Monetize Your Website or Blog

Tuesday, 7 June 2016

'பேரறிவாளனை விடுதலை செய்ய ஏன் தாமதம்?' -ஆதங்கப்படும் நடிகர் விஜய் சேதுபதி

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரும் 25 ஆண்டுகளாக சிறையில் வாடுகின்றனர். இவர்களின் விடுதலைக்காக வருகிற 11-ம் தேதி, வேலூரில் இருந்து புனித ஜார்ஜ் கோட்டையை நோக்கி, கோரிக்கைப் பேரணியை நடத்த இருக்கிறார் பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள்.


இந்தப் பேரணிக்கு தமிழக அரசு அனுமதி கொடுத்துவிட்டது. தற்போது மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர் எனப் பலரும் பேரணிக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். 

பேரறிவாளனின் விடுதலைக்காக நடத்தப்படும் பேரணி குறித்துப் பேசும் நடிகர் விஜய் சேதுபதி, " பேரறிவாளன் 25 வருடங்களாக சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதுவும் தனிமைச் சிறையில் இத்தனை ஆண்டுகளாக இருந்து வருகிறார். அவருடைய அம்மா அற்புதம் அம்மாள் தன்னுடைய மகனை சிறைக்குள் இருந்து வெளியே கொண்டு வருவதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறார். 'இன்று வரையில் தான் நிரபராதி' என பேரறிவாளன் சொல்லிக் கொண்டு வருகிறார்.
அவரை விசாரணை செய்த போலீஸ் அதிகாரியும், 'பேரறிவாளன் நிரபராதி' என சொல்லியிருக்கிறார். பிறகு ஏன் அவரை விடுதலை செய்ய இவ்வளவு நாள் தாமதம் என்று தெரியவில்லை. 25 வருடங்கள் தனிமைச் சிறை என்பது மிகவும் கொடுமையானது. எப்படிச் சொல்வது என்றே தெரியவில்லை. அவரை விடுதலை செய்வதற்காக வேலூரில் இருந்து கிளம்பும் பேரணியில் நாம் அனைவரும் பங்கெடுக்க வேண்டும். பேரணிக்கு அனுமதி கொடுத்த தமிழக அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார். 

நடிகர் சத்யராஜை தொடர்ந்து திரையுலகப் பிரமுகர்கள் பலரும் பேரறிவாளனுக்காக குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். 



 




No comments:

Post a Comment