Monetize Your Website or Blog

Wednesday, 29 June 2016

முடிவுக்கு வந்த வினோதினி வழக்கு..! ஆயுள் தண்டனையை உறுதி செய்த ஹைகோர்ட்

ஆசிட் வீச்சில் உயிரிழந்த இளம்பெண் வினோதினி வழக்கில் குற்றவாளிக்கு கீழ்நீதிமன்றம் அளித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.




காரைக்காலில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் படிப்பை முடித்து சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர் வினோதினி. குடும்பத்தில் முதல் தலைமுறை பெண் பட்டதாரி என்பதால் பலவித கனவுகளோடும் பல குடும்ப சிரமங்களிடையே படித்து வளர்ந்தவர். கடந்த ஆண்டு, தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக காரைக்கால் வந்தார் வினோதினி. பண்டிகை முடிந்து சென்னைக்கு செல்வதற்காக கடந்த 2012ம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி இரவு 10 மணியளவில் காரைக்கால் பேருந்து நிலையத்திற்கு தந்தை மற்றும் நண்பர்ருடன் வினோதினி சென்று கொண்டிருந்த போது சுரேஷ்குமாரால் அமில வீச்சிற்கு ஆளானார்.



திருவேட்டக்குடியில் கட்டிட வேலைக்கு பயன்படும் உபகரணங்களை வாடகை விடும் தொழில் செய்து வந்தவர் சுரேஷ்குமார். வினோதினியை ஒரு தலையாக காதலித்து தன்னை திருமணம் செய்துக்கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். மேலும், வினோதினியின் தந்தை ஜெயபாலிடடும் மகளை திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார் சுரேஷ்குமார். இதில் வினோதினிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் துளியும் விருப்பமில்லை. இந்நிலையில் தான் ஊருக்கு செல்லவிருந்த வினோதினி மீது அமிலத்தை வீசியுள்ளார்.


சக்தி வாய்ந்த அமிலம் வினோதினியின் முகத்தை முற்றிலுமாக சிதைத்துவிட்டது. முகம் மட்டுமல்லாமல் உடல் பகுதிகளிலும் காயங்கள் ஏற்பட்டது. காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வினோதினியின் உடல் நிலை மேலும் மோசமானதால் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின், அங்கிருந்து தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். கண்களில் அமிலம் பட்டு பார்வை பறிபோனது. மூக்கு, உதடு பகுதிகள் அமிலத்தால் சேதமடைந்து மூச்சு விடுவதற்கே வினோதினி சிரமப்பட்டார். கடந்த 2013ம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதியன்று மூச்சுதிணறல் காரணமாக வினோதினியின் உயிர் பிரிந்தது. 

காரைக்கால் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில் கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி நீதிபதி வைத்தியநாதன் தீர்ப்பளித்தார். 


குற்றவாளி சுரேஷ்குமாருக்கு ஆயுள் தண்டனையும், நான்கு வருட சிறை தண்டனையும், 1 லட்ச ரூபாய் அபராதமும், அதில் 50,000 பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு கொடுக்க வேண்டும். அபராதத்தை கட்ட தவறும் பட்சத்தில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என்று தீர்ப்பளித்தாா்.


இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சுரேஷ்குமார் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், சுரேஷ்குமாருக்கு கீழ்நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.



No comments:

Post a Comment