Monetize Your Website or Blog

Tuesday, 21 June 2016

நில ஆக்கிரமிப்பு: நடிகர் மாதவன் பதிலளிக்க நோட்டீஸ்!


கொடைக்கானலில், நடிகர் மாதவனுக்கு சொந்தமான நிலம் வழியாக செல்லும் வாய்க்காலில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தொடரப்பட்டுள்ள வழக்கில்,  நடிகர் மாதவனுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.




இது தொடர்பாக திண்டுக்கல் பழநி பாலசமுத்திரத்தைச் சேர்ந்த என்.கணேசன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், "கொடைக்கானலில் தொடங்கும் ராஜவாய்க்கால் பாலசமுத்திரம், அய்யம்புலி வழியாக பாலாறு அணையில் முடிவடைகிறது. ராஜவாய்க்கால் பாலசமுத்திரம், அய்யம்புலி கிராமங்களின் முக்கிய நீராதாரமாகும். பாலசமுத்திரத்தில் ராஜம்மாள் என்பவருக்கு சொந்தமான 4.88 ஏக்கர் நிலத்தை, நடிகர் மாதவன் வாங்கினார். அந்த நிலம் வழியாக செல்லும் ராஜவாய்க்காலின் ஒரு பகுதியை நடிகர் ஆர். மாதவன் ஆக்கிரமித்துள்ளார். இவருக்காக வாய்க்காலில் மின் கம்பங்களை மின்வாரிய அதிகாரிகள் ஊன்றியுள்ளனர்.



இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தபோது, மின்வாரிய செயற்பொறியாளர் ஆய்வு நடத்த ஆட்சியர் உத்தரவிட்டார். ராஜவாய்க்கால் பயன்பாடு இல்லாமல் இருப்பதாக ஆட்சியரிடம் செயற்பொறியாளர் அறிக்கை அளித்தார். ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தொடர்ந்து புகார் அளித்ததால், நடிகர் மாதவன் ஆட்கள் கொலை மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக நெய்க்காரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை.

தற்போது மழைக்காலம் தொடங்கவுள்ளது. இதனால் ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால் வெள்ளப்பாதிப்பு ஏற்படும். இதனால் ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றவும், மின் கம்பங்களை அகற்றவும் உத்தரவிட வேண்டும்'' என கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.கோகுல்தாஸ் ஆகியோர்,  இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு நடிகர் ஆர்.மாதவன், திண்டுக்கல் ஆட்சியர், மின்வாரிய செயற் பொறியாளர் மற்றும் பழநி வட்டாட்சியர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதோடு, அடுத்தக்கட்ட விசாரணையை வருகிற ஜூலை 11-க்கு ஒத்திவைத்தனர். 





No comments:

Post a Comment