Monetize Your Website or Blog

Monday, 25 July 2016

டெல்லியில் தீவிரவாதிகள் ஊடுருவல் - உளவுத்துறை எச்சரிக்கை!


தலைநகர் டெல்லியில் தாக்குதல் நடத்த, தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

ஹிஸ்புல் முஜாஹிதீன் என்ற தீவிரவாத அமைப்பின் முக்கிய தலைவர் பர்ஹான் வானியை, காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 9 ம் தேதி பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. பர்ஹான் வானியின் ஆதரவாளர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவங்களால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.







இந்த வன்முறையில் சுமார் 46 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளனர், மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, பயங்கரவாதி பர்ஹான் வானியின் ஆதரவாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் அதிர்ச்சி தெரிவித்திருந்தார். இந்தியாவில் பல விமர்சனங்களை எழுப்பி, பாகிஸ்தானின் ஆதரவுடன்தான் இத்தகைய வன்முறைகள் அரங்கேறி வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு உள்ளன. மேலும், காஷ்மீர் சம்பவத்துக்கு பழிக்குப் பழி வாங்க, பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தற்போது தெரிய வந்துள்ளது.



இந்த நிலையில் தீவிரவாதிகளின் தற்கொலைப்படை, தலைநகர் டெல்லிக்குள் ஊடுருவி இருப்பதை உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு, ஒரு தகவலை உளவுத்துறை அனுப்பி உள்ளது.


அதில், ''டெல்லியில் உள்ள சி.ஆர்.பி.எப்., ஐ.டி.பி.பி.எப். மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை அலுவலகங்கள் மீது தற்கொலை தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். மேலும், டெல்லியில் உள்ள உயர் அதிகாரிகளை குறி வைத்தும் தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர்" என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, டெல்லியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் துணை நிலை ராணுவ அலுவலகங்களில் பாதுகாப்பு இரட்டிப்பாக உயர்த்தப்பட்டு உள்ளது. இது தவிர முக்கிய அதிகாரிகள் சென்று வரும் பகுதிகளிலும் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.





No comments:

Post a Comment