Monetize Your Website or Blog

Friday, 17 June 2016

பட்டப்பகலில் இங்கிலாந்து பெண் எம்.பி. சுட்டுக் கொலை!

லண்டனில் ஆள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பட்டப்பகலில் ஒரு பெண் எம்.பி. சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் நீடிக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை தீர்மானிப்பதற்கான பொது வாக்கெடுப்பு, வருகின்ற 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக, பிரிட்டன் முழுவதும் ஆளும் பழைமைவாத (கன்சர்வேட்டிவ்) கட்சியினரும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியைச் சேர்ந்தவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில், ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் நீடிக்க வேண்டும் என்பது தொழிலாளர் கட்சியினரின் நிலைப்பாடாக உள்ளது. வாக்கெடுப்பு நாள் நெருங்கி வருவதையொட்டி, பிரிட்டன் முழுவதும் அசாதாரணச் சூழல் நிலவி வருகிறது.



இந்நிலையில், தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பியான ஜோ காக்ஸ், தனது தொகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்தார். நேற்று காலை அவர் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, அங்கிருந்த இரு நபர்களுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சண்டையை ஜோ காக்ஸ் விலக்க முயன்றபோது, மோதலில் ஈடுபட்டவர்களில் ஒருவர் தனது கைத் துப்பாக்கியால் ஜோ காக்ஸை சரமாரியாக சுட்டார். பின்னர், தன்னுடன் மோதலில் ஈடுபட்ட நபரையும் சுட்டுவிட்டு அங்கிருந்து அவர் தப்பி ஓடினார்.

சம்பவம் பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஜோ காக்ஸ் உள்ளிட்ட இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். 

ஆனால் அதிகளவு ரத்தம் வெளியேறியதால், மருத்துவர்களின் சிகிச்சை பலனின்றி ஜோ காக்ஸ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக தற்போது ஒருவர் கைது செய்யப்பட்டு அவரிடம் தீவிர விசாரணை நடத்திவரப்படுகிறது. இக்கொலைக்கான காரணம் பற்றி இப்போது எதுவும் கூற முடியாது என போலீஸார் தெரிவித்து உள்ளனர்.



No comments:

Post a Comment