Monetize Your Website or Blog

Monday, 20 June 2016

சுவாமி சர்ச்சை: ரகுராம் ராஜன் வைத்த ‘டைம்பாம்’ வெடிக்குமா?

ரசியல் வெடிகுண்டுகளைப் போடுவதில் மன்னரான சுப்பிரமணியன் சுவாமி, இந்த முறை பொருளாதார வெடி குண்டை வீசி பரபரப்பை உருவாக்கி இருக்கிறார். ரகுராம் ராஜன் இந்தியப் பொருளாதார அமைப்பில் கடந்த 2013-ம் ஆண்டு ஒரு டைம்பாமை வைத்துள்ளதாகவும், அது இந்த ஆண்டு டிசம்பரில் வெடிக்கும் என்றும் சுவாமி சர்ச்சையை கிளப்பியிருக்கிறார். 

ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனை பதவியிலிருந்து விலக்க வேண்டும் என சுப்ரமணியன் சுவாமி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இது தொடர்பாக இரண்டு முறை பிரதமர் மோடிக்கு அவர் கடிதம் எழுதினார். அது மட்டுமின்றி தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்திலும் ரகுராம் ராஜனை பற்றி அவர் விமர்சித்து வருகிறார். இந்த நிலையில், இப்போது இந்த டைம்பாம் சர்ச்சையை கிளப்பி இருக்கிறார் சுவாமி. 



இது குறித்து கோவையைச் சேர்ந்த ஆடிட்டர் ஜி.கார்த்திகேயனிடம் கேட்டோம். அவர் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

“எஃப்சிஎன்ஆர் கணக்கு, அதாவது Foreign Currency Non Resident (FCNR) Account என்பது என்ஆர்ஐ-க்களுக்கானது. இவர்கள் இந்தியாவில் வசிப்பவர்களைப் போல, வங்கிகளில் சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு வைத்துக் கொள்ள முடியாது. இவர்களுக்காக என்ஆர்இ (NRE) கணக்கு அல்லது என்ஆர்ஓ (NRO) கணக்குகளைத்தான் வைத்துக்கொள்ள முடியும்.

என்ஆர்ஓ என்பது இந்திய ரூபாயில் டெபாசிட் செய்யலாம். என்ஆர்இ கணக்கு என்பது குறிப்பிட்ட ஏழு கரன்சிகளில் மட்டும் டெபாசிட் செய்ய முடியும். அதாவது, அமெரிக்க டாலர், பவுண்ட்ஸ், ஸ்டெர்லிங், ஆஸ்திரேலியன் டாலர், ஜப்பானின் யென் உட்பட ஏழு கரன்சிகளில் மட்டுமே டெபாசிட் செய்ய முடியும்.

என்ஆர்இ-ல் என்ன நன்மை எனில், எந்த கரன்சியில் டெபாசிட் செய்கிறோமோ, அதே கரன்சியில் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். அதாவது, ரூ.63-ஆக இருக்கும் போது அமெரிக்க டாலரில் டெபாசிட் செய்தால், சில நாட்களுக்குப் பிறகு அது ரூ.68 என அதிகரித்து இருந்தால், அந்த மதிப்பிலேயே பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.
வெளிநாட்டு இந்திய வங்கிகளில் என்ஆர்இ கணக்கு களுக்கு குறைந்த வட்டி விகிதமும், என்ஆர்ஓ கணக்குகளுக்கு சாதாரண சேமிப்புக் கணக்கு போல, 7%, 8% வட்டி விகிதமும் வழங்கப்படுகிறது. இதில் எஃப்சிஎன்ஆர் என்பது டெபாசிட் கணக்கு. இந்தக் கணக்கில் ஒரு வருடம் முதல் 3 வருடம், 3 வருடம் முதல் 5 வருடம் என இரண்டு வகையான கணக்குகள் உள்ளன.

2013-ம் ஆண்டு ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கியின் கவர்னராக பதவியேற்ற சமயத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகபட்சமாக ரூ.68.85 என்ற உச்சத்தை எட்டியிருந்தது. இந்தியப் பொருளாதாரமும் பெரிய நெருக்கடியை சந்தித்து வந்தது. எனவே, இந்த சிக்கலைத் தீர்க்க ஓர் எளிய நட வடிக்கையை எடுத்தார் ரகுராம் ராஜன். அதாவது, என்ஆர்ஐ-க்கள் வெளிநாடுகளில் உள்ள இந்திய வங்கிகளில் 1 லட்சம் டாலரை எஃப்சிஎன்ஆர் கணக்கில் டெபாசிட் செய்தால், இதை அடிப்படையாக வைத்து வங்கிகள் 10 லட்சம் டாலர் வரை அவர்களுக்கு கடனாக வழங்கும் என்பதுதான். 



கடனாக வழங்கப்பட்ட பணத்தையும் அதே எஃப்சிஎன்ஆர் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும். யார், யாரெல்லாம் கடன் கேட்டார்களோ, அவர்களுக்கு எல்லாம் கடன் வழங்கப்பட்டது. இதில் அதிகபட்சம் என்கிற வரைமுறை எதுவும் விதிக்கப்படவில்லை. என்ஆர்ஐ-க்கள் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் எஃப்சிஎன்ஆர் கணக்கில் டெபாசிட் செய்யலாம்.

டெபாசிட் ஆகும் 1 லட்சம் டாலருக்கான வட்டியை வங்கிகள் வழங்க வேண்டும். இதுமட்டுமின்றி, கடனாக வழங்கப்பட்ட பணத்துக்கும் வங்கிகள் வட்டி வழங்க வேண்டும். இதில் கடன் வாங்கிய என்ஆர்ஐ-க்களுக்கு வட்டி குறைவு, டெபாசிட் செய்த பணத்துக்கு வட்டி அதிகம் என்பதால் அதிகளவிலான என்ஆர்ஐ-க்கள் பணத்தை எஃப்சிஎன்ஆர் கணக்கில் டெபாசிட் செய்தனர். இதனால் என்ஆர்ஐ-க்களுக்கு 16 முதல் 18 சதவிகிதம் வரை வட்டி திரும்ப கிடைக்கும் என்ற சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் வெளி நாட்டில் உள்ள ஏராளமான என்ஆர்ஐ-க்கள் இந்த எஃப்சிஎன்ஆர் கணக்கில் டெபாசிட் செய்தனர்.
பெரும்பாலான வெளிநாட்டு வங்கிகளில் 3%, 4% என்றளவில்தான் வட்டி கிடைக்கும். இந்தியா வளர்ந்து வரும் நாடு என்பதால் தான் இங்கு 8% என்றளவில் வட்டி வழங்கப்படுகிறது.

இது மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள வங்கிகளில் டெபாசிட் செய்யும் பணத்துக்கு 8% வட்டி விகிதம் வழங்குவதைப் போல, வேறு எந்த நாடுகளிலும் வழங்குவது கிடையாது. அப்படியே வளர்ந்து வரும் நாடுகளில் வழங்கினாலும் அந்த நாடுகளில் வலுவான வங்கிக் கட்டமைப்பு இல்லை. ஆகையால் யாரும் அங்கு டெபாசிட் செய்வதில்லை.

லிபார் (LIBOR - London Interbank Offered Rate) வங்கி கணக்கீட்டின் படி, எஃப்சிஎன்ஆர் கணக்கில் டெபாசிட் செய்த என்ஆர்ஐ-களுக்கு, உதாரணமாக சுமார் 5.5% வரை வட்டி வழங்கப்படுகிறது. லிபார் வட்டி விகிதம் 1 முதல் 1.5% வரை குறிப்பிட்ட காலத்துக்கொரு முறை மாறிக் கொண்டே இருக்கும்.

எஃப்சிஎன்ஆர் கணக்கில் காலக்கெடுவுக்கு முன்பு பணத்தை எடுக்க வேண்டும் என்றால் டெபாசிட் 
செய்ததற்கான வட்டி மிகக் குறைந்தளவிலேயே கிடைக்கும். ஆனால், 2013-ல் ஏற்பட்ட நெருக்கடி நிலைமை காரணமாக ரகுராம் ராஜன் வழங்கிய சலுகையின்படி, 3 வருடம் கழித்த பிறகுதான் பணத்தை எடுக்க முடியும் என்ற சூழ்நிலையை உருவாக்கினார்கள்.

ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால், என்ஆர்ஐ-க்கள் அதிகளவில் டெபாசிட் செய்தனர். இவ்வாறு வங்கிகளில் என்ஆர்ஐ-க்கள் டெபாசிட் செய்ததால், வங்கிகளுக்கு 24 பில்லியன் டாலர் (ரூ.1,60,000 கோடி) அளவில் ஏராளமான பணம் வங்கிகளுக்கு கிடைத்தது. இதனால் இந்தியாவின் அந்நிய செலாவணிக் கையிருப்பும் அதிகரித்தது.  

ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனின் இந்த நடவடிக்கையைத் தான் வெடிகுண்டு என்கிறார் சுவாமி. அது வரும் டிசம்பர் மாதம் வெடிக்கும் என்றும் குறிப்பிடுகிறார். உண்மையில் 24 பில்லியன் டாலர் வங்கிகள் பணத்தை திருப்பிச் செலுத்த வேண்டும் என்பது கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய ஒன்றுதான். ஆனால், இது ரகுராம் ராஜனுக்கு தெரியாத விஷயமல்ல. அவர் சொல்லித்தான் சுவாமிக்கு இந்த விஷயம் தெரிந்திருக்கிறது. 

வங்கிகள் என்ஆர்ஐ-க்களுக்கு 24 பில்லியன் டாலர் திருப்பி செலுத்த வேண்டிய சூழ்நிலையால் இந்தியப் பொருளாதாரம் பாதிப்ப டையாது. இதனால் நாணயச் சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வேண்டுமானால் கொஞ்சம் குறையலாம். நவம்பர், டிசம்பர் காலகட்டத்தில் இந்தியாவுக்கு அந்நியச் செலாவணி கிடைக்காத பட்சத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு கொஞ்சம் குறைய வாய்ப்புள்ளது.

இதற்கு ரிசர்வ் வங்கி தயார் நிலையில் லையெனில், இந்திய ரூபாயின் மதிப்பு நிச்சயம் சரிவடையும் சூழ்நிலை ஏற்படும். ஏனெனில் சர்வதேச பொருளாதார நிலைமை பலவீனமாக இருப்பது, இந்தியப் பொருளாதாரத்தில் நிலவும் மந்தநிலை மற்றும் இந்தியாவின் ஏற்றுமதியும் கடந்த ஒராண்டுக்கும் மேலாக தொடர்ந்து சரிவடைந்துக் கொண்டே வருகிறது.
இந்த சூழ்நிலையில் அதிகளவு பணம் இந்தியாவிலிருந்து வெளியேறும்போது இந்திய ரூபாயின் மதிப்பு குறைய வாய்ப்புள்ளது. 2013-ம் ஆண்டில் இந்திய ரூபாயின் மதிப்பு நெருக்கடியை சந்தித்தபோது என்ஆர்ஐ-க்களுக்கு எஃப்சிஎன்ஆர் கணக்கில் வட்டி விகித சலுகை வழங்கியதுபோல், மீண்டும் வேறு ஏதாவது ஒரு சலுகை வழங்க வேண்டும். இல்லையெனில் ரிசர்வ் வங்கியிடம் உள்ள அந்நிய செலாவணிக் கையிருப்பு  குறையும் ஆபத்து ஏற்படலாம். 

இது குறித்து கவலைப்படத் தேவையில்லை. அதற்கான திட்டத்தை தெளிவாக வைத்திருக்கிறோம் என்று சொல்லி இருக்கிறது ரிசர்வ் வங்கி. ஆனால், ரிசர்வ் வங்கியிடம் அப்படி எந்தத் திட்டமும் இல்லை என்பதால்தான், இதை டைம் பாம் என்கிறார் சுவாமி.

ரிசர்வ் வங்கி முன்னெச் சரிக்கை நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைய வாய்ப்புள்ளது. சுவாமி சொன்ன மாதிரி இந்த டைம் பாம் வெடிக்குமா அல்லது புஸ்வானமாகிவிடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்’’ என்று முடித்தார் ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன்.

பொறுத்திருந்துதான் பார்ப்போமே!





No comments:

Post a Comment