3 தொகுதிகளில் போட்டியிட்ட நாங்கள் 2 லட்சம் வாக்குகள் வாங்கியிருக்கிறோம், 104 தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக 10 லட்சம் வாக்குகள்தான் வாங்கியிருக்கின்றன. இதுதான் எங்களுக்கும், அவர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்று மக்கள் தேமுதிக தலைவர் சந்திரகுமார் கூறினார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியுடன் தேமுதிக கூட்டணி வைத்ததை எதிர்த்த சந்திரகுமார், விஜயகாந்த் மனைவி பிரேமலதா அவரது சகோதரர் சுதீஷ் ஆகியோரை கடுமையாக விமர்சித்தார். "தேமுதிக விஜயகாந்த் கட்டுப்பாட்டில் இல்லை, பிரேமலதா, சுதீஷ் கட்டுப்பாட்டில் இருக்கிறது" என்று புதிரை கிளப்பினார். இதைத் தொடர்ந்து கட்சியில் இருந்து சந்திரகுமார் அதிரடியாக நீக்கப்பட்டார். இதையடுத்து, மக்கள் தேமுதிக என்ற கட்சியை ஆரம்பித்து திமுக கூட்டணியில் சேர்ந்தார். 3 தொகுதிகளில் போட்டியிட்ட சந்திரகுமார் தலைமையிலான கட்சி தோல்வியை தழுவியது.
இதுகுறித்து சந்திரகுமார் கூறுகையில், "பணத்தால் நாங்கள் தோற்கடிக்கப்பட்டாலும், 1,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருக்கிறோம். 3 தொகுதிகளில் போட்டியிட்ட நாங்கள் 2 லட்சம் வாக்குகள் வாங்கியிருக்கிறோம், 104 தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக 10 லட்சம் வாக்குகள்தான் வாங்கியிருக்கின்றன, இதுவே அக்கட்சியில் இருந்து பிரிந்துவந்த எங்களுக்கும், அவர்களுக்கும் உள்ள வித்தியாசம்.
தமிழ்நாட்டு மக்களுக்கும், தொண்டர்களுக்கும் தேமுதிக துரோகம் செய்துவிட்டது, அதனை சுட்டிக்காட்டுவதற்காக கட்சியில் இருந்து வெளியேறினோம். இனிமேல் எங்கள் பாதை தனியாக இருக்கும், இன்னும் கொஞ்ச நாட்களில் தேமுதிக கட்சியே இருக்காது, அதனை தேட வேண்டிய நிலைவரும்" என்று கூறினார்.

No comments:
Post a Comment