Monetize Your Website or Blog

Friday, 22 July 2016

பொறியியல் கல்லூரிகள் விற்பனைக்கு...!' -கடந்தாண்டு 22; இந்த ஆண்டு...?


ல்வியாளர்களை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த இந்த ஆண்டுக்கான பொறியியல் படிப்புக்கான கவுன்சலிங். ' இதில் ஒரு லட்சம் இடங்கள் நிரப்பப்படாதது மட்டுமல்ல, இந்த ஆண்டு ஏராளமான பொறியியல் கல்லூரிகள் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன' என ஆதங்கப்படுகின்றனர் கல்வியாளர்கள். 

இந்தியாவிலேயே அதிகப்படியான பொறியியல் கல்லூரிகள் தமிழ்நாட்டில்தான் இயங்குகின்றன. மாநிலம் முழுவதும் 527 பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்துக்கு அடுத்தபடியாக மகாராஷ்ட்ராவில்தான் அதிகப்படியான பொறியியல் கல்லூரிகள் இயங்குகின்றன. ஒருகாலத்தில், பி.இ படிப்புகளுக்கு இருந்த மவுசு, கடந்த சில ஆண்டுகளாக வெகுவாகக் குறைந்துவிட்டன. வேலைவாய்ப்பின்மை, பெருகிவிட்ட பொறியியல் பட்டதாரிகள், கூடுதல் செலவீனம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே, கலை அறிவியல் பிரிவுகளை நாடத் தொடங்கினர் பெற்றோர்கள். இந்த ஆண்டு  ஏழு லட்ச ரூபாய் வரையில் பி.காம் படிப்புகள் விலை பேசப்பட்ட அவலமும் நடந்தன.


இந்நிலையில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்காக, அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பொதுப் பிரிவு கலந்தாய்வு நேற்றுடன் நிறைவு பெற்றது. கவுன்சலிங்கில் பங்கேற்க 1 லட்சத்து 26,613 மாணவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டன. இதில், 82 ஆயிரம் இடங்கள் மட்டும் நிரம்பியுள்ளன. ஏறக்குறைய 43 ஆயிரத்து 755 மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர ஆர்வம் காட்டவில்லை. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவுகளை மட்டுமே அதிகளவிலான மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர். மெக்கானிக்கல் பிரிவில் 18,830 இடங்கள் நிரம்பியுள்ளன. இதைவிட சோகம், கடந்தாண்டு 89 ஆயிரம் இடங்களே காலியாக இருந்தன. இந்த ஆண்டு ஒரு லட்சத்து 230 இடங்களாக அதிகரித்துவிட்டன. 
' பொறியியல் படிப்பின் மீதான மோகம் குறைந்துவிட்டதா' என்ற கேள்வியை, அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மன்னர் ஜவஹரிடம் கேட்டோம்.
" பி.இ படிப்பின் மீதான ஆர்வம் குறைந்துவிட்டது என ஒரேயடியாகச் சொல்ல முடியாது. எண்ணிக்கை குறைந்து போனதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. பொதுவாக, கிராமப்புற மாணவர்கள்தான் பொறியியல் படிப்பை அதிகளவில் தேர்வு செய்து வந்தனர். இதுவரையில், 68 சதவீத இடங்கள் அவர்களால் நிரம்பின. பெரும்பாலும், தகவல் தொழில்நுட்பம், கணிப்பொறி அறிவியல் பாடப்பிரிவுகளை அவர்கள் விரும்பி தேர்வு செய்தனர்.
காரணம், படிப்பை முடித்தவுடன் உறுதியான வேலைவாய்ப்பு கிடைத்து வந்ததுதான். படிப்பை முடித்ததும் 25 ஆயிரம் ரூபாய் வரையில் சம்பளம் கிடைத்தது. அதேவேளையில், கலை அறிவியல் கல்லூரிகளில் பி.எஸ்சி கணிப்பொறி அறிவியல் மற்றும் பி.எஸ்சி தகவல் தொழில்நுட்பம் படித்து வந்த மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தன. ' இவர்களுக்கு 15 ஆயிரம் சம்பளம் கொடுத்தால் போதும்' என பெரிய நிறுவனங்கள் எண்ணத் தொடங்கின. உதாரணமாக, டி.சி.எஸ் நிறுவனத்தில் 25 ஆயிரம் பேரை வேலைக்கு எடுக்கிறார்கள் என்றால், அதில் பத்தாயிரம் பேர் கலை அறிவியல் மாணவர்களாக இருக்கிறார்கள். நான்காண்டு பி.இ படிப்பில் ஏற்படும் செலவுகளைவிடவும், பி.எஸ்சி படிப்பிற்கு ஆகும் செலவு குறைவு என்பதும் முக்கியக் காரணம். 



அதேநேரத்தில், பொறியியல் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பும் அதிகரித்து வருகின்றன. கடந்தாண்டு 20 ஆயிரம் பேரை வேலைக்கு எடுத்த நிறுவனங்களுக்கு, இந்த ஆண்டு முப்பதாயிரம் பேர் தேவைப்படுகின்றனர். அதற்கேற்ற தரமான பொறியியல் கல்லூரிகளைத் தேடும் மாணவர்கள் அதிகரித்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் டாப் 50 கல்லூரிகளில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதுவரையில், 120 இடங்களை நிரப்பி வந்த பெரிய கல்லூரிகள், 180 முதல் 240 சீட்டுகள் வரையில் கூடுதலாக நிரப்புவதற்கு அனுமதி வாங்கிவிட்டன. எனவே, மாணவர்கள் இந்த டாப் 50 கல்லூரிகளில் சேருவதையே விரும்புகின்றனர். இதனால், புதிதாகத் தொடங்கிய கல்லூரிகள், உள்கட்டமைப்பு வசதி இல்லாத கல்லூரிகள் சரிவைச் சந்தித்து வருகின்றன.
கடந்த ஆண்டு அகில இந்தியத் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்திடம், ' எங்களால் நடத்த முடியவில்லை. மூடுவதற்கு அனுமதி கொடுங்கள்' என 22 கல்லூரிகளின் உரிமையாளர்கள் மனு செய்திருந்தனர். இந்த ஆண்டு எவ்வளவு விண்ணப்பங்கள் வரப் போகின்றன என்று தெரியவில்லை. தரமான பொறியியல் பட்டதாரிகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கல்லூரிகளைத் தேர்வு செய்வதில் மாணவர்களும் பெற்றோரும் அதிக விழிப்பு உணர்வோடு இருக்கிறார்கள்" என்றார் விரிவாக. 

கூகுளில், ' பொறியியல் கல்லூரிகள் விற்பனைக்கு' என்ற விளம்பரத்தை அதிகளவில் பார்க்க முடிகிறது. இதற்கு தரமான கல்லூரியை நோக்கிய மாணவர்களின் தேடல் முக்கிய காரணமாக இருக்கலாம். 




No comments:

Post a Comment