
லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார்.
கேரள மாநிலத்தில் முதல்வராக பதவியேற்ற பின் முதன்முறையாக பினராயி விஜயன், தலைமைச்செயலக ஊழியர்களிடையே பேசினார். அப்போது அவர், ''ஆட்சி ஒரு சுழல் நடவடிக்கை. ஆட்சியாளர்கள் மாறி, மாறி வருவார்கள். ஆனால் ஆட்சி நிர்வாகம் அதே நிலையில் தொடர வேண்டும். நிர்வாகத்தை எப்படி முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும், முன்னேற்றம் காண எடுக்கப்படும் நடிவடிக்கைகள், முயற்சிகள் குறித்து புதிய அரசு ஒரு கொள்கையை வைத்து உள்ளது. கொள்கை முடிவுகளை நிறைவேற்ற அனைத்து அரசு ஊழியர்களின் ஒத்துழைப்பு அவசியம்.
லஞ்சம், ஊழலை எனது அரசு ஒருபோதும் ஆதரிக்காது. ஊழல் குற்றச்சாட்டுக்களில் தொடர்புடைய அரசு ஊழியர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். லஞ்சம் வாங்கும் நோக்கத்தோடு, பொதுமக்களின் கோரிக்கை நிராகரித்து தாமதப்படுத்தும் அரசு ஊழியர்கள் எந்த பதவியில் இருந்தாலும் அவர்கள் பதில் கூறியே ஆகவேண்டும்.
பொதுமக்களின் தேவைகளை நிவர்த்தி செய்யாமல் காலம் தாழ்த்தும் நடவடிக்கை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. பணியின்போது மொபைல் போன் உபயோகத்தை குறைக்க ஊழியர்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட வேண்டும். தாமதத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது" என்றார்

No comments:
Post a Comment