
தமிழகத்தில் குளச்சல் துறைமுகம் நிறுவப்படும் என கடந்த 2013 ம் ஆண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். நீண்ட போராட்டத்திற்கிடையில் மத்திய அமைச்சரவை அண்மையில் இதற்கு ஒப்புதல் அளித்தது. ஆனால் இதற்கு கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே, குளச்சல் துறைமுகம் அமைப்பதற்கு அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் கேரள சட்டப்பேரவையில் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், குளச்சல் துறைமுகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான குழு பிரதமர் மோடியை இன்று சந்தித்தது. கேரள மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அக்குழுவில் இடம் பெற்று இருந்தனர். நாடாளுமன்ற வளாகத்தில் இந்த குழு பிரதமரை சந்தித்தது. அப்போது, பினராயி விஜயனின் கோரிக்கையை கேட்ட பிரதமர், குளச்சல் துறைமுக திட்டத்தை கைவிட முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டார் என்று சொல்லப்படுகிறது.
பிரதமரை சந்தித்த பின் மேற்கண்ட தகவலை பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், குளச்சலில் அமையவுள்ள துறைமுகப் பணிகளை நிறுத்த முடியாது என்று பிரதமர் தெரிவித்துவிட்டார். 'இரண்டு துறைமுகங்களும் அருகருகே அமைந்தால், போட்டியும் வருவாயும் அதிகரிக்கும்' என பிரதமர் தெரிவித்தார். 2 துறைமுகங்களின் வளர்ச்சிக்கும் மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் எனவும் பிரதமர் கூறினார்” என்று தெரிவித்தார்.

No comments:
Post a Comment