Monetize Your Website or Blog

Saturday, 25 June 2016

வாட்ஸ் அப் க்கு தடை வருமா...? - உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

‘வாட்ஸ் அப்’புக்கு தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனு வருகிற 29-ம் தேதியன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. 

இது தொடர்பாக  கதீர் யாதவ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், " ஃபேஸ்புக்’, ‘ட்விட்டர்’ போன்ற சமூக வலைதளங்களைப் போன்று வாட்ஸ் அப்பும் பலதரப்பட்ட மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த செயலியில் (ஆப்ஸ்) பல்வேறு மாற்றங்களை கடந்த ஏப்ரல் 5ம் தேதி முதல் வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

இதன்மூலம் வாட்ஸ் அப் வழியாக அனுப்பப்படும் தகவல்களை அனுப்புவோரும், பெறுவோரும் மட்டுமே பார்க்க, படிக்க முடியும். இரு பயனாளிகளுக்கு இடையே பரிமாறப்படும் தகவல் களை வாட்ஸ் அப் நிறுவனமோ மற்ற யாருமோ பெறவோ, படிக்கவோ முடியாது. 



இதனால் பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் அரசு உளவு நிறுவனங்களால் வாட்ஸ் அப் வழியாக செய்யப்படும் அழைப்புகள், வீடியோ, படங்கள் மற்றும் ஆவணங்களை தேச பாதுகாப்பு தொடர்பான விசாரணைகளுக்காக கண்டுபிடிக்க முடியாது.

மேலும் சூப்பர் கம்ப்யூட்டர்கள் எனப்படும் அதிநவீன கணினிகளாலும் கூட இந்த உரையாடல்களையோ, ஆவணங்களையோ இடைமறித்து கண்டுபிடிக்க முடியாது. தற்போது வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியுள்ள ‘256 பிட் என்கிரிப்ட்’ எனப்படும் ஒரு சங்கேத குறியீட்டை இடைமறித்து கண்டுபிடிக்க 100 ஆண்டுகள் கூட ஆகலாம்.
இத்தகைய வசதி தீவிரவாதிகளுக்கும், தேசவிரோதிகளுக்கும் உதவும் வகையில் அமைந்து விடும் ஆபத்து உள்ளது. இது தேசத்தின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே வாட்ஸ் அப் செயலிக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்." எனக் கூறியுள்ளார். 

இந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமையிலான அமர்வு முன்பு வருகிற 29-ம் தேதியன்று நடைபெற உள்ளது.




No comments:

Post a Comment