Monetize Your Website or Blog

Saturday, 30 July 2016

சித்த மருத்துவத்தின் அருமையை உலகம் உணரத்தொடங்கி உள்ளது!'



சென்னை, லயோலா கல்லூரியில் உள்ள தாவரவியல் மற்றும் உயிர் தொழில் நுட்பவியல் துறை மற்றும் பூச்சியியல் ஆய்வு நிறுவனம் சார்பில் பேராசிரியர் ச.இன்னாசி முத்து , பெ.பாண்டிக்குமார் மற்றும் சு.முத்தீசுவரன் ஆகியோர் இணைந்து எழுதிய 'அனுபவ சித்த மருத்துவ முறைகள்' நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. லயோலா கல்லூரியின் முதல்வர் ஆரோக்கியசாமி முன்னிலையில், மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழும தலைமை இயக்குநர் இராமசுவாமி, நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.


பேராசிரியர் இராமசுவாமி பேசும்போது,"  'உணவே மருந்து மருந்தே உணவு' என்று வாழ்ந்தவர்கள் நாம். இதை மறந்து போனதால், இன்று நோய்களின் பிடியில் சிக்கித் தவிக்கிறோம். பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் தங்களது வணிக நலனுக்காக, 'ஆங்கில மருந்துகள்தான் சிறந்தவை' என்ற மாயத் தோற்றத்தை மக்களிடையே  ஏற்படுத்தியுள்ளன. நமது சித்தமருத்துவ முறை ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையானது. இதில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருக்கின்றன. நாம்தான் அதன் பெருமையை உணராமல் இருக்கிறோம். மூட்டில் வலியோ, கழுத்தில் சுளுக்கோ இருந்தால் மருத்துவமனை சென்று ஆயிரக்கணக்கில் செலவு செய்யத் தேவையில்லை. சித்தமுறையில் வலி உள்ள இடத்தில் வர்ம சிகிச்சை மூலம் கைகளால் பிடித்துவிட்டாலே போதும், சில நிமிடங்களில் வலி குணமாகும்.


அலோபதி மருத்துவம், நோயாளியாக மனிதனைப் பார்க்கும். சித்த மருத்துவம் மனிதனை மனிதனாக பார்த்து நோயைக் குணப்படுத்த தீர்வை சொல்லும். இதனால்தான் சித்த மருத்துவம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆனாலும் மண்ணில் உயிர்ப்போடு இருக்கிறது. தமிழகத்தில் பாளையங்கோட்டையில்தான் சித்த மருத்துவக்கல்லூரி முதன்முதலாக தொடங்கப்பட்டது.  சித்த மருத்துவத்தில் தாதுக்கள், சிறிய உயிரினங்கள் கடலில் கிடைக்க கூடிய முத்து, சிப்பி, பவளம், கடல் நுரை உள்ளிட்டவை கூட  மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன. அனுபவம் வாய்ந்த சித்த மருத்துவர்கள் தமிழ்நாட்டில் இன்னும் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் உள்ள சித்த மருத்துவ ஞானத்தை ஆவணப்படுத்தும் நோக்கில், எங்கள் அமைப்பும் செயல்பட்டு வருகிறது. அண்டை நாடான இலங்கையில், சித்த மருத்துவம் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது. பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வு பெருகிவருகிறது. உலகம் முழுக்கவே சித்த மருத்துவத்தின் அருமை, பெருமையை உணரத் தொடங்கியுள்ளார்கள்"  என்றார்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்களும், உயிர் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களும் பங்கேற்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த சித்த மருத்துவர்களுக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன. கலந்து கொண்ட அனைவருக்கும் உயிரி பூச்சியியல் துறை சார்பில் இயற்கை உணவு பரிமாறப்பட்டது.




லுட்விக்: நோயாளிகளுக்கு உதவும் சுட்டிப் பையன்!


ல்சைமர் என்னும் நரம்புச்சிதைவு நோய் ஏற்பட்டால் நினைவு தவறும், வாய் குழறும், கை, கால்களை உபயோகிக்க இயலாது. தினசரி வேலைகளைச் செய்து கொள்ள முடியாது. அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அபேசியா என்னும் மூளை பாதிப்பு நோயும் உடனிருக்கும். அதேபோல் டிமென்சியா என்னும் மனநலக் கோளாறு  ஏற்பட்டால், நினைவுப் பிரச்னை, அதிகரிக்கும்  குழப்பநிலை, ஆர்வமின்மை, மனச்சோர்வு  ஆகியன ஏற்படும். 2050 களில் இந்நோயின் தீவிரம் அதிகரிக்கலாம் என எச்சரிக்கிறது மருத்துவ உலகம்.இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவே வரமாய் வருகை தந்திருக்கிறான் லுட்விக்.
 
முள்ளம்பன்றித் தலையும், பச்சைக் கண்களுமாய் சிறுசிறு முக பாவனைகளுடன் 102 செ.மீ உயரமுள்ள குட்டி ரோபோ பையன்தான் லுட்விக். லுட்விக் விட்ஜென்ஸ்டீன் எனும் தத்துவ ஞானியின் நினைவாக  லுட்விக் என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது இவனுக்கு. கனடாவின் டொரன்டோ பல்கலைக்கழகமும் மிட்டாக்ஸ் என்ற தன்னார்வ அமைப்பும் இணைந்து இந்த ரோபோவை உருவாக்கியுள்ளனர்.



நார்த் யார்க்  நகரத்திலுள்ள அல்சைமர் மற்றும் டிமென்சியா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்றுவரும் ஒன் கென்டில் என்ற சிறப்பு இல்லத்தில் லுட்விக் முதல் முறையாக களமிறக்கப்பட்டான். அவனை வைத்துச் செயல் விளக்கம் அளித்தனர். விநாடிக்கு 28 செ.மீ வரை நடக்கும் வல்லமை கொண்ட இவனுடன்  இரண்டு கேமராக்கள் இருக்கும்.
 
நோயின் ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் பத்து நோயாளிகளுடன் இவனை வைத்துப் பரிசோதனை மேற்கொண்டனர். ஆரம்பத்தில் லுட்விக் அவர்களுக்கு வீட்டு வேலைகளைச் செய்து கொடுத்தும், அவனால் பேச்சுக்களைச் சரியாய் உணர முடியவில்லை. எனவே மேலும் சில முன்னேற்றங்களுக்குப் பிறகு பேசுவதைப் புரிந்து கொள்வது, அதற்குப் பதிலளிப்பது போன்ற திறன்களை அவனுள் உட்புகுத்தினர்.

அவனை ரிமோட் உதவியுடனும் கட்டுப்படுத்திக் கொள்ளலாம். எதிரே இருப்பவர்கள் பேசும் விதத்தை வைத்தே அவர்கள் எந்த மனநிலையில் இருக்கிறார்கள், என்பதை கணித்துவிடுவான். உரையாடலை எழுத்துக்களாய் மாற்றும் திறமையிலும் லுட்விக் வல்லவன். இப்போது லுட்விக் அல்சைமர் நோயாளிகளின் உற்ற நண்பனாகி இருக்கிறான்.


லுட்விக்கைப் பற்றி அதன் தயாரிப்புக்குழுவினைச் சேர்ந்த விஞ்ஞானி Dr. பிராங்க் ரூட்சி கூறும்போது, "தற்சமயம் கனடாவில் கணிசமான மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் சில வருடங்களில் இது இன்னும் உயரும். எனவே லுட்விக்கின் சேவை நமக்குத் தேவை என்றாகி விடும். எங்கள் பல வருட ஆராய்ச்சியின் முதல் படியே இந்தச் சுட்டிப் பையன்" என்கிறார்.
 
இந்த லுட்விக் ரோபோவை ரோபோகிண்ட் என்னும் நிறுவனம்,  3000 டாலர் மதிப்பில் விற்பனைக்குக் கொண்டு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

லுட்விக்கின் வருகைக்குக் காத்திருக்கிறது கனடா...   




வின்டோஸ் 10 ஐ இலவசமாக அப்கிரேடு செய்து கொள்ள இன்றுதான் கடைசி வாய்ப்பு!


ன்றைய சூழலில் பொழுதுபோக்கு சாதனம் என்பதைத் தாண்டி, அடிப்படை அத்தியாவசியப் பொருளாக மாறி இருப்பது இரண்டு. ஒன்று, மொபைல். மற்றொன்று, கணினி. மொபைலைப் பற்றிச் சொல்லத்தேவையே இல்லை. அந்த அளவிற்கு நம்மை ஆட்கொண்டு இருக்கிறது. கணினி,  ஐடி கம்பெனி முதல் அண்ணாச்சி கடை கணக்குவழக்கு அனைத்து அலுவல்களுக்கும் அத்தியாவசியமாகிவிட்டது. 


இந்த கணினிகள்,  பல்வேறு இயங்குதளம் என்று கூறப்படும் Operating system (O.S) யினால் இயங்குகின்றது. அதில் முக்கியமானது  வின்டோஸ் (Windows) இயங்குதளம். இதன் கீழ் Windows 7 Home premium, Windows 7 professional, Windows 7 ultimate, Windows 8 pro, Windows 8.1 pro என பல இருக்கின்றன. அதனுடன் Windows 10  என்னும் இயங்குதளத்தை ரெட்மாண்ட் -  பேஸ்டு நிறுவனம், கடந்த வருடம் ஜீலை 29 ம் நாள் அறிமுகம் செய்தது. இந்த இயங்குதளமானது பல்வேறு கணினிகள், மடிக்கணினிகள், டேப்லட்கள், மற்றும் X - box விளையாட்டு சாதனங்களுக்கும் உகந்தபடி வடிவமைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், பழைய இயங்குதளமான வின்டோஸ் 7 & 8  போன்றவற்றிலிருந்து, வின்டோஸ் 10 ற்கு இலவசமாக மேம்படுத்திக்கொள்ளும் வசதியையும் அறிமுகம் செய்தது.
இந்த இலவசமாக மேம்படுத்திக்கொள்ளும் வசதி இன்றுடன் நிறைவடைகிறது. மேலும், நாளை முதல் இதன் விலை ரூ.8000/-யை தொடும் என ரெட்மாண்ட் - பேஸ்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும் நிறுவனம் வின்டோஸ் 10 ஐ மக்களிடத்தில் பெரிய அளவில் கொண்டு சேர்க்க  வேண்டும் என வின்டோஸ் நிறுவனம் உறுதியுடன் இருக்கிறது. அதன் மூத்த இயக்குனர் லிசா குர்ரி பேசுகையில், "இதனை மக்களிடத்தில் சேர்க்க நாங்கள் கடினமாக வேலை பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆம், மக்கள் விரும்பும் இயங்குதளத்திற்காக கடுமையாக வேலை பார்க்கிறோம்" என்று கூறியதன் மூலம் அந்நிறுவனத்தின் முனைப்பு தௌிவுறுகிறது.
அப்படி என்னதான் இருக்கிறது இந்த வின்டோஸ் 10 ல்...?,
குரல் சார்ந்த மெய்நிகர் உதவியை Cortana எனும் வசதி செய்கிறது:
முன்பு வின்டோஸ் கைபேசியில் காணப்பட்ட cortana  எனும் உதவியாளர், தற்பொழுது உங்கள் கணினியிலும். இந்த வசதி மூலம் நீங்கள் குரலினால் ஆணையிட்டால், அது அனைத்து தகவல்களையும் சேகரித்துவிடும்.  வானிலை தகவல்கள் முதல் மின்னஞ்சல் அனுப்புவது வரை அனைத்து வேலைகளையும்  இந்த வசதி மூலம் செய்துமுடித்துவிடலாம். மேலும் இதனை விண்டோஸ் மொபைலில் மட்டுமல்லாமல் ஆண்ட்ராய்டு மொபைலுடனும் தொடர்பு கொள்ளும் வசதி இதில் உள்ளது.
செளகரியமானது:
விண்டோஸ் 8 இயங்குதளம் அதன் பயன்பாட்டாளர்கள் மத்தியில் மிகவும் அசெளகரியத்தை ஏற்படுத்தியது. இதற்கு காரணம் அதன் கடுப்பேற்றும் Menu ஆப்ஷன்தான். Modern UI என்று சொல்லப்படும் இது, தொடுதிரை கணினிகளுக்கு மட்டும் சாதகமாக திகழ்ந்தது. ஆனால், இந்த இயங்குதளத்தில் Menu Option ஐ சற்று எளிதில் கையாளும் வகையில் வடிவமைத்துள்ளனர்.மேலும் நமக்கு தேவையான செயலிகளை ஏற்ற இடத்தில் மாற்றி அமைத்துக்கொள்ளலாம் என்பதும் இதன் சிறப்பு.


பாதுகாப்பானது:
விண்டோஸ் 7 இயங்குதளம் வந்து ஏழு ஆண்டுகள் ஆகப்போகிறது. விண்டோஸ் 8 பயன்படுத்தும் மக்கள் பெரும்பாலும் விண்டோஸ் 10க்கு மாறிவிட்டார்கள். ஏழு ஆண்டுகள் பழமையான ஒரு இயங்குதளத்தை பயன்படுத்துவது என்பதே, தற்போதைய டெக் உலகில், பாதுகாப்பை குறைக்கும் செயல்தான். Microsoft Hello எனும் வசதி நம் கணினியின் கேமரா மூலம், நம் முகத்தினை அடையாளம் கண்டுகொண்ட பின்புதான் கணினியை பயன்படுத்த அனுமதி அளிக்கிறது. இதனுடன் Device guard மற்றும் Microsoft passport வசதிகளும் உள்ளன. Device guard என்பது நிறுவனங்கள், தங்கள் தகவல்களை பாதுகாப்புடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் தகவல் சுரண்டலையும் தடுக்கின்றது. Microsoft passport ஆனது வலைதளங்களைப் பாதுகாப்புடன் கையாள உதவுகின்றது.
ஒரே திரையில் பல பேர் விளையாடலாம்:
வின்டோஸ் 10 மூலம், பல பேர் தனித்தனியாக  விளையாடும் X -box விளையாட்டுக்களை ஒரு திரையில் இணைத்து சுருக்கிக் கொண்டு வந்துவிடலாம். இது விளையாட்டாளர்களுக்கு நண்பேன்டா!..
மைக்ரோசாஃப்ட் எட்ஜ்:
விண்டோஸ் 10 ல் உள்ள Edge எனும் வசதி, பல மடங்கு வேகத்தினை உள்ளடக்கியது. இந்த Chrome ஐ விட 112 மடங்கு வேகமானது. வேகத்துடன், பல விசயங்களையும் நண்பர்களுடன் எளிதில் பகிரும் வசதியும் இதில் உள்ளது. Cortana மூலமும் இதனை உபயோகிக்கலாம்.
2 இன் 1:
வளரும் சந்தையில் டேப்லட்டும், 2 in 1 ஆக பயன்படுத்தப்படும் 'ஃஹைப்ரிட்' கணினிகளுமே பிரசித்தி. இதனை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்ட இந்த இயங்குதளம் விசைப்பலகைக்கும், தொடுதிரைக்கும் ஏற்ற வகையில் எல்லா சூழ்நிலைக்கும் கைகொடுக்கும்.
விர்ச்சுவல் ஸ்கிரீன்:
இந்த வசதி மூலம் பல கணினிகள் பயன்பாட்டை தவிர்க்கலாம். எப்படியென்றால் நம் கணினி திரையினை நம் தேவைக்கு ஏற்ப பல பகுதிகளாய் பிரித்து, மாற்றி அமைத்து, அதில் வேறு வேலையினையும் கையாளலாம். இதனை பயன்படுத்த 'task bar' ல் இருக்கும் 'new desktop' என்பதை click செய்தாலே போதும்.
இலவசமானது:
விண்டோஸ் 10 ற்கு மேம்படுத்திக் கொள்வதினால் வேகமும், பாதுகாப்பும் அதிகரிக்கின்றது மட்டுமல்லாமல் பல வசதிகளைகளைக் கொண்டு, வேலையினை சுலபமாக முடித்துக்கொள்ளலாம். இந்த அரிய வாய்ப்பு இலவசமாக கிடைக்கும் போது நமக்கு லாபம் தானே.
இதை விடவும் முக்கியமானதொரு விஷயம், நீங்கள் விண்டோஸ் 10ற்கு அப்கிரேட் செய்து கொண்டாலும், சில மாதங்கள் கழித்து பிடிக்கவில்லையெனில், விண்டோஸ் 7க்கு டவுன்கிரேடு செய்துகொள்ள முடியும். ஆனால், அதில் இருக்கும் பாசிட்டிவான விஷயம், உங்களிடம் விண்டோஸ் 10 லைசென்ஸ் இருக்கும். ஆனால், தற்போது அப்டேட் செய்யவில்லை என்றால், மீண்டும் பணம் கொடுத்து அல்லது பைரேட்டட் வெர்ஷனை பயன்படுத்தும் நிலை வரும்.


இது ஏற்கனவே 190 நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டுவருகிறது. ஆனால் நாளை முதல் இதன் விலை ரூ.8000/- யை நெருங்கும். ஆகவே, இன்றே மேம்படுத்திக்கொள்ளுங்கள்... உலகத்தின் வேகத்துடன் போட்டியிடுங்கள்..


சதுரகிரி மலைக் கோயில்... பக்தர்களை மீண்டும் மிரட்டிய காற்றாற்று வெள்ளம்!



விருதுநகர் மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது, சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில். சித்தர்கள் வாழ்ந்த பூமியாக கருதப்படும் இந்த மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை அன்று திருவிழா நடக்கும்.


தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், லட்சக்கணக்கான பக்தர்கள் வத்திராயிருப்பு அருகேயுள்ள தாணிப்பாறை வழியாக, 10 கி.மீ., தூரம் மலை ஏறிச் சென்று சுவாமியை வழிபடுவார்கள். அதுபோல் மதுரை மாவட்டம் சாப்டூர் வழியாகவும், தேனி மாவட்டம்  வருசநாடு மலைப்பகுதி வழியாகவும் இந்த கோவிலுக்கு பக்தர்கள் வருவார்கள். கடந்த ஆண்டு நடந்த ஆடி அமாவாசை விழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கூட்ட நெரிசல் காரணமாக மலையில் இருந்து இறங்க முடியாமல் 2 லட்சம் பக்தர்கள் மலைப்பகுதியிலேயே சுமார் 3 மணி நேரம் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் 2 ம் தேதியன்று அமாவாசை என்பதால், சதுரகிரி மகாலிங்கம் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா வெகு விமரிசையாக நடக்கவுள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள், என்பதால் மாவட்ட நிர்வாகம் போலீஸ் பாதுகாப்பு, தீயணைப்பு மீட்பு படையினர் என்று பல பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. வழக்கமான விசேஷ நாட்களைத் தவிர,  பிற நாட்களில் மலை ஏறுவதற்கு வனத்துறை தடை விதித்திருந்த நிலையில், வரவிருக்கும் ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி,  ஜூலை 28 ம் தேதி ( நேற்று ) முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை, வனப்பகுதியில் மலை ஏறுவதற்கு பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.


இதனால் நேற்று முதல் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சதுரகிரியில் மலையேறி, மகாலிங்கம் சுவாமியை தரிசனம் செய்து திரும்பி வருகின்றனர்.
சதுரகிரி மலைப்பகுதியில், கடந்த சில நாட்களாக சிறிய அளவில் மழை பெய்து வருகிறது. மழையை பொருட்படுத்தாமல் பக்தர்களும் மலை ஏறிச் சென்று வருகின்றனர். நேற்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை சதுரகிரி மலைப்பகுதியில் கனத்த மழை பெய்தது. இதனால் சங்கிலிப்பாறை ஓடையில் 5 அடி உயரத்திற்கு மேல் திடீரென்று காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு பெருக்கெடுத்து ஓடியது. அப்போது மலையில் சுவாமி தரிசனம் முடித்து விட்டு திரும்பிய 10 பெண்கள் உள்பட சுமார் 100 பேர் ஓடையை கடக்க முடியாமல் மாட்டிக்கொண்டனர்.
இதனையடுத்து ஆற்றைக் கடந்து சென்ற தீயணைப்பு படையினர், அவர்களை பத்திரமாக மீட்டு, மேட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தனர். இதற்கிடையே மனோகரன், மகேந்திரன், கிருஷ்ணன், கண்ணாயிரம் ஆகிய 4 பக்தர்கள் சங்கிலிப்பாறை ஓடையை கடந்து சென்றனர். குதிரை ஊத்து என்ற இடத்திற்கு வந்த போது வெள்ளத்தில் மாட்டிக்கொண்டு, " ஐயோ காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்..." என்று குரல் கொடுத்தனர். அருகில் இருந்த ஸ்ரீவில்லிப்புத்தூர் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று, வெள்ளத்தில் தவித்த அவர்களை, கயிறு மூலம் கட்டி இழுத்து காப்பாற்றினர். பிறகு மலையில் தங்க வைக்கப்பட்டிருந்த 100 பேரும் வெள்ளப்பெருக்கு குறைந்த பின்னர், பத்திரமாக தீயணைப்பு படையினர் உதவியுடன் ஓடையை கடந்து வந்து, மலையில் இருந்து இறங்கினர்.




ஜெயலலிதாவுக்கே நெற்றித் திலகமிட்ட பாசப்பின்னணி!


* பூங்கொத்தை தள்ளி நின்றுதான் நீட்ட வேண்டும்.
* முதல்வரை நெருங்கி நிற்கக் கூடாது.
* கை குலுக்கக் கூடாது.
* சால்வையை அணிவிக்கக் கூடாது. கையில்தான் தர வேண்டும்.
- முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்க போகிறவர்களுக்கு தரப்படும் இன்ஸ்ட்ரக்‌ஷன்கள் இவை. வெளிநாட்டுக்காரர்கள், முக்கிய ராணுவத் தளபதிகள் என மிகச் சிலர்தான் ஜெயலலிதாவிடம் கை குலுக்கியிருக்கிறார்கள்.
மேட்டருக்கு வருவோம். ஜெயலலிதாவிடம் கை குலுக்குவது என்பதே அபூர்வமாக நடக்கும் விஷயம் எனும் நிலையில், ஜெயலலிதாவின் நெற்றியிலேயே ஒருவர் பொட்டு வைத்திருக்கிறார் என்றால், அது ஆச்சர்யமான செய்திதானே! அவர், கவர்னர் ரோசய்யாவின் மருமகள். அதாவது ரோசய்யாவின் மகன் ஶ்ரீமன் நாராயணமூர்த்தியின் மனைவி.


ரோசய்யாவின் பேரனும் ஶ்ரீமன் நாராயணமூர்த்தியின் மகனுமான அனிருத்தின் திருமணம், ஹைதராபாத்தில் வரும் ஆகஸ்ட் 14 ம் தேதி நடைபெறுகிறது. இதற்கு அழைப்பிதழ் தர ஶ்ரீமன் நாராயணமூர்த்தியும், அவருடைய மனைவியும் ஜெயலலிதாவை கோட்டையில் சந்தித்தனர். அப்போதுதான் ஜெயலலிதாவின் நெற்றியில் குங்குமம் வைத்தார்,  ஶ்ரீமன் நாராயணமூர்த்தியின் மனைவி. அதை ஏற்றுக் கொண்டார் ஜெயலலிதா.
" இந்த அளவுக்கு, கவர்னர் ரோசய்யாவுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் ஜெயலலிதாவிடம் நெருக்கம் இருப்பதற்குக் காரணமே, அ.தி.மு.க அரசுடன் வெகு இணக்கமாக கவர்னர் ரோசய்யா செயல்படுவதுதான்" என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
2014 ல் மத்தியில் பி.ஜே.பி. ஆட்சி அமைந்த பிறகு, முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நியமிக்கப்பட்ட பல்வேறு மாநில கவர்னர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். ஆனால், பக்கா காங்கிரஸ்காரரான ரோசய்யா மட்டும் ’சேஃப்டி’ எல்லையிலேயே இருந்தார். ஆந்திரா காங்கிரஸ் அமைச்சரவைகளில் பலமுறை மந்திரியாகவும் கடைசியாக முதல்வராகவும் பதவி வகித்தவர் ரோசய்யா. 2011 ல் ரோசய்யாவை தமிழக கவர்னராக நியமித்தது, அன்றைக்கு மத்திய ஆட்சியை கையில் வைத்திருந்த காங்கிரஸ். இந்நிலையில் பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தபோது, காங்கிரஸ்காரரான ரோசய்யா மட்டும் விட்டு வைக்கப்பட்டதற்கு காரணம், ஜெயலலிதாவிடம் அவர் காட்டிய மரியாதைதான்.
அதுமட்டுமா... அ.தி.மு.க. ஆட்சி மீது ஊழல் புகார்களை அடுக்கிய ராமதாஸ், கருணாநிதி, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போன்றோர் ரோசய்யாவிடம் அதை மனுவாகவும் கொடுத்தார்கள். ஆனால், அதற்கு எந்தவித பதில் நடவடிக்கையும் எடுக்கப்படவே இல்லை.


இதுமட்டுமா... வாக்காளர்களுக்குப் பணமும், பரிசுப் பொருட்களும் கொடுத்ததாக எழுந்த புகாரில்,  சட்டசபை தேர்தலுக்கு இரண்டு நாட்கள் முன்பு அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளின் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. அப்போது, திடீர் திருப்பமாக கவர்னர் ரோசய்யா இந்த விவகாரத்தில் தலையிட்டார். தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை அழைத்து விசாரித்தார். தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்றும் தேர்தல் கமிஷனுக்கு பரிந்துரைத்தார். அதாவது இந்த தேர்தல் விஷயத்தில் அ.தி.மு.க.வைவிட அதீத ஆர்வம் காட்டினார் ரோசய்யா.
ஆனால் தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளின் தேர்தலையே ரத்து செய்த தேர்தல் கமிஷன், ‘இப்படி கவர்னர் நடந்துகொண்டதை தவிர்த்து இருக்கலாம்’ என ரோசய்யாவுக்கு குட்டும் வைத்தது.
துணைவேந்தர் நியமனத்தில் நடந்த முறைகேடுகள் பற்றி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சொல்ல,  அவர் மீது அவதூறு வழக்குப் போட்டார் கவர்னர் ரோசய்யா. இத்தனைக்கும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் ரோசய்யாவும் காங்கிரஸ்காரர்கள். அந்த அளவுக்கு அ.தி.மு.க பாசக்காரர் ரோசய்யா!  




கைதாவார்களா வனத்துறை அதிகாரிகள்?' -வழக்கைப் பதிய வைத்த வருஷநாட்டு பழங்குடிகள்


டமலைக் குண்டு ஆதிவாசி பெண்களிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட வன அதிகாரிகளின் மீது பத்து பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ' காவல்துறையும் வனத்துறையும் கூட்டு சேர்ந்து செயல்படுகின்றனர். மாநில போலீஸ் விசாரித்தால் நியாயம் கிடைக்காது' எனக் கொந்தளிக்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள். 

தேனி மாவட்டம், கம்பம் கிழக்கு வனச் சரகத்திற்கு உள்பட்ட பெரிய சுருளி மலைப் பகுதியில் தேன், வேர்க்கிழங்கு, நன்னாரி வேர் சேகரிக்கச் சென்ற 13 வயது சிறுமி உள்பட நான்கு ஆதிவாசி பெண்களிடம், வனத்துறை அதிகாரிகள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.


இதுகுறித்து வருஷநாடு வனச்சரக அலுவலகத்திற்கு நியாயம் கேட்கச் சென்றனர் ஆதிவாசி இளைஞர்கள் சிலர். அவர்கள் மீது ' வன அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக' வழக்குப் பதிவு செய்து, காவல் நிலையத்தில் வைத்து அடித்து நொறுக்கப்பட்டனர்.
இதுகுறித்த தகவல் வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்த, தமிழக சட்டமன்றத்தில் கடமலைக் குண்டு சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்த வனத்துறை அமைச்சர் சீனிவாசன், " மேகமலையில் எறும்புதின்னிகள் கடத்தப்பட்டதாக புகார் வந்ததால் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதிகாரிகள் மீதான புகார் குறித்து கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. இதில்,  அதிகாரிகள் மலைவாழ் பெண்களிடம் தவறாக நடந்துகொள்ளவில்லை என்பதும்,  விசாரணை மட்டுமே நடத்தினார்கள் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது" என்றார். ஆதிவாசி பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நடவடிக்கை எடுக்காமல், வனத்துறை அதிகாரிகளுக்கு ஆதரவாக அமைச்சர் தெரிவித்த கருத்துக்களால் அதிர்ந்து போனார்கள் அரசியல் கட்சித் தலைவர்கள். 

 
இதையடுத்து, மலைவாழ் மக்கள் பாதுகாப்பு சங்கம், சி.பி.எம், ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் விவகாரத்தைக் கையில் எடுத்தன. நேற்று கடமலைக் குண்டு பகுதியில் ஆதிவாசி மக்களோடு இணைந்து போராட்டத்தில் இறங்கினார் எவிடென்ஸ் அமைப்பின் கதிர்.
' வனத்துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் ஓய மாட்டோம். அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்து, கைது செய்ய வேண்டும்' என முழக்கம் எழுப்பினர். இதையடுத்து, இரவு 8.30 மணியளவில் ரேஞ்சர் சேகர், ஃபாரஸ்டர் பிரின்ஸ் உள்பட அடையாளம் தெரிந்த இரண்டு நபர்கள் மீது பத்து பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவுகளான 342, 294(பி), 354, 379 உள்ளிட்ட பிரிவுகளும் எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை சட்டத்தின் ஆறு பிரிவுகளின் கீழும் வழக்குப் பதிவானது.


" ஜாமீனில் வெளிவர முடியாத சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது சிறிய ஆறுதல் மட்டுமே. ஆதிவாசி பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது மட்டுமல்லாமல், துணைக்குச் சென்ற ஆண்களை அரை நிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்தியுள்ளனர். 'இவர்களுக்கு நியாயம் கேட்க யார் வருவார்' என்ற மனநிலையில், வன அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக, நியாயம் கேட்கச் சென்ற ஆதிவாசிகள் மீது போடப்பட்ட எஃப்.ஐ.ஆரில், எந்த இடத்திலுமே 'எறும்புத் திண்ணி கடத்தப்படுவதைக் கண்காணிக்கச் சென்றபோது சம்பவம் நடந்தது' என அதிகாரிகள் குறிப்பிடவில்லை. இதிலிருந்தே எறும்புத் திண்ணியைக் கடத்தினார்கள் என்பது முழுப் பொய் எனத் தெரிகிறது. 13 வயது சிறுமி உள்பட நான்கு பெண்களிடமும் பாலியல் அத்துமீறலில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களைப் பார்த்தாலே மிகவும் பரிதாபமாக இருக்கிறது. வேர்க் கிழங்கும் தேனும் எடுக்கச் சென்றவர்களை வேண்டுமென்றே அதிகாரிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளனர். பொதுவாக, ஒரு வழக்கில் எஃப்.ஐ.ஆர் போட்டுவிட்டுத்தான் விசாரணை நடத்துவார்கள். ஆதிவாசிகள் பாதிக்கப்பட்ட வழக்கில், விசாரணையை நடத்திவிட்டு முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்கிறார்கள். இவர்களுக்கு ஆதரவாக அமைச்சரும் செயல்படுகிறார். வழக்கில் சம்பந்தப்பட்ட நான்கு பேரும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால், சட்டரீதியான போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம்" என்றார் கொந்தளிப்போடு. 

" ஆதிவாசி பெண்கள் மீதான பாலியல் அத்துமீறலில், பத்து நாட்கள் கடந்த பின்னரே, வன அதிகாரிகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது. தேன், கடுக்காய்தானே சேகரிக்கச் சென்றார்கள். தேசத் துரோகமா செய்துவிட்டார்கள். முதல்வர் நேரடியாகத் தலையிட வேண்டும்" என்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள். 




ரிலையன்ஸ்க்கு எதிராக வழக்குத் தொடருவோம்!' -களத்தில் குதித்த வங்கி ஊழியர்கள்


பொதுத்துறை வங்கிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வங்கி ஊழியர் சங்கங்கள் இன்று போராட்டத்தில் இறங்கின. ' கல்விக் கடன் வசூலிக்கும் வேலையை ரிலையன்ஸ் நிறுத்தும் வரையில் போராட்டம் தொடரும். இதுதொடர்பாக வழக்கும் தொடருவோம்' என அதிரடியாக அறிவித்துள்ளன வங்கி ஊழியர் சங்கங்கள். 

ஸ்டேட் வங்கிகளை இணைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக போராடி வருகின்றன வங்கி ஊழியர் சங்கங்கள். வள்ளுவர் கோட்டத்தில் இன்று நடந்த போராட்டத்தில், ஆயிரக்கணக்கான வங்கி ஊழியர்கள் பங்கேற்றனர்.


முடிவில் நம்மிடம் பேசிய இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன், " எங்களுக்கு நல உதவிகள் வேண்டியோ, ஊதிய உயர்வுக்காகவோ நாங்கள் போராடவில்லை. பொதுமக்களின் நன்மைக்காகத்தான் போராட்டத்திற்கு அழைப்புவிடுத்தோம். தனியார் நிதி வங்கிகளை உருவாக்குவது, ஸ்டேட் வங்கிகளை ஒருங்கிணைப்பது என பொதுத்துறை வங்கிகளை தனியாருக்குத் தாரை வார்க்கும் வேலைகளில் மத்திய அரசு இறங்கிவிட்டது. தனியார் வங்கிகளைவிட 90 சதவீத வாடிக்கையாளர்களை நாங்கள் தக்க வைத்திருக்கிறோம். 76 சதவீத வணிகர்கள் பொதுத்துறை வங்கிகளை நோக்கித்தான் வருகிறார்கள்.
இதற்கு முடிவு கட்டும்விதமாக தனியார்மயப்படுத்தும் வேலைகளில் மத்திய அரசு இறங்கிவிட்டது. கடந்த 26-ம் தேதி நடந்த வங்கி உயர் அதிகாரிகள் கூட்டத்தில், ' வங்கிகளை இணைப்பது அரசின் கொள்கை முடிவு' என ஒரே வரியில் முடித்துவிட்டனர். ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடியாத அளவுக்கு தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்த முயல்கின்றனர். பென்சன், மகப்பேறு ஓய்வு என எந்த வசதியும் கிடைக்கவிடாமல் செய்வதற்கான பணிகள் வேகமெடுத்து வருகின்றன" என ஆதங்கப்பட்டவர், 

" நாட்டின் வாராக்கடன்களின் தொகை பெருகிக் கொண்டே போகிறது. இதற்கு முழுக் காரணம் கார்ப்பரேட் நிறுவனங்கள்தான். ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் சொத்துக்கு இணையாக, வங்கிகள் கடன் அளிக்கின்றன. ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமே 1 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது. 

இதுகுறித்து பிரதமருக்கு விரிவாக கடிதம் எழுதியிருக்கிறார் சி.பி.எம் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி. 
இவ்வளவு பெரிய தொகையை வங்கியில் இருந்து கடனாக வாங்கிவிட்டு, நமது ஏழை எளிய மாணவர்கள் வாங்கிய சில லட்ச ரூபாய் கடன்களை வசூலிக்க வன்முறையைப் பயன்படுத்துகிறது ரிலையன்ஸ். இதுகுறித்து மாநிலங்களவையில் சி.பி.எம் கட்சி எம்.பி டி.கே.ரங்கராஜன் கேள்வி எழுப்பினார்.
அவரது குரலுக்கு சக எம்.பிக்களும் ஆதரவு அளித்தனர். இதுகுறித்து பிரதமர் அலுவலகத்திற்கு மாநிலங்களவையின் துணை சபாநாயகர் குறிப்பு அனுப்பியிருக்கிறார். இதற்கு பிரதமர் மோடியிடம் இருந்து எந்தப் பதிலுமில்லை. இப்போது வரையில் வசூலிக்கும் பணியை ரிலையன்ஸ் கைவிடவில்லை. மத்திய அரசின் துணை இருப்பதால்தான் இவ்வாறு செய்கிறார்கள். 'ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு எந்த அடிப்படையில் கடன் வசூலிக்கும் பொறுப்பை வழங்கினீர்கள்' என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் விண்ணப்பித்திருக்கிறோம். எங்களுக்குக் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், ரிலையன்ஸ் நிறுவனம் மீது வழக்குத் தொடருவோம்" என்றார் கொந்தளிப்போடு. 




புலி... ஏன் வீரத்தின் அடையாளம்?


லகிலேயே அதிகளவில் புலிகள் வசிக்கும் நாடுகளில் இந்தியாவுக்குதான் முதலிடம். அண்மைக் காலத்தில், இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பது மகிழ்ச்சியான விஷயம். கடந்த 2014 ம் ஆண்டு 2,226 புலிகள் இருந்தன. தற்போது அதன்  எண்ணிக்கை 30 சதவீதமாக அதிகரித்துள்ளது.   இதில் மூன்றில் ஒரு பகுதி புலிகள் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தமிழகம், கேரளம், கர்நாடக மாநிலங்களில் வசிக்கின்றன. தமிழகத்திலும் புலிகளின் எண்ணிக்கை பரவலாக அதிகரித்திருக்கிறது.  2006ம் ஆண்டு கணக்கின்படி வெறும் 76 புலிகள்தான் தமிழகத்தில் இருந்தன. 2010 ம் ஆண்டு 163 ஆக அதிகரித்தது. 2014 ம் ஆண்டு 229 ஆக அதிகரித்து,  தற்போது அது இன்னும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

புலி... ஏன் வீரத்தின் அடையாளம்?

காட்டுக்கு அரசன் சிங்கம் என்றாலும், வனத்திற்குள் தனி ஆவர்த்தனம் நடத்தும் மற்றோர் இனம் புலி. உணவுச்சங்கிலியின் முக்கிய இனம். புலிகளை கூட்டம் கூட்டமாக காண்பது அரிது. 'சிங்கம் சிங்கிளாகத்தான் வரும்' என்ற டயலாக்குக்கு நேர் எதிர் புலி. சிங்கங்கள் குழுக்களாக வாழும். ஐந்து ஆறு சிங்கங்கள் சேர்ந்து, ஒரு விலங்கினை வேட்டையாடுவதைக் காண முடியும்.  ஆனால் ஆண் புலிகள் தனிமை விரும்பிகள். பெரும்பாலும் தனியாகத்தான்  வேட்டையாடும். அதனால்தான் வீரத்தின் அடையாளமாக புலிகளைக் கூறுவது உண்டு.  ஆண் புலிகள் எல்லை வகுத்துக் கொண்டு 'உன் ஏரியாவுக்கு நான் வரமாட்டேன் என் ஏரியாவுக்கு நீ வராதே'னு  கோடு போட்டுக் கொண்டு வாழும் தன்மையுடையவை. புலிகள் மரம் ஏறும். பிரமாதமாக நீச்சல் அடிக்கும். மான்கள் பிடித்த உணவு.


புலிகளின் கணக்கெடுப்பு எப்படி நடைபெறும்?

கால்தடம், எச்சம், மரங்களில் நகங்களால் கீறி வைப்பது போன்ற அடையாளங்களால் புலிகளின் நடமாட்டம் கண்காணிக்கப்படும். நவீன காலகட்டத்தில் கேமராக்கள் வழியாக புகைப்படங்கள் எடுக்கப்பட்டு,  புலிகளின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகின்றன. 'பக் மார்க்'  ( கால்தடம் ) மூலமாக புலிகளின் எண்ணிக்கையை கணக்கெடுப்பது பழமையான பாணி. நம்பகத்தன்மை  குறைந்ததாக இருந்தது.  ஆனாலும் கேமரா வழியாக புலிகள் நடமாட்டத்தை கண்காணிப்பது  நம்பகத்தன்மையை அதிகரித்திருத்திருக்கிறது. இந்தியாவில்,  புலிகள் வசிக்கும் 18 மாநில வனச் சரணாலயங்களில் 9,730 கேமராக்கள்  பொருத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் முதல் புலிகள் காப்பகம் கேஎம்டிஆர்


இந்தியாவில், 39 புலிகள் காப்பகங்கள் உள்ளன. இதில் நாகர்ஜுனாசாகர்- ஸ்ரீசைலம் புலிகள் காப்பகம்தான் மிகப் பெரியது. சுமார் 3 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு மேல், இந்த காப்பகம் அமைந்துள்ளது.  மேற்குத் தொடர்ச்சி மலையில், கேஎம்டிஆர் என அழைக்கப்படும் 'களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்'தான் தமிழகத்தின் முதல் புலிகள் சரணாலயம். கடந்த 1988 ம் ஆண்டு இந்த சரணாலயம் உருவாக்கப்பட்டது. களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்துக்குள் மட்டும் 14  நதிகள் சிறியதும் பெரியதுமாக ஓடுகின்றன. நதிகளின் சரணாலயம் என்றும் இதனை கூறலாம். சுமார் 895 சதுரகிலோ மீட்டர் பரப்பளவில்  கேஎம்டிஆர் அமைந்துள்ளது. 

எதிர்ப்பை மீறி புலிகள் காப்பகமான முதுமலை

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை, கடந்த 2009 ம் ஆண்டு புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. தமிழகம், கேரளா, கர்நாடகா  என மூன்று மாநில எல்லைப் பகுதியில் முதுமலை சரணாலயம் அமைந்துள்ளது. இதனையொட்டி கர்நாடகப் பகுதியில் பண்டிப்பூரிலும், கேரளத்தில் வயநாட்டிலும் புலிகள் காப்பகங்கள் அமைந்துள்ளன. இந்த 3 வனச்சரணாலயங்களில் மட்டும் 600க்கும் மேற்பட்ட புலிகள் வசிப்பதாக புள்ளிவிபரம் கூறுகிறது. முதுமலையை  புலிகள் சரணாலயமாக மாற்ற கடும் எதிர்ப்பு கிளம்பியது. சூழலியல் ஆர்வலர்களின் தொடர் போராட்டம் காரணமாகவே, முதுமலையை புலிகள் காப்பகமாக மாற்றி  அறிவித்தது மத்திய அரசு. இந்தப் பகுதி சுற்றுலாவுக்குப் பெயர் போனது என்பதால்,  புலிகள் சரணாலயப் பகுதியாக அறிவிக்கப்பட்டால், தங்கள் பிழைப்பு பாதிக்கப்படும் என உள்ளுர் மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.


உதகையில் இருந்து முதுமலைக்கு இரு வழிகளில் செல்லலாம். மசினகுடி வழியாக சென்றால் ஒரு மணி நேரத்தில் சென்று விட முடியும். கூடலூர் வழியாக சென்றால், இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாகும். புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டுமாடு, செந்நாய், காட்டுப்பன்றி, தேவாங்கு, குரங்கு, மான்கள் போன்ற விலங்குகளுக்கும், பூர்வீக பறவை இனமான இருவாச்சி உள்ளிட்ட 200 வகையான பறவைகளுக்கும் முதுமலை  முக்கிய வாழ்வாதாரம். 

ஆனைமலை புலிகள் காப்பகம்
ஆனைமலை இந்திராகாந்தி  புலிகள் காப்பகம், கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில், டாப்ஸ்லிப் என்ற இடத்தில் அமைந்துள்ளது.  அருகில் உள்ள கேரள மாநிலத்திற்குள், பரம்பிக்குளம் புலிகள் காப்பகம் இருக்கிறது. ஏராளமான தமிழ் திரைப்படங்கள், இந்தப் பகுதியில் எடுக்கப்பட்டிருக்கின்றன. தமிழகத்தில் சத்தியமங்கலம் வனச்சரணாலயமும் இப்போது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு குறைந்தபட்சம் 50 புலிகள் இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.
வேட்டைத் தடுப்பு நடவடிக்கை

உச்ச நீதிமன்றம், புலிகள் சரணாலயப் பகுதிகளில் சுற்றுலா நடவடிக்கைகளுக்கு தடை விதித்த பிறகு, இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து  அதிகரித்தே வந்திருக்கிறது. வேட்டையை கட்டுப்படுத்துவதே புலிகளின் எண்ணிக்கை  இன்னும் உயர வழிவகுக்கும். 




நெல்லு விதைக்கலாமா... கரும்பு போடலாமா?' விவசாயத்துக்கு ஜோசியம் பார்க்கும் விசித்திர கிராமம்


ன்றைய, ‘போக்கிமான் கோ’ உலகத்தில், நம்ம ஊரில் ஜோசியமும், ஜாதகமும் இன்னமும் பலரது வாழ்க்கையில் விளையாடிக்கொண்டிருக்கிறது, என்பதை ஜீரணித்துக்கொள்வது கஷ்டமாகத்தான் உள்ளது.  பிள்ளைக்கு பேர் வைப்பது, பள்ளியில் சேர்ப்பது, திருமணம் செய்வது, தொழில் தொடங்குவது, உள்ளிட்டவைகளுக்கு ஜாதகம் பார்த்திருக்கிறோம் அல்லது பார்ப்பதாக  கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், "கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளிக்கு அடுத்துள்ள பெரமனூர் என்கிற கிராம மக்கள்,  விவசாயத்துக்கு ஜோசியம் பார்க்கிறார்கள். பொருத்தம் சரி இல்லையென்றால், அந்தப் பயிரையே பயிர் செய்ய மாட்டார்கள்... அப்படி மீறி செய்தால், அவர்கள் குடும்பத்தில் உயிர்பலி வரைக்கும் நடக்கும் என்பது அவர்களது நம்பிக்கை" என்று நண்பர் ஒருவர் சொல்ல, பெரமனூருக்கு புறப்பட்டோம்...


பச்சைப்பசேல் வயல்வெளிகளில், செழித்து நின்ற பயிர்கள் நம்மை வரவேற்றன. ஊருக்குள் நுழைந்ததும் எதிர்பட்டார், ராமலிங்கம். அவரிடம் விவசாய ஜோசியத்தை பற்றி விசாரித்தோம்.
படபடவென பேச ஆரம்பித்தவர், ''ஆமாங்க நீங்க கேள்விபட்டது உண்மைதான். எங்க ஊர்ல என்ன பயிர் பண்ணாலும் 'குறி' ( ஜோசியம்) பார்த்துதான் செய்வோம். குறிப்பா மஞ்சள், கரும்பு, எள் இந்த மூன்றையும் சாமிகிட்ட 'குறி' கேக்காம பயிர் பண்ணவே மாட்டோம். இந்த ஊர்ல விவசாயம் பண்ற எல்லாருமே அப்படித்தான். எங்க ஊர்ல சம்பத்னு ஒரு சாமியார் இருக்கார். அவர்கிட்ட 'குறி' கேட்டுதான் இந்த முறை என் தோட்டத்துல நான்  வாழை போட்ருக்கேன். நல்லா வந்துருக்கு.
'நீ இந்த வருஷம் மஞ்சள் போட்டா சரி வராது' னு சாமி சொல்லிட்டாருன்னா, அதை பயிர் பண்ணக்கூடாது. ஒண்ணு விளைச்சல் இல்லாமப் போயிடும்... இல்ல நம்ம வீட்ல, ஆடோ மாடோ ஏதாவது உயிர்ப் பலிகள் ஏற்பட்டுடும். அதற்கு பிறகு நாம மீள்றது கஷ்டம். ஏன்... சமயத்துல மனுஷங்களே செத்துப் போயிடுவாங்க. எங்க குல தெய்வத்துக்கு கருப்பு ஆகாது. அதையும் மீறி ஒரு வருஷம் எள் பயிர் பண்ணோம்.  அறுவடை சமயத்துல எங்க அப்பா செத்துப் போயிட்டாரு. அதுல இருந்து சாமிக்கிட்ட குறி கேக்காம எதையும் செய்யுறது இல்லை.
எந்த பயிர் பண்றமோ அந்த பயிர் நம்ம பேருக்கு ஒத்துவருமானு பாக்கணும். நம்ம பேருக்கு ஒத்து வராட்டியும் நம்ம வீட்ல யாருக்காவது ஒத்து வந்தாக்கூட பயிர் பண்ணலாம். ஒருமுறை எங்க வயல்ல நெல் போடலாமானு சாமிகிட்ட கேட்டேன். என் பேருக்கு ஒத்துவரல... என் பொண்டாட்டி பேருக்கும், ஒத்துவரல... பொறந்து ஒரு வருஷமான என் மகனுக்கு ஒத்து வந்துச்சி. அதனால கைக்குழந்தையை தூக்கிக்கிட்டு போய், அவன் கையால முதல் விதையை போட்டோம். நல்ல விளைச்சல் அந்த வருஷம். வைக்கோல் மட்டும் 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆச்சி. நான் முற்போக்குவாதிதான். ஆனா, இந்த விஷயத்துல இப்படி பண்ணினாதான் சரியா வருது''. (நமக்கு தலை சுற்ற ஆரம்பித்தது. ஆனாலும், ராமலிங்கம் சளைக்காமல் தொடர்ந்தார்...)
''அவ்வளவு ஏன்... அந்த சம்பத் சாமியவே எடுத்துக்கோங்க. அவர் வயலும் அவங்க அண்ணன் வயலும் பக்கத்து பக்கத்துலதான் இருக்கு. ஒரே தண்ணி ஒரே மண்ணுதான். சம்பத் சாமிக்கு மஞ்சள் ஒத்துவரும். ஆனா, அவங்க அண்ணனுக்கு ஒத்து வராது. அவங்க அண்ணன் காய்கறி மட்டும்தான் பயிர் பண்ணுவார். இந்த ஊர்ல எல்லாருக்குமே அவங்க அவங்களுக்கு  நம்பிக்கையான சாமியாருங்க இருக்காங்க. அவுங்ககிட்ட ரகசியமா குறி கேட்டுத்தான் பயிர் பண்ணுவாங்க. வெளில யாருக்கிட்டயும் சொல்ல மாட்டாங்க.'' என்று நிறுத்தினார்.


" நாங்க சம்பத் சாமியை பார்க்கலாமா...?" என்றதும் மறுப்பேதும் சொல்லாமல் நம்மை அழைத்துச் சென்றார்.
சம்பத் சாமியிடம் பேசினோம். ''நான் 8 வருஷமா குறி பாக்குறேன். இந்த ஊர்ல இருந்து நிறைய பேர் என்கிட்ட பார்ப்பாங்க. அவங்கவங்க பேருக்கு இன்ன பயிர் ஒத்து வருமானு பொருத்தம் பார்த்து சொல்லுவேன். அதுபடிதான் கேப்பாங்க. நானே பொருத்தம் பார்த்துதான் இந்த முறை மஞ்சள் போட்ருக்கேன்'' என்றார்.
திரும்பும் வழியில் ரவி என்பவரிடம் பேசினோம். ''நான் இந்தமுறை மஞ்சள் போடலாம்னு இருந்தேங்க. எங்க வீட்ல யாரு பேருக்குமே ஒத்து வரல. அதான் என்ன பண்றதுனு யோசிச்சிக்கிட்டு இருக்கேன்... பார்ப்போம்'' என்று நடையைக் கட்டினார்.
என்னத்த சொல்ல..?




சானியா சாதித்த ரகசியம்!


து 2003 ம் ஆண்டு. சான்யா மிர்சா, நைஜீரியாவில் தன் சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு பதக்கங்களுடன் நாடு திரும்புகிறார். அந்த ஆப்பிரிக்க மண்ணில் அவர் அடைந்த வெற்றி, அவருக்கு நிறைய தன்னம்பிக்கையை ஏற்படுத்தி இருந்தது. அவர் அங்கிருந்து மும்பையை நோக்கி பயணிக்கும் போது, அவருக்குப்  பல கனவுகள்.


'நம் மக்கள் நம்மை உச்சிமுகர்ந்து வரவேற்கப் போகிறார்கள், தங்கள் அன்பால் நம்மை திக்குமுக்காட வைக்கப் போகிறார்கள்...' என்ற கனவுகளுடன் இந்தியாவை நோக்கி பயணிக்கிறார். அவர் கனவுகளிலும் அர்த்தம் இல்லாமல் இல்லை. ஏனென்றால், அந்த சமயத்தில் சானியா இந்தியாவில் பிரபலமடைந்து இருந்தார். ஏற்கெனவே, அவருக்கு அத்தகைய வரவேற்பு கிடைத்து இருந்தது. ஆனால், இம்முறை அவருக்கான வரவேற்பு வித்தியாசமாக இருந்தது.
ஆம். சாகர் விமான நிலையத்தில் அவர் இறங்கியவுடன், அங்கிருந்த பாதுகாப்பு அலுவலர்களும் சுகாதாரத் துறை அதிகாரிகளும், சானியாவையும் அவரது அம்மாவையும் தனியாக அழைத்துச் செல்கிறார்கள். அப்போது ஆப்ரிக்க நாடுகளில் பரவி இருந்த ‘Yellow Fever' நோய் தொற்று, இவர்களையும் பாதித்து இருக்கிறதா என்று பரிசோதிக்க  வேண்டும் என்கிறார்கள். பரிசோதனை என்றால் ஒரு நாளில் முடிவது அல்ல... சில நாட்கள் அவர்கள் இருவரையும் தனி இடத்தில் வைத்துக் கண்காணிக்க வேண்டும் என்று சொல்லி,  அவர்கள் இருவரையும் மும்பைக்கு வெளியே, தனி இடத்தில் ஐந்து நாட்கள் தங்க வைக்கிறார்கள்.

“தொலைக்காட்சி இல்லாமல் கழிந்த நாட்கள் அவை. கேரம் விளையாடியும், சீட்டுக் கட்டு விளையாடியும்... நானும் என் அம்மாவும் பொழுதை கழித்தோம்.  ஒவ்வொரு நாட்களும், ஒவ்வொரு வாரமாக கழிந்தன...”  என்று விவரிக்கிறார் சானியா.

சானியா மிர்சா அண்மையில்  ‘Ace Against Odds' என்ற தன்  சுயசரிதை  புத்தகத்தை வெளியிட்டார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள சம்பவம்தான் இது.  இது மட்டுமல்ல, இந்த புத்தகம் முழுவதும் இது போன்ற ஏராளமான சம்பவங்கள் விரவிக் கிடக்கின்றன. ஒவ்வொன்றும் சுவாரஸ்யமானது மட்டுமல்ல, நமக்கு உற்சாகம் அளிப்பதாகவும், ஊக்கமூட்டுவதாகவும் இருக்கிறது.
அன்று அந்த விமானத்தில் ஏறி இருந்தால்...? :
சானியாவின் தந்தை இம்ரான்,  ஹைதராபாத்தில் சிறியதாக ஒரு அச்சகத்தையும், அவருக்குப் பிடித்தமான கட்டுமான தொழிலையும் நடத்தி வருகிறார். வசதியான குடும்பம் எல்லாம் இல்லை. பெரிதாக வருமானமும் இல்லை. ஆனால், வாழ்வில் வெற்றி அடைந்துவிடுவோம் என்று உற்சாகமாக உழைக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக அவரது கட்டுமானத் தொழிலும் சூடுபிடிக்கத் துவங்குகிறது. அப்போது தான் அந்த அழைப்பு வருகிறது. இம்ரானின் சகோதரி அஞ்சும், அமெரிக்காவிலிருந்து அழைக்கிறார். “உன் குடும்பத்தின் குடியேற்ற மனுவை விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்... விரைவில் விசா கிடைத்துவிடும்...” என்கிறார் உற்சாகமாக.



அப்போது இம்ரானின் குடும்பத்தினர் பலர் அமெரிக்காவில்தான் வசித்து வந்தனர். இம்ரானுக்கும் தன் குடும்பத்துடன், அப்போது எல்லாருக்கும் கனவு தேசமாக இருந்த அமெரிக்காவில் சென்று குடியேறிவிடவேண்டும் என்ற விருப்பம் இருந்தது. ஆனால், அந்த அழைப்பு வந்த பின் யோசிக்க ஆரம்பிக்கிறார். நாம் ஏன் அங்கு செல்ல வேண்டும்..? இப்போதுதான் நம் தொழில் சூடு பிடிக்கத் துவங்கி இருக்கிறது... இன்னும் கொஞ்சம் உழைப்பை முதலீடு செய்தால், இங்கேயே பெரும் வெற்றிகளை அடையலாம்தானே என யோசிக்கிறார்...

ஆனால், அவரது சுற்றத்தினரின் ஆலோசனை வேறு விதமாக இருந்தது. உனக்கான வாய்ப்புகள் அனைத்தும் அமெரிக்காவில்தான் இருக்கின்றன. இது ஒரு பெரிய வாய்ப்பு. இதை இறுகப் பற்றிக் கொள் என்று ஆலோசனை வழங்குகிறார்கள். அவரும் அரை மனதுடன் அமெரிக்கா செல்ல முடிவுசெய்கிறார்.  அப்போது சானியாவுக்கு நான்கு வயது தான்.

பெரும் கனவுகளை சுமந்து, சானியா, அவரது தந்தை இம்ரான் மற்றும் தாய் நசிமா ஆகியோர், அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் வந்து இறங்குகிறார்கள். அங்குதான் இம்ரானின் சகோதரர் கம்ரான் குடும்பம் வசித்து வந்தது. அங்கு தனக்கான வாய்ப்பை தேடத் துவங்குகிறார் இம்ரான். அந்த சமயத்தில் இம்ரானின் சகோதரி கலிஃபோர்னியாவில் வசித்து வந்தார். அவரைப் பார்க்க இம்ரான் திட்டமிட்டு, ஒரு வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 1, 1991)  கலிஃபோர்னியா செல்ல விமானத்தில் முன் பதிவு செய்கிறார். அப்போது அழைத்த இம்ரானின் சகோதரி, “சனிக்கிழமை வாருங்கள். அதுதான் எனக்கும் வசதி...” என்று சொல்லியதால், சனிக்கிழமைக்கு பயணத்தை மாற்றி விமானத்தில் முன்பதிவு செய்துவிட்டு வீடு திரும்புகிறார்.

ஆனால், அவருக்கு அப்போது நிச்சயம் தெரிந்திருக்க வாய்பில்லை. இந்த தேதி மாற்றம்தான், வரலாற்றின் பல பக்கங்களை மாற்ற காரணமாக ஆகப்போகிறது என்று. ஆம், அன்று  அவர்கள் செல்வதாக திட்டமிட்ட விமானம், லாஸ் ஏஞ்சல்ஸில் தரையிறங்கும் போது விபத்துக்கு உள்ளாகிறது. அந்த விமானத்தில் பயணம் செய்த 22 பேரும்  மரணிக்கிறார்கள்.

மீண்டும் கூடு திரும்புதல்...:
அவர்கள் எதிர்பார்த்தது போல் அமெரிக்கா வாழ்வு இல்லை. கல்விக் கட்டணம் அதிகமாக இருந்ததால், சானியாவை அங்கு பள்ளியில் சேர்க்கவில்லை. இம்ரான் அங்கேயும், ஒரு அச்சகத்தை துவக்குகிறார். ஆனால், அந்த வருமானம் போதுமானதாக இல்லை. சானியாவின் அம்மாவும் அங்குள்ள ஒரு மருத்துவமனையில் வேலை செய்கிறார். ஆனால், அப்போதும் வருமானம் வாய்க்கும் வயிற்றுக்குமாக தான் இருக்கிறது. அப்போதுதான் முதன் முதலாக சானியாவிற்கு அந்த ஆசை வருகிறது.

இந்தியாவிற்கு பல விருதுகள், பெருமைகளை பெற்று தந்த விருப்பம் அப்போதுதான், அந்த நான்கு வயது சானியாவிற்கு வருகிறது.  “அம்மா...எனக்கு டென்னிஸில் விருப்பமாக இருக்கிறது. என்னை, பயிற்சி வகுப்பில் சேர்த்து விடுங்கள்...” என்கிறார். சானியாவிற்கு விருப்பம் வந்ததில் ஆச்சர்யம் இல்லை. ஏனென்றால், இம்ரானிற்கும் டென்னிஸ் மீது பெருங்காதல் இருந்தது. அமெரிக்காவில் தன் ஓய்வு நேரங்களை பெரும்பாலும் டென்னிஸில்தான் கரைத்தார். இதைப் பார்த்து வளர்ந்த அவருக்கு, டென்னிஸ் மீது விருப்பம் வந்ததில் ஆச்சர்யம் ஏதுமில்லை. ஆனால்,  ஒரு மணிநேரத்திற்கு 40 டாலர்களை பயிற்சிக்காக செலவழிக்கும் சூழ்நிலையில் அவரது குடும்பம் இல்லை.


அப்போதுதான் இம்ரான், அந்த முடிவை எடுக்கிறார். அது நிச்சயம் அவருக்கு கடினமான முடிவுதான். ஆனால், ஒரு விஷயத்தை உறுதியாகச் சொல்ல முடியும். அன்று இம்ரான் மட்டும் அந்த முடிவை எடுக்கவில்லை என்றால், நிச்சயம் சானியா நமக்கு கிடைத்து இருக்க மாட்டார். இந்தியாவிற்கு பல பெருமைகள் கிடைத்து இருக்காது. ஆம், இம்ரான் மீண்டும்  இந்தியா திரும்ப முடிவு செய்கிறார். அவரது உறவினர்கள்,  “இது சரியான முடிவல்ல. வாய்ப்புகள் இங்குதான் கொட்டிக் கிடக்கின்றன. மீண்டும் இந்தியா போய் என்ன செய்யப் போகிறாய்...” என்று ஆளுக்கொரு ஆலோசனையை வாரி வழங்குகிறார்கள். ஆனால், இம்ரான் தம் முடிவில் தெளிவாக இருந்தார். 'நாளை, நான் பெரும் வெற்றிகளை அடையலாம். ஆனால், இன்று என் மகளின் ஆசையை, விருப்பத்தை, கனவை நிறைவேற்றாமல், நாளை எத்தகைய வெற்றி அடைந்தும் பயனில்லை' என்று 1992 ல் நாடு திரும்புகிறார்.

இந்தியா திரும்பியதும் சானியாவின் அம்மா செய்த முதல் வேலை, சானியாவை அவர் விரும்பிய டென்னிஸ் பயிற்சி வகுப்பில் சேர்த்தது. இந்தியாவில் டென்னிஸ் வரலாறு இந்த புள்ளியில்தான் மாறுகிறது.




சானியா வாழ்வில் நமக்கான பாடங்கள்:
மற்றவர்களின் வாழ்வை  நம் வாழ்வுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் வாழ்வு நரகமாகிவிடும். ஆனால், அதே நேரம், நாம் மற்றவர்களின் வாழ்விலிருந்து பாடங்களையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.  சானியாவின் வாழ்க்கையிலிருந்தும் நாம் கற்றுக் கொள்ளவும் இரண்டு பாடங்கள் இருக்கின்றன.


எனக்கு விருப்பம்... அதனால் இதைச் செய்கிறேன்!
 'I played because, I enjoyed it' - இந்த வாக்கியத்தை சானியா தன் சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கிறார். அந்த 238 பக்க புத்தகத்தில் ஏராளமான சுவாரஸ்ய தகவல்கள் இருந்தாலும், என்னை மிகவும் கவர்ந்தது இந்த வாக்கியம்தான். ஆம், சானியா விருதுக்காகவோ அல்லது தனக்கு பத்ம ஸ்ரீ, அர்ஜுனா விருது கிடைக்கும், விளம்பர தூதர் ஆகி, அதன் மூலம் பல கோடிகள் வருவாய் ஈட்டலாம் என்று கனவு கண்டெல்லாம் சானியா டென்னிஸை தேர்ந்தெடுக்கவில்லை. அவருக்கு டென்னிஸ் விளையாடுவது மகிழ்ச்சியை அளித்தது. அந்த அகமகிழ்ச்சிக்காக மட்டுமே அந்த விளையாட்டை அவர் தேர்ந்தெடுத்தார். இன்று பல வெற்றிகளை குவித்துக் கொண்டிருக்கிறார்.

இதுதான் நமக்கான பாடம். 'பல லைக்ஸை குவிக்கலாம், நம்மை பாராட்டி பல பேர் கமெண்டுவார்கள்' என்று நாம் நம் பணிகளை செய்வோமானால், நாம் நம் சுயத்தை தொலைத்து இருப்போம். நம் விரும்பும் வாழ்வை தொலைத்து, பிறர் வாழ்வை வாழ்ந்து கொண்டிருப்போம்.

விருப்பத்தில் வாழ அனுமதியுங்கள்...!
ஆசிரியர்கள் என்பவர்கள், Facilitators (எளிதாக்குபவர்) களாக இருக்க வேண்டும். உண்மையாக நம் குழந்தைகளுக்கு தேவைப்படுவோர் facilitators தான். சானியாவின் பெற்றோர் Facilitators ஆக இருந்ததால், சானியாவால் இவ்வளவு சாதிக்க முடிந்தது.

சானியாவிற்கு டென்னிஸ் மீது விருப்பம் இருந்தது. ஆனால், அதில் பெரும் சாதனைகள் படைக்கப் போவதாக எல்லாம் அவர் தொடக்கத்தில் நினைக்கவில்லை. டென்னிஸிற்கான பயிற்சி கட்டணம், போட்டிகளில் பங்கேற்பதற்கான பயணம், அதற்கான செலவெல்லாம், அந்த சாமான்ய குடும்பத்தால் சமாளிக்கும் அளவிற்கு இல்லை. இருந்தாலும் சானியாவின் விருப்பத்தை  அவர் குடும்பம் மதித்தது.  விமானத்தில் சென்றால் பல்லாயிரம் ரூபாய் செலவாகும் என்பதால், போட்டிகளில் கலந்து கொள்ள பலநூறு கிலோமீட்டர், சானியாவை அவரது பெற்றோர் வாகனத்திலேயே அழைத்துச் சென்று இருக்கிறார்கள். கிடைக்கும் சிறு பணத்தையும் சானியாவின் பயிற்சிக்காக செலவு செய்திருக்கிறார்கள். இத்தனைக்கும் சானியா பெரும் சாதனைகள் படைத்து பல கோடிகள் சம்பாதிப்பார் என்றெல்லாம் அவர்கள் நினைக்கவில்லை. சுருங்கச் சொல்ல வேண்டுமானால், தாங்கள் செலவழிக்கும் பணத்தை முதலீடாக கருதவில்லை.
ஒருவேளை அவர்கள் அதை முதலீடாக கருதி இருப்பார்கள் என்றால், நிச்சயம் சானியாவால் இந்த சாதனைகளை படைத்திருக்க முடியுமா என்பது கேள்விக்குறிதான். ஆம், எந்த இடத்திலும்  எந்த நிர்ப்பந்ததையும் கொடுக்காமல், சானியாவின் விருப்பதின்படி வாழ கைகொடுத்தார்கள். சானியா தேர்ந்தெடுத்தப் பாதையில் இலகுவாக செல்ல, தங்களால் ஆன உதவிகளை செய்தார்கள்.

இதுதான் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய இரண்டாவது பாடம். நம் பிள்ளைகளுக்கும் ஓவியன் ஆக வேண்டுமென்றோ, திரைப்பட இயக்குநர் ஆக வேண்டுமென்றோ அல்லது தொழில் துவங்க வேண்டுமென்றோ கனவுகள் இருக்கும். ஆனால், நாம் இது எதற்கும் அனுமதிப்பதில்லை, நம் விருப்பங்களை அவர்கள் மீது  திணிக்கிறோம். நம் முதலீடாக பார்க்கிறோம்.



தெரியவில்லை, எத்தனை தகுதியான பிள்ளைகள் தங்கள் விருப்பத்தில் வாழ முடியாமல் பத்ம ஸ்ரீ யையும், பத்ம பூஷணையும் இழந்து இருக்கிறார்கள் என்று.

இவற்றையெல்லாம் தாண்டி, நம்  ஒட்டு மொத்த சமூகத்திற்கும் இன்னொரு பாடம் இருக்கிறது. அது,  சானியாவின் சுயசரிதை வெளியீட்டு விழாவில் ஷாரூக்கான் சொல்லியது, “பெண்களை மதியுங்கள்... நம் பெண் பிள்ளைகள் மீது எவ்வளவு பாசம் செலுத்துகிறோமோ.... நம் பெண்களை எவ்வளவு மதிக்கிறோமோ... என்னை நம்புங்கள்... நிச்சயம் சானியா மிர்ஸா போல் வியத்தகு சாதனைகளை நம் பெண்கள் படைப்பார்கள்...”

ஆம் சானியாவின் வாழ்வு சொல்லும் மிக முக்கியமான பாடம் அதுதான்.... பெண்களை மதியுங்கள்... அவர்களின் கனவுகளை மதியுங்கள்... மிக முக்கியமாக, அவர்களை சமமாக நடத்துங்கள்.




எம்.பி.ஏ பட்டதாரியை கடத்திய இன்ஜினியரிங் பட்டதாரிகள்!- சினிமாவைப்போல் ஒரு நிஜ சம்பவம்



தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் பிரேம்குமார், சந்திப்சாரி. எம்.பி.ஏ பட்டதாரிகளான இருவரும் கேளம்பாக்கம், பல்லவன் கார்டனில் தங்கி நாவலூரில் உள்ள தனியார் ஐ.டி. கம்பெனியில் பணியாற்றி வருகின்றனர். கடந்த 27ம் தேதி வழக்கம்போல் இருவரும் வேலைக்கு சென்றனர். வேலை காரணமாக பிரேம்குமார் அலுவலகத்தில் இருந்தார். இரவு 9 மணிக்கு வீட்டுக்கு வந்த சந்திப்சாரி, நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராததால் பிரேம்குமாருக்கு போன் செய்த போது அவரது மொபைல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. மறுநாள் சந்திப்சாரி, பிரேம்குமாரை காணவில்லை என்று  தாழம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். 

புகார் கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்த அவருக்கு ஒரு போன் கால் வந்துள்ளது. அதில் பேசியவர், “ பிரேம்குமாரை கடத்தி வைத்திருக்கிறோம். அவர் உயிரோடு வேண்டும் என்றால் 10 லட்சம் ரூபாயை நாங்கள் சொல்லும் இடத்துக்கு கொண்டு வா. இது தொடர்பாக போலீசுக்கு போனால் பிரேம்குமாரை கொலை செய்து விடுவோம்” என்று கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார். அடுத்து சில நிமிடங்களில் இன்னொரு போன் வந்தது. அதில் பேசியவர், பத்து லட்சம் ரூபாயுடன் கேளம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு வரும்படி சொல்லி உள்ளார்.

  
பயந்துபோன சந்திப்சாரி, இந்த தகவலை உடனடியாக போலீஸிடம் தெரிவித்தார். உடனடியாக போலீஸ் டீம் மாறுவேடத்தில் அந்த பகுதிக்கு சென்றது. அப்போது பஸ் நிலையத்தில் ஒருவர் போனில் பேசிக் கொண்டு நிற்பதைக் கண்டு, அவர்தான் கடத்தல்காரன் என்று போலீஸார் மடக்கி பிடிக்க, பக்கத்திலிருந்த கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் அங்கிருந்து நைசாக நழுவி விட்டார். இதன்பிறகு மீண்டும் சந்திப்சாரிக்கு போனில் பேசிய கடத்தல் கும்பலை சேர்ந்தவர், " போலீசுக்கு நீ சென்றதால் உன்னுடைய நண்பரை இனி உயிரோடு பார்க்க முடியாது" என்று சொல்ல, பயந்துபோன சந்திப்சாரி கதறி அழுதவாறே, "தவறு செய்து விட்டேன்... இனிமேல் இதுபோல செய்ய மாட்டேன். நீங்கள் சொல்லும் இடத்துக்கு பணத்தோடு வருகிறேன்" என்று கூறினார்.

இதையடுத்து கடத்தல் கும்பல், சந்திப்சாரியை ஈ.சி.ஆருக்கு வருமாறு கூறியது. இரவு 11.30 மணியளவில் சந்திப்சாரி அவர்கள் சொன்ன இடத்துக்கு சென்றார். அங்கு மோட்டார் சைக்களில், கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஒருவன் மின்னல் வேகத்தில் வந்தான். இதற்குள் போலீஸ் டீம் தங்களுடைய ஆபரேஷனை செயல்படுத்தத் தொடங்கியது. சந்திப்சாரியின் சட்டையை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் அணிந்து கொண்டு, அவரே சந்திப்சாரி போல கடத்தல் கும்பலிடம் பேசினார். கையில் கறுப்பு நிற பையைக் கொண்டு சென்றார். அதைப் பெறுவதற்காக பைக்கில் வந்த கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஒருவனை, சப் இன்ஸ்பெக்டர் மடக்கிப் பிடித்தார். 

விசாரணையில் அவரது பெயர் பார்த்திபன் என்று தெரிந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில்,  பிரேம்குமாரை மாமல்லபுரத்தில் உள்ள விடுதியில் அடைத்து வைத்திருப்பதாகவும், கடத்தல் கும்பலைச் சேர்ந்த மற்றவர்கள், பணத்தைப் பெற ஓ.எம்.ஆர் சாலையில் காருடன் காத்திருப்பதாகவும்  தெரிவித்தார். அடுத்து, போலீஸ் டீம் சம்பவ இடத்துக்கு சென்று கடத்தல் கும்பலைச் சேர்ந்த பிரவீன் பாலாஜி, விவேக்ராஜ், அரக்கோணத்தை சேர்ந்த ஜெயசீலன் ஆகியோரை கைது செய்து பிரேம்குமாரை மீட்டனர்.


கடத்தலுக்குப் பயன்படுத்திய இரண்டு கார்கள், ஒரு பைக் மற்றும் 4 பட்டா கத்திகள், மயக்க மருந்து ஸ்பிரே, பிளாஸ்டர், நைலான் கயிறு ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றினர். கைதானவர்களில் பிரவீன் பாலாஜி, விவேக்ராஜ் இருவரும் பி.இ பட்டதாரிகள். மேலும் இருவரும் உறவினர்கள். பிரவீன்ராஜ் கம்ப்யூட்டரை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். அப்போது இன்ஜினியரிங் படித்த பார்த்திபனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பார்த்திபனின் நண்பர் ஜெயசீலன். இவர்கள் அனைவரும் சேர்ந்து,  'ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றுபவர்களை கடத்தினால் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்' என்ற ஆசையில் பிரேம்குமாரை கடத்தியுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

சினிமாவைப் போல நடந்த இந்த காட்சி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாலை 6 மணிக்கு தொடங்கிய இந்த ஆபரேஷன் இரவு 2 மணிக்கு முடிந்தது. 




குளச்சல் துறைமுக திட்டத்தை கைவிட முடியாது ' கேரள முதல்வரிடம் கறார் காட்டிய மோடி!




மிழகத்தில் குளச்சல் துறைமுகம் நிறுவப்படும் என கடந்த 2013 ம் ஆண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். நீண்ட போராட்டத்திற்கிடையில் மத்திய அமைச்சரவை அண்மையில் இதற்கு ஒப்புதல் அளித்தது. ஆனால் இதற்கு கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே, குளச்சல் துறைமுகம் அமைப்பதற்கு அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் கேரள சட்டப்பேரவையில் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், குளச்சல் துறைமுகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான குழு பிரதமர் மோடியை இன்று சந்தித்தது. கேரள மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அக்குழுவில் இடம் பெற்று இருந்தனர்.  நாடாளுமன்ற வளாகத்தில் இந்த குழு பிரதமரை சந்தித்தது. அப்போது, பினராயி விஜயனின் கோரிக்கையை கேட்ட பிரதமர், குளச்சல் துறைமுக திட்டத்தை கைவிட முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டார் என்று சொல்லப்படுகிறது.
பிரதமரை சந்தித்த பின் மேற்கண்ட தகவலை பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், குளச்சலில் அமையவுள்ள துறைமுகப் பணிகளை நிறுத்த முடியாது என்று பிரதமர் தெரிவித்துவிட்டார். 'இரண்டு துறைமுகங்களும் அருகருகே அமைந்தால், போட்டியும் வருவாயும் அதிகரிக்கும்' என  பிரதமர் தெரிவித்தார். 2 துறைமுகங்களின் வளர்ச்சிக்கும் மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் எனவும் பிரதமர் கூறினார்” என்று தெரிவித்தார்.




இந்த லிஸ்டில் ராஜா, ரஹ்மானை விட.. விஜய் ஆண்டனிதான் வின்னர்!


 நம் வாழ்வின் பெரும்பாலான  பொழுதுகளை தங்கள் இசையால் வசமாக்கும் இசையமைப்பாளர்கள் சில சமயம் திரையிலும் தங்கள் நடிப்பால் நம்மை ‘அட’ சொல்ல வைத்திருக்கிறார்கள். பிளாக் அண்ட் ஒயிட் காலத்திலிருந்தே இசையமைப்பாளர்களின் அரிதார அவதாரங்கள் தமிழ் சினிமாவில் முக்கிய இடம் பிடித்து வருகின்றன. அவற்றைப் பற்றிய கலகல அலசல்  இது.

எம்.எஸ்.வி:


தன் மெல்லிசையால் தமிழகத்தை கட்டிப்போட்ட எம்.எஸ்.வி என்னும் சகாப்தம் திரையிலும் தன் முத்திரையை பதித்திருக்கிறது. காதல் மன்னனிலும், காதலா காதலாவிலும் மின்னிய அவர் நடிப்பே இதற்கு சாட்சி. நடுங்கும் குரலில் அவர் 'முருகா' என பதறும்போதெல்லாம் தியேட்டரில் எழுந்தது குபீர் சிரிப்பலை. சின்னத்திரை தொடர்களிலும் நடித்திருக்கிறார். 2013-ல் தில்லுமுல்லு தில்லுமுல்லு ரீமேக் பாடலில் அவர் எடுத்தது 'யோ யோ' அவதாரம். மிஸ் யூ ஸார்!
இளையராஜா:
பொதுவெளிகளிலேயே அதிகம் தலை காட்டாத இளையராஜா பெரிய திரையில் சிற்சில இடங்களில் தலை காட்டியிருக்கிறார். உடனே எல்லாருக்கும் 'கல்யாண மாலை' பாடலில் அவர் ஜனகராஜை அதட்டும் காட்சி ஞாபகத்திற்கு வருமே. 'மடை திறந்து' பாடலிலும் வருவார் ஜி! கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன் நடித்த வில்லுப்பாட்டுக்காரன் படத்திலும் கோயிலுக்கு கொடை கொடுப்பவராய், வசனமெல்லாம் பேசி  நடித்திருப்பார் இளையராஜா.

ஏ.ஆர்.ரஹ்மான்:
உலகையே அசத்தும் ஆஸ்கர் நாயகன் எக்கச்சக்க ஆல்பங்களில் நடுநாயகமாக கவனம் ஈர்த்திருக்கிறார். 'வந்தே மாதரம்' ஆல்பத்தில் அவர் கை தூக்கியபோது சிலிர்தெழுந்தது இந்தியா. 'ஜன கண மன' ஆல்பத்தில் நீள முடியோடு அவர் ஜயஹே என பாடும்போது புல்லரிக்கத்தான் செய்யும். இரண்டிற்குமே ரஹ்மானின் ஆஸ்தான நண்பரான பரத்பாலா தான் இயக்குநர். ரஹ்மானுக்கு படம் இயக்க வேண்டும் என ஆசை இருக்கிறது. எங்களுக்கு நீங்கள் பெரிய திரையில் நடிக்கவேண்டும் என ஆசை ரஹ்மான் சார்.

யுவன்:
கோலிவுட்டின் ஸ்டைலிஷ் மியூசிக் கம்போஸர். யுவனின் திரை அவதாரம் என்றால் பளிச்சென நினைவிற்கு வருவது புன்னகை பூவே படம். அதில் 'என் காதல்' பாட்டிற்கு பிரேம்ஜி ராப்பில் சூப்பர் ஸ்டைலில் பாடுவார் யுவன். சரோஜா படத்தின் 'சீக்கி சீக்கி' பாட்டிலும், பில்லா 2வின் கேங்ஸ்டர் பாட்டிலும் நாம் பார்த்தது செம கெத்தான யுவனை. சீக்கிரமே ஒரு முழு நீள படத்துல இப்படி ஸ்டைலா நடிங்க ப்ரோ! 

ஹாரிஸ் ஜெயராஜ்:

இளசுகளின் ஹார்ட்பீட் டோனாய் ஒலிக்கும் ஹாரிஸ் ஏனோ திரையில் தோன்றுவதே இல்லை. அவர் நடித்ததாக எல்லாருக்கும் நினைவில் இருப்பது 'கோ' படம்தான். அதில் 'அக நக நக' பாடலின் தொடக்கத்திலும் பின் கூட்டத்தில் கைதூக்கி குதிப்பராகவும்தான் பார்த்திருக்கிறான் தமிழ் ரசிகன். நடிக்கிறதை கூட விட்டுடலாம். நிறைய படத்துக்கு மியூசிக் பண்ணுங்க ஜி. வரணும், பழைய ஹாரிஸா வரணும்.

தமன்:


இந்த பட்டியலில் வித்தியாச ‘எஸ்டிடி’ இவருக்குத்தான். நடிகராக வண்ணத்திரைக்குள் நுழைந்து இசைப்பக்கம் திரும்பியவர். 2003-ல் கொழு கொழு பையனாக பாய்ஸில் அறிமுகமானார். அதன்பின் ஐந்து ஆண்டுகள் கழித்துதான் இசையமைப்பாளர் அவதாரம். பாய்ஸில் இருந்த ஐவரில் இவரும் சித்தார்த்தும் மட்டுமே தமிழ், தெலுங்கில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.

தேவி ஶ்ரீ பிரசாத்:
துறுதுறு படபட பட்டாசு. ஓரிடத்தில் இல்லாமல் குதித்துக்கொண்டே இருப்பவர் திரையுலகில் தலை காட்டாமலா இருப்பார்? வெடி படத்தில் ஒரு முழு பாடலுக்கு வந்தாலும் பளிச்சென மனதில் நிற்பது மன்மதன் அம்பு படத்தின் 'நீலவானம்' பாட்டில் கிடார் வாசிக்கும் சீன் தான். சில செகண்ட் என்றாலும் செம ஃப்ரேம் அது. தெலுங்கிலும் கேமியோ தோற்றங்கள் உண்டு.

விஜய் ஆண்டனி:
இந்த லிஸ்ட்டிலேயே ஹீரோவாய் பெரிய வெற்றி பெற்றது இவர்தான். இசையில் போதிய கவனம் ஈர்த்த பின்னர் நடிப்பில் கவனம் செலுத்தினார். மிகை ஹீரோயிசம் இல்லாத சப்ஜெக்ட்கள் இவர் பலம். அதனாலேயே நான், சலீம், பிச்சைக்காரன் என தொடர் ஹிட்கள். அடுத்து சைத்தானகவும் எமனாகவும் வர இருக்கிறார்.

ஜி.வி பிரகாஷ்:
வெயிலில் சுளீரென கவனம் ஈர்த்த துறுதுறு இளைஞன். உச்ச நட்சத்திரங்களுக்கு இசையமைத்த பின் நடிப்பு பாதையில் நடை போட்டார். டார்லிங் அப்பாவி வேஷம் கைகொடுக்க அடுத்து அடல்ட்ஸ் ஒன்லி அவதாரம். விமர்சனங்கள் நிறைய இருந்தாலும் இளசுகள் இவரை வெகுவாக ரசிக்கிறார்கள். கைவசம் புரூஸ் லீ, கடவுள் இருக்கான் குமாரு ஆகிய படங்கள் இருக்கின்றன. 

இமான்:
இசையமைப்பாளராக முதல் அறிமுகம் 2002-ல். ஆனால் முதல் பிரேக் கிடைக்க அதிக காலமானது. ஆன் ஸ்க்ரீனில் தோன்றியது 'உலகத்துல' என்ற கோவை பிரதர்ஸ் பாட்டில். ஒரு பக்கம் பளபள நமீதா, மறுபக்கம் கொழுகொழு இமான் என அந்த பாடலில் ஹெவி போட்டி. அதன்பின் நிறைய மேக்கிங் வீடியோக்களில் தலை காட்டுவதோடு சரி.
சந்தோஷ் நாராயணன்:


மனம் மயக்கும் மெலடிகளால் கவனம் ஈர்த்த இந்த இளைஞரை ஒருகாலத்தில் பத்திரிக்கை பேட்டிகளில் பார்ப்பதே அபூர்வம். அவரை 'நட்புக்காக' இறைவியில் நடிக்க வைத்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். இன்னும் நீங்க நிறைய நடிக்கணும் ஜி!

அனிருத்:
இன்றைய தலைமுறையின் ஏகபோக பிரதிநிதி. யூத்தின் பல்ஸ் பிடித்து பாட்டு போடும் ஒல்லி கில்லி அவ்வப்போது திரையிலும் தலை காட்டுவார். வணக்கம் சென்னையில் ராப் பாடி ஆடுபவர், மான் கராத்தேயிலும் மாரியிலும் லோக்கல் டான்ஸ் ஆடி பட்டையை கிளப்பினார். ஹீரோ ஆசை உண்டு. ஏனோ களத்தில் இறங்க டைம் ஆகிறது.

ஹிப்ஹாப் ஆதி:

அறிமுகமானதே யூ-டியூப்பில்தான். அதனால் அநேகருக்கு பரிச்சயம். அதன்பின் இசையமைத்த ஆம்பள, தனி ஒருவன் படங்களில் தலைகாட்டினார். 'டக்கரு டக்கரு' பாடலில் ஹீரோ முன்னோட்டம் பார்த்தவர் இப்போது முழுநேர ஹீரோ.