Monetize Your Website or Blog

Tuesday, 26 July 2016

பாலங்களை அடைத்த அதிகாரிகளுக்கு பொன்னாடை... அழைப்பிதழால் அதிர்ந்த கலெக்டர்!

சிவகங்கையில் இருந்து மானாமதுரை செல்லும் வழியில் உள்ள கிராமம் கண்டனி. இந்த கிராமத்திற்கு அருகில் மேலவெள்ளச்சி கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் இருந்து வெளியேற்றப்படும்  நீர் மானாமதுரை நெடுஞ்சாலையைக் கடந்து, எதிர்ப்புறம் உள்ள  விவசாய பாசனத்திற்கு செல்லும். கண்மாய் செல்வதற்காக  நெடுஞ்சாலையில் சிறிய பாலங்கள் கட்டி, அதில் தூம்புகளை வைத்திருந்தனர். அந்த தூம்பின் வழியாக தண்ணீர் வந்து கொண்டிருந்தது.


தற்போது தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்த சாலையை அகலப்படுத்தும் பணியில்  ஈடுபட்டபோது, இந்தச்  சாலையில் இருந்த அனைத்து சிறிய பாலங்களையும் மூடிவிட்டனர். மேலும் கண்மாய் நீர் விவசாயப் பகுதிகளுக்கு செல்ல எந்த வழியையும் ஏற்படுத்தாமல், சாலை அமைத்துவிட்டனர். இதனால் வரும் பருவகாலத்தில் கண்மாயில் நீர் தேங்கினால் அந்த நீரை விவசாய நிலங்களுக்கு திருப்பிவிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கண்டனி கிராம மக்கள் இன்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மலர்விழியை பத்திரிகை மற்றும் தாம்பூலத்தட்டோடு சந்தித்தனர். அவர்கள் " எங்கள் கண்மாய் நீரை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாமல் பாலங்களை அடைத்து சாலை அமைத்த அதிகாரிகளை கௌரவம் செய்ய விரும்புகின்றோம். ஆகஸ்ட் 2 ம் தேதி அந்த அதிகாரிகள் அனைவருக்கும் பொன்னாடை போர்த்தும் விழா நடைபெற உள்ளது. அதற்கு, தாங்கள் வரவேண்டும்" என்று அழைப்பிதழ் மற்றும் பழம், பூ வைத்து மாவட்ட ஆட்சியரிடம் வித்தியாசமாக தங்களது கோரிக்கையை கொடுத்தனர்.
அதை பார்த்து அதிர்ந்த மாவட்ட ஆட்சியர்,   " நீங்கள் மனு கொடுங்கள். நான் நடவடிக்கை எடுக்கின்றேன்"  என்று மட்டும் சொல்லி, அவர்களை அங்கிருந்து அனுப்பிவிட்டார்.




No comments:

Post a Comment