பொதுமக்களின் பாதுகாப்புக்கு புதிய சட்டம் ஏன் கொண்டு வரக் கூடாது என்று மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. மேலும், இது தொடர்பாக ஆகஸ்டு 4-ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற பெண் என்ஜினீயர் கடந்த வாரம் படுகொலை செய்யப்பட்டார். பொதுஇடத்தில் நடைபெற்ற இந்த படுகொலை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
இந் நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுலுக்கு ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார். அந்தக் கடிதத்தில், ''கண்களால் பார்த்த சம்பவத்தை மறைத்து மனிதன் பொய் சொல்லலாம். சம்பவத்தைக் கண்டும், காணாமலும் அவன் போகலாம். ஆனால், எலக்ட்ரானிக் கண்களை கொண்ட கேமரா இவற்றை எல்லாம் செய்யாது.

எனவே, 3வது கண்ணான கேமராவின் கண்கள் தற்போது சமுதாயத்துக்கு தேவைப்படுகின்றன. கடந்த 24-ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றும் பெண், பொதுமக்களின் கண் முன்னே கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலை ரயில் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு இல்லாததையும், அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தப்படாததையும் வெளிக்காட்டி உள்ளது.
அறிவியல் வளர்ச்சியினால், குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. நாகரிக வளர்ச்சியடைந்துள்ள இந்த சமுதாயத்தில் இப்படி ஒரு கொடூரக் கொலை நடந்திருப்பது எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும், அந்த பெண் தன்னைக் காப்பாற்றும்படி அபயக்குரல் எழுப்பியும், யாரும் அவரைக் காப்பாற்ற முன்வரவில்லை. அதனால், ஒரு அனாதைபோல ரயில் நிலையத்தில் பிணமாகப் பல மணி நேரத்துக்கு கிடந்துள்ளார்.
தேவையற்றவைகளுக்காகக் கோடிக்கணக்கில் பணத்தை அரசு செலவு செய்கின்றன. அதனால், மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. ஆனால், ரயில் நிலையம், பஸ் நிலையம், மருத்துவமனை, வணிக வளாகங்கள், கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள், கடற்கரை என்று மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்திருந்தால், அது பொதுமக்களுக்குப் பயன் அளித்திருக்கும். இந்த முறை மேற்கத்திய நாடுகளிலும், பெங்களூர், மும்பை, குஜராத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் உள்ளன.
தற்போது கண்காணிப்பு கேமரா பொருத்துவது என்பது மிக அவசியமானதாக மாறியுள்ளது. சென்னையில் 500 ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதில் சுமார் 8 லட்சம் பயணிகள் பயணிக்கின்றனர். அதே நேரம் சென்னை ரயில்வே மண்டலத்தில் மட்டும் 300 போலீஸ் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதனால், இந்த பயணிகளுக்கு முறையான பாதுகாப்பு வழங்க போலீசாரால் முடியவில்லை.
ரயில் நிலையங்களில் போலீசார் ரோந்து பணி செல்லாததாலும், கண்காணிப்பு கேமரா பொருத்தப்படாததாலும், இளம் பெண் சுவாதியை கொடூரமாகக் கொலை செய்த குற்றவாளியைக் கைது செய்ய முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. ஒரு குற்றச் சம்பவம் நடக்கும்போது மனசாட்சியுள்ள மனிதர்கள் அதை தடுக்க முன்வருவதில்லை. சாட்சியம் அளிக்கவும் வருவது இல்லை. ஆனால், கண்காணிப்பு கேமரா காட்சிகளை பதிவு செய்துவிட்டால், அது போலீசாருக்கு சாட்சியாக மாறுகிறது. போலீசாரின் புலன் விசாரணைக்கு உதவியாக இருக்கிறது.
எனவே, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்துவது அரசின் கடமையாகும். அதேபோல, மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. இதனால், விபத்துகளும், போக்குவரத்து விதிகளை மீறும் சம்பவங்களும் அதிகம் நடைபெறுகின்றன. இதுபோன்ற குற்றங்களை தடுக்க போதிய அளவில் போலீசார் இல்லை. எனவே, சாலைகள் எல்லாம் கேமராக்கள் பொருத்தப்பட்டால், இதுபோன்ற வழக்குகளில் அவை போலீசுக்கு உதவும் விதமாக இருக்கும்.
அதே நேரம், சாலைகளில் கேமரா பொருத்தப்பட்டால், குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும். சாலை விதிகளை அவர்கள் முறையாகக் கடைப்பிடிப்பார்கள். விபத்தை ஏற்படுத்துபவர்கள், ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள், அதிக வேகமாக வாகனங்களை ஓட்டுபவர்களை போலீசாரால் எளிதில் அடையாளம் கண்டு, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கையும் எடுக்க முடியும். எனவே, 10 போலீசாரால் செய்ய முடியாத இந்தப் பணிகளை எல்லாம், ஒரு கண்காணிப்பு கேமரா செய்துவிடும்.
சென்னை மாநகரில் ரூ.3 கோடி செலவில் முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால், அந்த நிறுவனத்துடன், போலீஸ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகராறு ஏற்பட்டதால், அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது. ஐ.டி. நிறுவனங்கள் பல சென்னை புறநகரில்தான் அதிகம் உள்ளன. அங்கு பணி செய்யும் ஆண்களும், பெண்களும் இரவு நேரங்களில் வீடு திரும்புகின்றனர்.
அதனால் அந்த ஊழியர்கள், குறிப்பாகப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு அச்சத்தை ஏற்படுத்தும் விதமாகவும், தமிழகம் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளுக்கு கீழ்க்கண்ட 10 கேள்விகளைக் கேட்க வேண்டும். அவற்றை செயல்படுத்தவும் உத்தரவிட வேண்டும்.
அந்த கேள்விகள்...
* பொதுமக்கள் பாதுகாப்புக்காக மத்திய, மாநில அரசுகள், அறிவியல் முன்னேற்ற சாதனங்களை ஏன் முழுமையாக பயன்படுத்தக் கூடாது? முக்கிய இடங்களில் ஏன் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தக் கூடாது?
* நவீன கட்டுப்பாட்டு அறை மற்றும் அதிநவீன சாதனங்களுடன் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதற்காக போதுமான நிதியை ஏன் அரசு இதுவரை ஒதுக்கவில்லை?
* தற்போது எத்தனை இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன? எத்தனை இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டிய தேவை உள்ளது?
* முக்கிய இடங்களில் போர்க் கால அடிப்படையில் கண்காணிப்பு கேமராக்களை நிறுவ, நிதி ஒதுக்கீடு செய்ய எவ்வளவு கால அவகாசம் அரசுக்கு தேவை?
* மாநில போலீஸ், ரயில்வே போலீஸ் மற்றும் இதர பாதுகாப்பு படை பிரிவுகளில் காலியாக உள்ள இடங்கள் ஏன் நிரப்பப்படவில்லை? போலீஸ் மற்றும் பாதுகாப்பு படையினரின் முக்கியத்துவத்தை அறிந்தும், இந்த காலிப்பணியிடங்களை அரசு ஏன் நிரப்பவில்லை?
* பாதுகாப்பான இடம் என்பதை உறுதி செய்ய 24 மணி நேரமும் சாலைகள் மற்றும் முக்கிய இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீஸ் நிலையங்களுடன் இணைக்க அதிநவீன காவல் கட்டுப்பாட்டு அறையை ஏன் உருவாக்கக் கூடாது?
* போக்குவரத்து விதி மீறல்கள், விபத்துகள், விபத்துகள் மூலம் உயிர் இழப்புகள், இவற்றை தடுக்க சாலைகளில் ஒருங்கிணைந்த கண்காணிப்பு கேமராக்களை உடனடியாக ஏன் மாநில அரசு அமைக்கக் கூடாது?
* தனியார் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், ஐ.டி. நிறுவனங்கள் ஆகியவற்றையும், இந்த ஒருங்கிணைந்த கண்காணிப்பு கேமரா பொருத்தும் திட்டத்துடன் அரசு ஏன் இணைக்கக் கூடாது?
* தனியார் நிறுவனங்கள் அமைந்துள்ள தெருக்களில் கண்காணிப்பு கேமராக்களை கண்டிப்பாக பொருத்த வேண்டும் என்று ஆந்திர மாநிலத்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது போல, இதர மாநிலங்களிலும் சட்டம் கொண்டுவர மத்திய அரசு ஏன் உத்தரவிடக் கூடாது?
* பொதுமக்கள் பாதுகாப்புக்காக, ஆந்திர மாநிலத்தில் கொண்டுவரப்பட்டுள்ள, பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தைபோல ஒரு சட்டத்தை மத்திய அரசே ஏன் கொண்டுவரக் கூடாது?
இவ்வாறு கேள்விகள் எழுப்பியிருந்தார்.
இந்த கடிதத்தை படித்து பார்த்த தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், இந்த கடிதத்தையே மனுவாக கருதி தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் சார்பில் வழக்கறிஞர் எம்.பாஸ்கர், மத்திய, மாநில அரசுகள் சார்பில் அரசு வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ''நீதிபதி என்.கிருபாகரன் தன் கடிதத்தில் கேட்டுள்ள 10 கேள்விகளுக்கு, மத்திய, மாநில அரசுகள் ஆகஸ்டு 4-ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும்'" என்று உத்தரவிட்டு உள்ளனர்.

No comments:
Post a Comment