Monetize Your Website or Blog

Monday, 27 June 2016

கோபா அமெரிக்கா தோல்வி மெஸ்சி ஓய்வு அறிவிப்பு : கால்பந்து உலகம் அதிர்ச்சி

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் டைபிரேக்கரில் பெனால்டியை மெஸ்சி வெளியே அடிக்க அர்ஜென்டினா மீண்டும் தோல்வியடைந்தது. 23 ஆண்டுகளுக்கு பிறகு முக்கிய கோப்பையை வெல்லும் வாய்ப்பை அர்ஜென்டினா இழந்தது.கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் தோல்வி கண்டதையடுத்து மெஸ்சி சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 
 


கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் இறுதி ஆட்டம் இன்று காலை 5.30 மணிக்கு நடந்தது. நியூஜெர்சியில் நடந்த இந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சிலியுடன் அர்ஜென்டினா மோதியது.  ஆட்டத்தை காண 82 ஆயிரம் ரசிகர்கள் திரண்டிருந்தனர். தொடக்கம் என்னவோ அர்ஜென்டினா அணிக்கு சாதகமாகத்தான்  இருந்தது. முதல் பாதியில் ஹீகுவானுக்கு கிடைத்த ஓபன் நெட் வாய்ப்பையே அவர் வீணடித்தார். தொடர்ந்து  28வது நிமிடத்தில் இரு முறை மஞ்சள் அட்டை பெற்ற சிலி வீரர் டயாஸ் களத்தை விட்டு வெளியேற்றப்பட, அந்த அணி 10 வீரர்களுடன் ஆட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. 

ஆனால் 42வது நிமிடத்தில் அர்ஜென்டினாவும் 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. அர்ஜென்டினாவின் தடுப்பாட்ட வீரர் ரோஜா சிலி வீரர் விடாலின் கணுக்காலை குறி வைத்து  தாக்க  நேரடி சிவப்பு அட்டைக் காட்டப்பட்டது.  இரு அணிகளும் 10 வீரர்களுடன் விளையாடின. ஆனாலும் வாய்ப்புகளை கோலாக மாற்றுவதில் இரு அணி வீரர்களுமே தவறு செய்தனர்.
இதனால் 90 நிமிட ஆட்டமும் சமனில் முடிய,   கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.கூடுதல் நேரத்தின் இறுதிக்கட்டத்தில் மெஸ்சியின் ஃப்ரீகிக்கை அகுரா தலையால் முட்ட,  பந்து அட்டகாசமாக கோலை நோக்கி சென்றது.  ஆனால் சிலி கோல்கீப்பர் கிளாடியோ பிரேவோ அற்புதமான முறையில் தடுத்து விட்டார். 120 நிமிட நேர ஆட்டமும்  கோல் விழாமல் சமனில்முடிந்ததையடுத்து வெற்றியை தீர்மானிக்க டைபிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது.
டைபிரேக்கரில் முதல் பெனால்டியை சிலி வீரர் விடால் அடித்தார் அதனை  அர்ஜென்டினா கோல்கீப்பர் ரொமேரோ  தடுத்து விட்டார். அடுத்து பெனால்டியை அடிக்க வந்த மெஸ்சி அதனை வெளியே அடிக்க மைதானமே அதிர்ந்து போனது. இறுதியில் அர்ஜென்டினா அணி 4-2 என்ற கோல் கணக்கில் தோற்று கோப்பையை கோட்டை விட்டது. சிலி அணி நடப்புச் சாம்பியன் அந்தஸ்த்தை தக்க வைத்துக் கொண்டது.


கடந்த உலகக் கோப்பை இறுதி ஆட்டத்திலும் ஜெர்மனியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா தோற்று கோப்பையை பறி கொடுத்திருந்தது.கடந்த 1993ம் ஆண்டு அர்ஜென்டினா அணி கோபா அமெரிக்காவில் சாம்பியன் ஆனது. அதற்கு பிறகு எந்த ஒரு முக்கியத் தொடரிலும் கோப்பையை வென்றதில்லை. 
இதற்கிடையே இறுதிப் போட்டி முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய லயனல் மெஸ்சி சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தற்போது 29 வயதே நிரம்பிய மெஸ்சி அர்ஜென்டினா அணிக்காக 112 சர்வதேச போட்டிகளில் விளையாடி 55 கோல்களை அடித்துள்ளார். அர்ஜென்டினா அணிக்காக சர்வதேச போட்டியில் அதிக கோல் அடித்த வீரர் இவர்தான்.மெஸ்சி மட்டுமல்ல அவரது  பார்சிலோனா டீம் மேட் ஜேவியர் மச்சரானாவும் சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு அறிவித்துள்ளார். 
 


ஓய்வு பெறுவது குறித்து மெஸ்சி கூறுகையில், ''தேசிய அணிக்கு விளையாடியது போதும். என்னால் முடிந்த வரை போராடி பார்த்து விட்டேன். ஒரு சாம்பியனாக முடியாதது என்னை மிகுந்த வேதனைக்குள்ளாக்குகிறது ''என்றார். 

ஆனால் அர்ஜென்டினா அணியின் கோல்கீப்பர் ரொமேரோ, மெஸ்சி இல்லாத அர்ஜென்டினா அணியை நினைத்து கூட பார்க்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். சக வீரர்கள் மெஸ்சியை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார். 

கடந்த 2007ம் ஆண்டு கோபா அமெரிக்கா இறுதிப் போட்டியில் பிரேசில் அணியிடம் அர்ஜென்டினா தோல்வி கண்டது. கடந்த 2014ம் ஆண்டு உலகக் கோப்பையில் ஜெர்மனியிடமும்   இரு கோபா அமெரிக்கத் தொடரில் சிலி அணியிடம்  தொடர்ச்சியாக அர்ஜென்டினா தேற்றுள்ளது.

No comments:

Post a Comment