
கடமலைக் குண்டு ஆதிவாசி பெண்களிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட வன அதிகாரிகளின் மீது பத்து பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ' காவல்துறையும் வனத்துறையும் கூட்டு சேர்ந்து செயல்படுகின்றனர். மாநில போலீஸ் விசாரித்தால் நியாயம் கிடைக்காது' எனக் கொந்தளிக்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.
தேனி மாவட்டம், கம்பம் கிழக்கு வனச் சரகத்திற்கு உள்பட்ட பெரிய சுருளி மலைப் பகுதியில் தேன், வேர்க்கிழங்கு, நன்னாரி வேர் சேகரிக்கச் சென்ற 13 வயது சிறுமி உள்பட நான்கு ஆதிவாசி பெண்களிடம், வனத்துறை அதிகாரிகள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தேனி மாவட்டம், கம்பம் கிழக்கு வனச் சரகத்திற்கு உள்பட்ட பெரிய சுருளி மலைப் பகுதியில் தேன், வேர்க்கிழங்கு, நன்னாரி வேர் சேகரிக்கச் சென்ற 13 வயது சிறுமி உள்பட நான்கு ஆதிவாசி பெண்களிடம், வனத்துறை அதிகாரிகள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதுகுறித்து வருஷநாடு வனச்சரக அலுவலகத்திற்கு நியாயம் கேட்கச் சென்றனர் ஆதிவாசி இளைஞர்கள் சிலர். அவர்கள் மீது ' வன அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக' வழக்குப் பதிவு செய்து, காவல் நிலையத்தில் வைத்து அடித்து நொறுக்கப்பட்டனர்.
இதுகுறித்த தகவல் வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்த, தமிழக சட்டமன்றத்தில் கடமலைக் குண்டு சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்த வனத்துறை அமைச்சர் சீனிவாசன், " மேகமலையில் எறும்புதின்னிகள் கடத்தப்பட்டதாக புகார் வந்ததால் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதிகாரிகள் மீதான புகார் குறித்து கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. இதில், அதிகாரிகள் மலைவாழ் பெண்களிடம் தவறாக நடந்துகொள்ளவில்லை என்பதும், விசாரணை மட்டுமே நடத்தினார்கள் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது" என்றார். ஆதிவாசி பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நடவடிக்கை எடுக்காமல், வனத்துறை அதிகாரிகளுக்கு ஆதரவாக அமைச்சர் தெரிவித்த கருத்துக்களால் அதிர்ந்து போனார்கள் அரசியல் கட்சித் தலைவர்கள்.
இதையடுத்து, மலைவாழ் மக்கள் பாதுகாப்பு சங்கம், சி.பி.எம், ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் விவகாரத்தைக் கையில் எடுத்தன. நேற்று கடமலைக் குண்டு பகுதியில் ஆதிவாசி மக்களோடு இணைந்து போராட்டத்தில் இறங்கினார் எவிடென்ஸ் அமைப்பின் கதிர்.
' வனத்துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் ஓய மாட்டோம். அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்து, கைது செய்ய வேண்டும்' என முழக்கம் எழுப்பினர். இதையடுத்து, இரவு 8.30 மணியளவில் ரேஞ்சர் சேகர், ஃபாரஸ்டர் பிரின்ஸ் உள்பட அடையாளம் தெரிந்த இரண்டு நபர்கள் மீது பத்து பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவுகளான 342, 294(பி), 354, 379 உள்ளிட்ட பிரிவுகளும் எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை சட்டத்தின் ஆறு பிரிவுகளின் கீழும் வழக்குப் பதிவானது.
" ஜாமீனில் வெளிவர முடியாத சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது சிறிய ஆறுதல் மட்டுமே. ஆதிவாசி பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது மட்டுமல்லாமல், துணைக்குச் சென்ற ஆண்களை அரை நிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்தியுள்ளனர். 'இவர்களுக்கு நியாயம் கேட்க யார் வருவார்' என்ற மனநிலையில், வன அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக, நியாயம் கேட்கச் சென்ற ஆதிவாசிகள் மீது போடப்பட்ட எஃப்.ஐ.ஆரில், எந்த இடத்திலுமே 'எறும்புத் திண்ணி கடத்தப்படுவதைக் கண்காணிக்கச் சென்றபோது சம்பவம் நடந்தது' என அதிகாரிகள் குறிப்பிடவில்லை. இதிலிருந்தே எறும்புத் திண்ணியைக் கடத்தினார்கள் என்பது முழுப் பொய் எனத் தெரிகிறது. 13 வயது சிறுமி உள்பட நான்கு பெண்களிடமும் பாலியல் அத்துமீறலில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களைப் பார்த்தாலே மிகவும் பரிதாபமாக இருக்கிறது. வேர்க் கிழங்கும் தேனும் எடுக்கச் சென்றவர்களை வேண்டுமென்றே அதிகாரிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளனர். பொதுவாக, ஒரு வழக்கில் எஃப்.ஐ.ஆர் போட்டுவிட்டுத்தான் விசாரணை நடத்துவார்கள். ஆதிவாசிகள் பாதிக்கப்பட்ட வழக்கில், விசாரணையை நடத்திவிட்டு முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்கிறார்கள். இவர்களுக்கு ஆதரவாக அமைச்சரும் செயல்படுகிறார். வழக்கில் சம்பந்தப்பட்ட நான்கு பேரும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால், சட்டரீதியான போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம்" என்றார் கொந்தளிப்போடு.
" ஆதிவாசி பெண்கள் மீதான பாலியல் அத்துமீறலில், பத்து நாட்கள் கடந்த பின்னரே, வன அதிகாரிகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது. தேன், கடுக்காய்தானே சேகரிக்கச் சென்றார்கள். தேசத் துரோகமா செய்துவிட்டார்கள். முதல்வர் நேரடியாகத் தலையிட வேண்டும்" என்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.
" ஆதிவாசி பெண்கள் மீதான பாலியல் அத்துமீறலில், பத்து நாட்கள் கடந்த பின்னரே, வன அதிகாரிகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது. தேன், கடுக்காய்தானே சேகரிக்கச் சென்றார்கள். தேசத் துரோகமா செய்துவிட்டார்கள். முதல்வர் நேரடியாகத் தலையிட வேண்டும்" என்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.

No comments:
Post a Comment