Monetize Your Website or Blog

Tuesday, 21 June 2016

இடுக்கண் களைந்த நட்பு..! நெகிழ வைத்த மருத்துவக் கலந்தாய்வு

மருத்துவக் கல்விக்கான கலந்தாய்வில் முன்னாள் ராணுவத்தினருக்கான ஒதுக்கீட்டில் முதல் இடம் பெற்ற மாணவி வர்ஷினி, பொதுப்பிரிவை சேர்ந்த தனது தோழி ஜனனிக்கு அந்த இடத்தை விட்டுக்கொடுத்துள்ளார். இந்த நெகிழ்ச்சி சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்வதற்கு 2,650 இடங்கள் உள்ளன. இதில் அகில இந்திய ஒதுக்கீடு 15 சதவீதம் போக, 2,253 இடங்கள் மாநில ஒதுக்கீட்டுக்கு உள்ளன. 6 சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் மொத்தம் 760 இடங்கள் இருக்கின்றன. இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 290 இடங்கள் போக மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு 470 இடங்களும், 2 இ.எஸ்.ஐ. கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடாக 130 இடங்களும் இருக்கின்றன. சிறப்பு ஒதுக்கீட்டுக்கான மருத்துவ கலந்தாய்வு சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நேற்று தொடங்கியது. முதலில் முன்னாள் ராணுவத்தினர் ஒதுக்கீட்டிற்கான மாணவ-மாணவிகள் அழைக்கப்பட்டனர். அவர்களில் 5 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  இதில் ஒரு இடம் சென்னை மருத்துவக் கல்லூரியிலும், 4 இடங்கள் மற்ற மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கும் கொடுக்கப்பட்டது.




கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட மாணவி வர்ஷினி 199 கட் ஆப் மதிப்பெண் பெற்று முதல் இடத்தை பெற்றார். 198.75 மதிப்பெண் பெற்று ஜனனி 2வது இடத்தை பெற்றிருந்தார். தோழிகளான இருவரில் வர்ஷினிக்கு நேற்றே சென்னை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க வாய்ப்பு இருந்தது. ஆனால் ஜனனியும் சென்னை மருத்துவ கல்லூரியில் படிக்க வேண்டும் என ஆர்வத்துடன் இருந்தார். எனவே ஜனனியின் விருப்பத்தை நிறைவேற்ற வர்ஷினி விட்டுக்கொடுக்க முடிவெடுத்தார். இன்று (ஜூன் 21ம் தேதி) நடைபெறும் பொது கலந்தாய்வில் தனக்கு எப்படியும் சென்னை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்பதால், தனது முடிவு குறித்து தந்தை சுப்பிரமணியனிடம் தெரிவித்தார் வர்ஷினி. மகளின் இந்த முடிவுக்கு எந்த எதிர்ப்பும் தந்தை தெரிவிக்கவில்லை. இதனால் நேற்றைய கலந்தாய்வில் வர்ஷினி எந்த இடத்தையும் தேர்ந்தெடுக்காமல் ஜனனிக்கு விட்டுக்கொடுத்தார். இதனால் ஜனனி சென்னை மருத்துவக்கல்லூரியை தேர்ந்தெடுத்தார். இதற்காக அவர் வர்ஷினிக்கு நன்றி தெரிவித்தார். இதைப்பார்த்த அனைவரும் வர்ஷினியை பாராட்டினர். 

இது குறித்து வர்ஷினி கூறுகையில், "நானும் ஜனனியும் திருச்சி சமயபுரம் எஸ்.ஆர்.வி.மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் ஒரே வகுப்பில் படித்தோம். அவள் பொதுப்பிரிவை சேர்ந்தவள். நான் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவள் நான் முன்னாள் ராணுவத்தினருக்கான ஒதுக்கீட்டில் முதல் இடம் பிடித்து இருந்தேன். நான் இதில் சென்னை மருத்துவக்கல்லூரியை தேர்ந்து எடுத்தால், ஜனனிக்கு சென்னை மருத்துவக்கல்லூரி கிடைக்காது. ஆனால் பொது கலந்தாய்வில் சென்னை மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து படிக்க எனக்கு நிச்சயம் இடம் கிடைக்கும். எனவே நான் ஜனனிக்கு விட்டுக்கொடுத்தேன். இதில் ஒரு மகிழ்ச்சி இருக்கிறது. இதை பெரிய உதவியாக நான் கருதவில்லை" என்றார்.

நாகை மாவட்டம், சீர்காழியை சேர்ந்த ஜனனி, "முதலில் வர்ஷினிக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். அவள் செய்தது பெரிய உதவி. எனக்கு சென்னை மருத்துவக்கல்லூரியில் படிக்க விருப்பம் இருந்தது. அந்த விருப்பம் வர்ஷினி மூலம் நிறைவேறி உள்ளது. வர்ஷினி விட்டுக்கொடுக்கவில்லை என்றால் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த எனக்கு பொது கலந்தாய்வில் சென்னை மருத்துவக்கல்லூரியில் படிக்க இடம் கிடைத்து இருக்காது. எம்.பி.பி.எஸ். முடித்ததும் முதுகலை மருத்துவத்தில் புற்றுநோய் துறையை எடுத்து படிப்பேன்" என்றார்.






No comments:

Post a Comment