நாட்டின் புதிய அதிபர் பதவியேற்றவுடன், 'நாட்டில் அமைதியான நல்லாட்சியை வழங்க வேண்டும்' என மக்கள் எதிர்பார்ப்பதும் ஆசைப்படுவதும் இயல்புதான். ஆனால் பிலிப்பைன்ஸ் நாட்டின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரோட்ரிகோ டுடெர்டே ( Rodrigo Duterte), தன் நாட்டில் அமைதியை நிலை நாட்டுவதற்கு எடுத்த முடிவு ஒட்டுமொத்தமாக, பிலிப்பைன்ஸ் முழுக்க அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
யார் இந்த ரோட்ரிகோ டுடெர்டே
பிலிப்பைன்ஸ் அருகில் உள்ள மாசின் என்ற கடலோரக் கிராமத்தில் 1945 ம் ஆண்டு பிறந்தார் ரோட்ரிகோ டுடெர்டே. வழக்கறிஞரான அவரது தந்தை, மாகாண மேயராகவும் பதவி வகித்தவர். தாய் பள்ளி ஆசிரியை. 1972 ல் வழக்கறிஞர் பட்டம் பெற்று, சில காலம் வழக்கறிஞராக பணி புரிந்தவருக்கு, தந்தையைப் போல அரசியல் ஆர்வம் ஏற்பட்டது. 1986 ல் தவோ சிட்டியின் துணை மேயராகப் பதவியேற்றார்.
1988 ல் மேயர் பதவிக்கு போட்டியிட்டு தேர்வு செய்யப்பட்டார், பின்னர் மக்கள் நலனில் அதிக அக்கறையோடு செயல்பட்டார். அதன் பலனாக மீண்டும் மீண்டும், கிட்டத்தட்ட 2010 ம் ஆண்டு வரை, 22 ஆண்டுகளாக மேயர் பதவி வகித்தார்.
1990 களில், போதைப் பொருள் வியாபாரிகள் மற்றும், சூதாட்டம் மற்றும் விபசாரத்தில் ஈடுபடும் சமூக விரோதிகளின் புகலிடமாகவே தவோ சிட்டி இருந்தது, நகரத்தில் நடைபெறும் குற்றங்களுக்கும் இதற்கும் தொடர்பு உள்ளதை அறிந்தவர், அதை சரி செய்ய கையில் எடுத்த ஆயுதம்தான் "என்கவுன்ட்டர்." இதற்கென தனியாக குறி பார்த்து சுடக்கூடிய ஒரு படையை அமைத்தார். சில சமயங்களில் இவரே தனியாக ரோந்து செல்வார். கண்ணில்படும் போதை மருந்து வியாபாரிகள், ரவுடிகள் உடனடியாக சுட்டுக் கொல்லப்பட்டனர். வேறு தவறுகள் செய்பவர்கள் சிறையிலடைக்கப்பட்டனர். அவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட்டது.
இதற்கு மனித உரிம ஆர்வலர்களிடையே பலத்த எதிர்ப்பு எழுந்தது. ஆனால் அதை ரோட்ரிகோ கண்டு கொள்ளவே இல்லை. அவருக்கு, எப்படியாவது நகரத்தில் நடைபெறும் குற்றங்களை குறைக்க வேண்டும் என்பதே ஒரே குறிக்கோளாக இருந்தது, அதன் பலனாக தவோ சிட்டியில் குற்றங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.
இதையடுத்து நாடு முழுவதும் ரோட்ரிகோவுக்கும், அவருடைய அதிரடி முடிவுகளுக்கும் மக்களிடையே ஆதரவு பெருகியது.

நாட்டின் அதிபரானார் ரோட்ரிகோ
இந்நிலையில் 2015 ல், அடுத்த பிலிப்பைன்ஸ் அதிபர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார். இதனால் மக்களிடையே ஆதரவும், குற்றம் புரிவோரிடத்தி்ல் எதிர்ப்பும் ஒரு சேர எழுந்தன.
உடனே, 'அவர் மனிதாபிமானமற்றவர், நீதிமன்றங்களை மதிக்காதவர், சட்டவிரோதமாக கொலைகளைச் செய்பவர்' என்றெல்லாம் ஊடகங்கள் மூலமாகவும் பிரசாரம் மூலமாகவும் ஒருதரப்பினர் தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
ஆனால் கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் 16,601,997(39.01%) வாக்குகள் பெற்று பெரும்பான்மையாக அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார்.
போதைக்கு எதிரான போர்
கடந்த ஜூன் மாதம் 30 ம் தேதி, பிலிப்பைன்ஸின் 16 வது அதிபராக பதவியேற்ற பின்பு, "போதைக்கு எதிராக போர்" ஒன்றை உடனடியாக தொடங்குமாறு ராணுவத்திற்கும், காவல்துறைக்கும் உத்தரவு பிறப்பித்தார். அவர்களுக்கு சுட்டுக் கொல்வதற்கான அதிகாரங்கள் வழங்கப்பட்டன. சட்டங்கள், விதிமுறைகள் தளர்த்தப்பட்டன.
போதை மருந்து வியாபாரிகள், குற்றவாளிகள் என பலர் நடு ரோட்டில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இரவு நேர தாக்குதல் தீவிரமடைந்தது. நாடு முழுவதும் குற்றவாளிகளின் உடல்கள் நடு ரோட்டில் கிடந்தன.
ரோட்ரிகோ பதவியேற்ற 24 மணி நேரத்திற்குள்ளாக என்கவுன்ட்டர்களின் எண்ணிக்கை 100 ஐ தாண்டியது.
என்கவுன்ட்டர்களுக்கு பயந்து போதை தொழிலை விட்டுவிட்டு சரணடைபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
என்கவுன்ட்டர்களுக்கு பயந்து போதை தொழிலை விட்டுவிட்டு சரணடைபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
ரோட்ரிகோ பதவியேற்று ஒரு மாதம் ஆகும் நிலையில், சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 300 ஐ கடந்து விட்டது. அதே சமயம் சரணடைபவர்களுக்கான முகாமில் சரணடைபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இதற்கு பிலிப்பைன்ஸ் மக்களிடையே ஆதரவு இருந்தாலும், உலக அரங்கில் மனித உரிமை ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் என்ன ஆனாலும் நாட்டில் போதை பொருள் சாம்ராஜ்ஜியத்தை வேரோடு அழிக்கும் வரை போதைக்கு எதிரான போரை நிறுத்தப் போவதில்லை என பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டெர்டே அறிவித்துள்ளார்.

No comments:
Post a Comment