லை என கூறப்படுகிறது. ஆனால், போலீசார், ஆதிகேசவனின் மகனுக்கு தகவல் மட்டும் தெரிவித்திருக்கின்றனர்.

இதையடுத்து, அங்கு வந்த ஆதிகேசவனின் மகன் கோதண்டராமன், தனது தந்தையை அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கிறார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே, இறந்து விட்டதாகக் கூறியிருக்கின்றனர்.

இந்நிலையில், தனது தந்தையின் இறப்புக்கு ரயில்வே போலீசாரே காரணம் என கோதண்டராமன் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''சுவாதியின் உடலை பார்த்த அதிர்ச்சியில் எனது தந்தைக்கு நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கிறது. அப்போது அங்கிருந்த ரயில்வே போலீசார் முதலுதவி செய்திருந்தால் எனது தந்தை பிழைத்திருக்க வாய்ப்புண்டு. பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் இந்த ரயில் நிலையத்தில் முதலுதவி செய்யும் விதத்தில் கூட எந்தவித மருத்துவ வசதியும் செய்யவில்லை. இதனை ரயில்வே துறை கவனத்தில் கொள்ள வேண்டும்'' என்றார்.






‘ஃபெக்குஜி ஹவே டில்லி மா...’ மோடியை விமர்சிக்கும் புத்தகத்துக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு!

ஃபெக்குஜி ஹவே டில்லி மா...' என்ற பெயரில் பிரதமர் மோடியை விமர்சித்து எழுதிய புத்தகத்துக்கு தடை விதிக்க குஜராத் உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.






கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பா.ஜ.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பல்வேறு வாக்குறுதிகளையும் அளித்தார்.

அந்த தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்தது. நரேந்திர மோடியும் பிரதமராக பதவியேற்றார். பா.ஜ.க ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் ஆகியும் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக்கூறி, பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் வகையில், 'ஃபெக்குஜி ஹவே டில்லி மா' (பொய் வாக்குறுதி அளித்தவர் டெல்லியில் உள்ளார்) என்ற பெயரில் காங்கிரஸ் பிரமுகர் ஜெயேஷ் ஷா என்பவர் குஜராத்தி மொழியில் புத்தகம் ஒன்றை வெளியிட்டார்.

இதையடுத்து, இந்த புத்தகம் பிரதமர் மோடியின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. எனவே, இந்த புத்தக விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என குஜராத் மாநில உயர் நீதிமன்றத்தில், சமூக ஆர்வலர் நரசின்ஹ் சோலாங்கி என்பவர் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.எம்.தவே, ''ஜனநாயக நாடான இந்தியாவில் தங்களது கருத்துகளை புத்தகத்தின் மூலம் தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. மனுதாரர் கேட்பது போல், அந்த புத்தக விற்பனைக்கு தடை விதித்தால், இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கருத்து சுதந்திர உரிமையை மீறுவதாக அமைந்து விடும்'' எனக்கூறி, அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.




' வைகோவின் ராஜதந்திரம் எங்களுக்குப் பொருந்தாது!' -கொதிகொதிக்கும் திருமாவளவன்

க்கள் நலக் கூட்டணியின் தலைவர்களிடையே ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவின் கருத்து, சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ' தி.மு.க ஆட்சியில் அமர முடியாமல் போனதற்கு நானே காரணம் என்று வைகோ சொல்வது எங்களுக்குப் பொருந்தாது' என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன். 

திருச்சியில் நடைபெற்ற ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய வைகோ, ''என்னை ராஜதந்திரம் இல்லாதவர் என கருணாநிதி நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால், எனது ராஜ தந்திரத்தால்தான், ஆட்சி அமைக்க வேண்டிய வாய்ப்புகள் இருந்தும்கூட தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியாமல் போனது என்பதை  மறுக்க முடியாது. இந்த நிமிடம் வரை நமது இயக்கத்தை அழிக்க நினைத்து நிர்வாகிகளை இழுத்து வருகின்றனர். நம்மை அழிக்க நினைத்தார்கள், அவர்கள் அழிந்து போய்விட்டார்கள். எனக்காக நீங்கள் இருக்கிறீர்கள். உங்களுக்காக நான் இருக்கிறேன். இதுதான் நமது இயக்கத்தின் பிணைப்பு.


நான் எப்போதும் கட்சிக்கு உண்மையாக இருப்பவர்களைக் கைவிடமாட்டேன். வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவதற்காக நாம் பாடுபடுவோம். வெற்றி கிடைக்காவிட்டாலும் காத்திருப்போம்" என பேசியிருந்தார். அதிலும், தி.மு.கவை ஆட்சிக்கு வரவிடாமல் என்னுடைய ராஜதந்திரத்தால் தடுத்தேன் என வைகோ கூறிய கருத்துக்கள், மக்கள் நலக் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்திவிட்டன. 

இதுகுறித்து நம்மிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், "சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளுக்கு மாற்றாகத்தான் மக்கள் நலக் கூட்டணியை பிரகடனப்படுத்தினோம். தி.மு.க, அ.தி.மு.கவுக்கு மாற்று என்ற கொள்கையை முன்வைத்து அரசியல் கூட்டணியாக நாங்கள் தேர்தலைச் சந்தித்தோம். ஆறு கட்சிகள் எங்களோடு இணைந்தன. இதில், ' தி.மு.கவை அழிக்க என்னுடைய ராஜதந்திரத்தைப் பயன்படுத்தினேன்' என அவர் சொன்னது உண்மையாக இருந்தால், அது எந்த வகையிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குப் பொருந்தாது.


சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கவுக்கு எதிரான செயல்திட்டத்தை மட்டும் நாங்கள் முன்வைக்கவில்லை. மக்கள் நலக் கூட்டணி உருவானதில் எந்த உள்நோக்கமும் கிடையாது. அதைத்தான் தேர்தல் பிரசாரங்களில் பிரகடனம் செய்தோம். இதுகுறித்து, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவிடம் இன்னும் நாங்கள் பேசவில்லை. அவரிடம் இதுபற்றிப் பேசுவோம்" என்றார் அமைதியாக. 

திராவிடக் கட்சிகளுக்கு மாற்றான கருத்து விதையை, மக்கள் நலக் கூட்டணி மூலம் விதைத்தது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதான். கூட்டணிக் கட்சித் தலைவர்களைக் கலந்து ஆலோசிக்காமல், வைகோ பேசிய பேச்சால் அதிர்ந்து போய் இருக்கிறார்கள் மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள்.  




ஆடு, மாடு, கோழி, பட்டுப்புழு... நம்மாழ்வார் வழியில் அசத்தும் பெண் விவசாயி!

''விவசாயம் தொழிலும் அல்ல... கலாசாரமும் அல்ல... அது ஒரு வாழ்வியல்'' என்று சொல்வார் நம்மாழ்வார். இதையே வேதவாக்காக எடுத்துக்கொண்டு, இயற்கை வழி வேளாண்மையை அசத்தலாக மேற் கொண்டிருக்கிறார், திருப்பூர் மாவட்டம், முத்தூர் பகுதியைச் சேர்ந்த எம்.பி.பரிமளா தேவி.
''பழமை மாறாத, புதிய விவசாய யுக்திகளைக் கையாண்டு பார்த்து, அதில் திருப்தி ஏற்பட்டால் நம்முடைய வயலில் தைரியமாக செயல்படுத்தலாம்'' என்பதும் நம்மாழ்வார் சொல்லிச் சென்றதுதான். இதையும் தன்னுடைய வயலில் செயல்படுத்தி வெற்றிகரமாக வலம் வரும் பரிமளாதேவியை, நம்மாழ்வார் சிறப்பிதழுக்காகச் சந்தித்தோம்.


முத்தூரில் இருந்து கூப்பிடுதொலைவில் இருக்கிறது, இவருடைய பண்ணை. ஆடு, மாடு, கோழி எனப் பல்லுயிர் சுழற்சிக்கான முக்கிய அம்சங்களுடன் திகழ்கிறது இப்பண்ணை! 'குட்டி நாதஸ்வரம்’ போன்ற மஞ்சள் பூக்கள் குலுங்க தோட்டத்தின் நடுநாயகமாக விளங்கும் பூவரச மர நிழலில் கட்டி இருந்த நாட்டு மாட்டுக்கு, பூவரச இலைகளை உண்ணக் கொடுத்து கொண்டிருந்தவரிடம் பேச்சுக்கொடுத்தோம். கணவர் பெரியசாமி மற்றும் மகன் ராம்குமார் இருவரும் இணைந்துகொள்ள, கடகடவென ஆரம்பித்தார் பரிமளாதேவி.
''எங்களுக்கு மொத்தம் 10 ஏக்கர் விவசாய நிலம் இருக்கு. இதுல மேய்ச்சல் நிலம் 4 ஏக்கர் போக, 6 ஏக்கர்ல விவசாயம் பண்றோம். வீடு, ஆட்டுப்பண்ணை, கோழிப்பண்ணை, பட்டுபுழு வளர்ப்புமனைனு சில கட்டடங்களையும் கட்டி இருக்கோம். கடந்த நாலு வருஷமா முழுக்க இயற்கை வழியிலதான் எங்க பண்ணை நடக்குது. அதுவும் ஐயா நம்மாழ்வார் சொல்லிக்கொடுத்த வழியிலதான் அடி பிசகாம போயிட்டு இருக்கு. இதுக்கு முன்ன நாங்க செஞ்சிட்டு இருந்த ரசாயன விவசாயத்துல பட்ட துன்பங்கள் ஏராளம். பெற்ற கடன்களும் எக்கச்சக்கம். இதனால ஏற்பட்ட பிரச்னைகள் எல்லாம் படிப்படியா குறைஞ்சு, மனநிறைவோட இருக்கோம்னா, இதுக்குக் காரணம் ஐயாதான். ரசாயனத்தை விட்டு இயற்கைக்கு மாறிய காலகட்டத்தில் சில சமயம் சோர்வு வந்துச்சு. அந்த சமயம் எல்லாம், 'முயற்சி விதைபோல... முளைத்தால் மரம்; இல்லையேல் மண்ணுக்கு உரம்’ என்கிற ஐயாவோட வாக்கு நினைவுக்கு வரும். வந்த சோர்வைத் தூக்கிவீசிட்டு, அடுத்த வேலைய பார்க்கப் போயிடுவேன்'' என்று குரலில் உறுதிதொனிக்க சொன்ன பரிமளாதேவி, தொடர்ந்தார்.
வீட்டுக்கு நாட்டுமாடு... விற்பனைக்குக் கறவை மாடு!
''நாட்டுமாடுகளை அழிவில இருந்து காப்பாத்தணும்னு அய்யா அடிக்கடி சொல்வார். அதனால, ரெண்டு காங்கேயம் பசுக்களை வாங்கினோம். இந்த மாடுகளோட சாணம், மூத்திரம் எல்லாம் அதிக வீரியமானது. இதை பயன்படுத்தித்தான் இடுபொருட்கள் தயாரிக் கிறோம். வீட்டுக்குத் தேவையான சத்து அதிகமான சுவையான பால், கைமணக்கும் நெய், தாகம் தீர்க்கும் மோர் எல்லாம் இதன் மூலமாவே கிடைக்குது. தவிர, பால் விற்பனைக்காக 4 கறவை மாடுகளை வெச்சிருக்கோம். சராசரியா, ஒரு நாளுக்கு 20 லிட்டர் பால் கிடைக்குது. அதை, லிட்டர் 36 ரூபாய்னு கொடுக்கிறோம். அதுக போடுற சாணியைத் தொழுவுரமா பயன்படுத்திக்கிறோம்.
ஆண்டு முழுவதும் வருமானம்!
பண்ணையில 20 வெள்ளாடு களை வளர்க்குறோம். பகல்ல மேய்ச்சலுக்கு விட்டுட்டு ராத்திரியில கிடை அடைச்சிடுவோம். இதுக மூலமா குறைஞ்சபட்சம் வருஷத்துக்கு 20 குட்டிகள் கிடைக்குது. அதை விற்பனை செய்றதுல 50 ஆயிரம் ரூபாய் கிடைக்குது. நிலத்துக்கு எருவும் கிடைச்சுடுது. சிறுசும் பெருசுமா 50 நாட்டுக்கோழிகள் இருக்கு. தோட்டத்துல இருக்குற புழு, பூச்சிகளை மேய்ஞ்சே இதுக வளந்துடும். தினசரி ஒருவேளை மட்டும் கொஞ்சமா தீவனம் இறைப்போம். இதுகளுக்கு பெரிசா செலவு இல்லை. குஞ்சுகள், முட்டைகள்னு விற்பனை செய்றது மூலமா மாசம் 5 ஆயிரம் ரூபாய் வரும்படி வருது. பயிருக்கு கோழி எரு போய் சேந்துடுது. 'ஒரு பண்ணை ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பைக் கொடுக்கணும். வருமானத்தை ஈட்டணும்’னு ஐயா சொல்வார். அந்த வகையில்தான் எங்க பண்ணையை வடிவமைச்சு இருக்கிறேன்'' என்று பெருமையாகச் சொன்ன பரிமளாதேவி, பண்ணையைச் சுற்றிக் காட்டிக் கொண்டே பேசினார்.
தற்சார்பு விவசாயம்!


''எங்க வீட்டு சமைய லுக்குத் தேவையான அரிசி, பயறு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களையும், கால் நடைகளுக்குத் தேவையான வைக்கோல், சோளத்தட்டை, கடலைக்கொடி போன்ற உலர்தீவனங்களையும் சேமிச்சு வெச்சுக்கிறோம். கோ4 ரக மறுதழைவு பசுந்தீவனப்பயிரை ஒரு ஏக்கர்ல போட்டிருக்கோம். இது, கறவைமாடுகளுக்கு அதிக புரதச்சத்தையும் நார்ச்சத்தையும் கொடுக்கும். 15 நாளுக்கு ஒரு தடவை பஞ்சகவ்யாவையும் அமுதக்கரைசலையும் மாத்தி மாத்திக் கொடுப்போம். அடியுரமா ஆட்டு எரு போட்டிருக்கோம். அதனால வெட்ட வெட்ட தழைஞ்சு, வேண்டிய அளவுக்கு தீவனத்தை அள்ளி வழங்குது. இந்தக் கரணைகளையும் வெட்டி குறைந்த விலைக்கு விற்பனை செய்றோம். இதுவரை 100 விவசாயிங்களுக்கு இந்த பசுந்தீவனக் கரணைகளைக் கொடுத்திருக்கோம். அவுங்க மூலமா மத்த விவசாயிங்களுக்கும் பரவுது. 'எதையும் இலவசமா கொடுக்காதே, நீயும் வாங்காதே’, 'விவசாயிகளிடம் இருந்து விவசாயிகளுக்கு விதை, தொழில்நுட்பம் எல்லாம் பரவணும்’ங்கிற ஐயாவின் வார்த்தைகளை சரியா நாங்க நிறைவேத்துறோம்.
உரமும் நமது... உயர் விளைச்சலும் நமது!
வருஷம் முழுசும் எங்க நிலத்துல ஒரு இடம் பாக்கியில்லாமல் ஆட்டுக்கிடை போட்டுடுவோம். ஒரு இடத்துல பத்து நாள் வரை கிடைபோடுறதால, ஆட்டு எரு மண்ணு தெரியாத அளவுக்கு நெறைஞ்சிருக்கும். அதனால, எந்த வெள்ளாமை வெச்சாலும் மகசூல் பட்டைய கிளப்புது. அது போக பருவமழைக்கு முந்தி, சேமிச்சு வெச்சிருக்கிற கோழி எருவை பயிருக்குக் கொடுப்போம். அது இயற்கையான மேலுரமாக மாறி பயிருக்கு ஊக்கம் கொடுக்கும். ஆக, நம்மாழ்வார் சொன்ன 'ஒன்றின் கழிவு... மற்றொன்றின் உணவு’ என்கிற சுழற்சி முறை விவசாய விதி, ரசாயன உரத்துக்கு மாற்றா நின்னு. உற்பத்திச் செலவைக் குறைக்குது'' என்ற பரிமளாதேவி,
மாத வருமானத்துக்கு மல்பெரி!
''ஆண்டு வருமானம், மாத வருமானம், வார வருமானம் கிடைக்கும்படி பண்ணையை வடிவமைச்சிருக்கோம். ஆனா, போதிய மழை கிடைக்காம போனதால ஆண்டு வருமானம் கொடுக்கிற பயிர்களை இந்த போகம் நடல. ஆனா, 'பசுமை விகடன்’ மூலமாக நிரந்தர மாத வருமானம் பார்க்க ஒரு வழி கிடைச்சுது. தாராபுரம் பக்கத்துல இருக்கிற காசிலிங்கம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த செல்லமுத்து  பாப்பாத்தி தம்பதி, பட்டுப்புழு வளர்த்து மாநில விருது வாங்கினது பத்தி வந்த கட்டுரை, எங்களையும் மல்பெரி விவசாயியா மாத்திடுச்சு. அதுவும் முழுக்க முழுக்க இயற்கைதான். நாலு ஏக்கர்ல சொட்டு நீர் போட்டு மல்பெரி செடிய நட்டிருக்கோம். ஏற்கெனவே கிடைபோட்ட மண்ணு. அதோட அமுதக்கரைசலையும் கொடுக்கிறதால, மல்பெரி எல்லாம், சும்மா வெத்தலை மாதிரி 'தளதள’னு இருக்கு. ஐயா சொன்ன அத்தனை விஷயங்களையும் எங்க பண்ணையில தவறாம கடைபிடிக்கறதால எந்த பிக்கல் பிடுங்கலும் இல்லாம பொழைப்பு ஓடிகிட்டு இருக்கு. அதனாலதான் அவரை நாங்க தெய்வமா பாக்குறோம்'' என்றபடி விடைகொடுத்தார்.
தவறுகளும்... விளக்கங்களும்!
'34 சென்ட்... ஆண்டுக்கு ரூ 2. லட்சம்... ஒப்பற்ற ஒரு பண்ணை’ என்ற தலைப்பில், பசுமை விகடன், 25.12.14 தேதியிட்ட இதழில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம். திருநெல்வேலி மாவட்டம், கடையம் பகுதியைச் சேர்ந்த ஃபெலிக்ஸ் என்பவரின் பண்ணை பற்றிய அக்கட்டுரையில் சில தகவல்கள் தவறாக இடம்பெற்றிருப்பதாக, நம்மிடம் குறிப்பிட்ட ஃபெலிக்ஸ், '’கட்டுரை நிறைய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கு. நிறைய பேர்கிட்ட போய் சேர்ந்திருக்கு. தொடர்ந்து எனக்கு அழைப்புகள் வந்தவண்ணம் இருக்கு. ஆனா, பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம் இதையெல்லாம் நான் பயன்படுத்துற மாதிரி கட்டுரையில வந்திருக்கு. இதையெல்லாம் நான் பயன்படுத்துறதில்ல. வடிகரைசலை மட்டும்தான் பயன்படுத்துறேன். இதேபோல வனராணி ரகக் கோழி 1,000 ருபாய் விலை போகும்னு வந்திருக்கிற தகவலும் தவறு. ஒரு கோழி 300 ரூபாய் வரைதான் விலை போகும்'' என்று தவறுகளைச் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து பேசிய ஃபெலிக்ஸ், '’இந்தப் பண்ணையை வருமான நோக்கத்துக்காக நான் உருவாக்கல. அப்படி ஒரு நோக்கம் இருந்திருந்தா, ஐ.டி.துறையிலேயே (தகவல் தொழில்நுட்பத்துறை) இருந்திருப்பேன். இயற்கை சார்ந்த வாழ்க்கை முறைக்கு மாத்திக்க நினைச்சுதான் இந்த பண்ணையை உருவாக்கினேன். இதை முழுமையா புரிஞ்சுக்காத சிலர், 'ரெண்டு லட்சம்தான் வருமானம் கிடைக்குதா?னு கேக்கறாங்க. இந்த இடத்துல கழிவுகள் அத்தனையும் மறுசுழற்சி ஆகுது; இயற்கைக் காயப்படாம இருக்கு; தற்சார்பு விவசாயம் நடக்குது; எல்லாத்துக்கும் மேல மனநிம்மதியான வாழ்க்கை கிடைக்குது. இதுக்கு ரெண்டு லட்சம் இல்ல... ரெண்டு கோடி... ரெண்டாயிரம் கோடினு எப்படி வேணும்னாலும் மதிப்பு போட்டுக்கலாம். இயற்கை விவசாயத்தின் மூலமா வருமானத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறதைவிட, வாழ்வியல் முறைக்கு முக்கியத்துவம் கொடுக்கணும்னு நினைக்கறவன் நான். அதனால, இந்த வருமானக் கணக்குலயெல்லாம் எனக்கு விருப்பமே இல்ல'' என்று சொன்னார்.


ஃபெலிக்ஸ் கூறியவற்றில் இரண்டு விஷயங்கள், தவறாக இடம்பெற்றுவிட்டன. இப்படித் தவறான தகவலைத் தந்தமைக்காக வருந்துகிறோம். எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நிகழா வண்ணம் பணியாற்ற உறுதி ஏற்கிறோம்.




Wednesday, 29 June 2016

வினுப்பிரியா தற்கொலை வழக்கு... ஒருவரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை!

வினுப்பிரியா தற்கொலை வழக்கு தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியைச் சேர்ந்த விசைத்தறி உரிமையாளர் அண்ணாதுரையின் மகள் வினுப்ரியா (21). முகநூலில் அவரது படம் ஆபாசமாக வெளியிடப்பட்டது தொடர்பாக வினுப்ரியாவும், அவரது பெற்றோரும் மாவட்ட காவல் துறையிடம் புகார் செய்தனர். அந்த புகாரை, சைபர் கிரைம் பிரிவு போலீசார் விசாரித்து வந்தனர். ஆனால், போலீசார், வினுப்ரியா மீதே சந்தேகம் தெரிவித்தும், அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் வகையில் விசாரணையை நடத்தியதாக கூறப்படுகிறது.

மேலும் போலீசார், வினுப்ரியாவின் தந்தை அண்ணாதுரையிடம் புதிய செல்போன் வாங்கித் தரும்படி நிர்பந்தம் செய்ததையடுத்து, அண்ணாதுரை ரூ.2 ஆயிரம் மதிப்பிலான செல்போன் ஒன்றை போலீசாருக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை வினுப்ரியாவின் முகநூலில் மீண்டும் ஓர் ஆபாச படம் வெளியிடப்பட்டதால், மிகுந்த மனவேதனை அடைந்த அவர் கடந்த திங்கட்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.



இதுதொடர்பாக வினுப்ரியாவின் தந்தை கூறும்போது, ''புகார் கொடுத்த பின்னர் வழக்குப் பதிவு செய்யாமலும், விசாரணையை முறையாக மேற்கொள்ளாமலும், முகநூல் பக்கத்தை முடக்காமலும் காலம் தாழ்த்தியதால்தான் என் மகள் வினுப்ரியா தற்கொலை செய்து கொண்டார். என் மகள் தற்கொலைக்கு போலீசார்தான் காரணம். காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மீது விசாரணை மேற்கொள்ளாமல் போலீசார் அலைக்கழித்தனர்.


முகநூல் பக்கத்தை முடக்குவதற்கு 20 நாள்கள் ஆகும் என்று தெரிவித்தனர். ஆனால், உறவினர் மூலம் முகநூல் பக்கத்தை சில மணி நேரத்தில் முடக்கினோம். இதுபோன்ற நிலை வேறு யாருக்கும் நேர்ந்துவிடக் கூடாது. இந்த வழக்கில் போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை வினுப்ரியாவின் உடலை வாங்க மாட்டோம்" என்று தெரிவித்தார்.

வினுப்ரியாவின் பெற்றோர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் வா.சம்பத்தை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர். இந்த வழக்கை சேலம் சரக காவல் துறை டிஐஜி நாகராஜன் தலைமையில் விசாரணை மேற்கொள்ள ஆட்சியர் வா.சம்பத் பரிந்துரைத்தார்.

அதேபோல், வினுப்ரியாவின் படத்தை ஆபாசமாகச் சித்திரித்து வெளியிட்ட நபரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். தற்கொலைக்குக் காரணமாக இருந்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம் என வினுப்ரியாவின் பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர்.



இதை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அமித்குமார் சிங் நேரில் சென்று சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது, வினுப்ரியாவின் தற்கொலை வழக்கில் குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம். மரணத்துக்குத் தூண்டுதலாக இருந்த காவலர் மற்றும் செல்போன் பெற்றுக் கொண்ட காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். மேலும்,
காவலர்களின் பொறுப்பற்ற செயலுக்கு பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் மன்னிப்புக் கோரினார். இதையடுத்து, வினுப்ரியாவின் பெற்றோர் உடலைப் பெற்று கொள்வதாகத் தெரிவித்தனர்.

இந்நிலையில், இன்று சேலம் கல்பாரப்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை போலீசார் இந்த வழக்கில் கைது செய்துள்ளனர். மேலும், அவரிடம் இருந்த செல்போன் மற்றும் சிம்கார்டை பறிமுதல் செய்த போலீசார், சுரேஷிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




பொதுமக்களின் பாதுகாப்புக்கு ஏன் புதிய சட்டம் கொண்டு வரக்கூடாது! -உயர் நீதிமன்றம் கேள்வி


பொதுமக்களின் பாதுகாப்புக்கு புதிய சட்டம் ஏன் கொண்டு வரக் கூடாது என்று மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. மேலும், இது தொடர்பாக ஆகஸ்டு 4-ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற பெண் என்ஜினீயர் கடந்த வாரம் படுகொலை செய்யப்பட்டார். பொதுஇடத்தில் நடைபெற்ற இந்த படுகொலை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

இந் நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுலுக்கு ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார். அந்தக் கடிதத்தில், ''கண்களால் பார்த்த சம்பவத்தை மறைத்து மனிதன் பொய் சொல்லலாம். சம்பவத்தைக் கண்டும், காணாமலும் அவன் போகலாம். ஆனால், எலக்ட்ரானிக் கண்களை கொண்ட கேமரா இவற்றை எல்லாம் செய்யாது.





       

எனவே, 3வது கண்ணான கேமராவின் கண்கள் தற்போது சமுதாயத்துக்கு தேவைப்படுகின்றன. கடந்த 24-ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றும் பெண், பொதுமக்களின் கண் முன்னே கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலை ரயில் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு இல்லாததையும், அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தப்படாததையும் வெளிக்காட்டி உள்ளது.

அறிவியல் வளர்ச்சியினால், குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. நாகரிக வளர்ச்சியடைந்துள்ள இந்த சமுதாயத்தில் இப்படி ஒரு கொடூரக் கொலை நடந்திருப்பது எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும், அந்த பெண் தன்னைக் காப்பாற்றும்படி அபயக்குரல் எழுப்பியும், யாரும் அவரைக் காப்பாற்ற முன்வரவில்லை. அதனால், ஒரு அனாதைபோல ரயில் நிலையத்தில் பிணமாகப் பல மணி நேரத்துக்கு கிடந்துள்ளார்.

தேவையற்றவைகளுக்காகக் கோடிக்கணக்கில் பணத்தை அரசு செலவு செய்கின்றன. அதனால், மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. ஆனால், ரயில் நிலையம், பஸ் நிலையம், மருத்துவமனை, வணிக வளாகங்கள், கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள், கடற்கரை என்று மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்திருந்தால், அது பொதுமக்களுக்குப் பயன் அளித்திருக்கும். இந்த முறை மேற்கத்திய நாடுகளிலும், பெங்களூர், மும்பை, குஜராத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் உள்ளன.

தற்போது கண்காணிப்பு கேமரா பொருத்துவது என்பது மிக அவசியமானதாக மாறியுள்ளது. சென்னையில் 500 ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதில் சுமார் 8 லட்சம் பயணிகள் பயணிக்கின்றனர். அதே நேரம் சென்னை ரயில்வே மண்டலத்தில் மட்டும் 300 போலீஸ் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதனால், இந்த பயணிகளுக்கு முறையான பாதுகாப்பு வழங்க போலீசாரால் முடியவில்லை.

ரயில் நிலையங்களில் போலீசார் ரோந்து பணி செல்லாததாலும், கண்காணிப்பு கேமரா பொருத்தப்படாததாலும்,  இளம் பெண் சுவாதியை கொடூரமாகக் கொலை செய்த குற்றவாளியைக் கைது செய்ய முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. ஒரு குற்றச் சம்பவம் நடக்கும்போது மனசாட்சியுள்ள மனிதர்கள் அதை தடுக்க முன்வருவதில்லை. சாட்சியம் அளிக்கவும் வருவது இல்லை. ஆனால், கண்காணிப்பு கேமரா காட்சிகளை பதிவு செய்துவிட்டால், அது போலீசாருக்கு சாட்சியாக மாறுகிறது. போலீசாரின் புலன் விசாரணைக்கு உதவியாக இருக்கிறது.  

எனவே, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்துவது அரசின் கடமையாகும். அதேபோல, மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. இதனால், விபத்துகளும், போக்குவரத்து விதிகளை மீறும் சம்பவங்களும் அதிகம் நடைபெறுகின்றன. இதுபோன்ற குற்றங்களை தடுக்க போதிய அளவில் போலீசார் இல்லை. எனவே, சாலைகள் எல்லாம் கேமராக்கள் பொருத்தப்பட்டால், இதுபோன்ற வழக்குகளில் அவை போலீசுக்கு உதவும் விதமாக இருக்கும்.

அதே நேரம், சாலைகளில் கேமரா பொருத்தப்பட்டால், குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும். சாலை விதிகளை அவர்கள் முறையாகக் கடைப்பிடிப்பார்கள். விபத்தை ஏற்படுத்துபவர்கள், ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள், அதிக வேகமாக வாகனங்களை ஓட்டுபவர்களை போலீசாரால் எளிதில் அடையாளம் கண்டு, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கையும் எடுக்க முடியும். எனவே, 10 போலீசாரால் செய்ய முடியாத இந்தப் பணிகளை எல்லாம், ஒரு கண்காணிப்பு கேமரா செய்துவிடும்.

சென்னை மாநகரில் ரூ.3 கோடி செலவில் முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால், அந்த நிறுவனத்துடன், போலீஸ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகராறு ஏற்பட்டதால், அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது. ஐ.டி. நிறுவனங்கள் பல சென்னை புறநகரில்தான் அதிகம் உள்ளன. அங்கு பணி செய்யும் ஆண்களும், பெண்களும் இரவு நேரங்களில் வீடு திரும்புகின்றனர்.

அதனால் அந்த ஊழியர்கள், குறிப்பாகப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு அச்சத்தை ஏற்படுத்தும் விதமாகவும், தமிழகம் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளுக்கு கீழ்க்கண்ட 10 கேள்விகளைக் கேட்க வேண்டும். அவற்றை செயல்படுத்தவும் உத்தரவிட வேண்டும்.



அந்த கேள்விகள்...

* பொதுமக்கள் பாதுகாப்புக்காக மத்திய, மாநில அரசுகள், அறிவியல் முன்னேற்ற சாதனங்களை ஏன் முழுமையாக பயன்படுத்தக் கூடாது? முக்கிய இடங்களில் ஏன் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தக் கூடாது?

* நவீன கட்டுப்பாட்டு அறை மற்றும் அதிநவீன சாதனங்களுடன் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதற்காக போதுமான நிதியை ஏன் அரசு இதுவரை ஒதுக்கவில்லை?

* தற்போது எத்தனை இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன? எத்தனை இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டிய தேவை உள்ளது?

* முக்கிய இடங்களில் போர்க் கால அடிப்படையில் கண்காணிப்பு கேமராக்களை நிறுவ, நிதி ஒதுக்கீடு செய்ய எவ்வளவு கால அவகாசம் அரசுக்கு தேவை?

* மாநில போலீஸ், ரயில்வே போலீஸ் மற்றும் இதர பாதுகாப்பு படை பிரிவுகளில் காலியாக உள்ள இடங்கள் ஏன் நிரப்பப்படவில்லை? போலீஸ் மற்றும் பாதுகாப்பு படையினரின் முக்கியத்துவத்தை அறிந்தும், இந்த காலிப்பணியிடங்களை அரசு ஏன் நிரப்பவில்லை?

* பாதுகாப்பான இடம் என்பதை உறுதி செய்ய 24 மணி நேரமும் சாலைகள் மற்றும் முக்கிய இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீஸ் நிலையங்களுடன் இணைக்க அதிநவீன காவல் கட்டுப்பாட்டு அறையை ஏன் உருவாக்கக் கூடாது?

* போக்குவரத்து விதி மீறல்கள், விபத்துகள், விபத்துகள் மூலம் உயிர் இழப்புகள், இவற்றை தடுக்க சாலைகளில் ஒருங்கிணைந்த கண்காணிப்பு கேமராக்களை உடனடியாக ஏன் மாநில அரசு அமைக்கக் கூடாது?

* தனியார் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், ஐ.டி. நிறுவனங்கள் ஆகியவற்றையும், இந்த ஒருங்கிணைந்த கண்காணிப்பு கேமரா பொருத்தும் திட்டத்துடன் அரசு ஏன் இணைக்கக் கூடாது?

* தனியார் நிறுவனங்கள் அமைந்துள்ள தெருக்களில் கண்காணிப்பு கேமராக்களை கண்டிப்பாக பொருத்த வேண்டும் என்று ஆந்திர மாநிலத்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது போல, இதர மாநிலங்களிலும் சட்டம் கொண்டுவர மத்திய அரசு ஏன் உத்தரவிடக் கூடாது?
 
* பொதுமக்கள் பாதுகாப்புக்காக, ஆந்திர மாநிலத்தில் கொண்டுவரப்பட்டுள்ள, பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தைபோல ஒரு சட்டத்தை மத்திய அரசே ஏன் கொண்டுவரக் கூடாது?

இவ்வாறு கேள்விகள் எழுப்பியிருந்தார்.



இந்த கடிதத்தை படித்து பார்த்த தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், இந்த கடிதத்தையே மனுவாக கருதி தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் சார்பில் வழக்கறிஞர் எம்.பாஸ்கர், மத்திய, மாநில அரசுகள் சார்பில் அரசு வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ''நீதிபதி என்.கிருபாகரன் தன் கடிதத்தில் கேட்டுள்ள 10 கேள்விகளுக்கு, மத்திய, மாநில அரசுகள் ஆகஸ்டு 4-ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும்'" என்று உத்தரவிட்டு உள்ளனர்.