Monetize Your Website or Blog

Tuesday, 26 July 2016

எப்பப் பாரு ஃபேஸ்புக், வாட்ஸ்அப்!' -அதிகாரிகளை டென்ஷன் ஆக்கிய ஆசிரியர்கள்

ல்வித் திறனை மேம்படுத்தும் பயிற்சி வகுப்புகள் நடக்கும்போது, சமூக வலைதளங்களில் உலாவுகின்றனர் ஆசிரியர்கள். 'பயிற்சி நேரங்களில் மொபைல் போன் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரித்துள்ளனர் கல்வி அதிகாரிகள். 

தமிழ்நாட்டில் கல்வித் திறனை மேம்படுத்த, புதிய விஷயங்களை அறிமுகப்படுத்துகிறது மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம். இதன்மூலம் மேல்நிலைக் கல்வி ஆசிரியர்களுக்கு விடுமுறை நாட்களில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் அனைவருக்கும் கல்வித் திட்டம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் மூலம் நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதற்கென தனியாக சிறப்பு நிதி ஒதுக்கப்படுகிறது. ஆசிரியர்களின் கற்றல் திறனை மேம்படுத்த, கல்வியாளர்கள் மூலம் சிறப்பு பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. இந்த வகுப்புகளுக்கு வரும் ஆசிரியர்கள், எந்நேரமும் செல்போனிலேயே ஆராய்ச்சி செய்வதால் அதிருப்தியில் ஆழ்ந்துள்ளனர் அதிகாரிகள். 



இதுபற்றி நம்மிடம் பேசிய கல்வி அதிகாரி ஒருவர், " அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த, மத்திய மாநில அரசுகள் ஏராளமாக நிதி ஒதுக்குகின்றன. வருடத்திற்குப் பத்து நாள் சிறப்பு பயிற்சி வகுப்பு மட்டுமல்லாமல், அந்தந்த வட்டார வள மையங்கள் மூலம் விடுமுறை நாட்களில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. கற்றல் குறைபாட்டைக் களையவும், மாணவர்கள் இடை நிற்றலைக் களையவும் வேண்டிய நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். ஆனால், கல்வி மேம்பாடு குறித்த அரசின் முயற்சி குறித்து பல ஆசிரியர்களுக்கு எந்தவித அக்கறையும் இல்லை. தொடக்கப் பள்ளியில் பணிபுரியும் பெரும்பாலான ஆசிரியர்கள் இளவயது நிரம்பியவர்கள். இவர்கள் எந்நேரமும் செல்போனில் எதையாவது பார்த்தபடியே இருக்கின்றனர். நாங்கள் எடுக்கும் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கும் 70 சதவீத ஆசிரியர்கள், சமூக வலைதளங்களைப் பயன்படுத்துபவர்களாக உள்ளனர்.

வகுப்பில் சீரியஸாக பாடம் எடுத்துக் கொண்டிருக்கும்போது, செல்போனில் தீவிரமாக ஆராய்ச்சி செய்கின்றனர். இடையில், ஏதாவது கேள்வி கேட்டாலும் உரிய பதில் கிடைப்பதில்லை. இவ்வாறு பயன்படுத்தக் கூடாது என கடுமையாக எச்சரிக்கை விடுத்தும், யாரும் கேட்பதாக இல்லை. சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதில் உள்ள நன்மை, தீமைகளைப் பற்றி மாணவர்களுக்கு விளக்க வேண்டிய கடமை ஆசிரியர்களுக்கு இருக்கிறது. ஆனால், அவர்களே வகுப்பு நேரங்களில் எல்லை தாண்டுகின்றனர். நல்ல ஆசிரியருக்கான இலக்கணத்தில் இருந்து வழிமாறுகின்றனர். 



எனவே, ' இனி வரும் காலங்களில் பயிற்சி வகுப்புகளுக்கு வருகின்ற ஆசிரியர்கள், மையத்தின் ஒருங்கிணைப்பாளரிடம் செல்போனை ஒப்படைத்துவிட்டு, வகுப்பை கவனிக்க வேண்டும்' என சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறோம். அதையும் தாண்டி பயன்படுத்தினால், ' செல்போன் பறிமுதல் செய்யப்படும். தொடர்ந்து இவ்வாறு செய்தால் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரித்திருக்கிறோம். இங்கு மட்டுமல்ல, ' பள்ளி வகுப்பு நேரங்களில் மாணவர்களைக்கூட கவனிக்காமல் செல்போனிலேயே நீண்ட நேரம் செலவிடுகின்றனர்' என ஏராளமான புகார்கள் வந்திருக்கின்றன. அவற்றின் மீது மாவட்ட கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதைப் பற்றியும் ஆலோசித்து வருகிறோம்" என்றார் கொதிப்போடு. 
 

' தனியார் பள்ளிகளுக்கு இணையாக வளர்க்கப்பட வேண்டிய அரசுப் பள்ளிகளில், ஆசிரியர்களின் இத்தகைய நடவடிக்கைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' எனக் கோரிக்கை வைக்கின்றனர் கல்வியாளர்கள். 



No comments:

Post a Comment