Monetize Your Website or Blog

Saturday, 23 July 2016

அதிமுக கவுன்சிலர் ஞானசேகர் கொலையில் 250 கோடி ரூபாய் பஞ்சாயத்து? திடுக் பின்னணித் தகவல்கள்


சென்னை மாநகராட்சியின் 21-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் முல்லை ஆர். ஞானசேகர், கடந்த 9.7.2016 அன்று, மணலி பஸ் நிலையம் அருகே, அவருடைய நண்பரின் கடை வாசலில் மர்ம கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார்.இது அதிமுக வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  

இந்நிலையில்,புழல் சிறையில் இருக்கும் பிரபல ரவுடி, மணலியின் முக்கிய அரசியல் பிரமுகர், மாஜி. கவுன்சிலர், ரியல் எஸ்டேட் புள்ளி இதன் பின்னணியில் இருப்பதும், கொலையாளிகளை பிடிக்க போலீஸ் துணை கமிஷனர்கள் ராஜேந்திரன் (மாதவரம்), ஜெயகுமார்(வண்ணாரப்பேட்டை) ஆகியோர் தலைமையில் தனித்தனி டீம் இதில் இறக்கி விடப்பட்டிருப்பதும் குறித்து நாம் அண்மையில் எழுதியிருந்தோம்.



போலீசாரால் தேடப்படும் லிஸ்ட்டில் இருந்த முக்கிய நபர்களான விஜய் ஆனந்த், ரபீக் ஆகியோரில் விஜய் ஆனந்த் பிடிபட்டு விட்டார்.அரசியல் கட்சியொன்றின் மாவட்டச் செயலாளரான இவருக்கும் சிறையில் இருக்கும், பி.வி.காலனி சோமுவுக்கும் உள்ள நெருக்கம் குறித்து இதே வழக்கில் சிக்கிய குதிரை வெங்கடேஷ் உள்பட பலரும் ஒரே மாதிரியாகச் சொல்லவே போலீசார், சத்தமின்றி சிறையில் இருக்கும்  சோமுவை கண்காணிக்க ஆரம்பித்தனர் போலீசார்.
 
எரித்துக் கொல்லப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. எம்.கே.பாலன் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் சோமு மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.  இதனால் ஞானசேகர் கொலையின் பின்னணியில் பெரிய கூலிப்படைகள், சம்மந்தப்பட்டிருக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் போலீசார் கருதுகின்றனர்.

சோமுவை கஸ்டடிக்கு கொண்டு வந்து விசாரித்தால் மட்டுமே, போலீசாரின் சந்தேகப் பட்டியலில் இருக்கும் மாஜி.கவுன்சிலர், ரியல் எஸ்டேட் புள்ளி, நகரின் முக்கிய அரசியல் பிரமுகர் குறித்த அடுத்தடுத்த விவகாரங்கள் பற்றிய தகவல் கிடைக்கலாம் என்று தெரிவிக்கின்றனர் போலீசார். கொலை நடந்த அன்று, ஞானசேகரின் நண்பர் கடையில் இருந்த சிசிடிவி காமிரா பதிவில் சிக்கியவர்களை மணலி போலீசார் கைது செய்து பொன்னேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் உத்தரவின் பேரில் அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

வடசென்னையின் புறநகர்ப் பகுதிகளான மணலி, எண்ணூர், திருவொற்றியூர், மாதவரம் போன்ற பகுதிகளில் தனியார் மற்றும் மத்திய அரசு நிறுவனங்கள் அதிகமாக உள்ளன. இந்த கம்பெனிகளில் இருந்து, அரசியலில் பலம் பொருந்தியவர்களுக்கும், தாதாக்களுக்கும் கேட்டதை விட அதிகமாக கப்பம் கிடைக்கிறதாம்.அதனால் இந்தப் பகுதியில் அரசியல் மற்றும் அதிகார தலையீடுகள் அதிகம் என்கிறார்கள் ஏரியா வாசிகள்.

போலீஸ்  தரப்பில்  விசாரித்தோம். "கொலை செய்யப்பட்ட அதிமுக கவுன்சிலர் முல்லை ஞானசேகர், அரசியல் தவிர ரியல் எஸ்டேட் மீடியேட்டராகவும் இருந்து வந்துள்ளார். சில கம்பெனிகளின் வரவு செலவுகளிலும் ஞானசேகர் 'மீடியேட்' செய்து வந்திருக்கிறார். அவருடைய முப்பதாண்டு கால மீடியேட்டர் அனுபவம் யார் கைக்குப் போனாலும் அவர்களுக்கு வருமானம் கொட்ட தொடங்கிவிடும் என்பதை வைத்தே பலமுறை அவரை 'முடிக்க' சிலர் முயன்றுள்ளனர்.அந்த விஷயம், அவர் குடும்பம் உள்பட அனைவருக்கும் தெரிந்துள்ளது.



ஞானசேகர் கொலை செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே, 'திருவொற்றியூர் திமுக புள்ளி ஒருவர்தான் உட்கட்சித் தகராறு, லோக்கல் பாலிடிக்சில் போட்டுத் தள்ளி விட்டார்' என்று ஒரு சிலர் தகவல் பரப்பியுள்ளனர்.  அதே போல் கொலையில் சம்மந்தப்படாத சிலர் வழக்கை திசை திருப்ப 'கோர்ட்டில் ஆஜராகிறோம்' என்று ஒரு ரூட்டை போட்டனர். அனைத்தையும் கடந்துதான் இந்தக் கொலை வழக்கை மிகவும் துல்லியமாக விசாரித்து, அதில் கொஞ்சமும் பிசகாமல் கொண்டு போய்க் கொண்டிருக்கிறோம்.

தமிழக முதல்வர் அவர்களே, " ஞானசேகர் கொலையின் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களைக்  கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்" என்று சொல்லியிருக்கிறார். நாங்கள் ஒவ்வொரு அடியையும் இந்த வழக்கில் கவனமாக எடுத்து வைக்கிறோம்.

கொலையின் பின்னணியில் 250 கோடி ரூபாய் மதிப்பிலான 'இடம் தொடர்பான' பிரச்னை இருந்திருப்பதைக்  கண்டு பிடித்துள்ளோம். முல்லை ஞானசேகரை மட்டும் அதிலிருந்து தனியாகப் பிரித்து விட்டால் அந்த விவகாரத்தில் தொடர்புடைய மற்ற இரண்டு பேருக்கு மட்டுமே லாபம். அதில் ஒருவர், அவ்வளவு தூரத்துக்குப் போய் கொலை செய்கிற அளவுக்கெல்லாம் 'வொர்த்' இல்லாதவர். இன்னொருவர், எல்லாவற்றுக்கும் தயார். அவருக்குப் பின்னணியில் ஒரு வழக்கறிஞர் இருக்கிறார். அந்த வழக்கறிஞர் மீது ஏற்கெனவே பல புகார்கள், உள்ளன. இன்னும் இரண்டொரு நாளில் ஞானசேகர் கொலையாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி விடுவோம் பாருங்கள்" என்கின்றனர் நம்பிக்கையுடன் போலீசார்.




No comments:

Post a Comment