Monetize Your Website or Blog

Saturday, 30 July 2016

சதுரகிரி மலைக் கோயில்... பக்தர்களை மீண்டும் மிரட்டிய காற்றாற்று வெள்ளம்!



விருதுநகர் மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது, சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில். சித்தர்கள் வாழ்ந்த பூமியாக கருதப்படும் இந்த மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை அன்று திருவிழா நடக்கும்.


தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், லட்சக்கணக்கான பக்தர்கள் வத்திராயிருப்பு அருகேயுள்ள தாணிப்பாறை வழியாக, 10 கி.மீ., தூரம் மலை ஏறிச் சென்று சுவாமியை வழிபடுவார்கள். அதுபோல் மதுரை மாவட்டம் சாப்டூர் வழியாகவும், தேனி மாவட்டம்  வருசநாடு மலைப்பகுதி வழியாகவும் இந்த கோவிலுக்கு பக்தர்கள் வருவார்கள். கடந்த ஆண்டு நடந்த ஆடி அமாவாசை விழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கூட்ட நெரிசல் காரணமாக மலையில் இருந்து இறங்க முடியாமல் 2 லட்சம் பக்தர்கள் மலைப்பகுதியிலேயே சுமார் 3 மணி நேரம் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் 2 ம் தேதியன்று அமாவாசை என்பதால், சதுரகிரி மகாலிங்கம் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா வெகு விமரிசையாக நடக்கவுள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள், என்பதால் மாவட்ட நிர்வாகம் போலீஸ் பாதுகாப்பு, தீயணைப்பு மீட்பு படையினர் என்று பல பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. வழக்கமான விசேஷ நாட்களைத் தவிர,  பிற நாட்களில் மலை ஏறுவதற்கு வனத்துறை தடை விதித்திருந்த நிலையில், வரவிருக்கும் ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி,  ஜூலை 28 ம் தேதி ( நேற்று ) முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை, வனப்பகுதியில் மலை ஏறுவதற்கு பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.


இதனால் நேற்று முதல் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சதுரகிரியில் மலையேறி, மகாலிங்கம் சுவாமியை தரிசனம் செய்து திரும்பி வருகின்றனர்.
சதுரகிரி மலைப்பகுதியில், கடந்த சில நாட்களாக சிறிய அளவில் மழை பெய்து வருகிறது. மழையை பொருட்படுத்தாமல் பக்தர்களும் மலை ஏறிச் சென்று வருகின்றனர். நேற்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை சதுரகிரி மலைப்பகுதியில் கனத்த மழை பெய்தது. இதனால் சங்கிலிப்பாறை ஓடையில் 5 அடி உயரத்திற்கு மேல் திடீரென்று காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு பெருக்கெடுத்து ஓடியது. அப்போது மலையில் சுவாமி தரிசனம் முடித்து விட்டு திரும்பிய 10 பெண்கள் உள்பட சுமார் 100 பேர் ஓடையை கடக்க முடியாமல் மாட்டிக்கொண்டனர்.
இதனையடுத்து ஆற்றைக் கடந்து சென்ற தீயணைப்பு படையினர், அவர்களை பத்திரமாக மீட்டு, மேட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தனர். இதற்கிடையே மனோகரன், மகேந்திரன், கிருஷ்ணன், கண்ணாயிரம் ஆகிய 4 பக்தர்கள் சங்கிலிப்பாறை ஓடையை கடந்து சென்றனர். குதிரை ஊத்து என்ற இடத்திற்கு வந்த போது வெள்ளத்தில் மாட்டிக்கொண்டு, " ஐயோ காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்..." என்று குரல் கொடுத்தனர். அருகில் இருந்த ஸ்ரீவில்லிப்புத்தூர் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று, வெள்ளத்தில் தவித்த அவர்களை, கயிறு மூலம் கட்டி இழுத்து காப்பாற்றினர். பிறகு மலையில் தங்க வைக்கப்பட்டிருந்த 100 பேரும் வெள்ளப்பெருக்கு குறைந்த பின்னர், பத்திரமாக தீயணைப்பு படையினர் உதவியுடன் ஓடையை கடந்து வந்து, மலையில் இருந்து இறங்கினர்.




No comments:

Post a Comment